இலங்கைப்பயணங்களின்போது தமிழ்ப்பிரதேசங்களில் சில வீதிகளில் நான் அவதானிக்கும் ஒற்றுமைகளை இங்கு குறிப்பிடல்வேண்டும். எமது இலங்கை
மாணவர் கல்வி நிதியத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்ட மாணவர் தொடர்பாடல் அமைப்பான
சிறுவர் அபிவிருத்தி நிலையம், யாழ்ப்பாணம்,
அரியாலை கண்டிவீதியில் அமைந்திருக்கிறது.
அதற்கு அருகில்தான், பெண்களின் மாற்றத்திற்கான
வலையமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்.
அந்தவீதியில்தான் இவை இரண்டுக்கும் அருகில் இலங்கைத்தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பணிமனை.
அத்துடன், ஈ.பி.ஆர். எல். எஃப். பின் (பத்மாநாபா அணி) அலுவலகம்.
இந்த வீதியில் இந்த அமைப்புகள் தோன்றுவதற்கு
முன்னர் 1970 களில் அரஸ்கோ என்ற மாம்பழச்சாறு,
மற்றும் பழவகைகள் பதனிட்டு தென்னிலங்கைக்கு ஏற்றுதி செய்யும் பெரிய நிறுவனமும் இயங்கியது.
தற்போது அந்தக்கட்டிடம் சிதிலமடைந்து இடிபாடுகளுடன் அனாதையாக காட்சி அளிக்கிறது. எனினும், முற்றத்தில்
மாமரங்கள் நிழல் பரப்புகின்றன. இவ்வாறு இலங்கையில் பல உள்ளுர் உற்பத்தி தொழிற்சாலைகள்
பாழடைந்துவிட்டன.
அரஸ்கோ நிறுவனம் கொழும்பிலும் அலுவலகம் வைத்திருந்தது.
மல்லிகையில் விளம்பரங்களும் வந்துள்ளன. மல்லிகை ஜீவா அந்நாட்களில் கொழும்பு வரும்போது
அவருக்கு துணையாக இங்கு சென்றிருக்கின்றேன். சிலவேளைகளில் அவர் சார்பாகச்சென்று விளம்பரத்திற்கான
பணமும் (காசோலை) பெற்றுவருவேன்.
இன்று அரியாலையில் இந்த நிறுவனம் தனது பணியை
முற்றாக நிறுத்தியிருந்தாலும், இதற்கு அருகில் பின்னாளில் தோன்றியிருக்கும் அமைப்புகள்
இயங்கிக்கொண்டிருக்கின்றன.
ஒரு காலத்தில் கொழும்பு மலே வீதியிலும் சில இடதுசாரி தொழிற்சங்கங்கள் இயங்கின. அங்குதான் முன்னர் கன்னங்கரா, தஹநாயக்கா, பதியூதின் முகம்மது முதலானவர்கள்
கல்வி அமைச்சர்களாக இருந்தபொழுது கல்வி அமைச்சு இயங்கியது.
பரீட்சைத்திணைக்களம் அதன் முன்னால் இருந்தது.
அமச்சர்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்காக கல்வி அமைச்சும் குட்டிகளை ஈன்றது. கல்வி
அமைச்சு, உயர் கல்வி அமைச்சு. தற்பொழுது மாகாணங்களில் கல்வி அமைச்சர்கள், அமைச்சர்கள்.
துணை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள்.
இலங்கை கல்வி அமைச்சும் மக்களைப்போன்று இடம்பெயர்ந்துவிட்டது.
தொழிற்சங்கங்களுக்கும் அதே கதிதான்.
வவுனியாவிலும் பூவரசங்குளத்திற்கும் வேப்பங்குளத்திற்கும்
இடையில் மன்னார் வீதியில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உருவாகியிருக்கின்றன. இந்தக்காட்சியை
திருகோணமலை உப்புவெளியில் நிலாவெளி வீதியிலும் காணமுடியும்.
ஒரு வீதியில் ஒரு தன்னார்வத்தொண்டு நிறுவனம்
தோன்றினால், விரைவில் அந்தப்பிரதேசத்தில் மேலும் சில அத்தகைய நிறுவனங்கள் உருவாகிவிடும்.
இதன் தாற்பரியம் என்னவென்றுதான் புரியவில்லை.
போருக்குப்பின்னர் இலங்கையில் நீக்கமற நிறைந்திருக்கும் தன்னார்வதொண்டு
நிறுவனங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஓரளவு
பயனடைந்துவருவதனால், அங்கிருக்கும் அரச சார்பு புனர்வாழ்வு அமைப்புகளுக்கும்
மாகாண அமைச்சுகளுக்கும் வேலைப்பளு குறைந்திருக்கிறதோ எனவும் யோசிக்கத்தோன்றுகிறது.
வெளிநாட்டிலிருந்து அன்பர்களும் தொண்டு நிறுவனங்களும் தாராளமாக
உதவ முன்வந்திருந்தபோதிலும், மக்களின் தேவைகள்
அதிகரித்துக்கொண்டுதானிருக்கின்றன. தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு வார இதழில் கருணைப்பாலம் என்ற பக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேற்கொள்ளப்படும் பணிகள்
பற்றி விரிவான பதிவுகள் வந்தவண்ணமே இருக்கின்றன.
வெளிநாட்டு அன்பர் வந்து மாணவருக்கு கல்வி உபகரணம் கொடுத்தார்,
துவிச்சக்கர வண்டி வழங்கினார், விதவைப்பெண்களுக்கு ஆடு, மாடு , கோழிப்பண்ணை நடத்துவதற்கு
உதவினார் என்றெல்லாம் அடிக்கடி செய்திகள் படங்களுடன் வருவதைப் பார்த்திருப்பீர்கள்.
இவை தவிர வெளிநாடுகளிலிருந்து இயங்கும் பழைய மாணவர் சங்கங்கள்
தத்தம் நாடுகளில் கிளைகளை உருவாக்கி நிகழ்ச்சிகள் நடத்தி, நிதி திரட்டி தமது ஊர்ப்பாடசாலைகள், கல்லூரிகளின்
அபிவிருத்திக்கு உதவி வருகின்றன. அத்துடன் சிலர் தனித்தும் தமது குடும்ப உறுப்பினர்களுடன்
இணைந்தும் போரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவிவருகின்றனர்.
இத்தனையும் போருக்குப்பின்னர், அதாவது 2009 ஆம் ஆண்டு மே
மாதத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு, தீவிரமாக நடக்கின்றன.
அந்த உதவிகளை வடக்கு கிழக்கில் பெறும் மக்கள், மாணவர்கள்
மத்தியில் தோன்றும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் பொன்னாடை, பூமாலைகளுடன் போஸ் கொடுத்து, " புலம்பெயர்ந்து சென்றவர்கள் தாயகத்து
மக்களுக்கு தொடர்ந்தும் உதவவேண்டும்" என்று அறைகூவல் விடுத்து, இரவல் புடவையில்
கொய்யகம் வைத்துக்கொள்ளும் காட்சிகளும் அரங்கேறுகின்றன.
வெளிநாடுகளில் வதியும் இரக்கமுள்ள அன்பர்கள் தனித்தும், தமது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்தும் போரில்
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவிவருகின்றனர்.
இதுஇவ்விதமிருக்க, போர் நடந்துகொண்டிருந்த காலத்திலேயே புனர்வாழ்வுப்பணிகளிலும்
பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி சார்ந்த பணிகளிலும் பல அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து
ஈடுபட்டன.
அவ்வாறு இயங்கும் அமைப்புத்தான் அவுஸ்திரேலியாவில் 1988 ஆம்
ஆண்டு தொடங்கப்பட்ட எமது இலங்கை மாணவர் கல்வி
நிதியம். வெள்ளிவிழாக்காலத்தையும் நிறைவுசெய்துகொண்டு தொடர்ந்து தங்கு தடையின்றி
இயங்குகிறது.
உதவும் அன்பர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், இணைப்பாளர் அமைப்புகள், பரிபாலன சபை என ஆறு தரப்புகள் இணைந்த அமைப்பாக இயங்கும் எமது கல்வி நிதியத்திற்கு
பொறுப்புகள் அதிகம்.
எமது நிதியத்தில் உறுப்பினராக இணைந்துள்ள அன்பர் ஒருவர் மாதாந்தம்
வழங்கும் நன்கொடையிலிருந்து மாணவர்களின் கண்காணிப்பாளர்களின் அமைப்புகளின் ஊடாக காலாண்டுக்கு
ஒருமுறை நிதியுதவி அனுப்பிவைக்கப்படுகிறது.
மாணவர்கள் அந்த உதவியைப்பெறும்பொழுது, உதவும் அன்பருக்கு
கடிதமும், இறுதியாக நடந்த தவணைப்பரீட்சை புள்ளிவிபரங்களையும் குறிப்பிட்ட மாணவர் கண்காணிப்பு
இணைப்பாளர்கள் ஊடாக அனுப்புவார்கள்.
பெரிய பொதிகளில் அவை தபாலில் வந்து சேரும். அதன் பின்னர்
அவை உதவும் அன்பர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அத்துடன் நிதியத்தின் பரிபாலன சபைக்கூட்டமும்
மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நடைபெற்று மாணவர்களின் முன்னேற்றங்கள் ஆராயப்படும்.
அதனால் முன்னர் குறிப்பிட்ட ஆறு தரப்பினரும் பொறுப்புடன்
நடந்துகொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றனர்.
வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை
இலங்கை சென்று மாணவர்களையும் இணைப்பாளர்களையும்
நேருக்கு நேர் சந்திப்போம். மாணவர் ஒன்றுகூடலில் இணைப்பாளர்களும் நாமும் மாத்திரம்
பேசமாட்டோம். உதவிபெறும் மாணவர்களையும் அவர்களின் தாய்மாரையும் பேசவைப்போம்.
யாழ். மாவட்ட மாணவர்களுக்கான ஒன்றுகூடல் தகவல் அமர்வுக்கு
யாழ். அரச அதிபர் திரு. வேதநாயகம் செயலக மாநாட்டு மண்டபத்தை தந்து உதவினார்.
யாழ்.சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர்
திரு. சொ. யோகநாதனும் மற்றும் நிலைய உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் தத்தமக்கு
ஒப்படைக்கப்பட்ட பணிகளில் ஈடுபட்டனர். மாணவர்களும் தாய்மாரும் விளக்கேற்றினர். உரையாற்றினர்.
சில தாய்மார் போரில் காணமல்போன தமது கணவர்மாரைத் தேடிக்கொண்டிருப்பவர்கள். பல குழந்தைகளுக்கு
தமது தந்தையரின் முகமும் தெரியாது. அவர்களின் உரைகளுடன் கண்ணீரும் கலந்திருந்தது.
சில தாய்மார் தமது இழப்புகளையும் தேவைகளையும் சொன்னபோது சில
தாய்மார், தொடர்ந்தும் நாம் கையேந்தும் வாழ்க்கையைத்தொடராமல் தன்னம்பிக்கையுடன் குறைந்த
வளங்களில் நிறைவு கண்டு முன்னேற வேண்டும் என்றனர்.
ஒரு தாயார் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேலைகள் செய்து
பிள்ளைகளை காப்பாற்றிவருவதாகச்சொல்லி முன்னுதாரணமாகத்திகழ்ந்தார்.
இலங்கையில் கல்வித்துறையில் மத்திய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும்
பல அமைச்சர்கள், துணை அமைச்சர்கள். ஆனால், வடக்கிலும் கிழக்கிலும் இன்றும் ஆசிரியர்
பற்றாக்குறை நீடிக்கிறது. வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடருகிறது.
தொண்டர் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பல அதிபர்கள்
சிரமப்படுகின்றனர். அதற்கும் வெளிநாட்டு அன்பர்களின் உதவியை நாடுகின்றனர். பல
பாடசாலைகளில் தளபாடப்பற்றாக்குறை நீடிக்கிறது. ஆசிரியர் இடமாற்றங்களில் அரசியல் பழிவாங்கல்
தொடருகிறது.
இச்சந்தர்பத்தில்தான், " அறிவதற்காக கற்றல், செயலாற்றுவதற்காக கற்றல்,
பிறரோடு சேர்ந்து வாழக்கற்றல், சுயஆளுமையுடன் வாழக்கற்றல்" - என்ற யுனெஸ்கோவின் கல்விச்சிந்தனை நினைவுக்கு வருகிறது.
இதனை இலங்கை கல்வி அமைச்சர்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும்
சமர்ப்பிக்கின்றோம்.
யாழ். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மறுநாள் காலையே முல்லைத்தீவுக்கு
புறப்பட்டோம். யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலைய உத்தியோகத்தர்களும் உடன் வந்தனர். பயணச்சோர்வை புறக்கணிக்க புகலிட வாழ்வின் சுவாரஸ்யமான
கோலங்களையும் அவலங்களையும் சொல்லிக்கொண்டு வந்தேன்.
முறிகண்டியிலும் வழிபாடுகளை முடித்துக்கொண்டோம்.
முல்லைத்தீவு விசுவமடு கணினி வள பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுவர் அபிவிருத்தி நிலைய திட்ட
அலுவலர் திரு. ந. பாஸ்கரன், திட்ட இணைப்பாளர்
திரு. சி இன்பரூபன், யாழ். சிறுவர்
அபிவிருத்தி நிலைய பரிபாலன சபை உறுப்பினர் திரு. த. ஜெயந்தன் ஆகியோரும் உரையாற்றினர். தாய்மாரும் உரையாற்றினர்.
மாணவச்செல்வங்கள் தமது ஆற்றலை வெளிப்படுத்தி பாடினர், ஆடினர்.
அவர்களுடன் மதிய
விருந்துண்டபின்னர், தாமதிக்காமல் வவுனியாவுக்கு வந்தோம். அங்கு வேப்பங்குளத்தில்
இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான
தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணிமனையில் மாணவர் ஒன்றுகூடல் நடைபெற்றது.
வவுனியா நிகழ்ச்சிகளை, வவுனியா சமூக அபிவிருத்திக்கான தொண்டு நிறுவனத்தின் இணைப்பாளர் செல்வி நிரோஷினி ஒழுங்குசெய்திருந்தார். எமது கல்வி நிதியம் ஆரம்பிக்கப்பட்ட 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உதவிபெற்ற
வவுனியா மாவட்ட மாணவி செல்வி கிருஷ்ணவேணி சுப்பையா
( திருமதி கிருஷ்ணவேணி
நந்தபாலன் ) தமது கல்வியை நிறைவுசெய்து
பட்டதாரியாகி, வவுனியா மாவட்டம் பூந்தோட்டம் மகா
வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றுகிறார்
என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரும் இம்முறை வவுனியாவில் நடைபெற்ற மாணவர்
ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இங்கும் மாணவர்களும் தாய்மாரும்
உரையாற்றத்தக்கதாக நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்திருந்தோம்.
இம்முறை பயணத்தில் மனதிற்கு
நிறைவான பல சம்பங்களும் இடம்பெற்றன.
நிதியம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில்
உதவிபெற்ற பல மாணவ மாணவிகள் தற்பொழுது பல்கலைக்கழகப் பட்டத்துடன் சிறந்த தொழில்
வாய்ப்புகளும் பெற்றிருக்கின்றனர் என்ற செய்தியறிந்தோம். அவர்களில் சிலர்
எம்மைச்சந்திக்கவும் மாணவர்களின் ஒன்றுகூடலில் பேசுவதற்கும் முன்வந்தனர்.
சிலர் தமது வீடுகளுக்கும் அழைத்து உபசரித்து உரையாடினர். தமக்கு உதவிய
அன்பர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தனர். இன்றும் கல்வியைத்தொடரும் மாணவர்கள் சிலர்
வாழ்த்து மடல்களை தமது கைவண்ணத்தில் அழகுற தயாரித்து உரியவர்களிடம்
சேர்ப்பிக்குமாறு தந்தபோது நெகிழ்ந்துவிட்டேன்.
சில மாணவர்கள் தமது பல்கலைக்கழக
பட்டமளிப்பு படங்களை தந்தனர்.
தற்பொழுது கல்வியை தொடரும்
மாணவர்கள் மத்தியில் தாம் கடந்து வந்த பாதையை குறிப்பிட்டு, தாமும் உற்சாகமடைந்து
நிதியத்தையும் மாணவர்களையும் பரவசப்படுத்தினர்.
முடிந்தவரையில் முன்னாள்
மாணவர்களுக்கும் இன்றைய மாணவர்களுக்குமிடையே கலந்துரையாடல்களை ஏற்படுத்தினோம்.
இந்தப்பத்தியில் பட்டம் பெற்ற மாணவர்களையும் காணலாம். விரிவஞ்சி மாணவர் பட்டியலை தவிர்க்கின்றேன்.
இரண்டு நாட்கள் முழுமையாக
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் நிதியத்தின் பயன்பெறும் மாணவர்களுடனும்,
அவர்களின் தாய்மார் மற்றும் பாதுகாவலர்களுடனும் எமது பொழுது கழிந்தது.
வவுனியா நிகழ்ச்சிகளை
முடித்துக்கொண்டு கிளிநொச்சிக்குப்புறப்படத்தயாரானபோது ஒரு தொலைபேசி அழைப்பு
வந்தது.
மறுமுனையில் பேசியவர் மறைந்த ஒரு
எழுத்தாளரின் மனைவி. அந்த எழுத்தாளர்,
பத்திரிகையாளராக முன்னர் சுதந்திரன், தேசாபிமானி, புதுயுகம், தினகரன் ஆகிய
பத்திரிகைகளில் பணியாற்றியவர். கவிதைகள், விமர்சனங்கள், சிறுகதைகள்
எழுதியிருப்பவர்.
புளட் இயக்கத்தின் சார்பில்
உமாமகேஸ்வரனால், திம்பு பேச்சுவார்த்தைக்கும் அனுப்பிவைக்கப்பட்டவர்.
ஆனால், இன்று அவரது மனைவி துயரம்
கப்பிய வாழ்வோடு இடத்துக்கிடம் பெயர்ந்து சிரமமான வாழ்வைத்தொடருகிறார்.
குழந்தைகளும் இல்லை. அவருக்குப்பின்னாலும் போர்க்காலக்கதை இருக்கிறது. நான் இலங்கை வந்திருக்கும் தகவலை
கொழும்பிலிருக்கும் ஒரு எழுத்தாளர் நண்பரிடம் தெரிந்துகொண்டு தொலைபேசியில்
தொடர்புகொண்டார்.
சுகவீனமுற்று, கண்பார்வையிலும் பாதிப்பு வந்து சிரமப்படுவதாக நாதழுதழுக்க அவர் சொன்னபோது வேதனையாக இருந்தது.
தன்னை எங்காவது ஒரு முதியோர்
இல்லத்தில் சேர்த்துவிடுமாறு அவர் வேண்டினார்.
இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். அந்த சகோதரியையும் இந்தப்பயணத்தில்
பார்த்துவிடுவதற்கு விரும்பினேன்.
ஆனால், உடன்வந்தவர்களிடம் அவரின்
வாழ்வின் சோகரசம் நிரம்பிய முன்னுரையை
சொல்லவில்லை.
மாலைப்பொழுது சாயும் அந்த வேளையில் வவுனியாவின்
ஒரு எல்லைக்கிராமத்திற்கு
அந்தப்பெண்மணியைத்தேடிச் சென்றுகொண்டிருந்தோம்.
(பயணங்கள் தொடரும்)
---0---
No comments:
Post a Comment