அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்து ; சிங்கப்பூர் கடலில் சம்பவம், 10 அமெரிக்க கடற்படையினரைக் காணவில்லை
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்தன : துணை முதல்வரானார் ஓ.பி.எஸ்.
பள்ளிவாசல் சுவரில் அச்சுறுத்தல்.! அவதூறு வாசகங்கள்
அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்து ; சிங்கப்பூர் கடலில் சம்பவம், 10 அமெரிக்க கடற்படையினரைக் காணவில்லை
21/08/2017 சிங்கப்பூர் கடல் பிராந்தியத்தில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க
போர்க்கப்பலொன்று, லிபியாவிற்குச் சொந்தமான சரக்குக் கப்பலுடன் மோதி
விபத்திற்குள்ளானதில் 10 அமெரிக்க கடற்படையினர் காணாமல் போயுள்ளதாக
அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஜோன் மெக்கெயின் என்ற நாசகாரி போர்க்கப்பலொன்று
சிங்கப்பூர் கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தது. குறித்த போர்க்கப்பல்
மிகவும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதுடன் குறித்த கப்பலில் அதிக
சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன.
சிங்கப்பூர் கடல் பகுதியில் மலாக்கா தீவுக்கு அருகில்
பணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பல், லிபியாவை சேர்ந்த அல்னிக்
என்ற சரக்குக் கப்பலுடன் திடீரென மோதியது, இச் சம்பவத்தில் அமெரிக்க
கப்பலில் இருந்த 10 கடற்படையினர் காணாமல் போயுள்ளதாக அமெரிக்க கடற்படை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் அமெரிக்க போர்க் கப்பல் கடும் சேதம் அடைந்துள்ளதாகவும்
சரக்கு கப்பல் அமெரிக்க கப்பலைவிட அதிக எடையுடன் இருந்ததால் அமெரிக்க
கப்பலுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த சரக்குக் கப்பலில் 30
ஆயிரம் டொன் சரக்குகள் ஏற்றப்பட்டிருந்ததாகவும் சர்வதேச செய்திகள்
தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த கப்பல் விபத்தில், அமெரிக்க போர்க்கப்பலில் பயணம்
செய்த 10 கடற்படை வீரர்கள் காணாமல்போயுள்ளதாகவும் மேலும் 5 பேர்
காயமடைந்துள்ளதாகவும் அவர்களை ஹெலிகொப்டர் மூலம் மீட்டு சிகிச்சைக்காக
அனுப்பி வைத்துள்ளதாகவும் மாயமான வீரர்களை தேடும் பணிகள் முடுக்கி
விடப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்தன : துணை முதல்வரானார் ஓ.பி.எஸ்.
21/08/2017 தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க. வின்
இரு அணிகள் இணைந்து கொண்டன. அணிகள் இணைந்தைமைக்கான அறிவிப்பை ஓ.
பன்னீர்செல்வம் அறிவித்தார்.
அ.தி.மு.க. வின் இரண்டு அணிகள் இணைந்ததையடுத்து தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன் துணை முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம்.
தொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும் இனி தங்களை
யாராலும் பிரிக்க முடியாது என்றும் கட்சியை ஓ.பன்னீர் செல்வமும் ஆட்சியை
முதல்வர் பழனிசாமியும் வழி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுவைக் கூட்டிக் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்து சசிகலாவை
கட்சியை விட்டு நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க.,வின் இரு அணிகளும்
இணைக்கப்பட்டுள்ளன. இன்று காலை முதல் அ.தி.மு.க. தலைமை அலுவலகம், முதல்வர்
இல்லம், க்ரீன் வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். இல்லம்,
அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரன் இல்லம், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா
நினைவிடம் ஆகியன பரபரப்பாக இருந்துவந்த நிலையில், முதல்வர் எடப்பாடி
பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சி
அலுவலகத்துக்கு வந்தனர். இருவரும் நேரில் சந்தித்து கைகுலுக்கி
மகிழ்ச்சியைப் பறிமாறிக் கொண்டனர்.
இதையடுத்து ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகியோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அங்கு
தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருக்கு நிதி
மற்றும் வீட்டு வசதித் துறை கொடுக்கப்படவுள்ளது. அதேபோல, மாஃபா
பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவருக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம்
செய்துவைத்தார்.
இந்நிலையில், புதிதாக தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற
ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்துக்கள் ! தமிழகம் இன்னும் புதிய உயர்வை
தொடும் என நம்புகிறேன் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது
வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பள்ளிவாசல் சுவரில் அச்சுறுத்தல்.! அவதூறு வாசகங்கள்
22/08/2017 ஸ்பெயினிலுள்ள பள்ளிவாசலொன்றின்
கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அதன் சுவரில் அச்சுறுத்தல்
மற்றும் அவதூறு செய்யும் வாசகங்கள் கிறுக்கப்பட்டுள்ளதாக
அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
அந்நாட்டின் பார்சிலோனா நகரில் பொதுமக்கள் மீது வாகனமொன்றை மோதி
நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலொன்றையடுத்தே கிரனடா
பிராந்தியத்திலுள்ள மேற்படி பள்ளிவாசலுக்கு அச்சுறுத்தல்
விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"கொலைகாரர்களே , நீங்கள் உங்கள் நடவடிக்கைக்கு விலை
செலுத்துவீர்கள்" மற்றும் வட ஆபிரிக்கர்களை அவதூறு செய்யும்
வாசகங்கள் உள்ளடங்கலாக முஸ்லிம்களுக்கு எதிரான சுலோகங்கள் அந்த
சுவரில் கிறுக்கப்பட்டிருந்தன.
அதேசமயம் முஸ்லிம்களை தலையைத் துண்டித்து படுகொலை செய்யப்
போவதாக அச்சுறுத்தல் விடுக்கும் வாசகங்களும் காணப்பட்டன.
இந்நிலையில் கிரனடாவிலுள்ள பிறிதொரு பள்ளிவாசல் மீது 12 பேரைக்
கொண்ட குழுவொன்று நடத்திய புகைக் குண்டு தாக்குதலில் அந்த
பள்ளிவாசல் முழுவதும் செம்மஞ்சள் புகை பரவியதாகவும் இதனால்
பீதியடைந்த வயதுவந்தவர்களும் சிறுவர்களும் அலறியடித்துக்
கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
மேற்படி தாக்குதல்கள் இரண்டுமே இனவாதத் தாக்குதல்களாக கருதப்படுவதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதல்களுக்கு எந்தவொரு குழுவும் உரிமை கோராத போதும் வலது சாரி அமைப்பான ஹொகர் சோசலே காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment