மகிழ்ந்திடுவார் ! எம் .ஜெயராமசர்மா ... மெல்பேண் .

.



   வீரமொடு கல்விசெல்வம் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை 
    பார்மீது வாழுதற்கு பலருக்கும் தேவையிவை 
    ஊரெல்லாம் யாவருமே கொண்டாடி மகிழுமிந்த
    உயர்ந்த நவராத்திரியை உணர்வுடனே கடைப்பிடிப்போம் !

    வீரமொடு கல்விசெல்வம் வீணாகிப் போவதனை
    பாரினிலே பார்க்கையிலே பதைபதைப்பே வருகிறது
    ஊருக்கும் உதவாமல் உழைத்தவர்க்கும் சேராமல்
    சேராதவிடம் சேர்ந்து செயலொடுந்து போகிறதே !

    முச்செல்வம் பெறுவதற்கு முத்தேவிதனைத் துதிக்க
    இத்தரையில் நவராத்ரி இப்போது நடக்கிறது 
    அத்தேவி அனைவரையும் அகமார வேண்டிநாம்
    சித்தமுடன் துதித்துநின்று சிந்தனையைத் திருத்திடுவோம் !


    உயர்ந்தசெல்வம் எதுவென்று உரத்தகுரல் எழுப்பிநின்று
    பட்டிமன்றம் போடுவதில் பலனெதுவும் இல்லையப்பா
    துட்டகுணம் உள்ளோரின் கைசேர்ந்த செல்வமெலாம்
    தூய்மைபெற வேண்டுமென்று துதித்திடுவோம் தேவியிடம் !

    கல்வியில்லார் கரயேறக் காட்டிடுவோம் நல்லவழி
    காசில்லார் வாழ்வதற்குக் கண்டிடுவோம் புதியவழி
    வீரமதை  விவேகமுடன்  விதைத்திடுவோம் மனமெல்லாம்
    மலைமகளும் அலைமகளும் கலைமகளும் மகிழ்ந்திடுவார் ! 

No comments: