விஜயதாரகை அறிமுகம் - ரேணுகா தனஸ்கந்தா - அவுஸ்திரேலியா

.
இமைகள்  கவிழ்ந்த  இலக்கிய  இதழ்
புகலிடத்தில்  வரையறைக்குள்  நின்று  பெண்ணியம்பேசிய  ஆளுமையின்  காலத்தை பதிவுசெய்த  ஆவணம்
  


இலங்கையிலும்  புகலிடம்பெற்ற  அவுஸ்திரேலியாவிலும்  ஒரு இலக்கியத்தாரகையாக  மிளிர்ந்த  எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளரும்   சமூகப்பணியாளருமான  திருமதி அருண். விஜயராணி  கடந்த   ஆண்டு  இறுதியில்  மறைந்து  நாட்கள்  விரைந்து  ஓடி,  ஒரு  மாதகாலம்  கடந்துவிட்ட  நிலையில் அவருடைய  நினைவுகளைத்  தாங்கி  வெளியாகியிருக்கிறது விஜயதாரகை  என்னும்  இமைகள்  கவிழ்ந்த இலக்கிய  இதழ்.
" தாரகைகள்  உதிரும்  இயல்புள்ளவை.  மீண்டும்  உலகிற்கு  அவை விஜயம்மேற்கொள்ளும்  இயல்பையும்  தன்னகத்தே கொண்டிருப்பவை.  "  என்ற  தொனிப்பொருளுடன்  விஜயதாரகை இதழை   தொகுத்துள்ளனர்.
இதன்   வெளியீடு  கடந்த  31  ஆம்  திகதி  அவுஸ்திரேலியா விக்ரோரியா  மாநிலத்தின்  மெல்பன்  நகரத்தில்,  பிரஸ்டன்  நகர மண்டபத்தில்  மக்கள்  நிறைந்த  அரங்கில்  இடம்பெற்றது.
காலத்தின்தேவையாக  கருதப்படும்  விஜயதாரகை  பற்றியதே இக்கட்டுரை.
இந்த  இதழில்  விஜயாவின்  மனிதநேயத்தை,   அவரின் இலக்கியப்படைப்புகளை   அவரிடமிருந்த  சமூகப்பார்வையை,  அவர் மேற்கொண்ட   கலை,  இலக்கிய  சமூகப்பணிகளை  நாம் காணமுடிகிறது.   இதில்  எழுதியிருப்பவர்கள்  விஜயாவுடன்  பல வருடகாலம்   இணைந்து  பொதுப்பணிகளில்  ஈடுபட்டவர்கள்.விஜயாவின்   இல்லத்தின்  முற்றத்தில்  நிற்கும்  தண்ணீர்குடம்  ஏந்திய   பெண்தேவதை  பசுமையான  முற்றத்து  மரங்களின் நிழலிருந்து   வாசகரை  இதழின்  உள்ளே  வரவேற்பது போன்று நிற்கிறாள்.
விஜயராணி   இந்த  இதழின்  முகப்பிலிருந்து  எம்மையெல்லாம் பார்க்கிறார்.
அவர்   இல்லையென்பதை  தாங்கிக்கொள்ளும்  மனவலிமையுடன்தான்  இதழின்  பக்கங்களை   புரட்டுகின்றோம்.

விஜயராணி  இதுவரையில்  நூலாக  தொகுத்து  வெளியிட்டது கன்னிகாதானங்கள்   சிறுகதைத்தொகுப்பு    மாத்திரமே.   இது 1990 ஆம் ஆண்டில்   வெளியானது.   அதன்பிறகு  இரண்டாவது கதைத்தொகுப்பினை   வெளியிடும்  முயற்சியில்  ஈடுபட்டிருக்கிறார். ஆயினும்  அது  வெளிவரு முன்னர்  விடைபெற்றுவிட்டார்.


குறிப்பிட்ட  புதிய  நூலுக்கு  சிட்னியில்  வசிக்கும்  ஈழத்தின்  மூத்த கவிஞர்  அம்பியிடம்  வாழ்த்துச்செய்தி  பெற்றுள்ளார்.  அந்தச்செய்தி விஜயதாரகையில்  முதல்  ஆக்கமாக  வந்துள்ளது.
" இலக்கியத்தொடர்  பயணத்தில்  ஒரு  குடும்பத்தலைவி " என்ற தலைப்பில்,  விஜயராணியின்  பொறுப்புகள்,  தார்மீகப்பண்பாடுகள் சார்ந்தவை"  என்று  அம்பி  குறிப்பிடுகிறார்.
விஜயராணி  எழுதப்புகுந்த  காலகட்டத்திலிருந்து  இவருடைய இலக்கியத்தோழியாக  இணைந்துவந்த  ஈழத்தின்  மற்றுமொரு  மூத்த   எழுத்தாளரான  தாமரைச்செல்வி,   விஜயாவுடன்  பழகிய கடந்த  கால  அனுபவங்களை   நினைவுபடுத்தி  "  என்  இனியதோழி,  நீ மறையலாம்.   உன்னால்  நிகழ்த்தப்பட்ட  சாதனைகளும் உன்னைப்பற்றிய   நினைவுகளும்  என்றைக்குமே  மறையாது.   என் விழி  சிந்தும்  நீர்த்துளிகளால்  உன்பாதங்களுக்கு  அஞ்சலி செய்கின்றேன் " என்று  தமது  கட்டுரையை  நிறைவுசெய்கிறார்.

இந்த  இதழில்  விஜயராணியின்  மூத்த  அண்ணரும்  கலை, இலக்கிய  ஆர்வலருமான  சட்டத்தரணி  செல்வத்துரை  ரவீந்திரன், அஸ்தமனத்தில்   உதயம்  என்ற   கட்டுரையை  எழுதியுள்ளார்.
 விஜயா,  தனது  சமூகம்  சார்ந்த  செயற்பாடுகளிலெல்லாம்  தனது குடும்பத்தையும்   அந்த  உறவுகளினால்  நீடித்த  பந்தங்களையும் இணைத்துக்கொண்டே  பயணித்தவர்.
இங்கு   வாழப்போகின்ற  எம்மவர்களின்  அடையாளம்  பற்றிய கேள்விகள்தான்   விஜயாவிடத்தில்  எழுந்தன.   அக்காலங்களில்  வந்த சில  சாதாரண  பெண்கள்  இங்குள்ள  கலாச்சார  சூழ்நிலையில் வேலை  தேடி  அலைந்ததும்,  அந்தக்கலாச்சாரங்களினால் மனமாற்றம்  கொண்டதும்  விஜயாவைப்பாதித்தது  என்றும்  ரவீந்திரன்   தமது  கட்டுரையில்  குறிப்பிடுகிறார்.


    விஜயராணியின்   மருமகனும்  ஊடகவியலாளருமான  தெய்வீகன்,    " தாய்  நிலம்தாண்டி  கங்காரு  நாட்டில் என்னைத் தத்தெடுத்த  இரண்டாம்   தாய் "  - என்று   விஜயராணியைப்பற்றி விதந்து   எழுதியிருக்கிறார்.     அத்துடன்,   விஜயராணியின்  தாய் அன்பையும்,   குடும்ப  உறுப்பினரை  அணைத்துப்போகும்   பாங்கையும் குறிப்பிடுகிறார்.    தான்  சந்தித்த  எல்லா  மனிதர்களிடத்திலும் பாரபட்சமின்றி,   மரியாதை  செலுத்தும்  பரந்த  மனம்  படைத்தவர் என்றும்,   தனது  கொள்கைகளில்  இறுக்கமானவர்  எனவும்,   எடுத்த காரியத்தில்    வெற்றிகொள்ளும்  விடாமுயற்சியுள்ளவரெனினும் மரணத்தைத்  தவிர  அனைத்தையும்  அவர்  தம்  வாழ்வில் வெற்றிகொண்டார்  எனவும்  தெய்வீகன்   சொல்கிறார்.
விஜயராணி   அவுஸ்திரேலியாவில்  ஒலிக்கும்  பல  தமிழ்வானொலி நிகழ்ச்சிகளில்   பங்கேற்றவர்.   அவருக்கு  இலக்கியத்தில்  இருந்த ஈடுபாடு   எழுதத்தொடங்கிய  காலத்திலிருந்து  வானொலி ஊடகத்திலும்  நீடித்திருந்தது.
அந்தவகையில்  சிட்னியிலிருந்து  ஒலிக்கும்  அவுஸ்திரேலியா   தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலியில்  நிகழ்த்தப்பட்ட  நேர்காணல்   தொடர்பான  அனுபவங்களைப்பற்றியும்   அவ்வப்போது கலந்துரையாடல்களிலிருந்து   பெற்ற    நயத்தகு   செய்திகளையும் கானா. பிரபா  விஜயா  அக்கா   கதைக்கிறன்  என்ற  குரல் "  என்ற தலைப்பில்  ஒரு  கட்டுரையை  எழுதியுள்ளார்.
பெண்ணியம்   என்றால்  என்ன  என்பது  பற்றி  அதன் வரையறைகளுடன்  வாழ்ந்துகாட்டியவர்  விஜயராணி  என்றும்  கானா. பிரபா  சொல்கிறார்.
எழுத்தாளர்   நடேசன்  தாம்,   உதயம்  இதழை   நடத்திய காலத்திலிருந்து   விஜயராணியுடன்  ஏற்பட்ட  இலக்கிய உறவுபற்றியும்,   தனிப்பட்ட முறையில்  ஒரு  சகோதரிபோன்று  தமது   குடும்ப  நிகழ்ச்சிகளிலும்  பங்குபற்றியதுடன்,  சமூகம்  சார்ந்த சேவைகளில்    ஆளுமையுடன்  எவ்வாறு  இயங்கியவர்  என்றும் தனது   கட்டுரையில்  விபரிக்கின்றார்.
எழுத்தாளர்   முருகபூபதி,   விஜயராணிக்கு  உடன்பிறவாத சகோதரன்போன்று    பழகியவர்.    இவருடன்  இணைந்து  விஜயா ஈடுபட்ட   பல  கலை   இலக்கிய  சமூகப்பணிகளில்  விஜயா  சந்தித்த ஆளுமைகள்  பற்றியும்  அவர்  தமது   தேர்ந்த  சினிமா ரசனையிலிருந்து   எவ்வாறு  படிப்படியாக  இலக்கியத்தின்  பக்கம் முழுமையாக   வந்தார்  என்பது  பற்றியும் "  கனவு  காணும்  வாழ்க்கை  யாவும்  கலைந்து போகும் மேகங்கள்  " என்ற தலைப்பில்  எழுதியுள்ளார்.
யாதும்  ஊரே  யாவரும்  கேளீர்  என்பதன்  அர்த்தமாய்  வாழ்ந்தவர் எங்கள்  விஜயராணி  என்ற  தொனியுடன்,   நேசித்ததும்  யாசித்ததும் என்ற   சிறிய  கவிதையை  திருமதி  மாலதி  முருகபூபதி எழுதியுள்ளார்.
பெண்ணியத்தை  ஆதரித்து  கண்ணியத்தை   வளர்த்தவரே  என்று கவிஞர்   எம். ஜெயராம சர்மா   எழுதிய  கவிதையும்   விஜயதாரகையில் இடம்பெற்றுள்ளது.
விஜயராணி   ஒரு  சமூகப்பணியாளர்  என்பதை  இந்த  ஆக்கத்தின் தொடக்கத்திலேயே   குறிப்பிட்டிருந்தோம்  அல்லவா.
விஜயராணி   மெல்பனில்  27  வருடங்களுக்கும்  மேலாக இயக்கும்   தொண்டு  நிறுவனமான   இலங்கை   மாணவர்  கல்வி  நிதியத்திலும் பதினைந்து   ஆண்டு  காலமாக  நடைபெறும்  தமிழ்  எழுத்தாளர்   விழா   இயக்கத்திலும்  இணைந்திருந்தவர்.   அத்துடன்  1990  ஆம் ஆண்டளவில்   தோன்றிய  அவுஸ்திரேலிய  தமிழர்  ஒன்றியத்தின் கலாசார  செயலாளராகவும்  இந்த  அமைப்பின்  வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின்   ஆசிரியராகவும்  செயல்பட்டவர். அத்துடன்   இங்கு  வெளியான  மரபு  என்ற  இதழிலும்  எழுதியவர்.
இத்தகைய   விஜயாவின்  பன்முகப்பணிகளை   சித்திரிக்கும்  அவர் மேற்கொண்ட   செயற்பாடுகளை  இதுவரையில் தெரிந்துகொள்ளாதவர்களுக்கு   தெரியப்படுத்தும்  கட்டுரைகளை இலங்கை    மாணவர்  கல்வி   நிதியத்தின்  தற்போதைய  தலைவரும் மரபு   ஆசிரியருமான  விமல்.  அரவிந்தனும்,   அவுஸ்திரேலியா  தமிழ் இலக்கிய   கலைச்சங்கத்தின்  நடப்பாண்டு  தலைவர்  பேராசிரியர் ஆசி. கந்தராஜாவும்   எழுதிய  கட்டுரைகளும்  விஜயதாரகையில் இடம்பெற்றுள்ளன.
தொத்துவியாதிகள்  என்னும்   சிறுகதையை  விஜயராணி  சில வருடங்களுக்கு   முன்னர்  தமிழ்நாடு  கணையாழி  இதழ்  வெளியிட்ட அவுஸ்திரேலிய  சிறப்பிதழில்  எழுதியிருந்தார்.   அதனை Contagious Diseases  என்னும்   தலைப்பில்  தமிழக  கவிஞி  தமிழச்சி  சுமதி தங்கபாண்டியன்    ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்துள்ளார்.
விஜயராணியின்  சமூகம்  சார்ந்த  இலக்கியச்சிந்தனையை  தமிழ்  தெரியாத  ஆங்கில  வாசகர்களுக்காக  இந்த   மொழிபெயர்ப்பையும்    விஜயதாரகை    இதழில்  இணைத்துள்ளனர்.
விஜயராணி   தனது   கலை  இலக்கிய  வானொலி  மற்றும் சமூகச்செயற்பாடுகளில்  சந்தித்த  ஆளுமைகளுடன்  நிற்கும் படங்களும்  விஜயதாரகை  இதழுக்கு   மெருகேற்றுகின்றன.
விஜயராணி   அற்பாயுளில்  மறைந்துவிட்டதனால்  ஒரு  பெரிய வெற்றிடம்  தோன்றியிருக்கும்  கனத்த  மனநிலையுடன்  அன்று  அந்த  நினைவரங்கு  மண்டபத்தினுள்  பிரவேசித்தோம்.
அன்று   வெளியிடப்பட்ட  நினைவு  மலரும்  விஜயதாரகை  இதழும் நினைவரங்கில்  நிகழ்த்தப்பட்ட  உரைகளும்,  ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை    நிரப்புவதற்கு  எவ்வாறு  நாம்  இயங்கவேண்டும் என்ற  வலிமையான   செய்தியைத்தந்துள்ளது.
அருண்.விஜயராணி  தாரகையாக  எமது  நினைவுகளில்  வலம்வந்து ஒளிவீசிக்கொண்டே   இருப்பார்.
----0----