சங்க இலக்கியத் தூறல் - 11--- அன்பு ஜெயா, சிட்னி

.
அருவி நீராடிய அணங்கு


எங்கோ பெய்த மழையின் நீரையெல்லாம் தன்னகத்தே ஏந்திக்கொண்டு யாரும் தன்னைப் பிடித்து தன் ஓட்டத்திற்கு அணை கட்டிவிடுவர்களோ என்ற பயக்கத்துடன் ஓடி வருகிறாள் அந்த நதியென்னும் பெண்ணாள். அவள் பாய்ந்து வருகின்ற அழகை ரசிக்காத மானிடரும் உண்டோ இவ்வையகத்தில்! அப்படிப் பாய்ந்து வருகின்ற அவள், அதோ அந்த அழகிய மலையிலிருந்து அருவியாகக் தரையிறங்கி வருகின்றாள். அதுவும் ஓர் அழகுதான். அந்த அழகையும் தோற்கடிக்கும் அழகுடைய என் காதலியோ தன் தோழிகளுடன் அந்த அருவியிலே நீராடிக் கொண்டிருக்கின்ற காட்சி என்னை கற்பனையின் உச்சிக்கே அழைத்து செல்கிறது. எப்போதும் குளிர்ச்சியாய் உள்ள அவளுடைய விழிகள், அந்த அருவி நீரின் வேகத்தால், சிவந்து காணப்படுகின்றன. அவள் நீராடி முடித்து வீடு திரும்பும் முன், அந்த சிவந்த கண்களினால் ஓர் உள்நோக்கத்தோடு என்னைப் பார்த்த பார்வையும், அவள் சிந்திய புன்னகையும் அப்பப்பா என்னை அவை மயக்கியதை எப்படி நான் விவரிப்பேன். அதற்கு ஒரு கவிஞன்தான் வரவேண்டும்! அவளை மீண்டும் எப்போது நான் காண முடியும். அவளோ அந்த மலைநாட்டுக்கு உரியவனின் மகள்.




இப்படியெல்லாம் அவளை மீண்டும் சந்தித்து மகிழ்வுறலாம் என்று வந்த காதலனின் மனதில் எண்ண அலைகள் ஓடிக்கொண்டிருந்த வேளையில், அவன் கண்ட காட்சியோ.......
அவன் காதலியை அவள் வீட்டார் மிகுந்த காவலுடன் வீட்டில் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கொல்லையிலே நீண்ட ஒலைகளை உடைய முற்றிய கதிர்களைத் தாங்க முடியாமல் தலைசாய்ந்து நிற்கின்ற தினையைப் பல குன்றவர்கள் அறுவடை செய்து கொண்டுவந்து அவர்கள் வீட்டு முற்றத்திலே வைத்தவர்கள், தங்கள் களைப்பு நீங்க இரவிலே அந்த முற்றத்திலேயே ஓய்வெடுக்கின்றனர்.  விட்டுத் தோட்டத்திலே ஆசினிப் பலா மரங்கள் உயர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. அந்த மரங்களின் கிளைகளில் உள்ள மின்மினிப் பூச்சிகள் விளக்குகள் போன்று ஒளி வீசிக்கொண்டிருக்கின்றன.  அவற்றையும், வானில் அசைந்து செல்லுகின்ற மழைமேகங்களின் ஓட்டத்தையும்கொண்டு அக்குன்றவர்கள் மழை பெய்யும் அறிகுறியை வரவேற்றுக்கொண்டும் அதைப் பற்றி உரையாடிக்கொண்டும் இருக்கிறார்கள்.
“இவ்வளவு பாதுகாப்புகள் உள்ள இடத்திலிருந்து வெளியேறி அவள் உன்னை வந்து சந்திப்பாளென்றா நினைக்கிறாய்?”, என்று தலைவியை மறுபடியும் சந்திக்கலாம் என்று வந்த தலைவன் தன் நெஞ்சுக்குத் தானே கூறிக்கொண்டிருக்கிறான்.

இந்தக் காட்சியை பெருங்கௌசிகனார் என்ற புலவர் பின்வரும் பாடலில் சித்தரிக்கின்றார்.

பொரு இல் ஆயமொடு அருவி ஆடி
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,
மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய           5
நினக்கோ அறியுநள் நெஞ்சே! புனத்த
நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக்
கொழுங் குரல் கோடல் கண்ணி, செழும் பல
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில்,
குடக் காய் ஆசினிப் படப்பை நீடிய                   10
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து,
செல் மழை இயக்கம் காணும்
நல் மலை நாடன் காதல் மகளே.
  --- பெருங்கோசினார் (நற்றிணை, 44)
(பாடலின் திணை: குறிஞ்சி; துறை: இற்செறிப்பின் பிற்றைஞான்று தலைவன் குறியிடத்து வந்து சொல்லியது)

கால் – தாள், குரல் - கதிர், இயக்கம் – சஞ்சாரம், ஆசினி – பலா வகையில் ஒன்று.