எழுதமறந்த குறிப்புகள் - முருகபூபதி

.
மறைந்தவர்களினால்  தோன்றும்  வெற்றிடத்தை எவ்வாறு  நிரப்புவது ?
சங்க  இலக்கிய பாடல்  - சித்தர்  பாடல் - நாட்டார்  பாடல் -துல்லிசையிலும்   திரையிசையிலும்  எவ்வாறு மாற்றமடைகிறது ?


     
                              
" எனது  கருத்துக்களும்  எனது  கதைகளும்  பிறரால் கையாடப்படும்போது  இவரைப்போன்ற  மனோநிலை  பெறும்  பக்குவம்  எனக்கு  வரவில்லையே  என்று  இப்போதும்  நான் ஏங்குகிறேன்."
என்று   சொன்னவர்  சமகால  இடிமுழக்கம்  எனச்சொல்லப்பட்ட ஜெயகாந்தன்.
யாரைப்பற்றி  அவ்வாறு  சொன்னார் ?
 ஜெயகாந்தனின்  நல்ல  நண்பரும்  தமிழ்முழக்கம்,  சாட்டை முதலான   இதழ்களின்  ஆசிரியரும்  திரைப்படப் பாடலாசிரியரும், பன்னூல்   ஆசிரியருமான  கவிஞர்  கா.மு.ஷெரீப்  ( காதர்ஷா முகம்மது  ஷெரீப்)   அவர்களைப்பற்றி  ஜெயகாந்தன்  எழுதியிருக்கும் குறிப்புகளில்  ஒரு  அதிர்ச்சியான  தகவலை  சொல்லிவிட்டே,   இவரின்   மேன்மையான  இயல்பையும்  பதிவுசெய்துள்ளார்.   (நூல்: ஓர்  இலக்கியவாதியின்  கலையுலக  அனுபவங்கள்)

இதுவரையில்   ஐந்து  பதிப்புகளைக்கண்டுவிட்ட  இந்த  நூலில்,  .பி. நாகராஜனின்   திருவிளையாடல்  படத்தில்  (1965)   வரும்  " பாட்டும் நானே   பாவமும்  நானே "  என்ற  புகழ்பெற்ற  பாடலை  ( பாடியவர்: ரி.எம்.சவுந்தரராஜன் -  இசை கே.வி. மகாதேவன்)   இயற்றியவர்  தமது நண்பர்  கா.மு.ஷெரீப்   என்று  எழுதியிருக்கிறார்.
ஜெயகாந்தன்,  "  பாட்டும்  நானே  என்ற  பாடலை  எழுதியவர்  கவிஞர் கா.மூ. ஷெரீப்.  .பி. நாகராஜன்,   அவரது   நண்பர்  என்ற காரணத்தினால்   பெருந்தன்மையோடு  பிறிதொரு  பிரபல  கவிஞர் பெயரால்  இந்தப்பாடல்  வெளிவந்தபோதும்  "  கேட்பதற்கு நன்றாகத்தானே   இருக்கிறது " என்று   மனமுவந்து  பாராட்டும்  உயர்  பண்பை  நான்  இவரிடம்தான்  பார்த்தேன்."  என்று  மேலும் தெரிவித்துள்ளார்.



இத்தனைக்கும்  அந்தப்பாடலுடன்  அனைத்துப்பாடல்களும் திருவிளையாடல்  திரைப்படத்தின்   Title   இல்  கண்ணதாசன் எழுதியது  என்றே  காண்பிக்கப்பட்டது.
இந்த   எழுதமறந்த  குறிப்புகளை   பதிவுசெய்ய நேர்ந்தமைக்கு  இன்று தமிழ்  இணைய  இதழ்களில்  பேசப்படும்  சின்னமாமியே துல்லிசைப்பாடலும்  ஒரு   காரணம்தான்.


இதனை   எழுதிய  கமலநாதன்,  இலங்கையில்  வடமராட்சி  வதிரியில்  மறைந்ததும்,  ஒரு  அஞ்சலிக்குறிப்பு  எழுதியபோது, பல வருடங்களுக்கு  முன்னர்  நண்பர்  வதிரி சி. ரவீந்திரன்  எழுதிய கட்டுரையை   ஆதாரமாகக்கொண்டு,  "  சின்னமாமியே  உன் சின்னமகளெங்கே "  என்ற  பாடலை  எழுதியவர்  மறைந்தார் -  என்ற தலைப்பில்  பதிவுசெய்ததும்,    சில  இணையத்தளங்களும்,  புகலிட வானொலிகளும்  இதனை  ஒரு  சர்ச்சையாக்கி  நண்பர் நித்திகனகரத்தினத்தின்    உறக்கத்தையும்   குலைத்துவிட்டன.

கமலாநாதன்  மறந்த  செய்தி  வெளியானபொழுது  சின்னமாமியே பாடலை   உலகெங்கும்  எடுத்துச்சென்ற,  நித்திகனகரத்தினம் அவுஸ்திரேலியா  மெல்பனிலிருந்து  தொலைதூரத்தில்  இருந்தார்.
கமலநாதன்   மறைவைத் தொடர்ந்து  வெளியான  குறிப்புகளை அவருடைய  மின்னஞ்சலுக்கு  அனுப்பியதும்  தொடர்புகொண்டு நீண்டநேரம்   உரையாடி  பல  விளக்கங்கள்  தந்தார்.
நித்திகனகரத்தினம்  எனது  நீண்டகால  நண்பர்.   எமது  கலை, இலக்கிய  பணிகளில்  இணைந்திருப்பவர்.



அதுபோன்று  கமலநாதனும்  எனது  நீண்டகால  நண்பர்தான். நண்பர்கள்   என்பதற்காக  அவர்கள்  பற்றியவிடயங்கள்  பொது அரங்கிற்கு  வரும்பொழுது  நாம்  மௌனிக்க  முடியாது  என்பதற்கு உதாரணமாகவே   இந்தப்பந்தியின்  தொடக்கத்தில்  ஜெயகாந்தன்  தாம்  வாழும்  காலத்திலேயே  எழுதிய  குறிப்புகளை நினைவுபடுத்துகின்றேன்.
கா.மு.ஷெரீப்,   தமது  80  வயதில் கடந்த 1994  ஆம்  ஆண்டு  மறைந்தார். ஜெயகாந்தன்  அதன்பின்னர்  சுமார்  20  ஆண்டுகள்  கழித்து மறைந்தார்.
இவர்கள்   இருவருக்கும்  முன்னரே  கவியரசு  கண்ணதாசன் மறைந்துவிட்டார்.  இவர்கள்  மூவரும்  நல்ல  நண்பர்கள்.   நகமும் சதையுமாக    விளங்கியவர்கள்.

 நடிகரும்   இயக்குநரும்  வசனகர்த்தாவும்  தொலைக்காட்சித்தொடர் அரட்டை   அரங்கம்  விசு   இந்த  நகமும்  சதையும்  என்ற உவமானத்திற்கு   புதிய  அர்த்தம்  கற்பித்துள்ளார்.
நகமும்  சதையுமாக  நண்பர்கள்  இருந்தாலும்  நகச்சுத்து வந்துவிட்டால்,   நகம்  சதையையும்  சதை  நகத்தையும்தான் கோபித்துக்கொள்ளுமாம்.
அவ்வாறு   வாழ்ந்தவர்கள்தான்  ஜெயகாந்தன்,  கண்ணதாசன், கா.மு.ஷெரீப்.
ஜெயகாந்தன் -  கண்ணதாசன்  இதழில்தான்  எம்.ஜி.ஆரை,  கேலி செய்யும்   சினிமாவுக்குப்போன  சித்தாளு  எழுதினார்.   நியாயம் கேட்கிறோம்  என்ற  படத்தை  இருவரும்  இணைந்து  தயாரிக்க மேற்கொண்ட  முயற்சி   இடையில்  நின்றுவிட்டது.   காமராஜரின் கட்சியை    இருவரும்  ஆதரித்தனர்.   கட்சியின்  பிரசாரக்கூட்டத்திற்கு இருவரும்    தாமதமாகச்சென்று  காமராஜரிடம்  நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டவர்கள்.

ஆயினும்,  ஜெயகாந்தனிடத்தில்  கா.மு.ஷெரீப்  பற்றி  மிகவும் உயர்ந்த  அபிப்பிராயமே  இறுதிவரையில்  இருந்திருக்கிறது.  காரணம் ஷெரீப்   ஒரு  இஸ்லாமியராக  இருந்தபோதிலும்  மச்சம்  மாமிசம் சாப்பிடவில்லை.    தீய  பழக்கங்கள்  எதுவும் ( மது,  மாது,  புகைத்தல்) இல்லாமல்   புனிதராகவே   வாழ்ந்தவர்.


ஷெரீப்   சாகவரம்  பெற்ற  திரைஇசைப்பாடல்கள்  எழுதியவர்.
பணம்பந்தியிலே  குணம்  குப்பையிலே  ( படம்: பணம் பந்தியிலே )
எந்தன்  வாழ்வு   மாறுமா  இன்பம்  வந்து  சேருமா (படம்: நான் பெற்ற செல்வம்)

ஏரிக்கரையின்  மேலே  போறவளே  பொன்  மயிலே ( படம்: முதலாளி)
சிட்டுக்குருவி   சிட்டுக்குருவி  சேதி  தெரியுமா (டவுன் பஸ்)
வாழ்ந்தாலும் ஏசும்  தாழ்ந்தாலும்  ஏசும்  ( நான்பெற்ற  செல்வம்)
ஷெரீப்பின்   வலைப்பதிவுக்குச் சென்றால்  இவர்  பற்றிய  பல  அரிய தகவல்களை  அறிந்துகொள்ளமுடியும்.

இயக்குநர்   .பி. நாகராஜனும்  இவருடைய  நல்ல  நண்பர்களில் ஒருவர்.   இருவரும்  தமிழரசுக்கட்சியிலும்  இணைந்திருந்தனர்.
ஒரு முறை  காரிலே  கா.மு.ஷெரீபும் - இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும்  பயணமாகிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே   கவியரசரைப்  பற்றிப் பேச்செழுந்ததாம்.
கண்ணதாசன்என்று  சொல்லுவதை  விட  “கள்ளதாசன்என்று சொல்லலாம்   என்றாராம்  கவிஞர்   கா.மு.ஷெரீப் .    திடுக்கிட்டுப்போன கே.வி.மகாதேவன் ,  எதற்காக  அப்படிச்  சொல்கிறீர்கள்  என்று கேட்டாராம்.
பின்னே  என்ன  சங்ககாலப்  பாடல்களிலிருந்து  திருடியல்லவா பாட்டெழுதுகிறார்”  என்றாராம்    கா.மு.ஷெரீப்.  அதற்கு கே.வி.மகாதேவனோ    “அப்படியே   திருடினால்  கூட  அதை  எவ்வளவு எளிமையாக   திரைகானங்களில்  புகுத்துகிறார்.  இவரைப்  போல யாரால்    முடியும்?”   என்றாராம்.


சிறிது   நேரம்  ஆழ்ந்து  யோசித்து  விட்டு,  கா.மு.ஷெரீபும்  ” ஆமாம் கண்ணதாசனைப் போல  இத்தனை  அழகாக  சங்ககால இலக்கியங்களைத்   திரைகானங்களில்  புகுத்த  யாருமேயில்லைஎன்று   மனதார  ஒத்துக் கொண்டாராம்.
இந்தத்  தகவல்களை  குறிப்பிட்ட  வலைப்பதிவில்  சக்திதாசன் எழுதியுள்ளார்.
கண்ணதாசன்   மட்டுமல்ல  தற்கால  கவிஞர்கள்  பலரும்  சங்க இலக்கியங்களிலிருந்து   வரிகளை  எடுத்து  தமது  பாடல்களில் இணைத்திருக்கின்றனர்.
ஆயினும்  - சங்க  இலக்கிய  பரிச்சயம்  இல்லாதவர்கள்  திரை இசைப்பாடல்களில்  மெய்மறந்துவிடுவதனால்,   ரிஷி மூலம்  அறியாத நிலை   தோன்றுகிறது.
நித்திகனகரத்தினம்  தாம்  பாடிய  பொப்பிசைப்பாடல்களின்  மூலம்  சங்க   இலக்கியத்தின்  ஒரு  பகுதியான  கலிப்பாவிலிருந்து  பிறந்ததாக  கூறுகிறார்.    எவ்வாறு  துல்லிசைப்பாடல்கள் நாடோடிகளான  ஜிப்சிகளிடம்  சென்றன  என்பதற்கு  சில விளக்கங்களும்  கொடுத்தார்.   விரிவாக  ஆய்வுசெய்து  எழுதுமாறு அவரிடம்    கேட்டுக்கொண்டேன்.
கமலநாதன்   இயற்றிய  சின்னமாமியே  பாடலில்  சில  வரிகளை மேடையில்  பாடினால்  ரசிகர்கள்  கோபித்துக்கொள்ள  நேரும் என்பதற்காக  அவற்றை  மாற்றியும்   தாம்  பாடியதாகவும்  சொன்னார்.
நித்திகனகரத்தினம்    சொன்ன  குறிப்புகளை  அவரே  விரிவாக பதிவுசெய்தால்   சின்னமாமியே  என்ன  என்ன  கோலம்  கொண்டாள் என்ற  தகவல்  வெளியாகும்.

நித்திகனகரத்தினத்துடன்   நான்  நடத்திய  சந்திப்பு -  நேர்காணல்  பல வருடங்களுக்கு   முன்னர்  அவுஸ்திரேலியா  உதயம்  இதழிலும் வெளியாகி  வேறும்  சில  புகலிட  இதழ்களிலும் மறுபிரசுரமாகியிருக்கிறது.
இதுபற்றி  கனடா   பதிவுகள்  கிரிதரனும்  குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில்  கமலநாதன் வாழ்ந்த  வதிரியில்  இயங்கும்  வதிரி மன்றம்   இணைய  இதழும்  கமலநாதனின்  டயறிக்குறிப்பினை வெளியிட்டிருக்கிறது.
ஒருவர்   மறைந்த  பின்னர்தான்  அவர்  பற்றிய  பல  செய்திகள் வெளியாகின்றன.    அதிலும்  புகழ்பெற்ற  கலைஞர்கள், படைப்பாளிகள்,    அரசியல்  தலைவர்கள்,   விளையாட்டு  வீரர்கள் மறைந்துவிட்டால்    வெளியாகும்  பதிவுகளில்  அவர்களின்  பலமும் பலவீனமும்   தவிர்க்கமுடியாமல்  உதிர்க்கப்பட்டுவிடுகிறது.

கவியரசு   கண்ணதாசனும்  கா.மு.ஷெரிப்பும்  சித்தர்  பாடல்களிலிருந்து    வரிகளை   கையாண்டு  திரைப்படப்பாடல்கள் எழுதியிருக்கின்றனர்.
பணம் பந்தியிலே  படத்தில்   கா.மு.ஷெரீப்  எழுதிய  பாடல்
இருக்கும்  இடத்தை  விட்டு  இல்லாத  இடத்திலெல்லாம்
விருப்புடன்  தேடிடுவார்  ஞானத்தங்கமே ! –  அவர்
ஏதுமறியாரடி   ஞானத்தங்கமே !
உண்மையைப்   பேசிடுவார்  ஒரு  பிழையும்  செய்தறியார்
ஊரெல்லாம்   தூற்றிடுமே  ஞானத்தங்கமே ! – அவரை
ஒதுக்கியே  வைத்திடுமே  ஞானத்தங்கமே !
இதே  மூலத்தைக்  கொண்ட  சித்தர்  பாடலிலிருந்து  கவியரசர் கண்ணதாசன்   திருவருட்செல்வர்  படத்துக்காக   எழுதிய  பாடலைப் பார்ப்போம்.

இருக்கும்   இடத்தை  விட்டு  இல்லாத  இடம்  தேடி
எங்கெங்கோ  அலைகின்றார்  ஞானத்தங்கமே !  – அவர்
ஏதுமறியாரடி    ஞானத்தங்கமே !
உன்னையே   நினைத்திருப்பான்  உண்மையைத்தானுரைப்பான்
ஊருக்கே   பகையாவான்  ஞானத்தங்கமே !  – அவன்
ஊழ்வினை  என்ன  சொல்வேன்  ஞானத்தங்கமே !
இந்தத்தகவலை  சக்திதாசன்   2008  ஆம்   ஆண்டே  பதிவுசெய்துள்ளார்.
கவிஞர்  வாலியும்  கவியரசு  கண்ணதாசனும்  தொழிலில் போட்டியிருந்தாலும்,  இறுதிவரையில்  நல்ல  நண்பர்களாகவே திகழ்ந்தனர்.
கற்பகம்   திரைப்படத்தில்  வரும்  அத்தையடி  மெத்தையடி  பாடலில்  ஒருவரிக்காக  கவிஞர்  வாலி தலையைப்பிய்த்துக்கொண்டிருந்த வேளையில்  அந்தப்படம்  தயாரான  ஸ்ரூடியோ   பக்கம்  வந்த  கண்ணதாசன்தான்  அவருக்கு அந்த  அடியை   எடுத்துக்கொடுத்துள்ளார்.
மூன்றாம்   பிறையில்  தொட்டில்  கட்டி  முல்லை  மல்லிகை மெத்தையிட்டு  தேன்குயில்  கூட்டம்  பண்பாடும்  என்பது  வரையில்   வாலி  எழுதிவிட்டார்.   அதன்  பிறகு  எழுதவேண்டிய வரியை   சொல்லித்தந்தவர்  கண்ணதாசன்.
அந்த  வரி-----
இந்த  மான்குட்டி  கேட்டு  கண்மூடும் -  என்று  எழுதப்பா எனச்சொல்லிவிட்டு  அங்கிருந்து  அகன்றாராம்   கண்ணதாசன்.
அந்த  வரிகளை  எழுதியவாறு,  கண்ணதாசன்  சென்ற  திசையை வியந்து   பார்த்தவாறு  நின்றாராம்  கவிஞர்  வாலி.
அத்யைடி   மெத்தையடி  பாடல்  புகழ்பெற்றது.   கற்பகம் கே.ஆர்.விஜயாவின்   முதல்  படம்.
எங்கோ  யாரோ  யாருக்காகவோ  எழுதிய  வரிகள்  எங்கெல்லாம் என்ன   கோலம்  கொண்டு  வாழ்கின்றன ?

பல  சங்க  இலக்கிய  பாடல்கள்,  சித்தர்  பாடல்கள்,  நாட்டார் பாடல்கள் , கிராமியப்பாடல்கள்  யாவும்  திரையிசைக்குள் வரும்பொழுது   அதன்மீதான  ரசிப்புத்தன்மையும்  மாறிவிடுகிறது.
சின்னமாமியே  சின்னமகளெங்கே   வடமராட்சியில்  பல தசாப்தங்களுக்கு   முன்னர்  சாதாரண  பொதுமக்களின்  மத்தியில் கிராமிய  நையாண்டி  வரிகளுடன்  முணுமுணுக்கப்பட்டு,  அதற்கு வரிவடிவம்  கொடுத்து  மேலும்  செம்மைப்படுத்திய  கலையில் அமரர்   கமலநாதனும்  ஈடுபட்டிருந்தாலும்  ஆச்சரியப்படுவதற்கில்லை.

நித்திகனகரத்தினம்   அதன்  மூல  ஆசிரியர்  கமலநாதன்  என்பதை அறிந்த  பின்னர்,   ஒரு  தடவை  அவருடன்  தொடர்புகொண்டு உரையாடியுமிருக்கிறார்.
அத்துடன்   அய்ரோப்பிய  நாடுகளில்  நிகழ்ச்சி  நடத்தும்பொழுது சின்னமாமியே  இயற்றியது  கமலநாதன்தான்  என்றும்  தான் பகிரங்கப்படுத்தியதாகவும்   சொன்னார்.
இதுபற்றி   அவுஸ்திரேலியா SBS   வானொலியிலும்   அண்மையில் விளக்கம்  அளித்தார்.
ஒரு   கலைஞரின்  மறைவு  வெற்றிடத்தை  தந்தாலும்  அந்த வெற்றிடத்தை  எவ்வாறு  நிரப்புகின்றோம்  என்பது  உயிர்வாழ்பவர்கள்    கையில்தான்   இருக்கிறது.
----0----