ஒரு விருது பெருமை பெறுகிறது....

.
நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதிற்கான பட்டியலில் இருந்தவர்களின் பெயர்களில் பெரிதும் ஈர்க்கப்பட்ட பெயர் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தாவின் பெயர்தான்.


எண்பத்தெட்டு வயதாகிறது இன்னமும் கைவிரல் நடுக்கமின்றி அறுவை சிகிச்சை செய்கிறார்,, மருத்துவமனையின் ஒரு ஒரத்தில் உள்ள ஒரு அறையிலேயே தங்கிக்கொண்டு நோயாளிகளின் நோய் தீர்ப்பதையே தனக்கான நாளின் பெரும் கடமையாக செயல்பட்டுவருகிறார்.


பணம் இல்லாத காரணத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற சேவை மனப்பான்மையோடு அடையாறில் செயல்பட்டுவரும் புற்றுநோய் மருத்துவமனையில் தன்னை இணைத்துக்கொண்டு கடந்த அறுபது ஆண்டுகளாக தான்வேறு புற்றுநோய் மருத்துவமனை வேறு என்று பிரித்துப்பார்க்கமுடியாத அளவிற்கு ஒன்றிப்போயிருப்பவர்.


நன்கொடை கொடுக்கவேண்டும் என்று நமது நாட்டினர் மட்டுமல்ல உலகில் யார் ஒருவர் எண்ணினாலும் முதலில் நினைவிற்கு வருவது இந்த மருத்துவமனைதான் அதற்கு காரணம் டாக்டர் சாந்தாதான்.
புற்றுநோய் மருந்துகளின் விலை கட்டுப்படியாக நிலைக்கு போனபோது சம்பந்தபட்ட மத்திய அமைச்சரை இங்குள்ள குழந்தைகள் வார்டுக்கு வரவழைத்து நிலமையின் கொடுமையை உணரவைத்தவர் இதன் காரணமாக இந்தியா முழுவதும் புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு பெற்றுத்தந்தவர்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்விற்காக பெரிதும் பாடுபட்டு வருபவர் சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் புகைபிடிப்பதால் புற்றுநோய் வருவதில்லை என்று சொன்ன போது தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்தவர்.
புற்று நோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் குணப்படுத்தக்கூடிய நோய்தான் 
என்பதை கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்துவருபவர்.



உதவி செய்வதற்கு நர்ஸ்கூட இல்லாத காலகட்டத்தில் இவரே மருத்துவராகவும் இவரே நர்சாகவும் இருந்து செயல்பட்டவர்.இரவு 11 மணி வரை அறுவை சிகிச்சை செய்துவிட்டு அவர்களை கவனித்துக்கொள்வதற்காக குடிசையிலேயே தங்கியவர்.இன்று பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் இந்த மருத்துவ மனையின் சேவைகளைப் பற்றி இந்தியா முழுக்க பேச வைத்ததில் இவரது பங்கு மிக அதிகம்.

புற்றுநோய் மருத்துவமனையை பராமரிக்க தேவையான நிதிச்சுமையால் மருத்துவமனை நிர்வாகம் சிரமப்பட்ட போது இருபதிற்கு இருபது என்ற திட்டத்தை இந்த மருத்துவமனையுடன் இணைந்து தினமலர் கொண்டுவந்தது.
இந்த திட்டத்தின்படி யார் வேண்டுமானாலும் மருத்துவமனைக்கு நன்கொடை கொடுக்கலாம் நன்கொடையின் மதிப்பு இருபது ரூபாய்தான்.இதற்காக தொடர்கட்டுரை எழுதி கட்டுரையின் முடிவில் நன்கொடை இருபது ரூபாய் வழங்குவீர் என்ற வேண்டுகோள்விடப்பட்டது.

இந்த தொடர்கட்டுரை எழுதும் புனிதமான பணி எனக்கு வழங்கப்பட்டது, இதற்காக மருத்துவமனையில் பல ஆண்டுகளுக்கு முன் சில நாள் தங்கியிருந்து பல கட்டுரைகள் எழுதினேன்.சிறு துளி பெரு வெள்ளம் போல வாசகர்களால் அப்போது கணிசமான தொகை நன்கொடையாக கிடைத்தது.இதற்கான வாய்ப்பு வழங்கிய தினமலர் ஸ்ரீ ஆதிமூலம் அவர்களையுயும் டாக்டர் சாந்தா அவர்களையும் இந்த நேரத்தில் நினைத்து பார்த்து நன்றிகூர்கிறேன்.

உங்களால்தான் உயிர் பிழைத்தோம்... உங்களால்தான் இன்று நாங்கள் நன்றாக இருக்கிறோம் என சொல்லிக் கொண்டு, ஆசி வாங்க வருகிற மக்கள்... நோயின் பிடியிலிருந்து மீண்டு, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி, குடும்பமும் குழந்தைகளுமாக சந்திக்க ஆனந்தக் கண்ணீரோடு அவர்கள் என் முன் வந்து நிற்பதைப் பார்க்கும் போது, அதைவிட வாழ்க்கையில் வேறு எதுவுமே பெரிதல்ல, அவர்களே என்னை இந்த வயதிலும் தொய்வின்றி இயக்குபவர்கள் என்று நெகிழ்ச்சியுடன் சொல்லும் டாக்டர் சாந்தா தனக்கு இதுவரை கிடைத்த பத்மஸ்ரீ,பத்மபூஷன்,மகேச,அவ்வையார் விருதுகள் உள்ளீட்ட அனைத்து விருதுகள் அதற்கான பணம் பெருமை என்று அனைத்தையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே திருப்பியவர்.இந்த விருதும் பெருமையும் கூட மருத்துவமனைக்கும் நோயாளிகளின் நலனிற்கே பயன்படட்டும் என்கிறார் அமைதியாக.
விருதுகளால் பலருக்கு பெருமை சிலரால்தான் விருதுகளுக்கு பெருமை அந்த வகையில் இந்த பத்மவிபூஷன் விருதிற்கு டாக்டர் சாந்தாவால் பெருமை கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in