சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை குண்டு தாக்குதல்
நியூயோர்க் நகரில் குண்டுவெடிப்பு
டாக்காவில் தாக்குதல் நடத்தியவர்களில் புகைப்படங்கள் வெளியீடு
மதினாவில் முகமது நபி பள்ளிவாசல் அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்
மதினாவில் தற்கொலைக் குண்டு தாக்குதல் ; 4 பேர் பலி
புவி வெப்பமயமானதால் நீர்மட்டம் உயர்வு: பசிபிக் கடலில் மூழ்கிய 5 தீவுகள்
டாக்காவில் ஈதுல் பித்ர் தொழுகையில் குண்டு வெடிப்பு
இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற ஓரின சேர்க்கையாளர் பேரணி
சீனாவில் வெள்ள பெருக்கு ; 180 பேர் பலி
பிரபல கால்பந்து வீரர்கள் படுகொலை
அமெரிக்க பொலிஸாரால் கறுப்பினத்தவர் சுட்டுக்கொலை ; உயிர் பிரியும் நேரத்தில் வீடியோ எடுத்த தோழி ( காணொளி இணைப்பு )
பொலிஸிற்கு எதிராக நடைபெற்ற பேரணி துப்பாக்கிச்சூடு: 4 பொலிஸ் பலி (வீடியோ இணைப்பு)
தாய்வான் புகையிரத நிலையத்தில் குண்டுவெடிப்பு: 24 பேர் காயம் (வீடியோ இணைப்பு)
பெண்கள், சிறுவர்கள் உட்பட 40 பேர் கழுத்தறுத்து படுகொலை
பாக்தாத்தில் பள்ளிவாசல் அருகே தீவிரவாதிகள் தாக்குதல்:30 பேர் பலி
சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை குண்டு தாக்குதல்
04/07/2016 சவுதி அரேபியா,ஜெட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே இன்று அதிகாலை நடத்திய தற்கொலை தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் பள்ளிவாசல் அருகே இன்று அதிகாலை தனது காரை நிறுத்திவிட்டு நடந்துவந்த ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் சுதந்திர தினமான இன்று அதிகாலை ஜெட்டாவில் உள்ள அந்நாட்டு தூதரகத்தின் அருகே நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
நியூயோர்க் நகரில் குண்டுவெடிப்பு
04/07/2016 அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள பூங்காவில் பாறைமீது ஏற முயன்ற இளைஞரின் கால் குண்டுவெடிப்பில் துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா நகரை சேர்ந்த கன்னோர் கோல்டன்(18) என்ற கல்லூரி மாணவர் வோஷிங்டன் நகரில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து நியூயோர்க் நகரை சுற்றிப்பார்க்க வந்துள்ளார்.
இன்று காலை சுமார் 11 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) நியூயோர்க் நகரில் உள்ள சென்ட்ரல் பார்க் பூங்காவின் அழகை ரசித்தபடி அங்கிருந்த சிறிய பாறையின்மீது ஏறி, இயற்கை காட்சிகளை பார்க்க முயன்றபோது, திடீரென்று அந்த பாறைக்கு அடியில் இருந்த சிறியரக குண்டு வெடித்து சிதறியது.
இச்சம்பவத்தில் அவருடன் இருந்த ஒரு நண்பர் ஆறடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். கன்னோர் கோல்டனின் இடதுகால் முழங்காலுக்கு கீழே துண்டாகிப் போனது. இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் பொலிஸார் மற்றும் அவசர சிகிச்சை வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தன.
மோப்ப நாய்களின் உதவியுடன் பூங்கா முழுவதும் குண்டு பரிசோதகர்கள் சோதனை நடத்தியதில் அங்கு வேறெந்த வெடிப்பொருளும் கிடைக்கவில்லை. ஒரு காலை இழந்த நிலையில் தற்போது நியூயோர்க்கில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கன்னோர் கோல்டனின் உடல்நிலை தேறிவருவதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் சுதந்திர தினமான இன்று வானவேடிக்கை நடத்துவதற்காக யாரோ மறைத்து வைத்திருந்த வெடிப்பொருள் மீது கன்னோர் கோல்டன் கால் வைத்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. நன்றி வீரகேசரி
டாக்காவில் தாக்குதல் நடத்தியவர்களில் புகைப்படங்கள் வெளியீடு
04/07/2016 பங்காளதேஷின் தலைநகர் டாக்காவில் குல்ஷன் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புகுந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக் கைகதிகளாக பிடித்த 20 பேரை சுட்டுக்கொன்றனர்.
இதற்கிடையே 6 தீவிரவாதிகளை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்களில் 5 பேரின் புகைப்படங்களை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டது.
அவர்களது பெயர் ஆகாஷ், பிகாஷ், டான், பட்கான் மற்றும் ரிபான் என வெளியிட்டுள்ளது. இவர்கள் டாக்காவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக மாணவர்களாகும். இவர்கள் அனைவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் 21 முதல் 27 வயதுடையவர்களாகும்.கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதியில் இருந்து மாயமாகி இருந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தீவிரவாதிகளும் வசதி படைத்த பணக்கார குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
நன்றி வீரகேசரி
மதினாவில் முகமது நபி பள்ளிவாசல் அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்
05/07/2016 சவுதி அரேபியாவில் முஸ்லிம்களின் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி பள்ளிவாசலுக்கு அருகில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த இத்தாக்குதலில் இரண்டு பேர் பலியாகியிருக்கலாம் மேலும் பலர் காயமடைந்து இருக்கக்கூடுமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பள்ளிவாசலில் முகமது நபியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாளை முஸ்லிம் மக்கள் புனித ரமழான் பண்டிகைக்கு தயாராகும் நிலையில் அவர்களின் புனித பூமியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையானது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்றி வீரகேசரி
மதினாவில் தற்கொலைக் குண்டு தாக்குதல் ; 4 பேர் பலி
05/07/2016 சவுதி அரேபியாவில் முஸ்லிம்களின் இரண்டாவது புனித நகரமாக கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி பள்ளிவாசலுக்கு அருகில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலில் நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் பலியாகியதோடு, ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறித்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நேற்றைய தினத்தில் சவுதியில் நடந்த 3 ஆவது குண்டுத்தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
புவி வெப்பமயமானதால் நீர்மட்டம் உயர்வு: பசிபிக் கடலில் மூழ்கிய 5 தீவுகள்
05/07/2016 காற்றில் அதிக அளவில் காபனீரொட்சைட் வாயு வளிமண்டலத்தில் கலப்பதால் வளி மாசடைந்து புவி வெப்பமயமாகி வருகிறது. இதனால் பருவநிலை மாற்றங்களும் எற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் கடலில் நீர் வெப்ப மயமாகியதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தென் பசிபிக் கடல் பகுதியில் இருந்த 5 சிறிய தீவுகள் கடலில் மூழ்கி விட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 6 தீவுகள் படிப்படியாக மூழ்கி அழிந்து வருகின்றன. இத்தகவல் அவுஸ்திரேலியாவின் சி.எஸ். ஐ.ஆர்.ஓ நிறுவனம் மற்றும் சீன கடல் பல்கலைக் கழகத்தினர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடல் நீர் வெப்பமயமாவதால் பசுபிக் கடல் பரப்பை விட இந்திய பெருங்கடலின் பரப்பளவு அதிகரித்து வருவதாகவும், ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
டாக்காவில் ஈதுல் பித்ர் தொழுகையில் குண்டு வெடிப்பு
07/07/2016 பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இன்று காலை நடைபெற்ற ஈதுல் பித்ர் தொழுகையில் குண்டு வெடித்தமையினால் 4 பேர் பலியாகியுள்ளனர்.
டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கிஷோர் கஞ்ச் என்ற இடத்தில் இன்று காலை ஈதுல் பித்ர் தொழுகை நடந்த மைதானத்துக்கு செல்லும் வழியில் நுழைவு வாயில் அருகே குண்டு வெடித்ததுள்ளது.
இதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஒரு பொலிஸ் உட்பட 4 பேர் பலியாகியதோடு மேலும் இந்த சம்பவத்தில் 6 பொலிஸாரும், பொதுமக்கள் 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி வீரகேசரி
இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற ஓரின சேர்க்கையாளர் பேரணி
05/07/2016 கனடாவில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற ஓரின சேர்க்கையாளர் பேரணியை தொடங்கி வைத்து பிரதமர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கனடாவில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதையொட்டி தலைநகர் டொராண்டோவில் ஓரின சேர்க்கையாளர்கள் மிக பிரமாண்டமான பேரணி நடத்தினார்கள். அதில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து இலட்சக்கணக்கானோர் வருகை தந்திருந்தனர்.
பேரணி தொடங்க தயாராக நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கனடா பிரதமர் ஐஸ்டின் டிருடியோ அங்கு வந்தார். பின்னர் கனடா நாட்டின் தேசிய கொடியை அசைத்து பேரணியை தொடங்கிவைத்ததோடு, ஓரின சேர்க்கையாளர்களுடன் பேரணியில் பங்கேற்றார்.
அப்போது பேரணியில் கலந்து கொண்டவர்களுடன் கைகுலுக்கியதுடன்,ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பேரணியில் பங்கேற்றவர்கள் சமீபத்தில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஓர்லண்டோ ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பலியான 49 ஓரின சேர்க்கையாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சீனாவில் வெள்ள பெருக்கு ; 180 பேர் பலி
05/07/2016 தென் சீனாவில் அடை மழை காரணமாக யங்ட்ஸி ஆறு பெருக்கெடுத்ததால் 180 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதுடன் 45 பேருக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.
மேற்படி வெள்ள அனர்த்தத்தால் 7 மாகாணங்களைச் சேர்ந்த 33 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அங்கு புகையிரதப் பாதைகளும் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கயிஸொயு மாகாணத்தில் இடம்பெற்ற மண்சரிவால் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
வுபேயி மாகாணத்திலுள்ள வுஹான் நகரில் சுவரொன்று இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அந்தப் பிராந்தியத்தில் நாளை புதன்கிழமை வரை அடை மழை தொடரும் அபாயம் நிலவுவதாக அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
பிரபல கால்பந்து வீரர்கள் படுகொலை
09/07/2016 ஐ.எஸ் அமைப்பினர் சமீபத்தில் படுகொலை செய்த 5 நபர்களில் 4 பேர் சிரியாவில் பிரபல கால்பந்து அணிக்காக விளையாடும் வீரர்கள் என தெரிய வந்துள்ளது.
பொது வீதியில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அந்த நால்வரும் பிரபல கால்பந்து அணியான அல்ஷபாபில் இணைந்து விளையாடி வந்தனர்.
குர்து இனத்தவருக்காக வேவு பார்ப்பதாக கூறி ஐ.எஸ் அமைப்பினர் இவர்களை கடத்தி சென்றுள்ளனர். இதனிடையே கடத்தப்பட்ட கால்பந்து வீரர்களுடன் 5 பேரை படுகொலை செய்துள்ளதாக ஐ.எஸ் அமைப்பினரின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் படங்களை வெளியிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஆசியா கிண்ண கால்பந்து போட்டிகளை பார்த்துக்கொண்டிருந்த 13 இளைஞர்களை ஐ.எஸ் குழுவினர் படுகொலை செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
அமெரிக்க பொலிஸாரால் கறுப்பினத்தவர் சுட்டுக்கொலை ; உயிர் பிரியும் நேரத்தில் வீடியோ எடுத்த தோழி ( காணொளி இணைப்பு )
09/07/2016 அமெரிக்க பொலிஸாரால் சுடப்பட்ட கறுப்பினத்தவரின் உயிர் பிரியும் நேரத்தில் வீடியோ எடுத்த அவரின் தோழி அதனை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.
குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளமெங்கும் பரவிவருகின்றது.
அமெரிக்காவின் மின்னபொலைஸ் நகரில், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான 32 வயதான கருப்பினத்தவரான பிலாண்டோ கேசிலின் தனது தோழி லேவிஸ் ரெனோல்ட்ஸ் என்பவருடன் காரில் வேகமாக சென்றுள்ளார்.
இந்நிலையில், காரை வழிமறித்த பொலிஸார் சாரதி அனுமதிப்பத்திரத்தை காண்பிக்குமாறு கூறியுள்ளனர். ஆனால், அவரோ சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக துப்பாக்கியை நீட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பொலிஸார், பிலாண்டோ கேசிலை தம்மிடமிருந்த துப்பாக்கியால் சுட்டனர்.
உயிருக்காகப் போராடிய கேசிலை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் தோழி. போகும் வழியில் பிலாண்டோ கேசில் உயிர் பிரிந்தது.
உயிர்பிரியும் இறுதிக் காட்சிகளையும் பொலிஸாருடன் இடம்பெற்ற வாக்குவாதத்தையும் தோழி வீடியோவாக தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அமெரிக்காவில் தொடர்ந்து கறுப்பின மக்களை பொலிஸார் துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இந்த வீடியோ அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரிபொலிஸிற்கு எதிராக நடைபெற்ற பேரணி துப்பாக்கிச்சூடு: 4 பொலிஸ் பலி (வீடியோ இணைப்பு)
08/07/2016 அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் பொலிஸாருக்கு எதிராக நடைபெற்ற போராட்ட பேரணியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பொலிஸ் அதிகாரிகள் பலியாகியதோடு மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
'கருப்பு இன மக்களின் உயிரும் கருத்தில்கொள்ளத்தக்கது' (Black Lives Matter) எனத் தலைப்பில் குறித்த பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் லூசியாணா, மினசோட்டா மாகாணங்களில் இரு வேறு சம்பவங்களில் கருப்பின இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் கருப்பின இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டல்லாஸ் மாகாணத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது உயரமான இடத்தில் மறைந்திருந்த துப்பாக்கி ஏந்திய சிலர் பொலிஸாரை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் 4 பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி வீரகேசரி
தாய்வான் புகையிரத நிலையத்தில் குண்டுவெடிப்பு: 24 பேர் காயம் (வீடியோ இணைப்பு)
08/07/2016 தாய்வான் நாட்டின் தலைநகர் தைபே நகரில் புகையிரதமொன்றில் குண்டு வெடித்ததில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தைபே அருகே ஜின்பிய்டு என்ற மெட்ரே புகையிரத நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.குறித்த தாக்குதல் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலை தீய நோக்கத்துடன் யாரோ நிகழ்த்தி இருக்கலாம் என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டின் பிரதமரான லின் சுவான் கூறியுள்ளார்.
சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் புகையிரத பெட்டிகள் தீப்பிடித்து சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
பெண்கள், சிறுவர்கள் உட்பட 40 பேர் கழுத்தறுத்து படுகொலை
08/07/2016 ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள உம் அல்–ஹவுஸ் நகரில் இருந்து தப்பிப்பதற்காக பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 பேர் சிரிய படையினர் வசம் உள்ள பகுதிகளை நோக்கி சென்றவேளை ஐ.எஸ். தீவிரவாதிகள் அனைவரையும் கொடூரமாக கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர்.
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, அங்கு கடந்த பெப்ரவரி மாதம் முதல் யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினர் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன.
இந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள உம் அல்–ஹவுஸ் நகரில் இருந்து தப்பிப்பதற்காக பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 பேர் சிரிய படையினர் வசம் உள்ள பகுதிகளை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் உம் அல்–ஹவுஸ் நகரின் நுழைவாயிலை அடைந்த போது அங்கிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அனைவரையும் கொடூரமாக கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர்.
மேலும், ‘‘இவர்களை போல் யாரேனும் எங்கள் அனுமதியின்றி இங்கிருந்து தப்பிக்க முயன்றால் இதே போன்று கொடூரமாக கொலை செய்யப்படுவீர்கள்’’ என ஐ.எஸ். தீவிரவாதிகள் உம் அல்–ஹவுஸ் நகர மக்களுக்கு மிரட்டல் விடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. நன்றி வீரகேசரி
பாக்தாத்தில் பள்ளிவாசல் அருகே தீவிரவாதிகள் தாக்குதல்:30 பேர் பலி
08/07/2016 பாக்தாத் நகரின் வடக்கு பகுதியில் உள்ள பலாட் என்ற இடத்தில் உள்ள பள்ளிவாசலை குறிவைத்து நேற்றிரவு ஐ.எஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு மற்றும் மோட்டார் ரக குண்டுகள் வீசி அடுத்தடுத்து நடத்திய தாக்குதலில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
இதனால், அங்கிருந்தவர்கள் பயத்தினால் ஓடிய போது அந்த கூட்டத்துக்குள் புகுந்த இரு தற்கொலைப்படையினர் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.
மேலும் ஒரு தற்கொலைப்படை தீவிரவாதியை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர், அவனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 50 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாக்தாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 292 இற்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி