அன்பு ஜெயாவின் திருவதிகை என்ற நூலின் அறிமுகம்.

.
சிவஞானச் சுடர் அன்பு ஜெயா அவர்கள் எழுதிய திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை என்ற நூலின்  அறிமுகம்.  கேசினி கோணேஸ்வரன்


சிவஞானபோதத்தினை ஆகமவாரிதி முனைவர் சபாரெத்தின சிவாச்சாரியாரிடம் முறைப்படி பயின்று, சிவஞானச் சுடர் என்ற படடத்தைப் பெற்று, தான் பிறந்த கிராமத்துக்கு அண்மையில் உள்ள , முதன் முதலாக தேவார பாடல் பெற்ற தலமான திருவதிகை பற்றி 176 பக்கங்களில் , எட்டுத் தலைப்புகளில் அருமையான நூலொன்றை எழுதியுள்ளார். அருமையான பல விடயங்களை ஆராய்ந்து, பல புத்தங்கள், கல்வெட்டுகள், ஆலய அர்ச்சகருடனான நேரடி  உரையாடல், என்பவற்றின் மூலம் சரி பார்த்து தொகுத்து,    எல்லாம் வல்ல வீரட்டானேசுவரப் பெருமான் திருவருளின் துணையுடன் ,  இந்நூலை   வெளியிட்டிருக்கிறார்.
முதலாவது தலைப்பு திருவதிகை வீரட்டானேசுவரர். இங்கு அடட வீரட்டான தலங்கள் பற்றிக் குறிப்பிட்டு, ஒவ்வொரு தலத்திலும் நிகழ்ந்த வீரச் செயல்கள் பற்றியும் விபரித்துள்ளார்.  திருநாவுக்கரசு நாயனார் அடைவுத் திருத் தாண்டகத்தில் பாடிய " காவிரியின் கரைக்கண்டி" என்று தொடங்கும் தேவாரத்தையும், திருமந்திரத்தில் 2ம் தந்திரத்தில் 339-346 வரையான  8 பாடல்களையும் எடுத்து விளக்கி அடட வீரட்டான தலங்களின் பெருமை  பற்றி விளக்கியுள்ளார். திரிபுராதிகளை வென்று திரிபுரம் எரித்த தலம் திருவதிகை.
திருவதிகை தலச் சிறப்பு பற்றி விபரமாக விளக்கி உள்ளார். அவற்றில் சில ; சமய குரவர் நால்வராலும் பாடப்பெற்ற தலம். அப்பர் உழவாரத் திருத்தொண்டு ஆரம்பித்த தலம், முதன்முதலில் தேர் பயன்பாட்டுக்கு வந்த தலம், சிவன் பாண்டுரங்க நடனமும், கொடுகொட்டி நடனமும் ஆடிய தலம். இன்னும் பல சிறப்புகள் பற்றி இப்பகுதியில் எழுதப் பட்டுள்ளன.



இரண்டாவது தலைப்பு வீரட்டானேசுவரர் கோயில் அமைப்பு. 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆலயம் பற்றி மிக விளக்கமாக 14 பக்கங்களிலும், வண்ணப் படங்களாக 16 பக்கங்களிலும் ஆசியர் நமக்கு விளக்கமளிக்கிறார். கிழக்கு வாயில் முகப்பினூடாக கோயிலுள் சென்று, திருநீற்று மண்டபத்தைத் தரிசித்து, வானளாவ உயர்ந்த 7 நிலைகளும், 7 கலசங்களும் கொண்ட இராஜ கோபுரத்தைத் தரிசிக்கிறோம். தீர்த்த வாரி மண்டபத்தினூடாக சென்று கொடிமரத்தையும், 16 படடை சிவலிங்க வடிவில் காடசி தரும் வீரட்ட்டானேசுவரரையும், வலது பக்கத்தில் பெரியநாயகி அம்மையையும்திருச்சுற்றில் அமைந்துள்ள பரிவார மூர்த்திகள், தீர்த்தங்கள், தல விருட்சமான  சரக் கொன்றை , அதன் கீழே லிங்க வடிவில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் சரக்கொன்றை நாதர்,   யாவற்றையும் தரிசித்து, சண்டேசுவர மூர்த்தியிடம் தரிசன பலன் பெற்று , வெளியே வருகிறோம்.


இந்த அத்தியாயத்தை நீங்கள் வாசிக்கும் போது, கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யும் அந்த அருள் அனுபவத்தைப் பெறுவீர்கள். ஆசிரியர் விபரித்துள்ள படி, தெய்வ உருவங்கள், சிற்பங்கள், மண்டபங்கள், தீர்த்தங்கள் யாவும் உங்கள் மனக் கண்ணில் தோன்றும். நீங்கள் திருவதிகை ஆலய தரிசனம் செய்த உணர்வு ஏற்படும்.

மூன்றாவது தலைப்பு - சுயம்புலிங்கத் தோற்றமும் , வழிபடடவர்களும் .  தாருகாவனத்தில் சிவன் பிட்ஷாடனராகவும், விஷணு மோகினியாகவும் வடிவெடுத்து வந்து, முனிவர்களின் செருக்கை அகற்றிய நிகழ்வையும், அமிர்தம் வேண்டி திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது, விஸ்ணு, மோகினி உருவெடுத்து அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டுமே பிரித்துக் கொடுத்த நிகழ்வையும் கூறி, சிவபெருமான் மோகினியுடன் கூடிய போது, சிவனின் திருமேனியின் வெப்பம் தாங்க முடியாமல் , மோகினியின் உடல் வியர்த்து, வியர்வை ஆறாகப் பெருகிற்று. இந்த ஆறே ஆலயத்தின் தீர்த்தங்களில் ஒன்றான கெடில நதி.
மோகினி தன்னுடைய சுயரூபமான விஸ்ணுவின் உருவத்தைப் பெறுவதற்காக சிவனை நோக்கி  கடும் தவம் புரிந்தாள். தவத்தின் முடிவில் பூமி அதிர்ந்து வெடிக்க, பாதாளத்தை ஊடுருவிக் கொண்டு, சுயம்பு லிங்கம் தோன்றியது. இவ்வண்ணமாக திருவதிகையில் லிங்கம் தோன்றியது.
தீப் பிழம்புடன் கூடிய அக்கினி மலையாக நின்ற சிவனின் அடியையும், முடியையும் தேடிக் காணாத விஷணுவினதும், பிரம்மாவினதும் வரலாறு கூறிபொய்யுரைத்த பிரம்மா தன குற்றம் நீங்க சிவலிங்கத்தைப் பிரதிஷடை செய்து, சிவபூசை செய்து, குற்றம் நீங்கி சத்திய லோகம் சென்ற நிகழ்வை கூறியுள்ளார். பிரம்மா பூசித்த லிங்கமே  இன்று பிரம்மலிங்கம் என்று அழைக்கப்படுகின்றது.
காசிப முனிவரின் மகன் கருடன், தன தாயின் அடிமைத் தனத்தை நீக்க, சிவலிங்கத்தைப் பிரதிஷடை செய்து, சிவபூசை செய்து, சிவபெருமானிடம் வரம் பெற்றான். இச் சிவலிங்கமே இன்று கருட லிங்கம் என்று பூசிக்கப்படுகிறது.
பாரதப் போரில், துரோணாச்சரியார் உக்கிரமாக போர் புரிந்ததால், பாண்டவர் படைகள் சிதறின. இதனை அவதானித்த கிருஷ்ண பகவான் , எப்படி துரோணரை நிலை குலையச் செய்வது எனச் சிந்தித்து, அவர் மகனிடம் அதிக பாசம் உள்ளவராதலால் , மகனைக் கொன்றால் அவர் நிலை குலைந்து விடுவார் என்றெண்ணி, அர்ச்சுனனிடம் அசுவத்தாமனைக் கொலை செய்யும்படி கூறினார். அர்ச்சுனன் குருவின் மகனைக் கொல்லல் பாவம் என மறுத்து விட் டான். பீமன் அசுவத்தாமன் என்ற யானையைக் கொன்று, துரோனரிடம் சென்று அசுவத்தாமன் இறந்தான் என்று சொன்னான். துரோனர் அவனை நம்பாமல், எப்போதும் உண்மை பேசும் தருமரிடம் கேட்க்கிறார். தருமரும் ஆம் இறந்தான் அசுவத்தாமன் என்ற யானை என்று கூறினார். அப்போது கிருஷ்ணர் சங்கை ஒலித்ததால், என்ற யானை" என்ற சொற்கள் துரோணர் காதில் விழவில்லை. துரோணர் நிலை குலைந்து, ஆயுதங்களைக் கீழே போட, திருஷ்டாத்துய்மன் துரோணரைக் கொன்று விடடான். இதனால் ஆசிரியரை கொன்ற பாவமும், பொய் சொன்ன பாவமும் தருமரைப் பற்றிக் கொண்டன. இவற்றைப் போக்க திருவதிகையில் சிவலிங்கத்தைப் பிரதிஷடை செய்து, வழிபட்டு வந்தான். இந்த லிங்கமே இன்று பாண்டவ லிங்கம் என அழைக்கப்படுகிறது.
இவ்வாறு ஆலயத்தில் உள்ள லிங்கங்களின் தோற்றம் பற்றியும், வழிபடடவர்கள் பற்றியும், இந்த லிங்கங்களை வணங்குவதால் ஏற்படும் பயன் பற்றியும், விரிவாக இந்த அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது.

நான்காவது தலைப்பு தீர்த்தங்களும் திருவிழாக்களும். முப்புரங்களை எரித்து , மும்மலங்களை அழித்த இத்திருவதிகைத்த தலத்தில் உள்ள தீர்த்தங்களும் 3.கெடில நதி, சக்கர தீர்த்தம், சூல கங்கை என்னும் கிணறு.இவற்றுள் கெடில நதி தோன்றிய வரலாறு முன்பே கூறியுள்ளேன். இதனை தென் கங்கை என சேக்கிழார் பெரிய புராணப் பாடலொன்றில் குறிப்பிடுவதை ஆசிரியர் பாடலுடன் விளக்கியுள்ளார்.சக்கர தீர்த்தத்திற்கு, சந்திர தீர்த்தம், அமிர்த தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், கருட தீர்த்தம் என பல பெயர்கள் உண்டு. அப்பெயர்கள் எல்லாம் ஏன் ஏற்படடன என்ற காரணங்களை  எல்லாம் ஆசிரியர் விளக்கமாக கூறியுள்ளார். திரிபுரம் எரித்த சிவனால் உருவாக்கப் பட் சூலகங்கை என்னும் கிணறு பற்றிய விளக்கங்களும், ஒவ்வொரு தீர்த்தங்களில் நீராடுவதால் ஏற்படும் பயன்கள் பற்றியும் ஆசிரியர் விளக்கமாக கூறியுள்ளார்.

சித்திரை மாதம் முதல் திகதி பஞ்சாங்கம் வாசித்தலில் ஆரம்பித்து, பங்குனி மாத உத்தர திருவிழா வரை , ஒவ்வொரு மாதமும் நடக்கும் திருவிழாக்கள் பற்றிய விவரணமும் , நித்திய பூசை நேரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.


ஐந்தாவது தலைப்பு திரிபுரங்களின் தோற்றமும் அழிவும். தாரகாக்கன், கமலாக்கன், வித்துன்மாலி என்ற 3 அசுரர்களும், எவ்வாறு பொன், வெள்ளி, இரும்பு என்பவற்றால் ஆன திரி புரங்களைப் பெற்றனர் என்பதையும், ஏன் திரிபுர நிகழ்ந்தது என்பதனையும் இந்த அத்தியாயத்தில் விளக்கமாகக் கூறியுள்ளார். திரிபுரம் எரித்த நிகழ்வை சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய தேவாரம், மணி வாசகரின் திருவாசகம், திருமூலரின் திருமந்திரம் என்பவற்றின் ஊடாக எடுத்துக்காட்டி விளக்கமளித்துள்ளார்.
தினமும் சிவபூசை செய்த காரணத்தால், தீயில் வேகாமல் இருந்த 3 அசுரர்களில், இருவரைத் துவாரபாலகர்களாகவும் , ஒருவரைக் குடமுழா வாத்தியம் இசைப்பவராகவும் மாற்றி, சிவன் புரிந்த கருணை பற்றி விளக்கமாக எழுதியுள்ளார்.
தீயில் வேகாமல் வீழ்ந்த இடம் வேகாக் கொல்லை எனவும், இன்றும் அங்குள்ள மண் மிகவும் செழிப்புடையது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிவபெருமான் தேவர்களின் செருக்கு அடங்கப் புன்னகையும், சிவபூசை தவறாத திரிபுர அசுரர்கள் மூவரும் உய்ய தண்ணகையும், சிவபூசை தவறிய முப்புரவாசிகள் மடியுமாறு வெந்நகை யும் ஆகிய 3 நகைகளையும் செய்த சிறப்பைப் பெறுவது திருவதிகை என்னும் இத்திருத்தலமே என்ற கருத்தையும் பதிவிட்டிருக்கிறார் இந்நூலாசிரியர்.’


ஆறாவது  தலைப்பு திருநாவுக்கரசு சுவாமிகள் . திருமுனைப் பாடி நாட்டில் புகழனாருக்கும், மாதினியாருக்கும், பிறந்ததில் இருந்து தொடங்கி,படித்தது, வளர்ந்தது, சமண சமயத்தைத் தழுவியது, தமக்கையரின் அன்பினால் சைவத்திற்கு மீண்டது, சூலை நோய் பெற்றது, தேவாரம் பாடியது, சமணர் பல தண்டனைகள் கொடுத்தும் சிவன் அருளால் தேவாரம் பாடி அவற்றையெல்லாம் வெற்றி கொண்டதுஉழவாரத் திருப்பணி மேற் கொண்டது, அற்புதங்கள் மேற்கொண்டது, திருக்கயிலாய யாத்திரை மேற் கொண்டது என முழு வரலாற்றையும் விளக்கமாக  எழுதி உள்ளார்.

இந்த அத்தியாயத்தில், எட்டும் இறைவன் படைப்பும் என்ற சிறு தலைப்பின் கீழ் ,அப்பர் திருவாரூரில் பாடிய   
புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்
    பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டும்
கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்
    கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்
நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்
    நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டும்
திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
    திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே

என்ற திருத்தாண்டகப் பாடலை கூறி, அங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு எட்டும் என்ன என்ன என்று விளக்கமளித்துள்ளார்



ஏழாவது தலைப்பு கல்வெட்டுகளும், திருப்பணிகளும். பல்லவர், சோழ காலங்களை சேர்ந்த கல்வெட்டுகள் பற்றியும், அவற்றின் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பற்றியும் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார் . பின்னர் திருப்பணி செய்தவர்கள் விபரங்கள், போன்,பொருள் கொடுத்தவர் விபரங்கள் எல்லாம் திரட்டித் தொகுத்து தந்துள்ளார்.


எட் டாவது தலைப்பு திருவதிகை திருப்பாடல்கள். இந்த ஆலயத்தைக் குறித்துப் பாடப் பட் தேவார பதிகங்கள், பெரியநாயகி அம்மை விருத்தம், திருத்தொண்டர் புராண சாரம், திரு ஏகாதச மாலை, பெரிய புராணம், நால்வர் மணி மாலை எனப் பலவற்றைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.

திருஞான சம்பந்தப் பெருமான் இத்தலத்திற்கு, வந்த போது, வீரடானேசுவரர் சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு , சம்பந்தருக்கு திருநடனம் காட்டி அருளினார். இதனைக் கண்டு பரமானந்தமடைந்த சம்பந்தப் பெருமான் "குண்டைக் குறட்பூதம்" என்று தொடங்கும் தேவார பதிகத்தைப் பாடி அருளினார்.

திருநாவுக்கரசு நாயனார் தனது சூலை நோய் நீங்க, ' கூற்றாயினவாறு என்று தொடங்கும் திருப்பதிகத்துடன் ஆரம்பித்து , திருநேரிசை, திருக்குறுந் தொகை, திருத் தாண்டகம் என 15 பதிகங்களை இத்தலத்தின்  மீது பாடியுள்ளார்.


சுந்தரமூர்த்தி நாயனார் தல யாத்திரை செய்யும் போது, திருவதிகையை அண்மித்த போது, இது நாவுக்கரசு நாயனார் தன திருக்கரங்களால் உழவாரத் திருத்தொண்டு செய்த தலம். இதனை என் கால்களால் மிதிக்கக் கூடாது என்று எண்ணி, எல்லையில் உள்ள சித்த வட மடத்தில் தங்கியிருந்தார். இரவு நித்திரையில் உள்ள போது, சிவபெருமான் கிழ பிராமண வடிவம் தாங்கி வந்து , சுந்தரின் தலையில் தன காலை வைத்தார். சுந்தரர் நீர் யார்? எனக் கேட்க்கிறார். எம்மை உமக்குத் தெரியாதா? என்று கூறி இறைவன் மறைந்தருளினார். எம்பெருமானின் திருவருளை அறியாது இருந்து விடடேனே என்று மனமுருகி " தம்மானை அறியாத சாதியாருளரே" என்று தொடங்கும் திருப்பதிகத்தை வீரட்டானேசுவரர்   மீது பாடினார்.

இறுதியாக 'அம்பொன்மணி நூல் தாங்காது, அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி" திருநாவுக்கரசரை பரசமயக் குழியில் இருந்து மீடடெடுத்த, திலகவதியார் மீது ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகள் பாடிய பாடல்களும் இணைக்கப் பட்டுள்ளன.


திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை ஒரு ஆன்மீக நூல் என்றதற்கு அப்பால்இந்நூலை யார் யார் வாசிக்கலாம் என்று சிந்தித்த போது தோன்றிய  கருத்துக்கள் சில.

1)      கட்டிடக்கலை, சிற்பக்கலைகளில் ஆர்வமுடையோர்கள் - குடைவரைச் சிற்பம், சுதைச் சிற்பம், புடைப்புச் சிற்பம் என பல வகையான சிற்பங்களை பற்றி இந்நூலில் கூறப்பட்டுள்ளது. மூலவர் கோயிலின் எண்கோண விமானத்தில் நிறைய சிற்பங்கள் உள்ளன என்று எழுதி, வர்ணம் தீட்டப்படட பல சிற்பங்களின் வண்ணப் படங்களும் இணைக்கப்பட்டு  உள்ளது.சிவலிங்கம் சுயம்புவாக இருக்குமானால் , அம்பிகையின் ஆலயம் கருவறைக்கு வலது பக்கமாக அமைய வேண்டும் என்ற ஆகம சிற்ப சாத்திரங்கள் கூறும் விதிமுறை பற்றியும் கூறப்பட்டுள்ளது.

2)      பரதக் கலையில் ஆர்வமுள்ளவர்கள்
இராஜகோபுர வாயிலின் 2 பக்கங்களிலும் சிவனின் 108 தாண்டவ லட்ஷணங்களை விளக்கிக் காட்டும் பெண்களின் சிற்பங்கள் உள்ளன.

3)      மரபுக்கலை , வரலாறுகளில் ஆர்வமுடையோர்கள்
கல்வெட்டுகள், பெயர்ப்பொறி கற்பலகைகள் ,கற் றூன்களில் உள்ள வெண்பாக்கள்  எனப் பல விடயங்கள் நூலில் உள்ளன. கருவறையின் மேலுள்ள விமானத்தின்நிழல் தரையில் படியாத வகையில் விமானம் அமைக்கப் பட்டிருந்தது. தஞ்சைப் பெரிய கோயில் விமானத்திற்கு இதுவே முன்னுதாரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

4)      சமய பாடசாலையில் படிக்கும் மாணவர்கள்
சித்திரை சதயத்தில் நிகழும் திருநாவுக்கரசு நாயனார் குருபூசையில் பங்கு கொண்டு, பேச்சு, விவரணச் சித்திரம், நாடகம் போன்றவற்றை செய்ய , திருநாவுக்கரசு நாயனாரின் முழு வரலாறும் ,இலகு தமிழில் எழுதப்பட்டுள்ளது

5)      சோதிடக் கலையில் ஆர்வமுள்ளவர்கள்
நட்ஷத்திரங்களுக்கு உரிய மரங்கள், ராசிகளுக்குரிய மூலிகைகள், திசைகளுக்குரிய அதிதேவதை, திக்குப்படி அதிபதி, கிரகப்படி அதிபதி, லிங்கம், வழக்குப் பெயர் என பல விடயங்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

6)      தல யாத்திரை செல்ல ஆர்வமுள்ளவர்கள்
திருவதிகை வீரட் டானத்தின் சிறப்புகள், தீர்த்தங்கள், மூர்த்திகள்,மண்டபங்கள், தல மரம் , தலத்தின் மீது பாடப்படட தேவாரங்கள், திருவாசகம், புராணம் , திருப்புகழ் என் எல்லாவற்றையும் அறிந்து செல்லலாம்.


7)      வயிறில் வலி, நோ உள்ளவர்களுக்கு,
திருநாவுக்கரசு நாயனாரின், சூலை நோய் தீர்த்தருளிய " கூற்றா யினவாறு" என்று தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தை மன முருகிப் பாடி , நோய் நீங்கி மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.

8)      சித்தாந்தப் பிரியர்களுக்கு,
மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் திருத்தோணோக்கம் என்ற பகுதியில் , "எண்ணுடைய மூவர்" என்ற பாடலுக்கு விளக்கம் தருகையில், சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடி பிரபஞ்சத்தை தோற்றுவிப்பதும், ஊழித் தாண்டவம் ஆடி பிரபஞ்சத்தை ஒடுக்குவதும் பற்றியும் , பல பிரம்மாக்கள் ஏன் தோன்றி மறைகிறார்கள் என்பது பற்றியும் விளக்கிக் கூறியுள்ளார்.

இந்நூல் முழுவதும் ஆங்காங்கே பல் சைவ சித்தாந்த  கருத்துக்கள் விரவிக் கிடக்கின்றன.

9)      கதை சொல்லிகளுக்கு,
இந்நூல் முழுவதுமே பல சிறிய புராணக் கதைகள் உள்ளன. இவற்றை வாசித்து , நீங்கள் சிறுவர்களுக்கு கதை சொல்லி மகிழலாம்.


இப்படிப் பலதரப்படட வாசகர்களுக்கும் , பல வழிகளிலும் இந்நூல் உபயோகமாக இருக்கின்றது .