வேனல்நிலத்துக் கண்ணீர்ப் பூக்கள்.. - வித்யாசாகர்

.

வெள்ளிமுளைக்கும் தலையில் 
மரணம் சொல்லாமல் அமரும் நிலம் 
இந்த வேனல் நிலம்.. 

வெளிச்சம் தந்தப் பகலவன் 
படுசுடும் விழிச் சுடர்களால்
எரித்த 
ஆடைக் கிழிந்தோருக்கு 
ஆதரவற்ற நிலம், இந்த வேனல் நிலம்..

கல்லுசுமக்கும் தலைவழி 
இரத்தம் உறிஞ்சி
மூளை சுட்டு
நரம்பறுத்து
இயற்கைக் கூட பழிகேட்கும்
பாதகநிலமிது எங்கள் வேனல் நிலம்..

உறிஞ்சும் தாய்ப்பாலில்
உப்பு கரிக்கும் வியர்வையாய் ஒழுகுமென்
கருப்புத்தோல் தாயிக்கு
நிழலையும்
கொஞ்சம் நிம்மதியையும் தந்திடாத 
வெடிப்பூரிய நிலமிது, இந்த வேனல் நிலம்.. 

வயிற்றுப்பசிக் காரிக்கு
மயக்கத்தையும்,
வெடிப்புக்கால் கிழவனுக்கு
ஒருகூடை பாரத்தையும்,
டவுசர் முடிபோட்டப் பொடியன்களுக்கு விளையாட 
சுடுமணலும் தந்த நிலம்,
பெரிய மனிதரெல்லாம் குளிரூட்டியக் காரில்
பயணிக்கும் 
சமநிலை சரிந்த நிலமிது;
நாங்கள் எல்லோரும் வாழுமிந்த வேனல் நிலம்.. 

மாடு குடிக்க தொட்டிகட்டி 
நாய் குடிக்க நீர்நிலை அமைத்து 
கோழி காகம் அருந்த சட்டி வைத்து 
நாளும் வாழ்ந்த என் பாட்டன் மண்ணை 
கட்டிடங்களால் நிரப்பி 
மேலே தனக்கான பெயர்களை
தங்கத்தில் பொறித்துக்கொண்ட முதலாளிகளின்
இரக்கமொழிந்த நிலமிது, இந்த வேனல் நிலம்..

ஒரு பக்கம் குளிரூட்டி 
மறுபக்கம் சூடு தெறிக்க 
வெப்பத்தை வெளியே உமிழும் எந்திரத்துச் 
சாலைகளில் 
சோற்றுத்தட்டை வயிற்றுப்பசியோடு மறைத்து
கால்சூட்டோடு நடக்கும் ஏழைகளின்
வறுமைக் கோட்டின் மீதேறி -
போராடாதத்தெரியாத நிலமிது, இந்த வேனல் நிலம்.. 

வளர்ந்துவிட்டோமென்று மார்தட்ட 
உயர்ந்துநிற்பதாக வெறும் -
கண்ணாடி மாளிகைகள்பேச 
குளிர்ந்த திரையரங்குகளில் வசனம் 
வசனமாக நீள
நீள
புதையுண்டுப் போகும் விவசாயி பற்றி 
மழையினளவிற்குக் கூட 
வருத்தம் எழாத நாம் 
மாத்திரைகளோடு வாழும் நிலமிது, இந்த
வயல்கள் வெடித்த
மனம் வறண்ட வேனல் நிலம்!!

No comments: