இலங்கையில் பாரதி -- அங்கம் 31 முருகபூபதி

.

" ஐதீகத்தை  கட்டிக்களிக்கும் வைதீகராயினும் சரி, பழமையைப் பகைக்கும்  புதுமை விரும்பியும் சரி, பாரதியைப் பாராட்டுகிறார்கள். மேடை ஏறிப்பேசும் அரசியல்வாதி பாரதியின் பாடல்களிலிருந்து  மேற்கோள் காட்டுகின்றான். ஏடு தீட்டும் எழுத்தாளன், பாரதியின் கவிதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள் தருகின்றான்.  இசைவாணன் பாரதியின் பாடல்களைப் பண்ணோடு  இசைக்கின்றான். திரைப்படமெடுப்போரும், தெருவிலே  பிச்சை  ஏந்துவோரும்கூட, பாரதியின் பாடல்களை இனிமையான, கவர்ச்சிகரமான, உள்ளத்தைக்குளிர்விக்கக்கூடிய மெட்டுகளிலே  வைத்திழைத்து மக்களுக்கு வழங்குகிறார்கள். அந்த அளவுக்குப் பாரதி தமிழ் உலகத்தில் அழியாச்சித்திரமாகிவிட்டான்."




 
1954  ஆம் ஆண்டளவில் இலங்கையில் நாடளாவிய ரீதியில் நடந்த பாரதி விழாக்களில் உரையாற்றிய  மூத்த நாவலாசிரியரும் பாரதியின் புகழை இலங்கையிலும் மலேசியாவிலும் தமிழ்நாட்டிலும் பரப்பியவருமான பத்திரிகையாளரும் நாடகாசிரியருமான இளங்கீரன் அவர்கள்  தாம்  எழுதியிருக்கும் பாரதி கண்ட சமுதாயம் என்ற நூலில்  மேற்கண்டவாறு  பதிவுசெய்துள்ளார்.

இந்நூலை  சென்னை நவபாரத் பதிப்பகம் 1955 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 1927 ஆம் ஆண்டு பிறந்த இளங்கீரன், 1997 ஆம் ஆண்டு நீர்கொழும்பில் மறைந்தார்.


 25 நாவல்களும்,  ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும், தேசிய இலக்கியமும் மரபுப்போராட்டமும்,  பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும் முதலான நூல்களும் எழுதியிருக்கும் இளங்கீரன், வானொலி மற்றும் மேடை நாடகங்களும் எழுதியிருப்பவர்.

மரகதம் என்னும் இலக்கிய இதழின் ஆசிரியர்.அத்துடன் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளி, குமார் ரூபசிங்க நடத்திய ஜனவேகம் முதலான பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக்குழுவில்  அங்கம்வகித்தவர். இச்சங்கத்தினால் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பல பாரதி விழாக்கள், மாநாடுகள், கருத்தரங்குகளில் அர்ப்பணிப்புடன் இணைந்திருந்தவர்.
தமது இருபது வயதிலேயே எழுத்துலகில் பிரவேசித்து வாழ்நாள்முழுவதும் முழுநேர எழுத்தாளராகவே  இயங்கியவர். மலேசியாவில் வாழ்ந்த காலத்தில் அங்கு இனமணி என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். சிறந்த பேச்சாளராகவும் சமூகப்பணியாளராகவம் விளங்கிய இளங்கீரன், ஒரு காலத்தில்  யாழ்ப்பாணத்தில் மாநகர சபை உறுப்பினருக்கான  தேர்தலிலும் போட்டியிட்டவர்.

இலங்கையில் பாரதி நூற்றாண்டு ( 1982 - 1983) கொண்டாடப்பட்ட காலத்தில் இளங்கீரன் எழுதிய மகாகவி பாரதி நாடகம் கொழும்பில் இருதடவைகள் மேடையேற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் அமைந்துள்ள குளத்தடி பள்ளிவாசல் (சின்னப் பள்ளிவாசல்) சீர்திருத்த சபையின் செயலாளராகக் கடமையாற்றி பெரிய குளம், சின்னக்குளம் ஆகியவற்றைப் புனரமைத்தார். இலங்கை முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சினால் நடத்தப்பட்ட   வாழ்வோரை வாழ்த்துவோம்  எனும் வைபவத்தில் இலக்கிய வேந்தர் எனும் பட்டத்தையும் விருதையும்  பெற்றவர்.   இந்து சமய, கலாசார இராஜாங்க அமைச்சு  1992  இல்  நடத்திய சாகித்திய விழாவில்  இலக்கியச்செம்மல் ன்னும் பட்டமும் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
இவ்வாறு பல சிறப்பியல்புகளைக்கொண்டிருந்த இளங்கீரன், தமது 27 வயது பராயத்திலேயே பாரதியின் புகழை இலங்கை எங்கும்  பரப்பியிருக்கிறார்.
பாரதியின் கருத்துக்களினால் பெரிதும் கவரப்பட்டிருந்த அவரை இலங்கையில் பல  பாகங்களிலுமிருந்த அமைப்புகளும் பாடசாலைகளும் அழைத்து பாரதி பற்றி பேசவைத்திருக்கின்றன.
1954 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதியிலிருந்து அக்டோபர் 10 ஆம் திகதி வரையில் இளங்கீரன் நாடெங்கும்  சூறாவளிப்பயணம்  மேற்கொண்டு,  பாரதி விழா மேடைகளில் முழங்கியிருக்கிறார்.
சில ஊர்களிலிருந்து வந்த அழைப்பை தவிர்க்கமுடியாத காரணங்களினால்  தவிர்த்திருக்கிறார். பாரதி கண்ட சமுதாயம் என்ற அவரது நூல் வெளிவந்ததற்கான காரணத்தை இளங்கீரன் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்: -
" பாரதிவிழாவில் பங்குபற்றிச்சொற்பொழிவாற்றும்படி பல ஊர்களிலிருந்து அழைப்பு வந்தது. சில கூட்டங்களில் கலந்துகொள்ளத்தான் எனக்கு வாய்ப்புக்கிடைத்தது. பல இடங்களிலிருந்து வந்த அழைப்பை நிராகரிக்கவேண்டிவந்துவிட்டது நேரமில்லாத காரணத்தால். இதைக்குறித்து நான் வருந்திக்கொண்டிருந்தேன். இதே சமயத்தில், நான் பங்குபற்றிய கூட்டங்களில் நான் ஆற்றிய சொற்பொழிவுகளை ஒன்றாகத்தொகுத்து நூல் வடிவில் வெளியிடவேண்டுமென்று பல தோழர்களிடமிருந்து அஞ்சல்கள் வந்தன. நேரிலும் வலியுறுத்தினார்கள். இப்படி நூல்வடிவில் வெளியிட்டால், நான் போகமுடியாதிருந்த ஊர்களிலுள்ள தமிழன்பர்களுக்கும் இந்த நூல் ஆறுதலைக்கொடுக்குமென்று எண்ணி சமாதானமடைந்தேன். இதன் விளைவே இந்நூல். இலங்கைத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ளவர்களுக்கும், இதர நாடுகளிலுள்ள தமிழர்களுக்கும் இந்த நூல் பயனளிக்கவேண்டுமென்பதுதான் எனது ஆசை. "
இளங்கீரன் அவர்களின் ஆசை சமூகத்திற்கும் பயன்பட்டது. குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்படும் நாவன்மைப்போட்டிகளில் பாரதியின் வாழ்வையும் பணிகளையும் பற்றி உரையாற்றவிரும்பும்  மாணவர்களுக்கும்,  அத்தகைய போட்டிகளை தயார்படுத்தும் பாடசாலைகள் மற்றும் அமைப்புகளுக்கும் உசாத்துணையாக இளங்கீரனின் பாரதி கண்ட சமுதாயம் விளங்கியிருக்கிறது.
பாரதியை பலரும் பல்வேறுகண்ணோட்டத்தில் ஆராய்ந்துள்ளனர். பாரதியின் சிந்தனைகளின் அடியொற்றி தேசியம், மொழி, பொருளாதாரம், ஆன்மீகம், இனவிடுதலை, பெண்விடுதலை, அரசியல் சுதந்திரம் மட்டுமன்றி இன்னோரன்ன விடயங்களிலிருந்தும் ஆய்வுக்குட்படுத்தியிருக்கின்றனர்.
இந்தப்பின்னணியிலிருந்து கலாநிதி ந. இரவீந்திரன் எழுதியிருக்கும் பாரதியின் மெய்ஞ்ஞானம் என்ற நூலை மதிப்பீடுசெய்யலாம். இந்நூலை இலங்கையில்,  தேசிய கலை இலக்கியப்பேரவை வெளியிட்டுள்ளது.
இதன் முதல்பதிப்பை சென்னை புக்ஸ் என்னும் பதிப்பகம் 1986 இல் வெளியிட்டது.
இந்த நூலை எழுதுமாறு தூண்டியவர் பேராசிரியர் கைலாசபதி என்பதும் குறிப்பிடத்தகுந்தது.  அதனால், அவருக்கே  இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்நூல் பற்றிய அறிமுகத்தை தேசிய கலை இலக்கியப்பேரவையின் இணைச்செயலாளர்கள் க. தணிகாசலமும் சோ. தேவராஜாவும் வழங்கியிருக்கிறார்கள். அவர்களின் பதிவிலிருந்து பின்வரும் கருத்துக்களை இங்கு குறிப்பிடுகின்றோம்.
" ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பியோ விரும்பாமலோ ஏதோ ஓர் உலகநோக்கின் அடிப்படையில்தான் சிந்திக்கின்றான், செயற்படுகின்றான். சமூகத்தின் பல்துறைசார்ந்த ஒருவரது செயல், சிந்தனை, எழுத்து, பேச்சுக்களிலிருந்துதான் அவரது உலகநோக்கு சரியாக அடையாளம் காணப்படுகிறது. பாரதி நூற்றாண்டு நினைவாக வெளிவந்த பல நூல்கள் பாரதியின் வாழ்வையும் எழுத்தையும் வெளிக்கொணர்வதில் வெற்றிகண்டுள்ளன. எனினும் அவற்றுக்கு அடிப்படையான அவரது உலக நோக்குப்பற்றிய ஆய்வு நூல்கள் மிகச்சிலவே வெளிவந்துள்ளன.
மனிதகுல வரலாற்றை முன்தள்ளுவதில் பொருளாதய உலகநோக்கு பெரும்பங்கை வகித்தாலும், இன்றுவரை ஓர் அடிப்படைச் சமுதாய மாற்றம் ஏற்படாத பின்தங்கிய நாடுகளில் வாழும் பெரும்பாலான மக்கள், ஆன்மீக உலகநோக்கை உடையவர்களாகவே இருக்கின்றனர். ஒரு சமூக மாற்றத்துக்காக இத்தகைய மக்களை அணிதிரட்ட முனையும்போதுதான், இவ் உலக நோக்குப்பற்றிய மதிப்பீடு அவசியமாகிறது.
ஆன்மீகவாதிகள் அனைவரும் மனிதகுல விடுதலைப்போராட்டங்களின் விரோதிகள், பிற்போக்குவாதிகள் என்று ஒரு சாராரும், ஆன்மீகம் வேரூன்றிவிட்ட இந்த மண்ணில் ஆன்மீகம் கலந்த ஒருவகை மாக்ஸிஸத்தின்  மூலமே ஒரு சமுதாய மாற்றம் சாத்தியமாகும் என்று இன்னொரு சாராரும் கருதுகின்ற நிலையில், ஆன்மீகத்தின் முற்போக்கான பாத்திரத்தை எப்படி தேசநலனுக்கும், முன்னேற்றத்திற்கும் அடிப்படைச்சமுதாய மாற்றத்திற்கும் துணையாகக்கொள்ளலாம் என்ற ஆய்வினை விரிவாக்க இந்நூல் துணைசெய்கிறது."
இந்நூலை எழுதியிருக்கும் கலாநிதி ந. ரவீந்திரன்,  இலங்கை தேசபக்த வாலிப இயக்கத்தின் தலைமை உறுப்பினராகவும் விளங்கியவர். பல முற்போக்கான சமூக, அரசியல் போராட்டங்களிலும் ஈடுபட்டவர். சமூகவிஞ்ஞானப்பார்வையில் கட்டுரைகள் எழுதிவருபவர்.
பாரதியின்  மெய்ஞ்ஞானம் நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் பேராசிரியர் சி. சிவசேகரம், " இரவீந்திரனின் ஆய்வு நூல் பாரதியின் சிந்தனையை முழுமையானதாகவும் வரலாற்று வளர்ச்சியுடையதாகவும் காட்டி. அதனுள் இதுவரை தீர்க்க இயலாததாகப் பலராலும் காணப்பட்ட முரண்பாட்டினுள் ஒற்றுமையை அடையாளங் காட்டுகிறது. அவரது கருத்துக்களில் எனக்கு ஒரு சில ஐயங்களும் அபிப்பிராய வேறுபாடுகளும் இருப்பதை ஏற்கனவே அவருக்குத் தெரியப்படுத்திவிட்டேன். அவற்றுள் சில பாரதி பற்றிய என் அறியாமை சார்ந்தவையாக இருக்கலாம். மற்ற வேறுபாடுகள், பெரும்பாலும், நூலின் நோக்குடனும் அவரது அடிப்படையான வாதத்துடனும் தொடர்பானவை அல்ல என்பது குறிப்பிடவேண்டியது.
இரவீந்திரனின் கருத்துக்கள் நிச்சயமாக மாற்றுக்கருத்துக்களை எழுப்பும் என்பதில் எனக்கும் அவருக்கும் ஐயம் இராது. அவை ஆரோக்கியமான விவாதமாக வளர்ந்து பாரதி பற்றி அவர் கட்டியெழுப்ப முனைந்துள்ள பார்வையை மேலும் செழுமையடையச்செய்யும் என்பது எனது  நியாயமான எதிர்பார்ப்பு. அவருடைய சிந்தனையின் நேர்மையும் எழுத்தின் தெளிவும் வாதங்களின் கூர்மையும் அவரிடமிருந்து தமிழ் இலக்கிய ஆய்வுத்துறை மேலும் நல்ல பங்களிப்புக்களை எதிர்பார்க்கலாம் என்றே கூறுகின்றன."  எனத்தெரிவித்துள்ளார்.
" பாரதி ஆய்வுகளில் பெரும்பாலும் பாரதியின் மெய்ஞ்ஞானம் பற்றிய அகநிலைவாதத் தவறுகள் மேலோங்கியிருப்பதைக்கண்டதன் விளைவாக, இக்கட்டுரையை எழுதும் அவசியத்தை உணர்ந்துகொண்டேன் அவரை முற்றாகவே ஒரு மதவாதியாகக் காட்ட யாரும் முயன்றதில்லை. அதேவேளை பாரதியின் புரட்சிகர வாழ்வைப் பலதரப்பட்ட  அரிய ஆய்வுகள் வாயிலாய் வெளிக்கொணர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள், அவரது ஆன்மீகவாதம் பற்றி அகநிலைத்தவாதத் தவறுகள் உட்பட்டிருந்தார்களாதலால், பாரதியின் இயக்கப்போக்கைக் கணிப்பதிலும் தவறுகளைத் தவிர்க்கமுடியாதவர்களாயிருந்தார்கள். இக்கட்டுரை, பாரதியை புறநிலைரீதியாக ஆராய்ந்து, அவரது அரசியல் வாழ்வையும் அதற்கென அவர் வரித்துக்கொண்ட மெய்ஞ்ஞானத்தையும் பற்றி சரியான கண்ணோட்டத்தைப்பெற முயற்சிக்கும். இத்தகைய பிறநிலை ரீதியான ஆய்வுகள் மேலும் அவசியமானவை" என்று இந்நூலாசிரியர் கலாநிதி ந. இரவீந்திரன் குறிப்பிடுகிறார்.
இலங்கையில் பாரதியை பலகோணங்களிலும் பலரும் ஆய்வுசெய்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த அங்கத்தில் சொல்லப்படும் இளங்கீரனின் நூலும் இரவீந்திரனின் நூலும் சிறந்த சான்றுகள்.
இளங்கீரன், இரவீந்திரன், தணிகாசலம், சோ. தேவராஜா மற்றும் பேராசிரியர் சிவசேகரம் ஆகிய  ஐவரும் மாக்ஸீயச்சிந்தனையில் இயங்கியவர்கள்.
இளங்கீரனின் பாரதி கண்ட சமுதாயம்  பாடசாலை மாணவர்களுக்கு பெரிதும் உதவியிருக்கிறது. இரவீந்திரனின் பாரதியின் மெய்ஞ்ஞானம் பல்கலைக்கழக மட்டத்தில் மாத்திரமின்றி பாரதி இயல் ஆய்வுகளுக்கும் பெரிதும் பயன்பட்டுள்ளது.
இலங்கையில்,  பாரதி இவ்வாறெல்லாம் பேசப்பட்டுள்ளார். தொடர்ந்தும் பேசப்படுகிறார்.
(தொடரும்)





No comments: