இலங்கைச் செய்திகள்


கோத்தபாய உட்பட எழுவருக்கெதிரான விசாரணை இன்று

கோத்தபாயவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

யோசித ராஜபக்ஷ  நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்

மோடியை சந்தித்தார் ரணில்

 தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 110 ரூபாவால் அதிகரிக்க இணக்கம்

 “எட்கா” ஒப்பந்தம் இவ்வருட இறுதிக்குள் கைச்சாத்திடப்படும் ; பிரதமர்

ஜனாதிபதிக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்






கோத்தபாய உட்பட எழுவருக்கெதிரான விசாரணை இன்று

03/10/2016 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட ஏழு பேருக்கு எதிராக பதிவுசெய்யப்பட்டுள்ள எவன்கார்ட் விசாரணை  இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சட்டவிரோத ஆயுதக்கொள்வனவு மற்றும் அரசாங்கத்திற்கு 11.3 பில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி மற்றும்  கடற்படையின் முன்னாள்  கட்டளைத் தளபதிகள் மூவர் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 












கோத்தபாயவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

03/10/2016 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை வெளிநாடு செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
குறித்த உத்தரவை கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று பிறப்பித்துள்ளார்.
சீனாவில் இடம்பெறவுள்ள பிராந்திய பாதுகாப்பு மாநட்டில் கலந்துக்கொள்வதற்காக எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு கோத்தபாய ராஜபக்ஷவின் சட்டத்தரணி கடந்த 30 ஆம் திகதி கோரிக்கை விடுத்திருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி எவன்காரட் விசாரணை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கியதோடு, வெளிநாடு செல்ல தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 
















யோசித ராஜபக்ஷ  நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்

05/10/2016 யோசித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஷ்ட் ஆகியோர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளனர்.
குறித்த இருவரும் இன்று காலை நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வருகைத்தந்துள்ளனர்.
தெஹிவளையில் உள்ள வீடு மற்றும் காணி தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர்கள் இருவரும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளனர்.    நன்றி வீரகேசரி 












மோடியை சந்தித்தார் ரணில்


05/10/2016 இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நண்பகல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்திய தலைநகர் புதுடில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 
இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு உறவு, தமிழக மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ரணில் சந்தித்து பேசினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அதன்போது உடனிருந்தனர். இன்று மாலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டு மீண்டும் இந்தியாவுக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 















தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 110 ரூபாவால் அதிகரிக்க இணக்கம்

05/10/2016 தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 110 ரூபாவால் அதிகரிக்க முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். 
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி தற்போது 620 ரூபாவாக உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 730 ஆக அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி 












“எட்கா” ஒப்பந்தம் இவ்வருட இறுதிக்குள் கைச்சாத்திடப்படும் ; பிரதமர்

06/10/2016 இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான “எட்கா” ஒப்பந்தம் இந்த வருட இறுதிக்குள் கைச்சாத்திடப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்ற உலக பொருளாதார சம்மேளனத்தில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“எட்கா”  ஒப்பந்தத்தை இந்த வருட இறுதிக்குள் கைச்சாத்திட இந்திய பிரமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.    நன்றி வீரகேசரி 










ஜனாதிபதிக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்

09/10/2016 தாய்லாந்துக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தாய்லாந்து பிரதமர் பிரயுட் ஷான்-ஓ-ஷாவுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று மாலை பாங்கொக் நகரில் இடம்பெற்றது.
இதன்பின்னர், இலங்கை ஜனாதிபதிக்கு தாய்லாந்து பிரதமரினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இராப்போசன விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.   நன்றி வீரகேசரி 


















No comments: