தமிழ் சினிமா - சதுரன்

.

தமிழ் சினிமாவில் காமெடி ட்ரண்டை தாண்டி தற்போது விவசாயி, மெடிக்கல் கொள்ளை தான் ட்ரண்ட் போல. அந்த வரிசையில் மருத்துவமனையில் நடக்கும் அக்கிரமங்களை மீண்டும் இந்த சதுரனில் ஒரு சாமனிய ஆட்டோக்காரனை வைத்து பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் ராஜிவ் பிரசாத்.
கதைக்களம்
ஜாலியாக நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு வாழ்க்கையையும் ஆட்டோவையும் சேர்த்து ஓட்டும் நபர் ராஜாஜ். ஓப்பனிங் சாங், வர்ஷாவை பார்த்தவுடன் காதல் என ஜாலியாக செல்லும் வாழ்க்கையில், பணத்திற்காக கொலை செய்யும் இருவர் இவருடைய ஆட்டோவில் ஏறுகிறார்கள்.
ஆட்டோவில் இருந்து இறங்கி ஒரு போலிஸ்காரரை கொல்ல, அங்கிருந்து ராஜாஜியின் நண்பர் காளி வெங்கட் ஆட்டோவில் ஏறுகிறார்கள். அதே நேரத்தில் ஹீரோயின் வர்ஷாவையும், அவருடைய தோழிகளையும் ஏற்றிக்கொண்டு வரும் ராஜாஜ், பெண் மோகம் கொண்ட போலிஸிடம் மாட்டிக்கொள்கிறார்.
அங்கு அந்த போலிஸை அடித்துவிட்டு வர்ஷாவை காப்பாற்ற, ராஜாஜை கைது செய்கிறது போலிஸ். திடிரென்று நண்பர் காளி வெங்கட்யிடம் இருந்து ஒரு போன், அந்த கொலைக்காரார்கள் ஒருவரை கொலை செய்வதை நேரில் பார்த்ததாக கூற, அடுத்த நிமிடம் அந்த கொலைகாரார்கள் காளி வெங்கட்டையும் கொல்கிறார்கள். உடனே போலிஸிடம் இருந்து ராஜாஜ் தப்பிக்கின்றார்.
இதையடுத்து வரிசையாக 4 கொலைகள் விழ அந்த இடத்திற்கு எல்லாம், ஹீரோ செல்ல, வழக்கம் போல் எல்லா கொலைப்பழியும் ராஜாஜ் மீது விழுகிறது. ஆனால், இந்த தொடர் கொலைகளுக்கு எல்லாம் என்ன காரணம் என்று நிதானமாக ராஜாஜ் யோசித்து பார்க்கையில், அடுத்த பழி கெடாவாக தன் தந்தையும், காதலியும் இருப்பது தெரிகின்றது. உடனே அவர்களை காப்பாற்ற ஓட, இறுதியில் அவர்களை எப்படி காப்பாற்றினார்? எதற்காக இந்த கொலைகள் நடைபெறுகிறது? என விறுவிறுப்பாக கூறியிருக்கின்றது.
படத்தை பற்றிய அலசல்
ராஜாஜ் மூடர் கூடம் படத்தில் இவருக்கு மொத்தமே 10 வசனம் தான் இருந்திருக்கும், ஆனால், மிக நன்றாக நடித்திருப்பார், இதில் படம் முழுவதும் இவர் பேசாமல் இருப்பதே 10 நிமிடம் தான், பேசிக்கொண்டே இருக்கிறார் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் பாஸ்.
வர்ஷா அப்படியே நஸ்ரியாவின் நகல், அவரை போலவே துறுதுறு பேச்சு, அதைவிட கண்களாலேயே பேசுகிறார். என்ன டப்பிங் தான் எந்த இடத்திலும் ஒட்டவில்லை, அதைவிட சேஸிங் காட்சியில் எல்லோரும் பதட்டத்தில் இருந்தாலும், இவர் முகத்தில் எந்த ஒரு ரியாக்ஸனும் இல்லை.
படத்தில் நடித்த பலரும் புதுமுகம் என்பதால், நடிங்க என்று இயக்குனர் சொன்னதை தவறாக புரிந்துக்கொண்டு, அப்படியே நடிப்பது திரையில் நன்றாக தெரிந்துள்ளது. அதிலும் அந்த போலிஸ் கதாபாத்திரம் அத்தனை செயற்கைத்தனம். ஆறுதல் காளி வெங்கட் தான்.
மருத்துவமனையில் நடக்கும் அநியாயங்களை பல படத்தில் பார்த்தது தான் என்றாலும், இதுபோன்ற படங்களை பார்க்கும் போது நாம் எப்போதும் கொஞ்சம் உஷாராகவே இருக்க வேண்டும் என தோன்றுகின்றது.
ரிஷல் சாயின் இசை சேஸிங் காட்சிகளில் நன்றாக இருக்கிறது, பாடல்கள் ஏதும் மனதில் நிற்கவில்லை, ஆனால், யுவனின் தீவிர ரசிகராக இருப்பார் போல, ஆரண்யகாண்டம் இசையை எல்லாம் அப்படியே பயன்படுத்தியுள்ளார். மௌனிக் குமாரின் ஒளிப்பதிவு கண்டிப்பாக பாராட்ட வேண்டும், படத்தின் இரண்டாம் பாதி முழுவதுமே இரவு நேரம் தான், பட இடங்களில் ஓடிக்கொண்டே தான் இருக்க வேண்டும் போல.
க்ளாப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி, விறுவிறுப்பாகவே செல்கின்றது, ஒளிப்பதிவு படத்துடன் ஒன்ற வைக்கின்றது. பாடல்கள் குறைவு, அதிலும் சேஸிங் காட்சிகளில் நார்மல் தமிழ் சினிமாவை போல் காதல் மற்றும் குத்து பாடல்கள் இல்லாததற்காவே பாராட்டலாம்.
பல்ப்ஸ்
இன்னும் கொஞ்சம் அனைவரும் யதார்த்தமாக நடித்திருக்கலாம், படத்தின் முதல் பாதி, எதற்கு இதெல்லாம் வருகின்றது, எப்போது கதைக்குள் போகும் என பொறுமையை சோதிக்கின்றது.
மொத்தத்தில் சதுரன் இரண்டாம் பாதியை போலவே முதல் பாதியிலும் கொஞ்சம் திரைக்கதையில் கவனத்தை செலுத்தியிருந்தால் ஒரு முழுநீள நல்ல கமர்ஷியல் படமாக வந்திருக்கும்.
ரேட்டிங்- 2/5

No comments: