ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து பேராசிரியர் கே. ராஜு

.


     கடல் உயிரினங்களுக்கு ஆபத்து பல வடிங்களில் பல திசைகளிலிருந்து வருவதுண்டு. சுற்றுப்புறங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சேருவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அது வனஉயிரினங்கள், அவற்றின் இருப்பிடங்கள் மற்றும் மனிதர்களுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பிரச்சினையே அதன் மக்காத தன்மைதான். காலகாலத்துக்கு அழியாமல் இருந்து சுற்றுப்புறத்துக்கு சேதாரத்தை ஏற்படுத்துவதில் அதற்கு நிகரில்லை. இதுவரையில் அதன் கொடுங்கரங்கள் ஆறுகள், நீர்நிலைகள், கடற்கரையோரப் பகுதிகள் வரையில் மட்டுமே நீளும் என நினைத்திருந்தோம். ஆனால் பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல், ஆக்ஸ்போர்டு ஆகிய இரு இடங்களில் உள்ள ஆய்வாளர்கள் நுண்ணிய பிளாஸ்டிக் வடிவில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் கடல் ஆழத்தில் உள்ள உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்று கண்டுபிடித்துள்ளனர். அழகு சாதனங்களிலும் பற்பசை போன்ற சுத்தப்படுத்தும் பொருட்களிலும் உள்ள ஐந்து மி.மீ. நீளத்திற்குக் குறைவான நுண்ணிய பிளாஸ்டிக் நார்கள், பிளாஸ்டிக் சிறுமணிகள் (microbeads) எல்லாமே நுண்ணிய பிளாஸ்டிக் பொருட்கள் (microplastics) என அழைக்கப்படுகின்றன. செயற்கை இழைகளினால் ஆன ஆடைகளைத் துவைக்கும்போது பாலியெஸ்டர், நைலான், அக்கிரிலிக் அமிலக் கழிவுகள் போன்ற நுண்ணிய பிளாஸ்டிக் பொருட்கள் கடலுக்குள் நுழைந்துவிடுகின்றன. மத்திய அட்லாண்டிக், தென்மேற்கு இந்துமா கடல் ஆகிய இரு இடங்களில் சோதனை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கடல் ஆழத்தில் செல்லும் (தொலைவிலிருந்து இயக்கக்கூடிய) வாகனத்தைப் பயன்படுத்தி கடல் உயிரிகளை அவர்கள் சேகரித்தனர். 300-லிருந்து 1800 மீட்டர் ஆழத்தில் உள்ள ஹெர்மிட் நண்டுகள், கல்லிறால்கள் (lobsters), கடல் வெள்ளரிகள் போன்ற பல்வேறு கடல் உயிரிகளில் பிளாஸ்டிக் நுண்நார்கள் இருப்பதை தங்களது ஆய்வில் கண்டுபிடித்தனர். 




இவ்வளவு ஆழத்தில் இருக்கும் உயிரிகள் நுண்பிளாஸ்டிக் பொருட்களை உட்கொள்ளக்கூடியவை என்பதற்கான முதல் ஆதாரம் இது. தரையில் உள்ள மாசுபடுத்தும் பொருட்களிலிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் உள்ள கடல் ஆழத்தில் இத்தகைய நுண்பிளாஸ்டிக் பொருட்களைக் கண்டுபிடிக்க முடியும் என்பது நமக்கு ஓர் எச்சரிக்கை மணி என்கிறார் இந்த ஆய்வுக்குழுவின் தலைவர் மிஷேல் டேலர்.  
     கடலின் மேலடுக்குகளிலிருந்து கடல் ஆழத்திற்குப் பொழியப்படும் உயிரிப் பொருள் கடல் பனி (marine snow)  என அழைக்கப்படுகிறது. கடல் ஆழத்தில் உள்ள  உயிரினங்களுக்கு இது உணவாகிறது. நுண்பிளாஸ்டிக் பொருட்கள் கடல் பனி அளவே இருக்கும். துணி துவைக்கும் கருவியை உபயோகிக்கும் ஒவ்வொரு முறையும் 7லட்சம் நுண்நார்கள் கழிவு நீரில் செலுத்தப்படும் என பிரிட்டனில் உள்ள பிளைமௌத் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அண்மையில் செய்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நுண்நார்களில் பெரும்பகுதி சுற்றுப்புறத்தில் கலந்துவிடும். பிளாஸ்டிக் பொருட்கள் நமக்கு பல வழிகளில் அன்றாடம் பயன்படுகின்றன. ஆனால் கடல் ஆழத்தில் உள்ள நீரில் நுண்பிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துக் கொண்டே வந்தால் அது கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் கேடு விளைவிப்பதில் போய் முடியும்.  மேம்பட்ட கழிவுப் பொருள் மேலாண்மை நடைமுறைகள் மூலம் கடல் சார்ந்த வாழ்விடங்களில் பிளாஸ்டிக், நுண்பிளாஸ்டிக் கழிவுகள் சேராமல் தடுப்பது மிகமிக முக்கியமானது.
அழகு சாதனங்களிலும் சுத்தப்படுத்தும் கருவிகளிலும் பிளாஸ்டிக் சிறுமணிகள் பதிப்பது 2017 இறுதிக்குள் தடை செய்யப்படும் என பிரிட்டன் அண்மையில் அறிவித்திருக்கிறது. பிளாஸ்டிக்கினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுவரும் சேதாரங்கள் பற்றி மக்கள் அவையின் தணிக்கைக் குழு சமர்ப்பித்த அறிக்கையைத் தொடர்ந்தே பிரிட்டிஷ் அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. பிளாஸ்டிக் சிறுமணிகள் கொண்ட பற்பசையையும் சுத்தப்படுத்தும் பொருட்களையும் தடை செய்யும் சட்டத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கடந்த ஆண்டு  பிறப்பித்தார். இந்திய அரசும் இப்பிரச்சினையைக் கவனத்தில் கொண்டு கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்குரிய சட்டங்களைக் கொணருவது உடனடித் தேவை.                            
                                                               (நன்றி : டிசம்பர் 2016 ட்ரீம் 2047 இதழில் பிமன் பாசு எழுதிய கட்டுரை)