நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம்
அனுமதியின்றி பிரவேசிக்கும் வெளிநாட்டு படையினர் சவப்பெட்டிகளில் திரும்ப நேரிடும்போலி கடவுச்சீட்டு மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தேன்; உளவும் பார்த்தேன்
ஜேர்மனியில் இரு பயணிகள் புகையிரதங்கள் மோதி விபத்து; 9 பேர் பலி; 100 பேர் காயம்
ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிரான கனேடிய வான் தாக்குதல்களுக்கு 22 ஆம் திகதியுடன் முற்றுப்புள்ளி
துருக்கிய கடற்கரைக்கு அப்பால் மூழ்கிய படகு 11 சிறுவர்கள் உட்பட 27 குடியேற்றவாசிகள் பலி
சிரியா மோதல் ; அலப்போ மாகாணத்தில் 50 ஆயிரம் பேர் இடம் பெயர்வு
நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம்
09/02/2016 நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா (79) இன்று அதிகாலையில் அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.
நுரையீரல் அழற்சி நோயால் மரணம் அடைந்த கொய்ராலாவின் உடல் காத்மாண்டு நகரில் உள்ள நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பனாரஸ் நகரில் பிறந்த கொய்ராலா நேபாள அரசியலில் 1954ம் ஆண்டு கால்பதித்தார்.
2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் திகதி பிரதமராக தேர்வுசெய்யப்பட்ட கொய்ராலா 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நேபாள நாட்டு பிரதமராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அனுமதியின்றி பிரவேசிக்கும் வெளிநாட்டு படையினர் சவப்பெட்டிகளில் திரும்ப நேரிடும்
08/02/2016 சிரிய அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் அந்நாட்டுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டுப் படைவீரர்கள் சவப்பெட்டிகளில் திரும்ப நேரிடும் என சிரிய வெளிநாட்டு அமைச்சர் வாலித் அல் – முயல்லம் எச்சரித்துள்ளார்.
சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் சவூதி அரேபியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள் ளார்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான மோதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பு நாடுகளின் படைகளும் கிளர்ச்சிக் குழுக்களும் அனுமதியளித்தால் தான் சிரியாவுக்கு தனது தரைப்படையை அனுப்பத் தயாராக இருப்பதாக சவூதி அரேபியா அறிவித்தமைக்கு இரு நாட்களிலேயே சிரிய வெளிநாட்டு அமைச்சரின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
"சிரிய அரசாங்கத்தின் அனுமதியின்றி தரை வழியாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு தலையீடும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கருதப்படும். அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் சவப்பெட்டியிலேயே தமது நாடுகளுக்குத் திரும்ப நேரிடும் என்பதை நான் இங்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் கூறினார். நன்றி வீரகேசரி
போலி கடவுச்சீட்டு மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தேன்; உளவும் பார்த்தேன்
09/02/2016 மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் போலி கடவுச்சீட்டு மூலம் இந்தியாவுக்கு பலமுறை சென்று மும்பையை முழுமையாக உளவு பார்த்தேன் என்று லஷ்கர்- இ -தொய்பா தீவிரவாத இயக்கத்தினை சேர்ந்த டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லி அரசதரப்பு சாட்சியாக மாறிய நிலையில் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் மும்பை நீதிமன்றத்திற்கு நேற்று வாக்குமூலம் அளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இதன் போது மேலும் தெரிவித்ததாவது,
டேவிட் ஹெட்லி என்ற நான் லஷ்கர்- இ -தொய்பா தீவிரவாத இயக்கத்தின் உண்மையான ஆதரவாளராக இருந்தேன்.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்குள் நுழைய எனது பெயரை மாற்றிக் கொண்டேன். 2006ஆம் ஆண்டு டேவிட் ஹெட்லி என்ற பெயரை தாவூத் கிலானி என்று மாற்றிக் கொண்டேன். என்னுடைய பெயரை மாற்றிக் கொண்டது தொடர்பாக லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாதி சாஜித் மிரிடம் தகவல் தெரிவித்தேன். என்னு டைய பெயரை மாற்றிய ஒரு சில வாரங்களில் பாகிஸ்தான் சென்றேன். இந்தியாவிற்குள் செல்லவேண்டும் என்பதற்காக பெயரை மாற்றினேன். இந்தியாவில் தொழில் ஏதாவது செய்யவேண்டும் என்று சாஜித் மிர் என்னிடம் கூறினார்.
என்னுடைய புதிய கடவுச்சீட்டு கிடைத்ததும் இந்தியாவிற்கு 8 முறை பயணம் செய்தேன். இதில் 7 முறை மும்பைக்கு சென்றேன்.
லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாதி சாஜித் மிர் மும்பையை வீடியோ எடுக்க கூறினார். பாகிஸ்தானில் இருந்து 7 முறை இந்தியாவிற்கு பயணம் செய்தேன். ஒருமுறை மட்டுமே ஐக்கிய அரபு எமிரெட்சில் இருந்து இந்தியாவிற்கு பயணம் செய்தேன். மும்பையில் தாக்குதல் நடத்திய பின்னர் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூரில் இருந்து இந்தியாவிற்கு சென்றேன். இந்தியாவிடம் விசா கேட்டு விண்ணப்பித்த போது அளித்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. விண்ணப்பித்த போது அளித்த பிறந்த திகதி, பிறந்த இடம், தாய் தேசம் மற்றும் கடவுச்சீட்டு எண்கள் அனைத்தும் தவறானதே. என்று கூறி உள்ளார்.
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர் – இ–தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதி கள், கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந் நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவரான டேவிட் ஹெட்லி என்ற லஷ்கர் தீவிரவாதியும் மும்பை தாக்குதலுக்கு திட்டம் வகுத்தவர்களில் ஒருவர் என கண்டுபிடிக்கப்பட்டது. அவர் 2009ஆம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இந்தியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் மும்பை தாக்குதலில் அவருடைய தொடர்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஜேர்மனியில் இரு பயணிகள் புகையிரதங்கள் மோதி விபத்து; 9 பேர் பலி; 100 பேர் காயம்
10/02/2016 ஜேர்மனியில் இரு பயணிகள் புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் குறைந்தது 9 பேர் பலியானதுடன், 100 பேருக்கும் அதிகமா னோர் காயமடைந்துள்ளனர்.
அதேசமயம் விபத்துக்குள்ளான புகையிரதங்களின் சிதைவுகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். முனிச் நகரின் தென் கிழக்கே சுமார் 60 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பாட் எயிபிலிங் நகரில் இடம்பெற்ற மேற்படி விபத்தின்போது புகையிரதப்பெட்டிகளில் பல தடம்புரண்டுள்ளன.
இந்நிலையில் புகையிரதப் பெட்டிகளில் வெளியேற முடியாது சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ரோஸென்ஹெயிம் பிராந்தியத்துக்கும் ஹொல்ஸ்கிர்சென் பிராந்தியத்துக்கும் இடையிலுள்ள புகையிரதப் பாதையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் கண்ட றியப்படவில்லை.
நன்றி வீரகேசரி
ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிரான கனேடிய வான் தாக்குதல்களுக்கு 22 ஆம் திகதியுடன் முற்றுப்புள்ளி
10/02/2016 கனடாவானது சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளை இலக்குவைத்து மேற் கொள் ளப்படும் தாக்குதல்களை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அந்நாட்டுப் பிரத மர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்தார்.
மேற்படி வான் தாக்குதல்களால் மட்டும் உள்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை பெற்றுத் தர முடியாது என அவர் திங்கட்கிழமை ஒட்டாவா பிராந்தியத்தில் ஆற்றிய உரையின் போது கூறினார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட ஜஸ்டின், அந்தப் பிராந்தியத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 6 போர் விமானங்களை வாபஸ் பெறுவதற்கு உறுதியளித்துள்ளார்.
எனினும் கனடாவின் இரு கண்காணிப்பு விமானங்கள் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் விமானங்களுக்கான மீள் எரிபொருளை வழங்கும் விமானம் அந்தப் பிராந்தியத்தில் செயற்படவுள்ளதுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் பிராந்திய படைகளுக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் கனேடிய படைவீரர்களின் தொகையும் அதிகரிக்கப்படவுள்ளது.
"அந்தப் பிராந்தியத்திலான வான் தாக்குதல் நடவடிக்கைகள் குறுகிய கால இராணுவ மற்றும் பிராந்திய ஆதாயங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாகவுள்ளதை புரிந்து கொள்வது அவசியமாகவுள்ளது. ஆனால் உள்நாட்டு சமூகங்களின் நீண்ட கால ஸ்திரத்தன்மையை அவர்கள் சொந்தமாக அடைவதற்கு அது வழிவகை செய்யாது" என ஜஸ்டின் கூறினார்.
"ஆப்கானிஸ்தானிலான ஒரு தசாப்த சிரமமான போர் நடவடிக்கையிலிருந்து கனேடியர்கள் இந்தப் பாடத்தை முதன்முதலாக கற்றுக்கொண்டனர். அங்கு எமது படையினர் நிபுணத்துவம் பெற்ற இராணுவ பயிற்சியாளர்களாக உலகப் பிரபலம் பெற்றனர்" என்று கூறிய ஜஸ்டின், அதனால் கனேடிய ஆயுதப் படையினர் ஈராக்கிய படையினருக்கு பயிற்சியளிப்பதற்கு மேலும் இராணுவ வளங்களை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக கூறினார்.
இந்நிலையில் கனேடிய பிரதமரின் அறிவிப்புக்கு அந்நாட்டு எதிர்க்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடாவின் நேச நாடுகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில், கனேடிய அரசாங்கம் அந்தப் போரிலிருந்து பின்வாங்கிச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவரான ரொனா அம்புரோஸ் தெரி வித்தார்.
"நாம் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் கனடாவின் புதிய அணுகுமுறை தொடர்பில் குறிப்பிட்டால், அது பின் னோக்கிச் செல்கிறது என்றே கூறவேண்டி யுள்ளது” என அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் குற்றஞ்சாட்டினார். நன்றி வீரகேசரி
துருக்கிய கடற்கரைக்கு அப்பால் மூழ்கிய படகு 11 சிறுவர்கள் உட்பட 27 குடியேற்றவாசிகள் பலி
10/02/2016 துருக்கியிலிருந்து கிரேக் கத் தீவான லெஸ்பொஸை நோக்கி குடியேற்றவாசிகளு டன் பயணித்த படகொன்று ஏஜியன் கடலில் திங்கட் கிழமை மூழ்கியதில் 11 சிறுவர்கள் உட்பட குறைந்தது 27 பேர் பலியாகியுள்ளனர்.
பாலிகெஸிர் மாகாணத்திலிருந்து சுமார் 40 குடியேற்ற வாசிகளுடன் புறப்பட்ட இந்தப் படகு மூழ்கியதைய டுத்து அதில் பயணம் செய்த நால்வர் உயிருடன் மீட்கப் பட்டுள்ளனர். அதேசமயம் 9 பேர் காணா மல்போயுள்ளனர்.
அந்தப் படகில் பயணித்தவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் அறியப்படவில்லை.
அதேசமயம் அன்றைய தினம் இடம்பெற்ற பிறிதொரு படகு அனர்த்தத்தில் சிக்கி குறைந்தது 8 குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருடத்தில் ஐரோப்பாவை சென்றடையும் முயற்சியில் சுமார் 400 குடியேற்றவாசிகள் உயிரிழந்திருந்தனர்.
அவர்களில் பலர் வட ஐரோப்பாவைச் சென்றடையும் முகமாக கிரேக்கத்திற்கு பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
ஐரோப்பாவை வந்தடையும் குடியேற்றவாசிகளின் தொகையைக் குறைப்பது தொடர்பில் கலந்துரையாடும் முகமாக ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மெர்கெல் துருக்கிக்கு விஜயம் செய்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துருக்கிய பிரதமர் டவுடோக்லுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஜேர்மனிய அதி பர், குடியேற்றவாசிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கையாள நேட்டோவின் உதவியை நாடி தாம் இருவரும் இணக்கம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜேர்மனியும் துருக்கியும் நேட்டோ அங் கத்துவ நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சிரியா மோதல் ; அலப்போ மாகாணத்தில் 50 ஆயிரம் பேர் இடம் பெயர்வு
11/02/2016 அலப்போ மாகாணத்தில் மாத்திரம் 50 ஆயிரம் பேர் சிரியாவில் இடம் பெற்று வரும் மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுகை சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, குறித்த மாகாணத்தில் அதிகளவிலான மனித உரிமை மீறல் செயற்பாடுகள் பதிவாகியுள்ளதாக குடிநீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சங்கம் தெரி வித்துள்ளது. நன்றி வீரகேசரி