துரும்பு - ருத்ரா

.
வாழ்க்கை என்றால் என்ன‌
என்று கேட்டால்
கடவுளைக்காட்டுகிறீர்கள்.
கடவுளைக்காட்டுங்கள்
என்றால்
வாழ்ந்து பார் என்கிறீர்கள்.
முட்டி மோதி
கடைசி மைல்கல்லில்
ரத்தம் வழிந்த போது
சத்தம் வந்தது
உள்ளேயிருந்து.
இதயத்துடிப்பின் ஒலியில்
கேட்டது தானே
முதல் மொழி.
அதன் சொல் ஜனனம் என்றால்
அதன் அர்த்தம் மரணம் என்றார்கள்.
மனிதனா?இறைவனா?அது
“மெய் பொய்”த்துகளின்
குவாண்டம் மீனிங்.
அன்னிஹிலேஷனும்
அது தான்.
கிரியேஷனும்
அது தான்.
அழித்து அழித்து ஆக்குவதே
அணு உலைக்கூடம்.
ஃபீல்டு எனும்
வெறுமைப்புலத்தில்
எது
முதலில்
நுழைந்தது?
ஆற்றலா?
நிறையா?
“ஹிக்ஸ்போஸன்”
புதிர் அவிழ்த்தது!
கடவுள் எனும்
கற்பனையை முதலில்
படைத்தான்.
அக்கற்பனையைப்படைத்த‌
மனிதனை
அப்புறம் படைத்தான்
என்பதில்
லாஜிக் இல்லையே!
லாஜிக் இல்லாத கடவுளுக்கு
லாஜிக் தருவதே
மனிதன் தான்.
பிரம்ம சூத்ரமும் பாஷ்யங்களும்
உடைந்து போகிற‌
சோப்புக்குமிழிகளைத்தான்
ஊதித்தள்ளியிருக்கிறது.
எத்தனை வயதுகள் வேண்டும்
உனக்கு?
இந்த பிரபஞ்சத்தின்
வயதையும் சேர்த்தே
எடுத்துக்கொள்.
அது யார்?
அது எது?
இந்த கேள்வி
அந்த வயதுகளையும் விட நீளம்.
ப்ளாங்க் கான்ஸ்டன்ட்
என்று
இரண்டு சொல்லில் தான்
அந்த சாவியும் பூட்டும்.
அது என்ன?
பல்கலைக்கழகங்களின்
அடுக்குப்பாறைகளின் அடியில்
அந்த கீற்று
கிசு கிசுக்கிறது.
புரிந்தால்
புரிந்துகொள்.
இல்லையென்றால்
குடமுழக்கு நீராட்டில்
நனைந்து கொண்டே இரு.
அஞ்ஞானங்களின் பிரளயத்தில்
அமிழ்ந்து போ.
விஞ்ஞானத்துரும்பு
விடியல் காட்டும் வரைஉ
மூளையின்
அந்த‌இருட்டுமூலைக்குள்
ஒரு நூல் படிக்க கிடைக்கும்வரை
நூலாம்படையாய்
படர்ந்திரு.