இளங்கதிர்

.

கல்விப்புலம் சார்ந்த வெளியீடுகளில் பல்கலைக்கழகங்களின் ஊடாக வெளிவருகின்ற இதழ்களுக்கு தனித்துவமாக வரவேற்பு எப்போதுமே உண்டு.  ஆய்விதழ்களாகவும், பருவ இதழ்களாகவும் பல்கலைக்கழகங்கள் செய்யும் வெளியீடுகள் பற்றிய பரிச்சயம் எம்மில் பலருக்கு நிச்சயமாக இருக்கும்.  இந்த வகையில் 1948 ஆம் ஆண்டு முதல் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் சங்கத்தால் வெளியிடப்படும் “இளங்கதிர்”என்கிற ஆண்டுமலர் “தமிழ் இலக்கியம் பண்பாடு ஆகியவற்றை வளர்ப்பதையும், தமிழறிவைப் பரப்புவதையும் கலை ஆக்கங்களை ஊக்குவிப்பதையும் பிரதான நோக்கமாகக்கொண்டு இச்சஞ்சிகை வெளியிடப்படுகின்றது” எனும் நோக்குடன் வெளியாகின்றது. 


குறிப்பாக பெரியளவில் இதழ்களோ, பத்திரிகைகளோ வெளிவரத்தொடங்கியிராத 1948 ஆம் ஆண்டிலிருந்தே பல ஆய்வுக்கட்டுரைகளையும், இன்றளவும் முக்கியம் வாய்ந்தவையாகக் கொண்டவையாக இருக்கின்ற ஆக்கங்களையும் உள்ளடக்கி இளங்கதில் வெளியாகியிருக்கின்றது.  இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் பல்கலைக்கழகங்களில் மிகக் குறைவான மாணவர்களே கற்றுவந்தனர்.  குறிப்பிட்ட சில துறைகளிலேயே பல்கலைக்கழக வகுப்புகளும் இடம்பெற்றனர்.  இதனால் நிறைய மாணவர்கள் இந்தியா சென்று கற்கின்ற நிலைமையே அப்போது வழமையாக இருந்தது.  இப்படியான சூழலில் “தமிழ் இலக்கியம் பண்பாடு ஆகியவற்றை வளர்ப்பதையும், தமிழறிவைப் பரப்புவதையும் கலை ஆக்கங்களை ஊக்குவிப்பதையும் பிரதான நோக்கமாகக்கொண்டு இலங்கைப்பல்கலைக்கழகம் தோன்றுவதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைப்பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ்ச்சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்படுகின்றது” என்று 2000 ஆம் ஆண்டு மலரின் பெரும் தலைவர் உரையில் குறிப்பிடப்படுகின்றது.  இச்சங்கம் 1926 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதை 1950 ஆம் ஆண்டு இதழில் இளங்கதிர் பற்றி இருக்கின்ற ஆக்கம் ஒன்றில் இருந்தும் உறுதி செய்யமுடிகின்றது.
இவ்வெளியீடுகள் கலை இலக்கியத் துறை சார்ந்தவையாகவே ஆரம்பிக்கப்பட்டபோதும் பிற்காலத்தில் விஞ்ஞான, விவசாய, பொறியியல், மருத்துவ, பல்மருத்துவ, கால்நடை வைத்தியத்துறைகளைச் சேர்ந்தவர்களது ஆக்கங்களும் இளங்கதிரில் இடம்பெற்றிருக்கின்றன.  ஆனால் இதழ்களைத் திரும்பிப் பார்க்கின்றபோது கலை இலக்கியத் துறை தவிர பிறதுறைகளைச் சார்ந்தவர்களும் இளங்கதிரில் பங்காற்றியபோதும் அவர்களது துறைசார்ந்த விடயங்களையோ, கட்டுரைகளையோ பெரியளவில் எழுதியதாகத் தெரியவில்லை.  இதனால் ஒருவிதத்தில் ஓர் ஆய்விதழ் தரத்தில் இருக்கவேண்டிய – ஆரம்ப காலங்களில் இருந்த- இளங்கதிர் பிற்காலங்களில் ஆண்டுமலர்களின் உள்ளடக்கத்திற்கும் ஆய்விதழ்களின் உள்ளடக்கத்திற்கும் இடையில் தடுமாற்றமாக நிற்கின்றதாக வகையில் அமைந்துவிடுகின்றது.  ஆரம்பத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கம் என்று அழைக்கப்பட்டபோதும் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கம் என்றே குறிப்பிடப்படுகின்றது..
எனது பார்வைக்குக் கிடைத்த ஆகப்பழைய இதழானது 1950/51 ஆம் ஆண்டு வெளியான 3வது இளங்கதிர் இதழாகும்.  இந்த இதழில் இருக்கின்ற “இலண்டனில் கீழைத்தேச மொழிக்கல்வி” என்கிற சு. வித்தியானந்தன் எழுதியுள்ள கட்டுரை இக்காலத்திற்கும் ஏற்புடையதான கருத்துகளைக்கொண்டிருக்கின்றது.  குறிப்பாக கீழைத்தேச மொழி ஆராய்ச்சிக்காக மேலைத்தேசத்துக்காக ஏன் போகவேண்டும் என்கிற அவரது வாதம் அக்காலத்தில் பண்டிதமரபினருக்கும் பல்கலைக்கழக மரபினருக்கும் இடையில் இருந்த விவாதங்களின் தொடர்ச்சியாக அமைந்திருக்கலாம்.  அது போலவே அ. சந்தியாப்பிள்ளை எழுதிய “சிங்களமொழியில் தமிழ் மொழி” என்கிற கட்டுரையும் கவனத்தை ஈர்க்கின்றது.  ஆயினும் சொற்பிறப்பு பற்றிய ஆய்வுகள் பெருமளவு முன்னேற்றமடைந்துவிட்ட இன்றையகாலப்பகுதியில் இக்கட்டுரையின் பல கருத்துகள் ஏற்றுக்கொள்ளமுடியாதைவையாகவும் மிகவும் மேலோட்டமானவையாக அமைந்துவிடுகின்றன.
இந்த இதழுக்கு அடுத்ததாக பார்வைக்குக் கிடைத்த இதழ் 1953-54 ஆம் ஆண்டு வெளியான 6 ஆவது இதழாகும்.  இந்த இதழில் “சமணத்துறவிகள் தமிழுக்காற்றிய தொண்டு”என்கிற மிக நீண்ட, முக்கியமான கட்டுரை “ஈசன்” என்கிற பெயரில் எழுதப்பட்டிருக்கின்றது.  இந்த இதழின் முக்கியமான கட்டுரையென்று அதையே குறிப்பிடமுடிகின்றது.
இதற்கு அடுத்ததாகப் பார்வைக்குக் கிடைத்த 1956/57ம் ஆண்டுக் காலப்பகுதிக்குரிய இளங்கதிர் (மலர் 9) பல்வேறு விடயங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஆக்கங்களைக் கொண்டிருக்கின்ற தனித்ததொரு ஆவணத்தொகுப்பாக மிளிர்கின்றது.  1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச்சிங்கள ஆட்சிமொழிச்சட்டம் பற்றியும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலவரம் பற்றியும் இவை தொடர்பான இளங்கதிரின் நிலைப்பாடு பற்றியும் இந்த இதழின் ஆசிரியர் குறிப்புகளில் கூறப்படுகின்றது.  தனிச் சிங்களச்சட்டத்தைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்பீடம் ஆங்கிலத்தை போதனாமொழியாக்கியதை வரவேற்றுள்ள அதேநேரம், பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் சிங்களத்தைக் கட்டாயமாகக் கற்கவேண்டும் என்ற செனட் முடிவினை பாரபட்சமானதென்றும் கூறுகின்றது.  பல்கலைக்கழகத்தில் சுயமொழியைப் போற்ற முற்பட்டால் தமிழர்க்குத் தமிழும் சிங்களவர்க்குச் சிங்களமும் கட்டாய பாடமாக்கப்படவேண்டும் என்றும் இந்த ஆசிரியர் குறிப்புகளில் குறிப்பிடப்படுகின்றது.
இதே இதழில் “ஆறுமுகநாவலரும் தமிழ்ப்பல்கலைக்கழகமும்” என்கிற கலாநிதி சு. வித்தியானந்தனின் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.  இலங்கைவாழ் தமிழர்க்கென பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பது தொடர்பாக உரையாடல்கள் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில் இந்தக் கட்டுரையும் வெளிவந்திருக்கின்றது.  ஆயினும் கிட்டத்தட்ட இதற்கு நூறாண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப்பல்கலைக்கழகம் ஒன்றினை அமைக்கவேண்டும் என்ற தொலைநோக்குத்திட்டத்துடன் ஆறுமுகநாவலர் செயற்பட்டார் என்றும்; தமிழர்கள் மேற்படிப்புப் படிக்கவேண்டும் என்றும் அதனைத் தமிழிலேயே கற்பதே அனேகமக்களுக்குப் பயனுடையதாகும் என்பதையும் மக்களின் வாழ்க்கை சமயத்தோடு இணைபிரியாமல் இருந்ததால் சமயக்கல்வியும் அவசியம் என்பதையும் உணர்ந்த ஆறுமுகநாவலர் இவற்றை அடிப்படையாகக்கொண்டு கல்வி அமையவேண்டும்  என்பதைத் தன் கல்வித்திட்டமாய்க்கொண்டதாயும் இந்தக் கட்டுரையில் கூறப்படுகின்றது.  ஆயினும் அப்போது பல்கலைக்கழகக் கல்வியைத் தமிழில் கற்பதற்குத் தேவையான மாணவர் தொகை குறைவாக இருந்ததால் மாணவர்களை தயார்ப்படுத்தும் நோக்குடனேயே சிதம்பரம், வண்ணார்பண்ணை, கோப்பாய், புலோலி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் தமிழ்ப்பாடசாலைகளையும் நிறுவியதோடு, ஆறுமுகநாவலர் நிறுவிய அச்சியந்திரசாலையும் பிறநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்ள பல்கலைக்கழக அச்சகங்கள் (University Press) போல தாம் அமைக்க இருந்த பல்கலைக்கழகத்துக்காக பாடப்புத்தகங்களையும் ஆராய்ச்சிநூல்களையும் வெளியிடும் நோக்கத்துடனேயே அமைக்கப்பட்டது என்றும் கலாநிதி சு. வித்தியானந்தன் கூறுகின்றார்.  ஆறுமுகநாவலரின் சாதிய மனப்பாங்கும் அவரது சைவப் பாடசாலைகளின் ஊடாக வெளிப்பட்டிருக்கின்றது என்றாலும் அன்றைய காலனித்துவ சூழலுக்கான ஆறுமுகநாவலரது எதிர்வினையாக கல்வித்துறையூடாக அவர் செய்த இந்த முன்னெடுப்புகளைக் கருதலாம்.  இந்த இடத்தில் “சிவமும் செந்தமிழும்” என்ற பெயரிலேயே இந்த இதழின் ஆசிரியர் தலையங்கம் இடம்பெற்றிருப்பதும் கவனத்திற்கொள்ளத்தக்கது.
பல்கலைக்கழகங்களின் போதனாமொழி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தேவை முதலிய கட்டுரைகளுடன் கலாநிதி ஆ. சதாசிவம் எழுதிய “பல்கலைக்கழகங்கள்”  என்கிற கட்டுரை பல்கலைக்கழகங்கள் எவ்விதம் அமையவேண்டும், அவற்றின் கல்வித்திட்டங்கள் எவ்விதம் இருக்கவேண்டும் என்று ஆராய்வதுடன் ஏன் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் போல பெருமளவு ஆய்வுநூல்கள், ஆய்வு இதழ்கள் என்பன வெளிவருவதில்லை என்பதை ஆராய்கின்றது.  இதேநிலை இன்றும் தொடர்கின்றபோதும் சமகாலத்தில் பல்கலைக்கழகங்களின் ஆய்வுகளுக்காக நிதிகள் வழங்கப்படுவதில் இருக்கின்ற அரசியலையும் இலங்கை போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் போதிய நிதிவசதிகள் இல்லாமல் இருப்பதையும் மாணவர்கள் உயர்கல்விக்கென நாட்டைவிட்டு வெளியேறுவதையும் சேர்த்தே இன்றைய நிலையை ஆராயவேண்டியுள்ளது.
இன்பமான நாட்கள் என்கிற பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை எழுதிய கட்டுரை அவர் மாணவராகக் கல்விகற்ற நாட்களைப்பற்றிய நனவிடை பகிர்தலாக உள்ள அதேநேரம் இக்கட்டுரை பாரதியார் பாடல்கள் மற்றும் விபுலானந்தர் தொடர்பான வரலாற்றுப்பதிவாகவும் உள்ளது.  பேராசிரியர் கணபதிப்பிள்ளை மாணவராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதலாவது ஆண்டில் சேர்ந்திருந்த காலப்பகுதியில் பாரதியார் பாடல்கள் இலக்கண வழு நிறைந்தவை என்றும் பழைய யாப்பு அமைதிக்கு அமையாதன என்றும் கூறப்பட்டு புலவர்களால் ஒதுக்கப்பட்டுவந்தன.  ஆயினும் பாரதியார் பாடல்களின் உண்மைத்தன்மை பற்றி நன்கறிந்திருந்த விபுலானந்த அடிகள் தலைமையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாரதியார் சங்கம் என்னும் பெயருடன் ஒரு கழகம் நிறுவப்பட்டது.  அதன் முதலாவது கூட்டத்தில் விபுலானந்த அடிகள் பாரதியாரைப்பற்றி அரியதோர் சொற்பொழிவாற்றியதோடு பாரதியார் பாடல்கள் பலவற்றையும் மேற்கோளாகப் பாவித்திருக்கின்றார்.  இவ்வாறு பாரதியார் புகழ் தமிழ்நாடெங்கும் மீண்டும் பரப்பப்பட்டிருக்கின்றது.  இந்தச் செய்திகளை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அத்துடன் அண்ணாமலை நகருக்கு அருகில் இருந்த ஆதிதிராவிட மக்கள் வாழும் சேரிக்கு தன்னிடம் பயிலும் சில முற்போக்கான மாணவர்களுடன் சென்ற விபுலானந்தர் அங்கிருந்த ஆதி திராவிட சிறுவர்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துவந்து அவர்களை ஆசனங்களில் அமரவைத்து தமிழ் சொல்லிக்கொடுத்தார் என்றும் அவர்களுக்கு முதன் முதலாக சொல்லிக்கொடுக்கப்பட்டது பாரதியாரின் “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்றும் பதிவுசெய்கின்றார்.  இது விபுலானந்தரின் முற்போக்குச் செயற்பாடுகளின் இன்னொன்றையும் பதிவுசெய்வதாக அமைகின்றது.  இந்த இதழில் பாரதிக்குப்பின் என்கிற பொதுத் தலைப்பின் கீழ் தேசிய இலக்கியம், காதல் இலக்கியம், பெண்மைபற்றிய இலக்கியம், குழந்தை இலக்கியம், வசன இலக்கியம் என்கிற 5 கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன.  அக்காலத்தைப் பொறுத்தவரை இது ஒரு புதுமுயற்சி என்றும் இந்த இதழிலேயே பதிவுசெய்யப்படுகின்றது.
புதிய சொல்லின் “பதிகை” என்கிற பிரிவிற்காக இளங்கதிர் பற்றி எழுதுவதற்காக தரவுகளைத் தேடியபோதும் அவற்றை இலகுவாகப் பெறமுடியவில்லை.  அந்த வகையில் நூலகம் திட்டத்தின் கீழ் ஆவணப்படுத்தப்பட்டிருகின்ற இருபது இதழ்களில் காலத்தாற்பழைய மூன்றுமே இங்கே பெரிதும் கவனத்திற்கொள்ளப்பட்டன.  இன்று வரை இளங்கதிர் வெளிவந்துகொண்டிருப்பதாகவே அறியமுடிகின்றது.  ஆயினும் அது என்ன வடிவிலும் என்ன உள்ளடக்கங்களுடனும் வருகின்றது என்று தெரியவில்லை. இதுபோன்ற பழைய இதழ்கள் தாங்கிவருகின்ற விடயங்கள் பழையதாகிவிட்டாலும் அவை வெளியான வரலாற்றுச்சூழலுடன் வைத்து வாசிக்கின்றபோது அவை முக்கிய ஆவணங்களாகிவிடுகின்றன.  அதையும் தாண்டி இளங்கதிரில் வெளியாகியுள்ள பல ஆக்கங்கள் இன்றும் சமகாலத்தன்மை உடையனவாக விளங்குகின்றன.


உசாத்துணை

  1. இளங்கதிர் இதழ் 3http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_1950-1951
  2. இளங்கதிர் இதழ் 6http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_1953-1954
  3. இளங்கதிர் இதழ் 9  http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_1953-1954
  4. இளங்கதிர் இதழ்களை நூலகம் இணையத்தளத்தில் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D
  5. இக்கட்டுரை புதிய சொல் இதழுக்காக எழுதப்பட்டு அதன் இரண்டாவது இதழில் இடம்பெற்றது.
Nantri arunmozhivarman.com