கடவுளின் புகைப்படம்

.

கடைசியாக முகத்தை பாக்குறவங்க பார்த்துக்கலாம் சாமியோவ்,
முகத்தை மூடிய பிறகு திறக்க கூடாது அப்புறம் சாமி குத்தம் ஆகிவிடுமென உரத்த குரலில் சொல்லி கொண்டு பிணத்தை எரிப்பதற்கூ உண்டான சடங்கை செய்ய ஆயுத்தமானான் வெட்டியான்.

யாரும் வரவேண்டியது இருக்கா என்று கேட்டு பதில் வராததால் முகத்தை சானி வரட்டி கொண்டு மூடி விட்டு விறகினை உடல் மேல் அடுக்கலானான்...
ஏலே பாஸ்கரா தாத்தாவுக்கு கொள்ளி வைலே என்று தனது அருகில் நின்ற பையனை பார்த்து சொந்தக்கார பெருசு ஒன்று சப்தமிட்டது..

விறகோடு சதையையும் சேர்த்து சாப்பிட்ட நெருப்பு,வயிறு நிறைந்த ஏப்பத்தில் புகையை வெளியிட்டது..தாத்தாவின் எச்சமாய் இப்போது சாம்பல் மட்டுமே மண்ணோடு பரவி கிடந்தது..
மூன்றாம் நாள் காரியம் முடிந்து பூஜையறையில் சாமி படம் அருகே ஆணி அடித்து பித்தளை முலாம் பூசிய பிரேம் இட்டு சிரித்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை தொங்க போட்டிருந்தனர்..

நெற்றியில் குங்குமமிட்டு பூமாலை அணிவித்து அணையாத விளக்கு ஒன்று எரிய விடப்பட்டு இருந்தது..
தரையில் சாம்பிராணி,பத்தி புகை மணம் கமழ,தேங்காயும் வாழைப்பழமும் தாம்பூல தட்டில் ஜோடியாய் கிடந்தது..

ஏலேய் தாத்தாவை கும்புட்டுகோல உனக்கு நல்ல புத்தியும் படிப்பும் வரட்டும்னு என்ற தந்தையின் குரலை கேட்டு தலையசைத்து கும்பிட்டு விட்டு வெளியே வந்த பாஸ்கரனின் கண்ணில் பட்டது மற்றொரு தாழிடப்படாத சாத்தப்பட்ட அறையொன்று..
தாத்தா இறக்கும் முன்பு கவனிப்பாறற்று மலமும் சிறுநீரும் சூழ்ந்து வீசியதை போன்றே பாட்டியின் அறையிலும் நாற்றம் எடுத்தது...

பூஜையறைக்கு இன்னொரு கடவுளின் புகைப்படம் தயாராகி கொண்டிருந்தது.

http://eluthu.com

No comments: