நான் ரசித்த சிட்னி கீதவாணி விருதுகள் 2016 - செ.பாஸ்கரன்


.
.யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க சிட்னி கிளை நடாத்திய கீதவாணி விருதுகள் 2016 நிகழ்வு சனிக்கிழமை 08.10 2016 மாலை    6 மணிக்கு Banks town Sports Club    மண்டபத்தில் மண்டபம் நிறைந்த மக்களோடு  இடம் பெற்றது .   கடந்த வருடங்கள் போலவே இம்முறையும் உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்குமுகமாக சிட்னியின்  Eastern Empire     இசைக்குழுவுடன்  பாடகர் பாடகிகளுக்கான போட்டி நிகழ்வு  நான்கு பிரிவாக இடம்பெற்றது. 

              நிகழ்வை மிக அழகாக ஒழுங்கமைத்திருந்தார்கள் . 6 மணிக்கு இந்துக்கல்லூரியின் பழைய மாணவனும் அறிவிப்பாளருமான மகேஸ்வரன் பிரபாகரனின் அறிவித்தலோடு  நிகழ்வு ஆரம்பமானது . மங்கள விளக்கேற்றலை முன்னை நாள் அதிபர் திரு திருமதி பொன்னம்பலம் , தற்போதைய தலைவர் திரு சிவநாதன் திருமதி சிவநாதன் , டாக்டர் அம்பிகைராஜா ஆகியோர் செய்தார்கள் தொடர்ந்து  தமிழ்மொழி வாழ்த்தை அபிநயணி குகஸ்ரீ பாடினார் . கல்லூரி கீதம் பழைய மாணவர்களால் பாடப்பட்டது.

தொடர்ந்து பரதாலய நடனப் பள்ளி மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஆருதி குமணன் , டிவாசினி ரமேஷ், ஸ்மிர்தி சக்கரவர்த்தி , விஜயாள் விஜே  ஆகியோர் மிக அருமையான நடனத்தை தந்தார்கள்.


தொடர்ந்து Eastern Empire இசைக்குழுவினரின் இசையுடன் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த கீ போர்ட கலைஞர் ரமேஷ் ரங்கமணி மற்றும் கிடார் ( guitar) இசைக் கலைஞர் சுரேஷ்குமார் இவர்களோடு  பின்னணி பாடகி சாருலதமணி  மற்றும் விஜயநாராயணன் ஆகியோரின் பாடல்கள்  அற்புதமாக அமைந்திருந்தது. நான்கு பிரிவுகளில் நடந்த பாடல் போட்டிகளில் பல இனிமையான பாடல்கள் பாடப்பட்டது . இத்தனை திறமை இவர்களிடம் இருக்கின்றதா என்று ஆச்சரியப் படும் அளவிற்கு  போட்டியாளர்கள் பாடினார்கள். இந்தியாவில் இருந்து வரும் பாடகர்களுக்கு சளைக்காமல் நல்ல பாடல்களை  மிக அருமையாக பாடினார்கள்.போட்டிகளுக்கு இடையிடையே வந்து பின்னணி பாடகி சாருலதமணி போட்டியாளர்கள் பாடியது எப்படியிருந்தது என்று குறிப்பிட்டது நன்றாக இருந்தது.  அது மட்டுமல்லாது இவர் நல்ல மெல்லிசை பாடல்களைப் பாடி சபையோரின் மனதை கொள்ளை அடித்துச் சென்று விட்டார் . அடுத்து சிட்டியில் இருக்கும் பின்னணிப் பாடகர் விஜயநாராயணன்  தான் படங்களில் பாடிய அருமையான பாடல்களை பாடி அசத்திவிட்டார் . பின்னணிப் பாடகர் கார்த்திகைப் போலவே மிக உயர்ந்த சுதியில் பாடுகிறார் சபையோரையும் பாடவைத்தார் .


இறுதியாக போட்டியாளர்களில் , சபையோரின் வாக்களிப்பில்  வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப் பட்டு  கீதவாணி விருதுகள் வழங்கப் பட்டது .

கீழ்ப்பிரிவில் அபிராமி புவனேந்திரன் விருதை தட்டிக்கொண்டார் .
இளையோருக்கான பிரிவில் விமல் விநோதனும்
Senior பிரிவில் சித்ரா வெங்கட்ராமனும்
இருவர் பாடலில் சேயோன் ராகவனும் மாயி ராகவனும்  வெற்றியாளர்களாக மேடையில் நின்றார்கள் .


இரவு 11 மணிக்கு இனிமையான இந்த கீதவாணி 2016 நிகழ்வு நிறைவு பெற்றது.  பழைய மாணவர்களும் மாணவர்கள் அல்லாத அதரவாளர்களும்  வருகை தந்திருந்து  உள்ளூர்க் கலைஞர்களை ஊக்கப் படுத்தியதோடு  நல்ல ஒரு நிகழ்வையும் ரசித்துச்  சென்றார்கள்.யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க சிட்னி கிளை நடாத்திய கீதவாணி விருதுகள் 2016 மிக நல்ல முறையில் சிறப்பாக குறித்த நேரத்தில் தொடக்கி முடித்து வைத்தார்கள் பாராட்டுக்கள் .
பல இடங்களில் இசைக் கருவிகளின் சத்தம் சபையில் மிக அதிகமாகவும் பாடகர்களின் சத்தம் மிக குறைவாகவும் இருந்தது. எனக்கு மட்டுமல்ல பலர் இதைக் குறிப்பிட்டார்கள் . இதுபற்றி கீதவாணி விருதுகள் 2016 இற்கு பொறுப்பான ஒருவரிடம் முறையிட்டிருந்தோம் இதை  கவத்தில் கொண்டால் நன்று. தவிர உணவுபண்டத்தின் சுவை பற்றியும் பலர் அதிருப்தி தெரிவித்திருந்தார்கள் .
ஆறு மணியில் இருந்து பதினொரு மணிவரை நடந்த நிகழ்வு நன்றாக இருந்தாலும் சற்று அதிகரித்து விட்டதாக கூறப்பட்டது .

இது தவிர சனிக்கிழமை இரவு இடம்பெற்ற நிகழ்வு மனம் நிறைந்த ஒரு நிகழ்வாக இருந்தது அதிலும் குறிப்பாக ஜனகனின்  Eastern Empire  இசக்குழுவிற்கு மிகப் பெரிய பாராட்டுக்கள் . இளம் கலைஞர் வெங்கடேசின் புல்லாங்குழல் இசை இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது .No comments: