இலங்கையில் பாரதி அங்கம் - 07 முருகபூபதி -

.

" தமிழ்  இதிகாசங்கள் பற்றியும் எமது இலக்கிய பாரம்பரியம் பற்றியும்  பாரதிக்குத்தெரியாது. இவ்விஷயத்தை பாரதியின் தந்தையாரே பாரதிதாசனிடத்தில் கூறியிருக்கிறார். பாரதிக்கு மகா பாரதமும்  ராமாயணமுமே  அதிகம் தெரிந்திருக்கிறது."

" தமிழனான கட்டபொம்மன் பற்றியே பாரதி பாடவில்லை. பாஞ்சாலியைப்பற்றியும்  கண்ணனைப்பற்றியுமே பாடியுள்ளார். "

இவ்வாறு,  பாரதி நூற்றாண்டு காலத்தில் இலங்கை வந்திருந்த தமிழக தமிழரசன் என்ற திராவிடர் கழகப்பிரமுகர் பாரதி குறித்துச்சொன்ன அவதூறுகளுடன் கடந்த அங்கத்தை நிறைவுசெய்திருந்தோம்.

பொதுவாகவே திராவிடர் கழகத்தினர் தொடர்ச்சியாக பாரதியை சாதிரீதியான கண்ணோட்டத்துடன்தான் அணுகி வந்திருக்கிறார்கள். பெரியார் ஈ.வே.ரா தொடங்கிய இக்கழகத்திலிருந்து பிறந்த  அமைப்புகள் இன்று எந்தத்திசையில் செல்கின்றன என்பது பரகசியம்.

திராவிடர் கழகம் ஈன்ற குட்டிகளாக தி.மு.க. - அ.தி.மு.க, ம.தி.மு.க. பின்னாளில் அ.இஅ.தி.மு.க. என்றும் ஜெயா அணி, ஜானகி அணி என்றும் பிளவுபட்டு, ஜானகியின் மறைவுடன் அனைத்து அதிகாரங்களும் ஜெயா கையில் வந்து,  தற்போது அவரும் மறைந்த பின்னர் அம்மா அ.தி.மு.க. உருவானாலும் ஆச்சரியம் இல்லை என்று சொல்லும் நிலைக்கு அன்றைய திராவிடர் கழகம் பரிணாம  வளர்ச்சி கண்டுள்ளது.இது இவ்விதமிருக்க, தேர்தல்களில் போட்டியிடாத திராவிடர் கழகம் எத்தனை கூறுகளாக பிளவடைந்திருப்பதும் தெரிந்த செய்தியே.

இவ்வாறு தத்தமக்குள்ளேயே முரண்படுபவர்களும் முரண்டு பிடிப்பவர்களும் நிறைந்துள்ள இக்கழகத்தைச்சேர்ந்தவர்கள்,  பாரதி குறித்து முன்வைக்கும் தீர்மானங்களை நாம் இலகுவாக அலட்சியம் செய்யலாம்.

தொடர்ச்சியாக பொய்களையே உரைத்துவந்தால் அந்தப்பொய்களே இறுதியில் உண்மையாகிவிடும் சமுதாயத்தில் நாம் வாழ்கின்றோம்.

அதனால் பொய்களை அம்பலப்படுத்தி தெளிவை ஏற்படுத்தவேண்டியது பாரதி இயல் ஆய்வாளர்களின் கடமை.

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் எனச்சொன்னவர்  பாரதியார்.
தமிழரசன் மட்டுமல்ல,  மதிமாறன் என்பவர் எழுதிய ' பாரதி'ய ஜனதா பார்ட்டி என்ற நூலிலும் பாரதி தொடர்பான அவதூறுகளையே காணமுடிகிறது.

வீரகேசரியில்  தமிழரசன் உரைத்துள்ள இரண்டு பெரிய பொய்களிலிருந்து வாசகர்களுக்கு பல விடயங்கள் தெளிவாகிவிடும்.

பாரதியின் தந்தையார் சின்னச்சாமி அய்யர்,  பாரதிதாசனை என்றைக்காவது சந்தித்திருக்கிறாரா...?

வீரபாண்டிய கட்டபொம்மன் வேடம் புனைந்த சிவாஜிகணேசன், சக்தி கிருஷ்ணசாமியின் அனல் கக்கும் வசனத்தில், " வட்டி, வரி, கிஸ்தி, யாரைக்கேட்கிறாய் வரி... எங்களோடு வயலுக்கு வந்தாயா.. ஏற்றம் இரைத்தாயா, கஞ்சி கலயம் சுமந்தாயா, மஞ்சள்  அரைத்துக்கொடுத்தாயா...? நீ... மாமனா மச்சானா...? " என்றெல்லாம் திரைப்படத்தில்  பேசுவாரே....அதனைவைத்து வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ் மன்னன் என்ற முடிவுக்கு வந்துவிட முடியுமா...?

கட்டபொம்மன்  தெலுங்கு மொழிபேசுபவன். அவனது தாய்மொழி தெலுங்கு என்பதை சுலபமாக மறந்துள்ள தமிழக தமிழரசன், பாரதியார் இந்தத்தமிழ் மன்னன் குறித்து பாடவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாரதி இந்திய மொழிகள் குறித்து மிகவும் அழகாகவும் பொருளாதார கண்ணோட்டத்திலும் பாடியிருப்பவர்.

தமிழரசன் சொன்ன கருத்துகளுக்கு எதிர்வினையாற்றி, அடுத்து வந்த வீரகேசரி இதழ்களில், பேராசிரியர் அ.வி. மயில் வாகனம், பொ. சங்கரப்பிள்ளை, தமிழோவியன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

" யாழ்ப்பாணத்து  அல்வாயூர்  அருளம்பலச்சாமியே தன் குருவெனப்பாடியுள்ளார் பாரதியார். இவர்கள் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில்  இச்சந்திப்பு  நிகழ்ந்தது. இது 1912 க்கும் 1920 க்கும் இடையில் நிகழ்ந்தது. இதற்கு  முன்னர் திலகர் பாரதியாரின் நன்மதிப்பிற்குரியவராக   இருந்திருக்கலாம்.  ஆனால், பாரதியாரின் அரசியல்  குருவாகவோ இலக்கிய வழியில் குருவாகவோ ஆன்மீகக்குருவாகவோ  இருந்தார்  என்பதை  ஒப்புக்கொள்ள இடமில்லை."  எனத்தெரிவித்திருந்த மயில்வாகனம்,
 " பாரதிதாசனுக்கும்  நன்றி  மறவாத  தமிழ்  சமூகம்  விழா  எடுக்கும்.  அதற்கு  இன்னும்  எவ்வளவோ காலம் இருக்கின்றது. இப்போது பாரதியாருக்குவிழா எடுக்கும் காலத்தில் பின்வரும் அவருடைய பாடல்களைச்சிந்தனை செய்து,  அவர் இவ்விழாவுக்கு எத்துணை அருகதை  உடையவர் என்பதனைத்தீர்மானிப்போமாக " என குறிப்பிட்டு, பாரதியின்  சில கவிதைகளை மேற்கோள் காட்டியிருந்தார்.

செந்தமிழ்நாடு, விடுதலை, சுதந்திரப்பள்ளு, பாப்பாப்பாட்டு என்று தலைப்புகளிட்டு  உதாரணமாகச்சுட்டியிருந்தார்.தமிழரசனுக்கு எதிர்வினையாற்றிய தமிழோவியன், " பாரதி தன் வகுப்பான பார்ப்பானர்களுக்குப்பரிந்தே பாடினான் என்றால், ஏன் அவன்,  தான் பூண்டிருந்த பூணுலை அறுத்தெறிந்தான்....? "வேதியராயினும் ஒன்றே - அன்றில் வேறு குலத்தினராயினும் ஒன்றே " என்று  ஏகமுழக்கமிட்டான். " எனக்கேள்வி  எழுப்பியதுடன், பாரதிதாசனும் பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யரும் என்றைக்காவது  சந்தித்துப்பேசியிருப்பார்களா...? என்ற வினாவையும் தொடுத்திருந்தார்.

தமிழோவியன்  சொல்லும் பதில் மனங்கொள்ளத்தக்கது. " 1911 ஆம் ஆண்டிலே பாரதி புதுவையில் பாரதிதாசன் அவர்களைக்கண்டதாக ஆனந்தவிகடன் பொன்விழா மலரில் காணப்படுகிறது. அப்போது பாரதிக்கு 29 வயது. அவர் ஐந்து வயதில் தாயையும் ( 15 ஆம் அகவையில்  மணம்பூண்டு) பதினாறாம் வயதில் தந்தையையும் இழந்ததாக அவரின் சரிதம்  பேசுகிறது. அதாவது பாரதியின் தந்தையார்  மறைந்து சுமார் பதின்மூன்று ஆண்டுகளின் பின்னரே பாரதி, பாரதிதாசனை  சந்தித்துள்ளார். இந்தச்செய்திகளை ஆதாரமாக்கொண்டு  தமிழரசனின்  செவ்வியை (பேட்டி) ஆராய்ந்தால், பாரதியின் தந்தையாரை பாரதிதாசன் பார்த்திருக்கவே முடியாது என்று  முடிவுகட்டவேண்டும்."

திராவிடர்  கழகத்தினர் நீண்டகாலமாகவே பாரதி பற்றிய கட்டுக்கதைகளைப்  பரப்பி அவதூறு பொழிந்து வந்திருக்கின்றனர். பாரதியை தாழ்த்தி,  அவரது தாசன் சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட  பாரதிதாசனையே உயர்த்திப்பேசும் திராவிடர் கழகத்தினர் பல  வரலாற்று  உண்மைகளை  மறந்துவிடுகின்றனர்.

பாரதி காலத்தில் வாழ்ந்து பாரதியின் பக்தனாக தன்னை வரித்துக்கொண்ட  பாரதிதாசன்,  பாரதி பற்றிக்கொண்டிருந்த கருத்துக்களுக்கு பின்வரும் தகவல் குறிப்பை பதச்சோறாக இங்கு தருகின்றோம்.

6-9-1949  இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில்  நடைபெற்ற விழாவில் தலைமையேற்று பாரதிதாசன் ஆற்றிய உரை,  அறிஞர் அண்ணா ஆசிரியராக இருந்து வெளியிட்ட மாலைமணி நாளேட்டில் 8-9-1949  ஆம்  திகதியன்று பிரசுரமாகியிருந்தது. அதிலிருந்து சில பகுதிகளை பொன். கு.கோதண்டபாணி என்பவர் தமிழ்நாடு அரசின் உத்தியோகபூர்வ இதழ் தமிழரசு  பத்திரிகையில் 16-12-1982 ஆம் திகதி தொகுத்து  எழுதியிருந்தார்.  ( இந்த ஆக்கம் பாரதி நூற்றாண்டு காலத்தில் வெளியாகியமை குறிப்பிடத்தகுந்தது )

அதிலிருந்து சில பகுதிகளைத்தருகின்றோம்.

" பாரதியார் 1906 இல்தான் புதுச்சேரிக்கு வந்தார். இன்னும் வ.வெ.சு. ஐயர், திருவல்லிக்கேணி சீனுவாச ஆச்சாரியார், அரவிந்தகோஷ் முதலியோரும் வந்தனர். இவர்களுக்கெல்லாம் சுதேசிகள் என்று பாண்டியில் (பாண்டிச்சேரி) பெயர். அரவிந்தர் - வ.ரா. முதலியோர் ஒரு குழு. வ.வெ.சு. ஐயர் முதலியோர் ஒரு குழு. பாரதி நான் முதலியோர் ஒரு குழு. சீனுவாச ஆச்சாரியார் எதிலும் இருப்பார்.

மூன்று குழுக்களும் வெவ்வேறாகவே இருந்தன. அரவிந்தர் முதலியோர் தமிழென்று ஒரு மொழி இருப்பதையோ அதைப்பற்றி நினைப்பதையோ அறியாதார்.

வ.வெ.சு. ஐயர்,  வர்ணாஸ்ரமம் உண்டு என்றால் தமிழைப்போற்றத்தாயார். பாரதியார் தமிழிலிலேயே வாழ்ந்தார். அன்றைய நிலை அப்படி. பாரதியார் பார்ப்பானராக இருந்தாலும் தமிழைப்போற்றினார். பாரதியார் முதலில் பாட ஆரம்பித்தது காவடிச்சிந்துதான். புரியும்படி காவடிச்சிந்து அமைவதே காரணம்.

அரவிந்தர் ஆங்கிலத்தில் ASIA பத்திரிகை ஆரம்பித்தார். ஆனால், பாரதியாரோ தமிழில் இந்தியா பத்திரிகையை ஆரம்பித்தார். தமிழை பாரதி இப்படிப்போற்றினார். பாரதியார் தமிழ்ப்பற்றுடையவர். தமிழுக்கு உயிர் உண்டாக்கினார். எல்லோருக்கும் புரியும்படி எழுதினார். பாடினார். அதற்குப்பிறகுதான் அரவிந்தகோசுக்கு தமிழ் என்று  ஒன்று இருப்பதாகப்புரிந்தது. வ.ரா. முதலானோர் தமிழ்ப்புத்தகங்களை  தேடிப்படித்தனர்.

பாரதியாருடைய  முக்கிய கொள்கை ஜாதி ஒழிப்பு. அதுதான் அவரிடம் இருந்த சிறந்த கொள்கை. குறிப்பிட்டுப்பேச  வேண்டிய  கொள்கை.

பாரதியார் பார்ப்பனர். தெரிந்தும் சொன்னார் - ' ஜாதிகள் இல்லையடி பாப்பா.' என்று. தமிழில் நல்ல எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும்படி  இதைச்சொன்னார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சந்தோஷம் கூட.

நான் அப்பொழுது பாண்டிச்சேரியில் வாத்தியார் வேலையில் இருந்தேன். அப்போதே சில பத்திரிகைகளில் கட்டுரைகளும் பாட்டுக்களும் எழுதி அனுப்புவது வழக்கம். அப்போது நான் உத்தியோகத்தில்  இருந்துகொண்டு இக்காரியம் செய்வது, உத்தியோகத்தருக்குத் தொல்லை தரும். யாராவது செய்வார்கள் என்று கருதி நான் ஓர் புனைபெயர் வைத்துக்கொள்ள விரும்பினேன். அப்போது என் கண்முன்னே, " சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச்சோற்றுப்பார்ப்புக்கு  ஒரு  நீதி " என்று கேட்ட  பாரதியார் பார்ப்பானராய்  இருந்தும்  பயப்படாது, தீமை வருமென்று தெரிந்திருந்தும்  திகைக்காது, தமிழில் புரியும்படி சொல்லிய பாரதியார்தான் நின்றார்.

உடனே பாரதிதாசன்  என்று புனைபெயர் வைத்துக்கொண்டேன். நான் அவருக்கு, அந்தப்புண்ணியவானுக்கு தன் குலத்தார் எதிர்ப்பையும் பொருட்படுத்தாத புண்ணியவான் பாரதிக்கு தாசனாக இருப்பதில் ஒன்றும் தவறில்லை என்று கருதுகிறேன்.

தமிழில்  புதுமுறையில் மக்களுக்குப்புரியும்படி நூல் எழுதியவர் பாரதியார்தான். அதற்கு முன், புலவர்கள் ஒரே பொருள் பற்றி பல நூல்கள் ஒரே முறையில் எழுதுவார்கள்.

அக்காலத்தில் தமிழைப்பற்றி மக்கள் மிகக்கேவலமாக நினைத்தனர். ஒருவர் ஒன்று கூறிவிட்டால், அதை மறுப்பது கூடாது. புதிய துறையில் பாரதியை பின்பற்றுங்கள். பாரதியார் சுதேசமித்திரனுக்கு பாண்டியிலிருந்து ஒருநாள் கவிதையும் ஒருநாள் கட்டுரையும் எழுதுவார். திடீரென்று அவர்கள் கவிதை வேண்டாம், கட்டுரையே போதும் என்பார்கள்.

          அப்போது  தென்னாட்டுக்கு டாக்டர் கசின்ஸ் என்று ஒருவர் வந்தார். அவர் பாரதியார்  சிறந்த கவிஞர் என்று கேள்விப்பட்டு, அவருக்கு கடிதம் எழுதி,  அவர் கவிகளை அனுப்பும்படியும் அதைத்தாம் கருத்துக்குலையாமல்  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவதாகவும்  எழுதியிருந்தார். அத்துடன் அவர், தான்தான் வங்கக்கவி  ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்றும் கூறினார். அதனால் பாரதியும்,
 " வேண்டுமடி எப்போதும் விடுதலை " என்ற பாட்டை எழுதி அனுப்பினார். இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அக்காலத்தில் NEW  INDIA   பத்திரிகையில்  வெளிவந்தது. இம்மாதிரி இரண்டு  மூன்று தடவை வந்ததும், சுதேசமித்திரன் பழையபடி கவிதை கேட்டது.

அப்போது  பாரதியார் சொன்னார், " தமிழன் கவிதையை பிறநாட்டான்  புகழவேண்டும்.  அப்போதுதான்  அதனைத்தமிழர் உணர்கிறார்கள்"  என்று.

அவர் ஒருசமயம், " என்ன சுப்புரத்தினம், என் பெண் வேறு ஒரு தாழ்ந்த ஜாதியானோடு ரங்கூனுக்கு ஓடிப்போய், அங்கிருந்து ' அப்பா, நான் இன்னாரோடு  இங்கு சுகமாயிருக்கிறேன். அவரைத்தான் விரும்புகிறேன். மணம் செய்துகொள்ளப்போகிறேன்" என்று எழுதவேண்டும். அதைக்கேட்டு நான் ஆனந்தப்படவேண்டும். " என்றார். அவர் ஜாதி ஒழிப்பில் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டார் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.
(இக்காட்சி பாரதி திரைப்படத்திலும் வருகிறது)

பாரதிதாசனின்  குறிப்பிட்ட 1949  ஆம்  ஆண்டு காலத்தின்  மேடைப்பேச்சு- திராவிடர் கழகத்திலிருந்து வந்த அறிஞர் அண்ணாவின் பத்திரிகையிலேயே  வெளியாகியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

பாரதியை  பார்ப்பானக்கவிஞன் என்று புறம்ஒதுக்கும் மனோபாவம் உள்ளவர்கள்  தமிழகத்தின் திராவிடர் கழகத்தில் மட்டுமல்ல, அதன் பாதிப்புக்குள்ளான  இலங்கைத்தமிழர்களிடத்திலும்  நீடித்திருக்கிறது. அதனால்  பாரதிக்கும்   பாரதிதாசனுக்கும்   இடையில்  உயிர்ப்போடு வாழ்ந்த  உறவை வெளிப்படுத்துவதற்கும் பாரதிதாசனின் தாசர்களுக்கு  இடித்துரைப்பதற்காகவும் இலங்கைப்பத்திரிகைகளிலும்   ஆக்கங்கள்   வெளிவந்தன.

மதிமாறன்  எழுதி  வெளிவந்திருக்கும் 'பாரதி' ய ஜனதா பார்ட்டி என்ற  நூலுக்கு எதிர்வினையாற்றி  2012 ஆம் ஆண்டு,  இலங்கையில் நீர்வை தி. மயூரகிரி  என்பவர்   " பாரதியின்  எழுத்துக்கள் பற்றிய எதிர்வினைகளும் - உண்மைகளும்" என்ற நீண்ட கட்டுரையை எழுதியிருக்கிறார்.

பாரதிக்கு  பாரதிதாசன் புதுவையில் அறிமுகமான காலகட்டத்தையும் -  இருவருக்குமிடையில் நீடித்த நட்புறவு குறித்தும்  பாரதியின் குருமார்களும் நண்பர்களும்  என்ற தமிழகத்தைச்சேர்ந்த ஆர். சி. சம்பத் எழுதிய நூலிலும் பார்க்கமுடியும். 

(தொடரும்)