தமிழ் சினிமா


மெட்ரோ

மெட்ரோ ( வீடியோ உள்ளே ) - Cineulagam
படம் வருவதற்கு முன்பே பலரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு படம்மெட்ரோ. சென்ஸார் போர்டே படத்தை ரிலிஸ் செய்யக்கூடாது, இந்த காட்சியை கட் செய்யுங்கள், அந்த காட்சியை கட் செய்யுங்கள் எனக் கூறியது. இப்படி பல தடைகளை மீறி இன்று உலகம் முழுவதும் இப்படம் வெளிவந்துள்ளது.
ஒரு சில இயக்குனர்கள் நல்ல படம் இயக்கியும் வெளியே தெரியாமல் இருப்பார்கள். அந்த வகையில் விதார்த் நடித்த ஆள் படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணா தான் இந்த மெட்ரோ படத்தின் இயக்குனர்.

கதைக்களம்

ஆசைப்படுவதில் தவறில்லை, பேராசைப்படுவது ஒருவனை இத்தனை மோசமான உலகத்திற்கு அழைத்து செல்கிறது என்பதே மையக்கரு. அழகான குடும்பத்தில் சிரிஷ் இருக்க, இவருடைய தம்பிக்கு சொகுசு வாழ்க்கை வாழ ஆசை வருகிறது.
இருப்பதை வைத்து நிம்மதியாக வாழ் என்று அப்பா, அம்மா, அண்ணன் எவ்வளவோ அறிவுரை கூறினாலும், கேட்காமல் பைக், ஐ போன் வாங்குவதற்காக தன் நண்பனின் மூலம் நகை பறிக்கும் வேலையில் ஈடுப்படுகிறார்.
தனக்கு தேவையான அத்தனை பணமும் வர, ஒரு கட்டத்தில் பணத்திற்காக தன் சொந்த அம்மாவையே கொலை செய்கிறார். இதன் பின் சிரிஷ் தன் தம்பி தான் கொலைக்காரன் என்று தெரியாமல் இந்த கும்பலை பிடிக்க புறப்பட, என்ன ஆகின்றது என்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக கூறியிருக்கின்றார் ஆனந்த கிருஷ்ணா.

படத்தை பற்றிய அலசல்

படத்தின், முதல் ஹீரோ திரைக்கதை தான் அதைவிட இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே ஆனந்த் கிருஷ்ணாவிற்கு ஒரு பாராட்டு. சென்னை போன்ற மெட்ரோ சிட்டிகளில் நடக்கும் வழிப்பறிகளை கண்முன் கொண்டு வந்துள்ளார்.
ஒரு மாணவன் எப்படி பணத்திற்காக இத்தனை குற்றங்களை எல்லாம் செய்கிறான் என்பதையும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர். அதிலும் செயின் பறிப்பு எப்படி நடக்கின்றது என்பதை இத்தனை ஆழமாக வேறு எந்த படத்திலும் கூறியது இல்லை என்றே கூறலாம்.
இப்படத்திற்கு சென்ஸார் பல தடைகள் விதித்ததாக கூறுகிறார்கள், உண்மையாகவே இப்படத்தை பார்த்த பிறகு பல பெண்கள் விழிப்புணர்வுடன் தான் இருப்பார்கள். ஏனெனில் பெண்கள் எப்படி வெளியே வந்தால் செயின் பறிப்பு நடக்கும் என்பதை மிகவும் டீட்டெயிலாக கூறியுள்ளனர்.
நாம் பார்க்காத ஓர் உலகத்தில் டார்ச் அடித்து வெளிச்சத்துடன் வெளியே காட்டியுள்ளார் இயக்குனர். இதற்கு முன் இப்படி ஒரு இருண்ட உலகத்தை காட்டியது பொல்லாதவன் படமாக தான் இருக்கும். ஆனால், பல இடங்களில் குறும்படம் பார்ப்பது போலவே ஒரு எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
இது கண்டிப்பாக நடித்த நடிகர்கள் தான் காரணம் என்று கூறலாம், ஹீரோ அவருடைய தம்பி இருவருமே யதார்த்தத்தை மீறி நடித்துள்ளது கொஞ்சம் செயற்கை தனமாக உள்ளது. பாபிசிம்ஹா எப்போது இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார் என்று தெரியவில்லை, ஏனெனில் படத்தின் ஆரம்பத்தில் பெரிய பில்டெப்புடன் மிரட்டினாலும் கிளைமேக்ஸில் கிச்சுகிச்சு மூட்டி செல்கிறார்.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை, ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஒரு பதட்டத்துடனே நம்மை உட்கார வைக்கின்றது.
படத்தின் வசனம் ‘ஒரு பையனின் ஆசையை நிறைவேற்றுவது அப்பாவின் கடமை, பேராசையை இல்லை’ திருடனாக இருந்தாலும் பேராசை வரக்கூடாது போன்ற வசனங்கள் கவணிக்க வைக்கின்றது.
ஜோஹனின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் பின்னணியில் மிரட்டுகிறார். படத்திற்கு மற்றொரு பலம் சேர்ப்பது உதயகுமாரின் ஒளிப்பதிவு, அதிலும் கிளைமேக்ஸில் அந்த இரவில் நடக்கும் காட்சியை லைவ்வாக பார்ப்பது போல் இருந்தது.
அட செண்ட்ராயன் அனைத்து கதைக்களத்திலும் கலக்குகிறார், காமெடி, சோகம் என அனைத்திலும் செம்ம ஸ்கோர் செய்கிறார்.

பல்ப்ஸ்

இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக ஒரு சில கதாபாத்திரங்கள் நடித்திருக்கலாம்.
அம்மாவை கொலைசெய்த ஹீரோவின் தம்பியின் கைரேகையை எடுக்கிறார்கள், ஆனால் அதுப்பற்றி எந்த ஒரு தகவலும் வராதது லாஜிக் மீறல்.
மொத்தத்தில் மெட்ரோ போன்ற ஹைஃபை சிட்டிகளின் மற்றொரு இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியதற்காகவே கண்டிப்பாக இந்த மெட்ரோவை பார்க்கலாம்.

ரேட்டிங்- 3/5 

நன்றி   cineulagam