இராணுவத்தினர் மீது வாள்வெட்டு ; சந்தேகத்தின் பேரில் 6 பேர் பொலிஸாரால் கைது
நாட்டில் பாரிய நெருக்கடி: 13 இலட்சம் பேர் பாதிப்பு
கேப்பாப்புலவுவில் 111 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை
இந்தியா, சீனாவின் பரிசோதனை மைதானமாக இலங்கை
இலங்கை நீதித்துறையில் கடும் பாதுகாப்புக்கு உரியவராக நீதிபதி இளஞ்செழியன்
இராணுவத்தினர் மீது வாள்வெட்டு ; சந்தேகத்தின் பேரில் 6 பேர் பொலிஸாரால் கைது
25/08/2017 கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுப்புலம் பகுதியில் நேற்று இரவு
10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரை
பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஊற்றுப்புலம் கிராமத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சினை முற்றியதில் குறித்த
சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இராணுவத்தில் சேவையாற்றி
விடுமுறையில் சென்ற இருவரே குறித்த வாள்வெட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
காயமடைந்த இருவரில் ஒருவர் கொழும்பு வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளதுடன், மற்றையவர் இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு
சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் ஆறுபேர்
கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்று கிளிநொச்சி நீதிமன்றில்
அடையாள அணிவகுப்பிற்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும்
தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து
வருகின்றனர். நன்றி வீரகேசரி
நாட்டில் பாரிய நெருக்கடி: 13 இலட்சம் பேர் பாதிப்பு
25/08/2017 நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் 13
இலட்சத்து 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ
மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் வரட்சியான காலநிலை நீடிக்குமாயின் மக்களுக்கு
நிவாரண உதவிகளை வழங்குவதில் பாரிய நெருக்கடியை சந்திக்க வேண்டிய
நிலை ஏற்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை தொடர்பில் அனர்த்த
முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே
மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் நிலவும் கடும் வரட்சியினால் 20 மாவட்டங்களைச் சேர்ந்த
மக்கள் பாதிப்புகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக 13
இலட்சத்து 23 பேர் தற்போது வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 1 இலட்சத்து 28 ஆயிரத்து 652 பேரும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 1 இலட்சத்து 15 ஆயிரத்து 308 பேரும்,
மன்னார் மாவட்டத்தில் 1 இலட்சத்து 15 ஆயிரத்து 928 பேரும், வவுனியா
மாவட்டத்தில் 1இலட்சத்து ஆயிரத்து 914 பேரும், புத்தளம் மாவட்டத்தில்
1இலட்சத்து 64 ஆயிரத்து 463 பேரும் மாவட்ட ரீதியில் அதிகளவில்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
வழங்குவதற்காக அரசாங்கம் 1.5 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு
செய்துள்ளது. திறைசேரியினூடாக குறித்த 1.5 பில்லியன் ரூபா
நிதியினை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக மாவட்ட
செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தொடர்ந்தும் வரட்சியான காலநிலை நீடிக்குமாயின்
மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் பாரிய நெருக்கடியை
சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிவாரண
நிதியினை இரட்டிப்பாக ஒதுக்கீடு செய்யவேண்டிய நிலை ஏற்படும் எனவும்
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கெப்பத்திகொல்லாவ
பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது விடுத்த
பணிப்புரைக்கமையவே குறித்த உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை புத்தளம், குருநாகல், கிளிநொச்சி, யாழ்ப்பாணம்,
முல்லைத்தீவு, அனுராதபுரம், பொலனறுவை, மொனராகலை ஆகிய
மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு நிவாரணம்
வழங்குவதற்காக குறித்த நிதியிலிருந்து 1.43 பில்லியன் ரூபாய்
இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மட்டக்களப்பு, திருகோண மலை, அம்பாறை, பதுளை, ஹம்பாந் தோட்டை,
வவுனியா, மன்னார் மாவட்ட மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்க துரித
நடவடிக்கை எடுக்கப்பட்டிருப் பதாகவும் குறித்த மாவட்ட செயலாளர்கள்
தெரிவித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
கேப்பாப்புலவுவில் 111 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை
24/08/2017 முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு
கிராமத்து மக்களை மீள்குடியேற்றுவதற்காக மேலும் 111 ஏக்கர்
காணியினை விடுவிப்பதற்கு அவ்விடத்தில் காணப்படுகின்ற இராணுவ
முகாமினை பிறிதொரு இடத்தில் ஸ்தாபிப்பதற்கு தேவையான நிதியினை
ஒதுக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று
அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க
தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து
வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராமத்து மக்களை
மீள்குடியேற்றுவதற்காக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 432
ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன்,
மேலும் 111 ஏக்கர் காணியினை விடுவிப்பதற்கு இராணுவ தளபதி இணக்கம்
தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், அக்காணிப்பகுதியினை
விடுவிப்பதற்காக அவ்விடத்தில் காணப்படுகின்ற இராணுவ முகாமினை
பிறிதொரு இடத்தில் ஸ்தாபிப்பதற்கு தேவையான நிதியினை ஒதுக்கிக்
கொள்வதற்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு,
மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால்
முன்வைக்கப் பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நன்றி வீரகேசரி
இந்தியா, சீனாவின் பரிசோதனை மைதானமாக இலங்கை
23/08/2017 இலங்கையானது விரைவில் சீனாவினதும்
இந்தியாவினதும் பரிசோதனை மைதானமாக மாறப்போகின்றது. உலக
நடப்புக்களைப் பார்க்கும்போது இந்த நிலைமை விரைவில் ஏற்படும் என்று
தோன்றுகிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா
காலூன்றியிருப்பதும் மத்தள விமான நிலையத்தில் இந்தியா
காலூன்றப்போவதும் இந்த சமிக்ஞையை வெளிக்காட்டியுள்ளன என்று கூட்டு
எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய
ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை அமைப்பது என்பது நூறு
வருடங்களுக்கு முன்பிருந்த கனவாகும். அந்நிய
ஆட்சிக்காலத்திலேயே இவ்வாறானதொரு திட்டம் காணப்பட்டது. ஆனால்
கடந்த நூறு வருடங்களாக அதனை யாராலும் செய்ய முடியவில்லை. எனினும்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்தக் கனவை நனவாக்கினார்
என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்தள விமான நிலையத்தை இந்தியாவும் இலங்கையும் இணைந்து
அபிவிருத்தி செய்யப்போவதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில்
விபரிக்கையிலேயே கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு கூறினார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,-
பொய் வாக்குறுதிகளை வழங்கியே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு
வந்தது. இன்று அந்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க
விடப்பட்டுள்ளன. தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை மக்களும்
உணர்ந்து கொண்டுள்ளனர். நாடு பாதிக்கப்பட்டுள்ளது. மக்களும்
பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசாங்கமானது தொடர்ந்து நாட்டின்
வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு
வருகின்றது. தற்போது அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு
வழங்கப்பட்டுள்ளது. இதில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு
குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், விற்பனை செய்யப்படவில்லை
என்றும் ஒரு விளக்கத்தை அரசாங்கம் அளிக்கிறது. ஆனால் 99
வருடங்களுக்கு குத்தகை வழங்குகின்றது என்பது அதனை விற்பதற்கே
சமமாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எமது
பேரப்பிள்ளைகளுக்குக்கூட இந்த துறைமுகத்தின் உரிமை
கிடைக்கப்போவதில்லை.
அதுமட்டுமன்றி அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைப்பது என்பது
கடந்த நூறுவருடகால கனவாகவே இருந்து வந்தது. காரணம் அந்நிய
ஆட்சிக்காலத்திலேயே இந்த இடத்தில் ஒரு துறைமுகத்தை அமைப்பது
இலங்கைக்கு பாரிய நன்மையை பெற்றுக்கொடுப்பதாக அமையும் என
திட்டமிடப்பட்டது. ஆனால் அவர்களால் கூட அதனை செய்ய முடியவில்லை.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனாவினால் கூட
அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைக்க முடியவில்லை. ஆனால் இந்த
எல்லா விடயங்களையும் உடைத்தெறிந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜ
பக் ஷ அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைத்தார். அவ்வாறு அமைத்த
துறைமுகத்தை இன்று நல்லாட்சி அரசாங்கம் சீனாவுக்கு
வழங்கியுள்ளது.
அத்துடன் நிறுத்திவிடாமல் அரசாங்கமானது தற்போது மத்தள விமான
நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கப்போவதாக தெரிவிக்கின்றது.
இதனூடாக இந்தியாவும் தென்னிலங்கையில் காலூன்றப்போகின்றது.
மத்தள விமான நிலையத்திற்கு 4200 ஏக்கர் காணி இந்தியா வசம்
போகப்போகின்றது. இதன்மூலம் எதிர்காலத்தில் இலங்கையானது
சர்வதேசத்தின் ஒரு பிடிக்குள் சிக்கிவிடும் அபாயம் இருக்கிறது.
குறிப்பாக கூறுவதென்றால் இலங்கையானது இந்தியாவினதும்
சீனாவினதும் பரிசோதனை மைதானமாக எதிர்காலத்தில் அமையப்போவதையே
இந்த செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இதற்கு ஏற்றாற்போல் உலக
நடப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த உலக நடப்புக்களை
பார்க்கும்போது எதிர்காலத்தில் இலங்கையானது சீனாவினதும் இந்தியாவினதும்
பரிசோதனை விளையாட்டு மைதானமாக மாறிவிடும் அபாயம் காணப்படுகின்றது.
அதுமட்டுமன்றி திருகோணமலையிலும் இந்தியா காலூன்ற முயற்சிக்கின்றது.
அங்கிருக்கும் எண்ணெய்த்தாங்கிகள் இந்தியாவிற்கு முக்கியமல்ல. மாறாக
திருகோணமலையில் காணியே இந்தியா வுக்கு முக்கியமாக இருக்கிறது. எனவே
இவ்வாறு சர்வதேச நாடுகளின் பிடிக்குள் இலங்கை சிக்கிவிடும் அபாயமே
இருக்கிறது என்றார். நன்றி வீரகேசரி
இலங்கை நீதித்துறையில் கடும் பாதுகாப்புக்கு உரியவராக நீதிபதி இளஞ்செழியன்
21/08/2017 இலங்கை நீதித்துறையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி
இளஞ்செழியனுக்கு விசேட அதிரடிப்படையினருடன் கூடிய விசேட
பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடமை நேரத்தில் நீதிமன்றத்திலும், அவருடைய வாசஸ்தலத்திற்கும் இந்த விசேட பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது.
நல்லூர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தையடுத்து, நீதிபதி
இளஞ்செழியனுடன் உடனடியாகத் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன அந்தச் சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்ததுடன்,
அவருடைய பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களிலும் கூடிய கவனம்
செலுத்தியிருந்தார்.
அதேநேரம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், அத்துல் ஹேசாப்
நீதிபதியுடன் தொடர்பு கொண்டு, நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்
பற்றிய விபரங்களைக் கேட்டறிந்ததுடன், அவருடைய பாதுகாப்பு
தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தார்.
இதனையடுத்து, நீதிபதி இளஞ்செழியனுக்கு அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி வழக்கு விசாரணைக்கான விசேட
நீதிபதியாக நீதிபதி இளஞ்செழியன் நியமிக்கப்பட்டிருந்தபோது,
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் அவருக்கு விசேட பாதுகாப்பு
வழங்கப்பட்டிருந்தது.
அச்சமயம் அமெரிக்க தூதுவராக இருந்த ஏட்லி வில்ஸ்சும் நீதிபதியின்
பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தியிருந்தார்.
நீதிபதி இளஞ்செழியன் வவுனியாவில் கடமையாற்றியபோது, அவருக்கு
சிக்மா மோட்டார் சைக்கிள் படையணி பாதுகாப்பு வழங்கியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
தற்போது அவருடைய பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையைச்
சேர்ந்த எட்டுப் பேர் அடங்கிய குழுவினர், அவர் நீதிமன்றத்தில்
கடமையில் இருக்கும்போது பாதுகாப்பு வழங்குவதற்காக
நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாண்டோவின் கட்டளையின்படி
யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் அவருடைய வாசஸ்தலத்துக்குப்
பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment