.
ஷோபாசக்தி

கலையின் முக்கியமான அம்சம், வெளிப்பாடுதான்; கருத்தன்று. அதி அற்புதமான கருத்துகளை அரிய கண்டுபிடிப்பு போல் அநேக மேதைகள் என்றைக்கோ எழுதிவைத்துச் சென்றுவிட்டனர். ஆனால் அவற்றைக் கலையாக வெளிப்படுத்தும் விதத்தில் கிறங்கடிக்கிறான் கலைஞன். இனி பிறக்கப்போகும் எவருக்கும் அகண்டாகாரமாய்த் திறந்து கிடக்கும் வெளி அது.
ஷோபாசக்தி, தமது கதைகளில் அரசியல்தான் பேசுகிறார். அவர் பேசும் அரசியலைக் கடுமையாக மறுப்போர்கூட அவர் கதைகளின் கலைத் தரத்தை மறுக்க சிரமப்படுவார்கள். வாசகனின் பார்வைத் திறனுக்கேற்ப, பல அடுக்குகளைக் கொண்ட கதைகளே, பெரிய எழுத்து என இலக்கியவாதிகளால் கொண்டாடப்படுகின்றன.
ஷோபாசக்தியின் ‘வெள்ளிக்கிழமை’ என்ற கதையில் கதையென்று பெரிதாக எதுவும் இல்லை. ஒன்றுக்கொன்று நேரடியாய்த் தொடர்பற்ற சம்பவங்களை அடுக்குகிறார். அதன் மூலம், ஒரு தேசத்தின் அவலக் கதையை இன்னொரு தேசத்தில் வைத்து, சொல்கிற விதத்தில் தேசங்களின் எல்லைகளைக் கலைத்து ஒட்டுமொத்த மானுடத்துக்கான கலையாக்கிவிடுகிறார்.கலைகளின் தாயகம் எனப் போற்றப்படும் ஃபிரான்ஸில், லா சப்பல் மெத்ரோ ரயில் நிலைய நடைமேடையில், வயலின் வாசிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும் கையேந்தாமல் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறாள் ஏதோ ஒரு வெளிநாட்டுப் பெண். அவளுக்கு அன்னா என்று பெயர் வைக்கிறார்.
அன்னா கரீனினா நாடகத்துக்குச் செல்ல நண்பரின் வருகைக்காகக் காத்திருக்கிறார் ஆசிரியர். ஏதோ ஒரு நாடகம் என்றில்லாமல் ஏன் அதை அன்னா கரீனினாவாக வைக்கிறார் என்பதில் இருக்கிறது, டால்ஸ்டாய் நாவலின் இறுதிக்கும் இந்தக் கதையின் முடிவுக்குமான இணைப்புக் கண்ணி. இரண்டிலும் பிரதான பாத்திரங்கள் ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்துகொள்கின்றன. இது தற்செயல் ஒற்றுமை இல்லை; வெளிப்படுத்துதலின் விசேஷம்.
நாடகத்துக்குச் செல்ல, கூட வரவிருக்கிற நண்பரை டெலோ சாம்சன் என்று குறிப்பிடுகிறார். அவரைப் பற்றிய விவரணையில், அன்னா கரீனினா நாவலில் சொல்லப்படுவதை மேற்கோள் காட்டி அதைப் போல எல்லாவற்றையும் மறுக்க மட்டுமே தெரிந்தவர் என்றும் கூறுகிறார்.
அவர் இந்தக் கதையைப் படித்துவிட்டு, ‘நீங்கள் எப்படி அந்த மனுசனைக் கொலை செய்ய ஏலும்’ என்று கேட்கிறார். அவர் பெயர் டெலோ சாம்ஸன் என்பதையும் கவனமாக இணைத்துப் படிக்கையில், கருத்து மாறுபாடு காரணமாக டெலோ என்கிற ஒட்டுமொத்த இயக்கமே, அதன் தலைவர்கள் மட்டுமன்றி, ஒன்றுமறியாப் பொடியன்கள் உட்பட முழுவதுமாகப் புலிகளால் அழித்து ஒழிக்கப்பட்ட 80களின் வரலாறு நினைவில் எழுவதைத் தவிர்க்க முடியாது.
கதை தொடங்குவது, மேலிருக்கும் லா சப்பல் மெத்ரோவில். அங்கிருந்து பார்த்தால் கீழே வன்னியோ மன்னாரோ எனத் தொற்றமளிக்கும் வகையில் தமிழர்களாய்த் தெரியும் பாரீசின் லா சப்பல் கடைவீதி. வெள்ளிக்கிழமை எனப் பெயரிடப்பட்ட நலிந்த உருக்கொண்ட அகதி வெவ்வேறு மனிதர்களிடம் பிச்சை கேட்கிறார்.
எவரிடமும் கையேந்தாமல் வயலின் வாசித்தபடி நடைமேடையில் அமர்ந்திருக்கும் ஐரோப்பியப் பெண்ணான அன்னாவுக்கு எவரெவரோ உதவி செய்வதையும் வெள்ளிக்கிழமை பிச்சை கேட்கிற அனைவரும் இலங்கைத் தமிழர்களாக மட்டுமே இருப்பதையும் இணைத்துப் பார்க்கிற வாசகனுக்கு, யதார்த்தத்தின் இன்னொரு அடுக்கு வெளிப்படக்கூடும்.
இப்படிப் பல இழைகளை இணைத்து ஒரு கதையைச் சொல்லிச் சென்றாலும் எந்த இடத்திலும் கதைச் சம்பவங்களில் வாசகனை நெகிழவைக்கும் அதீத நாடகீயம் இல்லை.
பிச்சை எடுக்கிற மனிதர், எதிர்ப்படும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு காரணத்தைக் கூறி எப்படி அணுகுகிறார் என்பதையும் அவர்கள் ஒவ்வொருவராலும் அவர் எப்படி நடத்தப்படுகிறார் என்பதையும் பச்சாபத்தை உருவாக்கும் விதமாகவன்றி, பகடியாக விவரித்துச் செல்கிறார்.
கதையின் ஆதாரக் கேள்வி. ‘வழியில்லாதவன், பிச்சை எடுக்கிறவன், குடிகாரன் சாகத்தான் வேணுமா’.
மெத்ரோ முன் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட வெள்ளிக்கிழமைக்கு ஐரோப்பிய அன்னா சாட்சியாக இருப்பதும் அடுத்த வாரம் எதிர்ப்படும் வெள்ளிக்கிழமையை இன்னொரு நபராக எடுத்துக்கொண்டு அதே அன்னா புன்னகைப்பதும் இலக்கிய வெளிப்பாட்டின் எல்லைகள் வாசக மன விரிவுக்கேற்ப விஸ்தரிக்கப்படக்கூடியவை என்பதற்கான சாட்சியம்.

Nantri http://tamil.thehindu.com/