அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு காளைகள் இன்று ஓடவுள்ளன

.

அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு காளைகள் இன்று துள்ளிக்கிட்டு ஓடவுள்ளன. எனினும் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் ஒன்றே தீர்வாக அமையும் என, ஜல்லிக்கட்டுக்காக மல்லுக்கட்டியோரின் கோரிக்கையாக உள்ளது.
மதுரை வைகை மேம்பாலத்தில், ஓடும் ரயிலை உயிரை பணயம் வைத்து தடுத்து நிறுத்திய மாணவர்களின் போராட்டம், மூன்றாவது நாளான நேற்றும் தொடர்ந்தது. கடும் பனிப்பொழிவு வாட்டுவதால் தண்டவாளத்தில் 'டென்ட்' அமைத்து இரவு முழுவதும் நடுங்கியபடியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 8:00 மணிக்கு, மாணவர்களை மிரட்டும் வகையில் ரயில்வே பாதுகாப்புப்படையினர் அலைபேசி மூலம் வீடியோவில் பதிவு செய்தனர். இதையறிந்த போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு ரயில்வே மேம்பாலமும் போராட்டக்காரர்கள் வசமானது.
ஜல்லிக்கட்டு நிரந்த சட்டம்
அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு காளைகள் இன்று துள்ளிக்கிட்டு ஓடவுள்ளன. ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் தேவையில்லை; நிரந்தர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். வைகை மேம்பாலத்தில் ரயிலை மறித்து சிறைப்பிடித்ததால் மூன்று நாட்களாக மதுரை ரயில்வே ஸ்டேஷன் பயணிகள் இன்றி வெறிச்சோடியது.அவசர சட்டம் தேவையில்லை
மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த குடும்ப தலைவி வாணி: வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் ஜல்லிக்கட்டு காளையை பிடிக்க வரும் வீரர்களை பார்த்து மிரண்டு போயுள்ளேன். தமிழரின் பண்பாடு, கலாசாரம் அடுத்த தலைமுறையினருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக மூன்று நாளாக ரயில் மறியலில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகிறேன். ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை தடை செய்ய 'பீட்டா' யார். பீட்டாவிற்கு தடை விதித்து வெளியேற்ற வேண்டும்.
மதுரை கல்லுாரி மாணவி விஷ்ணுபிரியா: கொட்டும் பனி, தொடர் மழையில் நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறோம். அரசியல் கலக்காத மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. எங்களின் நோக்கம் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் தேவையில்லை. இது தற்காலிக தீர்வை மட்டுமே தரும்.
மதுரை செல்லுாரை சேர்ந்த ராஜா: பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்கிறேன். வேலைக்கு சென்றால் தான் சம்பளம். ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு காண குடும்பத்துடன் செல்வேன். கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்காமல் ஏமாற்றம் அடைந்தேன். ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்பதற்காக ரயில் மறியலில் கலந்து கொண்டேன். ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் தேவை.
மதுரை அண்ணாதோப்பை சேர்ந்த பிளஸ் 1 மாணவி சுபலட்சுமி: ஜல்லிக்கட்டு தமிழனின் வீர விளையாட்டு. கி.மு., இரண்டாம் நுாற்றாண்டு முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டிருப்பது குறித்து வரலாற்று சான்று உள்ளது. தமிழனின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து தடைகளையும் தகர்க்க வேண்டும். இதற்காக பெற்றோர் ஒப்புதலுடன் தோழிகள் சிலருடன் ரயில் மறியலில் ஈடுபட்டேன்.