குற்றம் கடிதல்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூ போல, எப்போதாவது இதுபோல் ஒரு சில நல்ல படங்களே தமிழ் சினிமாவை வாழ வைக்கின்றது. அதிரடி, மாஸ், பாடல், டான்ஸ் என கமர்ஷியல் பஞ்சாமிர்தத்தை பார்த்து சலித்துப்போன நம் மக்களுக்கு ஒரு தரமான படத்தை நாட்டிற்கு தேவையான நல்ல கருத்துடன் சொல்ல வந்திருக்கின்றது குற்றம் கடிதல்.
குற்றமே பகையை உண்டாக்கும் என்ற ஸ்லோகனுடன் தான் படத்தின் தலைப்பே வருகின்றது, அப்படி என்ன குற்றம், அதன் விளைவு என்ன, அதற்கு தீர்வு தான் என்ன? என்று 2 மணி நேரத்தில் பல உணர்ச்சிப்பூர்வமான காட்சி அமைப்புகளுடன் கூறியிருக்கிறார் இயக்குனர் பிரம்மா.
கதைக்களம்
மெரிலின் (ராதிகா பிரசித்தா), மணிகண்டன் (சாய் ராஜ்குமார்) கலப்பு திருமணத்துடன் ஆரம்பிக்கின்றது படம், மெர்லின் பள்ளி ஆசிரியை, எப்போதும் முகத்திலும், மனதிலும் ஒரு வகை பதட்டம் நிறைந்தவர். மணிகண்டன் ஒரு சாப்ட்ஃபேர் இன்ஜினியர் கலங்காத மனம், நிதானமாக செயல்படுபவர். வீட்டார் சம்மதம் இல்லாமல் திருமணம் முடிக்கின்றனர்.
திருமணம் முடிந்த முதல் நாள் பள்ளிக்கு செல்லும் மெர்லின், தன் தோழிக்காக, அவர் எடுக்கவேண்டிய வகுப்பை இவர் எடுக்கின்றார். செழியன் என்ற சுட்டி மாணவன் ஒரு மாணவிக்கு முத்தம் கொடுத்துவிட்டான் என்பதற்காக அவனை மன்னிப்பு கேட்க சொல்கிறார் மெர்லின். அவன் அதெல்லாம் முடியாது என நக்கலாக பதில் சொல்ல, மெர்லின் கோபத்தில் அவனை அடிக்க, மயங்கி விழுகிறான்.
இதன் பிறகு செழியனை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்ல, மெர்லின், மணிகண்டனும் பிரச்சனை முடியும் வரை வேறு ஊருக்கு செல்ல, செழியன் பிழைத்தானா? மெர்லின் தன் தவறை உணர்ந்தாரா? என்பதை உணர்ச்சிப்போராட்டங்களாக வடிவமைத்துள்ளார் பிரம்மா.
படத்தை பற்றிய அலசல்
தமிழ் சினிமா உலக அரங்கில் காலரை தூக்கி விடும் காலம் போல இது, காக்கா முட்டையை தொடர்ந்து இப்படி ஒரு தரமான படத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்த பிரம்மாவிற்கும் இப்படத்தை தயாரித்த சதீஸ் அவர்களுக்கும் முதல் பாராட்டு. படத்தில் அத்தனை கதாபாத்திரங்களும் நடித்தார்கள் என்று ஒரு இடத்தில் கூட சொல்ல முடியாது, பள்ளியில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவன் கூட வாழ்ந்திருக்கான் கதாபாத்திரமாகவே.
மிஷ்கின் படங்களையே மிஞ்சும் சிம்பாளிக் காட்சிகள், அந்த பையனை அடித்து விட்டு, வீட்டிற்கு அழுது கொண்டே வரும் மெர்லின் காலில் ஒரு பாலிதீன் பை ஒட்டி வருகின்றது. செய்த தவறு காலை சுற்றி வருவதாக காட்டியுள்ளாரா இயக்குனர் என்று தெரியவில்லை.
இதேபோல் செழியன் ஆட்டிசம் குழந்தை என்று நினைத்தால் மிக புத்திசாலி பையனாகவே காட்டியிருக்கிறார்கள். ’இதெல்லாம் சாப்பிடாதீங்க சார், வாய்வு வந்திடும்’ என்று வாத்தியரை கிண்டல் செய்து, அம்மாவிற்கு தெரியாமல் அவர் ஆட்டோவ எடுத்து ஓட்டுவது என செம்ம வாலு.
படத்தில் அனைத்து கதாபாத்திரத்திற்கும் சிம்மசொப்பனமாக விளங்குவது பாவெல் நவதீகன் தான்.(மெட்ராஸ் படத்தில் கார்த்தியிடம் வம்பு செய்வாரே அவரே தான்). செழியன் மாமாவாக கம்னியூசம் பேசி, முரட்டு அன்பு நிறைந்த இளைஞனாக செம்ம ஸ்கோர் செய்கிறார்.
முதல் காட்சியிலேயே ஒரு குருக்களிடம் விதாண்டவாதம் செய்து, மெர்லின் அம்மாவிடன் சண்டைப்போடும் போது அங்கு ஜெபம் நடக்கும் போது கடைசி வரை காத்திருக்கிறார் பாவெல். இதெல்லாம் பெரியார் கட்சிக்கே உண்டான கொள்கை போல.
வெள்ளைத்தோல், கண்ணாடி, ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களை மட்டும் நல்லவர்களாக பார்த்து வரும் இந்த சமூகத்தில், நடு இரவில், ஒரு லாரியில் பயணிக்கும் மெர்லின், மணிகண்டன், ‘ஏன் இந்த லாரியில் ஏறினாய், அவன் யார், பார்த்தாலே ஒரு மாதிரி இருக்கு’ என்று மணி திட்ட, அடுத்த நிமிடம் லாரி ட்ரைவர் அவர்களுக்கு சாப்பாடு வாங்கி தரும் காட்சி செம்ம சவுக்கடி.
அதேபோல் திருடனை நாங்கள் அடிப்பதும், குழந்தைகளை நீங்கள் அடிப்பது ஒன்றாமா? என்று கேட்கும் பெண் போலிஸ் அடுத்த காட்சிகள் தன் மகனிடம் ‘என்னப்பா சாப்பிடுகிறாய்’ என கேட்பது கிளாஸ். கொலைவெறியுடன் இருக்கும் பாவெல், தலைமை ஆசிரியரை சந்தித்து, உங்களுக்கு ஒரு பையன் இருந்தால் இப்படி செய்வீர்களா? என்று கேட்க, ஏதும் பேச முடியாமல் தலைமை ஆசிரியர் அழுக, தலைமை ஆசிரியர் மனைவி உடனே, எங்களுக்கு ஒரு பையன் இருந்தான் அவன் இறந்துவிட்டான் என்று அந்த நிகழ்வை கூறும் இடத்தில் கண்டிப்பாக இரண்டு கண்ணீர் துளிகள் எட்டிப்பார்க்கும்.
படத்தின் ஆரம்பித்திலேயே செக்ஸ் கல்வி எத்தனை முக்கியம் என்று பேசும் அந்த ஆசிரியை கதாபாத்திரம் செம்ம போல்ட். எப்படி நான் பிறக்கிறோம் என கிளாஸ் எடுக்க வரும் போது, ஆசிரியை கிண்டல் செய்யும் மாணவனிடம், அவர் ஒரு எடுத்துக்காட்டு சொல்லி பாடம் எடுத்து, அதே மாணவனை கைத்தட்ட வைக்கும் காட்சி, ஒட்டுமொத்த திரையரங்கமும் கைத்தட்டலில் அதிர்கிறது.
க்ளாப்ஸ்
தற்போது உள்ள பள்ளி சூழலுக்கு ஏற்ற கதைக்களம், ஒவ்வொரு மாணவர்களும், ஆசிரியர்களும் பார்க்க வேண்டும் என்று படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பிராச்சாரம் செய்ய வைக்கும். படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும். ஷங்கர் ரங்கராஜன் இசையில் பின்னணி இசை, பாடல் என்று அனைத்து நன்றாக இருந்தாலும், கடைசியில் வரும் அந்த பாரதியார் பாட்டு....என்றும் பாரதி பாரதி தான். மணிகண்டன் ஒளிப்பதிவு சென்னையின் பகல், இரவை நம் கண்களிலேயே பார்த்தது போல் உள்ளது.
பல்ப்ஸ்
எதுக்குங்க சொல்லனும், 10 வருடத்திற்கு ஒரு முறை தான் இப்படி ஒரு படம் வருகின்றது, அதிலும் குறை கண்டுப்பிடிக்க வேண்டுமா?
மொத்தத்தில் குற்றம் கடிதல் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படம், தமிழ் சினிமா ரசிகர்கள் தவிர்க்க கூடாத படம்.
ரேட்டிங்- 4/5 நன்றி cineulagam
No comments:
Post a Comment