காலமெல்லாம் உதவுமன்றோ ! எம் . ஜெயராமசர்மா



                
                               
image1.JPG               வசதிபல பெருகிறது வாழ்வுநிலை உயர்கிறது 
                     வள்ளல்குணம் மனதைவிட்டு மறைந்தோடி ஒழிகிறது 
               தகுதிபல கொண்டவரும் தனைமறந்தே நிற்கின்றார்
                      வெகுமதிகள் தனைநாடி விரைந்தோடி வருகின்றார் !

              கல்விகற்ற பெரியவரும் கண்ணியத்தை மறக்கின்றார்
                   காசுசேர்க்க நிற்பதிலே கருத்தெனவே இருக்கின்றார்
              புண்ணியத்தை மனமதிலே பொசுக்கிவிட நினைக்கின்றார்
                    பூதலத்தில் நடக்குமிது புரியாமல் இருக்கிறது ! 

             மேடையேறிப் பேசிடுவார் மேதையெனக் காட்டிடுவார்
                  தலைக்கனத்தை விட்டுவிட தாம்நினைக்க மாட்டார்கள் 
             உலகத்துப் பட்டமெலாம் ஒன்றாகப் பெற்றாலும்
                   உள்ளமதில் திருப்தியினை உள்நுழைக்க மாட்டாரே !


             அன்புபற்றிப் பேசிடுவார் அறம்பற்றி பலவுரைப்பார்
                  துன்பமுடன் இருப்பாரை தூரநின்றே பார்த்திடுவார் 
             என்புதசை உடம்பென்று இவ்வுடம்பை இகழ்ந்திடுவார் 
                  அன்புமட்டும் அவரிடத்தில் அணுகிடவே மறுத்துநிற்கும் !

             சாத்திரங்கள் பலவுரைப்பார் சம்பிரதாயம் எனமொழிவார் 
                   ஆத்திரத்தை அடக்கிவிடார் ஆவேசம் கொண்டிடுவார் 
             நேர்த்தியுடன் பாரார்கள் நெறிமுறைகள் தனையொதுக்கி
                    நாத்திகராய் ஆத்திகராய் நடித்திடுவார் வாழ்வினிலே ! 

            பட்டங்கள் தேவையில்லை பதவிகளும் தேவையில்லை
                 பகட்டுடனே வாழ்வதிலே பலருக்கும் பயனுமில்லை 
            கஷ்டமுறும் மக்கள்தமை கருணையுடன் பார்த்துநின்று
                 இஷ்டமுடன் பணிசெய்தால் எம்வாழ்வு விடியுமன்றோ !

          அன்புபாசம் நேசம்காட்டி அனைவருமே இணைந்திடுவோம் 
                அறிவினது துணைகொண்டு அனைவருக்கும் உதவிடுவோம் 
          பண்புநிலை தவறாது படிப்பினைநாம் காத்துநின்று 
                  பலருக்கும்  உதவிநின்றால் படிப்புநிலை உயருமன்றோ !

            கற்றதுவும் பெற்றதும் காருண்யம் கொடுக்கவேண்டும் 
                 கற்றவர்கள் கருத்தெல்லாம் மற்றவர்க் குதவவேண்டும் 
            நற்றவத்தால் வந்தகல்வி நாட்டிற்கே உதவிநின்றால் 
                  கற்றதும் உற்றதுவும் காலமெல்லாம் உதவுமன்றோ !



                   



No comments: