நாற்காலிக்கு கொம்பு உண்டு! - எஸ்.ராமகிருஷ்ணன்

.

அதிகாரத்தின் இயல்பே அலட்சியம் செய்வதுதானா ?’ என ஒரு நண்பர் கேட்டார்.
அவர் அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்பவர். உயர் அதிகாரிகளின் குண விசித்திரங்களைப் பற்றி அடிக்கடி புலம்பிக்கொண்டே இருப்பார். அரசாங்க அலுவலகத்தில் நடைபெறும் குளறுபடிகளைப் பற்றி அவர் சொல்லும்போது அதிர்ச்சியாகவே இருக்கும்.
அன்று அவர் கேட்ட கேள்வி எளிதானதாக இல்லை. நான் அவரிடம் ஒரு சம்பவத்தை விவரித்தேன்.
ஜார் மன்னர் ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவில் ஒரு ராணுவ அதிகாரி இருந்தார். அவர் யாரையும் மதிக்கவே மாட்டார். ஊழியர்களை அலட்சியமாக நடத்துவார். இந்த அதிகாரியின் கடுமையைக் கண்டு அனைவரும் பயந்தார்கள். தன்னுடைய எல்லையற்ற அதிகாரத்தை நினைத்து, அந்த ராணுவ அதிகாரி பெருமை கொண்டிருந்தார்.
இந்த அதிகாரிக்கு காரின் என்ற பியூன் மட்டுமே விருப்பமான நபராக இருந்தார். காரினை அலுவலகத்தில் எவருக்குமே பிடிக்காது.
காரின் ஒய்வுபெறும் நாள் வந்தது. அதற்கான பிரிவு உபச்சார விருந்தில் கலந்துகொள்ளும்படி அலுவலக நண்பர்களை அழைத்தார் காரின். எவருமே வரவில்லை. ராணுவ அதிகாரியும் கூட வரவில்லை. கடைசியாக ஒரே ஒரு நண்பர் மட்டும் வந்திருந்தார்.



அவரும் கோபத்துடன் சொன்னார்: ‘‘நீ அந்த கேடு கெட்ட ராணுவ அதிகாரியின் கையாள். சரியான ஒட்டுண்ணி. உன்னோடு படித்தவன் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நான் வந்திருக்கிறேன்’’ என்றார்.
அதைக் கேட்ட காரின் சொன்னார்: ‘‘நீ சொல்வது உண்மை தான். நான் ஒரு கடைநிலை ஊழியன். என்னால் அப்படித்தான் நடந்துகொள்ள முடியும். அதிகாரி மட்டும் முட்டாள் இல்லை; நீங்களும் முட்டாள்தான். நீங்கள் அதிகாரத்தின் இயல்பைப் புரிந்துகொள்ளவே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதைச் சொன்னாலும் சரி என தலையாட்ட ஓர் ஆள் வேண்டும். சொன்ன விஷயத்தை நாம் செய்ய வேண்டியதுகூட அவசியம் இல்லை.
முகஸ்துதிதான் அதிகாரிகளின் பலவீனம். இது அந்த நாற்காலியின் இயல்பு. அதில் யார் வந்து அமர்ந்தாலும், உடனே அவர்களுக்கு கொம்பு முளைத்துவிடும். அதிகாரி தன்னை ராஜாவாகவே கற்பனை செய்துகொண்டுவிடுவான். அகம்பாவமாக நடந்துகொள்வான். ஆனால், ஒன்றை மறந்துவிடாதே. வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டவர்களை விடவும் புகழ்ச்சியால் வீழ்த்தப்பட்டவர்களே அதிகம். எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்றும் கொண்டவனே நல்ல அதிகாரி. அவர்கள் எப்போதும் புகழ்வெளிச்சத்தை விரும்புவதே இல்லை’’ என்றார்.
இந்த நிகழ்வைக் கேட்ட நண்பர் சலிப்போடு சொன்னார்: ‘‘அப்படி ஒன்றிரண்டு பேர்தானே நல்ல அதிகாரிகளாக இருக்கிறார்கள். மற்றவர்கள் சுயலாபத்துக்காக அதிகாரத்தை உபயோகிப்பவர்கள்தானே. அவர்களுடன் எப்படி வேலை செய்வது? அதுதான் நம் காலத்தின் சாபக்கேடு’’ என்றார்.
நண்பர் தனது ஆற்றாமையுடன் விடைபெற்றுப் போனார். அன்றிரவு வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் ‘சந்தால்’ பழங்குடிகளின் கதை ஒன்று இருந்தது. அது நாங்கள் பேசிக்கொண்டிருந்த விஷயத்தின் கதை வடிவமாகவே இருந்தது.
ஆச்சரியத்துடன் நண்பரை தொலைபேசியில் அழைத்துச் சொன்னேன்: ‘‘ஒரு நாள் உயரமான கோட்டை சுவர் ஒன்றின் மீது ஓர் ஆடு ஏறி நின்றுகொண்டது. அந்த வழியில் ஒரு ஓநாய் போய்க் கொண்டிருந்தது. உயரத்தில் இருந்து ஓநாயைப் பார்த்த ஆடு இளக்காரமாக, ‘ஏய் இங்கே வா…’ எனக் கூப்பிட்டது.
ஒநாய் நிமிர்ந்து பார்த்து, தொலைவில் தன்னைப் பார்த்தவுடன் பயந்தோடும் ஆடு, இன்று அலட்சியமாகக் கூப்பிடுகிறதே என திகைப்புடன் யோசித்தது. ஓநாய் தன்னை முறைப்பதை கண்ட ஆடு சொன்னது: ‘என்ன முறைக்கிறே? அந்தச் செடியில் இருந்து நாலு இலை பறிச்சிட்டு வா. எனக்குப் பசியா இருக்கு!’
ஓநாய் அதைக் கண்டுகொள்ளாமல் நடந்தது. அதைக் கண்ட ஆடு கோபத்துடன் சொன்னது: ‘ஏய்… நான் சொல்றது காதில் கேட்கலையா? நான் கீழே இறங்கி வந்தா, என்ன நடக்கும் தெரியுமா?’
அதைக் கேட்ட ஓநாய் சொன்னது: ‘வந்து பார் தெரியும். நீ ஏறி நிற்கிற உயரம்தான் உன்னை இப்படி பேச வைக்குது. இறங்கி வா, அப்போ நீ யார் என்ற உண்மை தெரியும்' என்றது’’ என்றேன்.
எளிமையான கதை. உயரத்துக்குப் போகப் போக ஒருவரின் இயல்பு எப்படி மாறிவிடுகிறது என்பதற்கு அடையாம்தான் இந்தக் கதை.
அதிகாரிகள்
எல்லோரும் ஆமாம் சாமிகள் இல்லை. சிலர் அதிகாரத்தை மக்களுக்கு சேவையாற்றும் அறமாகக் கருதுகிறார்கள். எவ்விதமாகவும் வளைந்து கொடுக்காமல் நேர்மையாகப் பணியாற்றுகிறார்கள். உண்மையை நிலைநிறுத்த தன்னையே பலி கொடுத்துக் கொண்டவர்களும் உண்டு.
‘எ மேன் ஃபார் ஆல் சீசன்ஸ்’ (A Man for All Seasons) என்ற திரைப்படம் 1966-ல் வெளியானது. பிரெட் சின்மேன் தயாரித்து இயக்கியது. இங்கிலாந்து அரசரான எட்டாம் ஹென்றிக்கு வாரிசு இல்லாமல் போகவே அவர் தனது பட்டத்து அரசியான கேதரீனை விவாகரத்து செய்துவிட்டு, ஆனி போல்யன் என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்.
அதற்கு திருச்சபை அனுமதி அளிக்கவில்லை. கோபம் அடைந்த மன்னர் திருச்சபையின் அதிகாரங்களை ரத்து செய்ததோடு, தானே ‘கிறிஸ்துவ சபையின் முழு அதிகாரம் கொண்டவன்’ என்று அறிவித்துவிட்டு, அதுவரை இருந்த கார்டினலின் அதிகாரத்தையும் பறித்துக் கொண்டார்.
எட்டாம் ஹென்றியின் வழிகாட்டியாகவும் மந்திரியாகவும் இருந்த தாமஸ் மோர் அந்தச் செயலை ஆதரிக்கவில்லை. வெளிப்படையாக எதிர்த்தார். அதன் காரணமாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு உருவானது. எட்டாம் ஹென்றி எல்லா எதிர்ப்புகளையும் மீறி ஆனியை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
தாமஸ் மோர் அதைக் கண்டிக்கவே, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மன்னரே தவறு செய்தால்கூட அதைக் கண்டிக்க வேண்டும் என்ற மன உறுதியோடு செயல்பட்ட தாமஸ் மோரின் வாழ்வை இந்தப் படம் மிகச் சிறப்பாக விவரிக்கிறது. ஆறு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ள இந்தத் திரைப்படத்தை அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும்.
பழங்குடி மக்கள் தங்கள் எதிர்ப்பு உணர்வை, சுதந்திர மனப் போக்கினை வெளிப்படுத்தவே கதைகள் மற்றும் பாடல்களைப் புனைந்தனர். ‘கொடிய மிருகத்தை அம்பால் வீழ்த்த வேண்டும்; கொடிய மனிதனை கதையால் வீழ்த்த வேண்டும்’ என பழங்குடியினப் பாடல் கூறுகிறது. கதைகளும் ஆயுதம்தான். அதை ஆயுமாக்க வேண்டியது கதை சொல்லியின் வேலை!


நன்றி http://tamil.thehindu.com/

No comments: