திரும்பிப்பார்க்கின்றேன். - முருகபூபதி

.
தமிழ்   இதழியல்  வாழ்வில்  அமைதியாகவும் நிதானமாகவும்  பயணிக்கும்   சிரேஷ்ட  பத்திரிகையாளர்  அன்னலட்சுமி  இராஜதுரை


 இலங்கையில்  ஒரு  பெண்  அரைநூற்றாண்டுக்கும்  மேலாக தொடர்ந்தும்  பத்திரிகை  ஊடகத்துறையில்  நிலைத்து  நிற்கிறார் என்றால்,  அவர்  யார்...?    என்ற   கேள்வியைத்தான்  முன்னைய -  இன்றைய  தலைமுறை   வாசகர்கள்  விழியுயர்த்திக்  கேட்பார்கள். அப்படி  ஒருவர்  தமிழ்ப் பெண்ணாக  தமிழ்  ஊடகத்துறையில் அமைதியாக   பணிதொடருவதென்பது  மிகப்பெரிய  ஆச்சரியம். சாதனை.
அவர்தான்  திருமதி  அன்னலட்சுமி  இராஜதுரை.  இலக்கிய  உலகில் தொடக்ககாலத்தில்  யாழ்நங்கை  என   அறியப்பட்ட  இவரை  1972 முதல்  நன்கு  அறிவேன்.   எமக்கிடையிலான   சகோதரத்துவ  உறவுக்கு  45  ஆண்டுகள்  நிறைவடைந்துவிட்டன.
இவ்வளவுகாலமும்  அவருடன்  நான்  முரண்படாமல்  அவருடன் உறவைப்பேணிவருவதற்கும்   என்னைப் பொறுத்தவரையில் அவர்மீதான    நல்லமதிப்பீடுகளே  அடிப்படை.
அவர்   வீரகேசரி  பத்திரிகையில்  உதவி  ஆசிரியராக  இணைந்த  1962  ஆம்   ஆண்டு  நான்  படித்தது  ஆறாம்   வகுப்பில்.   அதன்பின்னர்  அவரை  முதல்  முதலில்  சந்தித்தது  1972  இல்.  எனக்கு அப்பொழுதுதான்   வீரகேசரியின்  நீர்கொழும்பு  பிரதேச  நிருபர் வேலை  கிடைத்தது.
அவ்வேளையில்  இலக்கியப்பிரதிகளை   படிக்கும்  ஆர்வமும் துளிர்த்தமையினால்  அன்னலட்சுமி  அவர்களின்  முதல்  நூல் விழிச்சுடரை   அவரிடம்  கேட்டு  வாங்கிப்படித்தேன்.   இரண்டு குறுநாவல்களின்   தொகுப்பு  விழிச்சுடர்.


இரசிகமணி  கனகசெந்திநாதன்  அதற்கு  அணிந்துரை எழுதியிருந்தார்.   நீர்கொழும்பிலிருந்து  நான்  எழுதிய  செய்திகள், செய்திக் கட்டுரைகளை   அன்னலட்சுமி  செம்மைப்படுத்தியிருக்கிறார். நீர்கொழும்பு  பெரிய  ஆஸ்பத்திரியில்  நிலவும்  குறைபாடுகள்  பற்றி நான்   எழுதிய  விரிவான  கட்டுரையை   அவர்  அழகாக செம்மைப்படுத்தி   வெளியிட்டபொழுது , அன்றுதான்  எனது  பெயர் முதல் தடவையாக  வீரகேசரியில்  இரண்டாம்  பக்கத்தில் வெளியானது.    அந்தப்  பத்திரிகை  நறுக்கை   இன்றளவும்  பாதுகாத்து வைத்திருக்கின்றேன்.
எனது  பெயரை  முதலில்  பத்திரிகையில்  பதிவுசெய்த  இவர்  பற்றிய   பதிவை   இத்தனை வருடங்கள்  கழித்து  எழுதுகின்றேன். அதற்காக   அவர்  பொறுத்துக்கொள்வார்.


மூதறிஞர்   பண்டிதமணி  கணபதிப்பிள்ளை  ஆசிரியராக  பணியாற்றிய   திருநெல்வேலி  சைவப் பாடசாலையில்  தமது ஆரம்பக் கல்வியையும்  பின்னர்  கல்வியங்காடு  செங்குந்தா இந்துக்கல்லூரியிலும் மேற்கல்வியை   சுன்னாகம்  இராமநாதன் மகளிர்   கல்லூரியிலும்  தொடர்ந்த  இவர்,   லண்டன்  பரீட்சையிலும் தேறியவர்.   தமது  பாடசாலைக்காலத்தில்  வெளிச்சம் கையெழுத்துப்பத்திரிகையின்  ஆசிரியராகவும்  தனது எழுத்தார்வத்தை   வளர்த்துக்கொண்டார்.   சிற்பி  சரவணபவன்  1959 காலப்பகுதியில்   நடத்திய  கலைச்செல்வி  இதழ்  இவரை  இளம் படைப்பாளிகள்    வரிசையில்  அறிமுகப்படுத்தி  ஊக்கமளித்திருக்கிறது.
மருத்துவ  தாதியாக  அல்லது  ஆசிரியையாக  வருவதற்கே அக்காலத்து  எமது  தமிழ்ப்பெண்கள்  முன்வருவதும்,  விரும்பியதும் எழுதாத   விதியாகவே   இருந்தது.

ஆனால் -  இவர்  அந்த  விதியை  மாற்றினார்.   பிரச்சினைகளும் நெருக்கடிகளும் சவால்களும்,  குழிபறிப்புகளும்  நீடித்த ஊடகத்துறையில்  சுமார்   50  ஆண்டுகளுக்கு   முன்னரே  இவர் பிரவேசித்தமையே   இவருடைய  ஆளுமைக்கும்  தன்னம்பிக்கைக்கும் சிறந்த  சான்று.
யாழ்மண்ணின்  மீது  இவருக்கிருந்த  பாசம்,  இவரை  யாழ்நங்கை என்ற   பெயரில்  இலக்கிய  உலகில்  நடமாடச்செய்தது.
இவருடைய  பால்யகாலத் தோழிதான்  திருமதி  யோகா பாலச்சந்திரன்.   யோகா  தற்பொழுது  கனடாவில்  இருக்கிறார்.
ஆனால்,  கொழும்பு கிராண்ட்பாஸ்  வீதியில்  அமைந்த  வீரகேசரி நிறுவனத்திற்குள்   அன்னலட்சுமி  என்று கால்  பதித்தாரோ  அன்று முதல்   அவர்  அங்கேயே  நிலைத்துவிட்டார்.


தமிழ்நாட்டில்  பல  முதல்வர்கள்  காலத்தில்  கலையுலகில்  நின்று நிலைத்தவர்   என்று  மனோரமா  ஆச்சியைப்பற்றிச்  சொல்வார்கள்.
அதுபோன்று   பல  பிரதம  ஆசிரியர்களையெல்லாம்  தனது வாழ்நாளில்    பார்த்துக்கொண்டு -  அவர்கள் விடைபெற்றுச் சென்றபின்னரும்  தனது  ஆசனத்தில்  இவர்  அமர்ந்திருக்கிறார் என்றால்   அது   தனித்துவமான  சாதனை   அல்லவா....?
இவரால்   செம்மைப்படுத்தப்பட்ட  பல  செய்தி  நிருபர்கள் எங்கெல்லாமோ  சென்றுவிட்டனர்.   புலம்பெயர்ந்துவிட்டனர். ஆனால்,  இந்த  வழிகாட்டி  மரம்  நின்ற  இடத்திலேயே  இன்றும்  நிற்கிறது.   வழிகாட்டி  மரங்கள்  நகருவதில்லைதானே...?
மகாகவி  பாரதியின்  நெருங்கிய  நண்பர்  வா.ரா.  ஆசிரியராக பணியாற்றிய   பத்திரிகை  வீரகேசரி.   அவரைத்தான்  இவர் சந்தித்திருக்கமாட்டார்.
ஆனால்  - அவருக்குப்பின்னர்  கே.பி. ஹரன்,    கே.வி. எஸ். வாஸ், எஸ்.டி. சிவநாயகம்,  . சிவப்பிரகாசம்,  சிவநேசச்செல்வன்,  நடராஜா ஆகியோர்   காலத்திலும்  சிரேஷ்ட  பத்திரிகை  ஆசிரியர்கள்  டேவிட் ராஜூ,   கார்மேகம்பொன். ராஜகோபால்,    மற்றும்   முன்னர்  பணியிலிருந்த    தேவராஜா,  தற்சமயம்  பணியிலிருக்கும்  பிரபாகரன், ஸ்ரீகஜன்   காலத்திலும்  அன்னலட்சுமி  அந்த  நிறுவனத்தில் அமைதியாக    அமர்ந்து  தனது  பணியை   தொடருகின்றார்.

தனது  முதல்  கவிதையை   1957  இல்  கலைச்செல்வியிலும்  முதல் சிறுகதையை  1958  இல்   தினகரன்  வாரமஞ்சரியிலும்  எழுதியிருக்கும்  அன்னலட்சுமி,   விழிச்சுடர் ( குறுநாவல் தொகுப்பு) உள்ளத்தின்   கதவுகள்  (நாவல்)  நெருப்பு  வெளிச்சம்                  ( சிறுகதைத்தொகுதி)    இருபக்கங்கள்  (கவிதை)  நினைவுப்பெருவெளி (கட்டுரை)   முதலான  நூல்களை  வரவாக்கியிருப்பவர்.
இறுதியாக  இவர்  எழுதிய  நினைவுப்பெருவெளி  அவரது  பத்திரிகை உலக  அனுபவங்கள்  பற்றிய  மனப்பதிவுகளாகும்.
 1966 - 1970   காலப்பகுதியில்  வீரகேசரி  நிறுவனத்தின்  மற்றும்  ஒரு வெளியீடாக  வந்த  ஜோதி  வார    இதழிலும்   1973 - 85  காலப்பகுதியில் மித்திரன்  வாரமலரிலும்  பொறுப்பாசிரியராக  பணியாற்றிய அன்னலட்சுமி  இராஜதுரை,    தற்பொழுது  வீரகேசரியின்  மற்றும்  ஒரு  வெளியீடான   கலைக்கேசரி  மாத    இதழின்  பொறுப்பாசிரியராக  பணியிலிருந்து  தமது  ஊடத்துறை   வாழ்வில் அரைநூற்றாண்டுக்கும்    மேற்பட்ட  காலத்தை   கடந்து  வருகின்றார்.


இப்படி   ஒரு  சாதனையை  உலகில்  யாராவது  ஒரு  பெண்மணி நிகழ்த்தியிருக்கிறாரா...?  என்பது   இதுவரையில் எனக்குத் தெரியவில்லை.
1985 - 1986   காலப்பகுதியில்  வடக்கில்  போரின்  நெருக்கடி  உக்கிரமாக இருந்தமையினால்  யாழ்ப்பாணத்திற்கு  முதலில்  செல்லும்  வெளியூர்   வீரகேசரி  பதிப்பு  உரியநேரத்தில்  அங்கு கிடைக்கவில்லை.    அங்கிருந்து  காசி. நவரத்தினம்,   அரசரத்தினம் மற்றும்   புலோலி  தில்லைநாதன்,   வவுனியா  மாணிக்கவாசகர் முதலான   நிருபர்கள்  எவ்வளவோ   சிரமத்திற்கும்  கெடுபிடிகளுக்கு மத்தியிலும்  ( சிலவேளைகளில்  தெலைபேசித்தொடர்பும்  கிடைக்காது)    செய்திகளை   அனுப்பினாலும்  அவற்றை   அங்குள்ள வாசகர்கள்   மறுநாள்  காலையில்  பார்க்க முடியவில்லை.
இந்நிலைமையை    தொடரவிடக்கூடாது  என்று  வீரகேசரி  நிருவாகம் முடிவெடுத்து,  யாழ்ப்பாணத்தில்  ஒரு  பதிப்பை  அச்சிடுவதற்கான சகல   ஏற்பாடுகளையும்  மேற்கொண்டது.   சிரேஷ்ட  பத்திரிகையாளர் ' 'நடா ' நடராஜாவையும்  அன்னலட்சுமி  இராஜதுரையையும்  ஒரு  சில அச்சுக்கோப்பாளர்கள்   -  ஒப்புநோக்காளர்களையும்  யாழ்ப்பாணத்திற்கு பலதரப்பட்ட   அச்சு  சாதனங்களுடன்  அனுப்பியது.
நாமும்  வீரகேசரியின்  யாழ்.பதிப்புக்கு  கொழும்பிலிருந்து காத்திருந்து,  கொழும்பு  செய்திகளை  அனுப்பிக்கொண்டிருந்தோம்.
ஆனால்,  அனைவரதும்  எதிர்பார்ப்பில்  மண்தான்  விழுந்தது. யாழ்.பதிப்பின்  முதல்  இதழ் அச்சுக்கு தயாராகிக்கொண்டிருந்தபொழுது  ஒரு  ஆயுதம்  ஏந்திய  இயக்கம்  வந்து  கொழும்பு  முதலாளிகளின்  பத்திரிகை  எமக்கு  வேண்டாம்"  என்று    அச்சுறுத்தி  அந்தப்பணியை   நிறுத்தி  அங்கிருந்த அனைவரையும்   வெளியேற்றியது.
அதற்குப்   பின்னால்   சூத்திரதாரிகளாக  இயங்கியவர்கள்  அதனால் சாதித்தது   ஒன்றும்  இல்லை.   கொழும்பிலிருந்து  சென்றவர்கள் மீண்டும்    வந்து  சேர்ந்தார்கள்.   அத்துடன்  வீரகேசரி  நிறுவனத்தின் அந்தக்கனவும்  நிராசையானது.
பின்னாளில்  குறிப்பிட்ட  அச்சு  இயந்திரத்தையும்  சாதனங்களையும் அந்த   இயக்கத்திடமிருந்து  மற்றுமொரு  பெரிய  இயக்கம்  கவர்ந்து சென்றது.
இறுதியில்   அந்த   இயந்திரம்  என்னவானது...?  என்பது  அந்த இயக்கங்களுக்கே    வெளிச்சம்.   இவ்வாறான    சவால்களையெல்லாம் சந்தித்த   வீரகேசரி - கடந்த  2015  ஆகஸ்ட்  மாதம்  தனது  85  வயதை நிறைவுசெய்துள்ளது.  அதற்கு  85  வயது  என்றால்,  அதில் அன்னலட்சுமி   இராஜதுரை  பணியிலிருக்கும்  காலம்  53 வருடங்களுக்கும்   மேலானது.
இன்று   கணினியுகம்  வரப்பிரசாதமாகியிருக்கிறது.  உடனுக்குடன் செய்திகளை  கேட்க -  படிக்க -  பதிவிறக்கம்  செய்யமுடிகிறது. அவ்வாறு   இந்த  உலகம்  சுருங்கிவிட்டது.
ஆனால்,  குறைந்த  வேதனங்களுடன்,   நவீன  வசதிகள்  எதுவும் இல்லாத  காலத்தில்,  இலங்கையில்   பத்திரிகைத்துறைக்கு  தமது வாழ்நாளை   அர்ப்பணித்த  பலரின்  பெயர்கள்,  பெரிய  பெரிய பிரமாண்டமான  கட்டிடங்களின்  கீழே  மறைந்து  கிடக்கும் அத்திவாரக்கற்களாக  மறக்கப்பட்டிருக்கிறது  என்பதும் காலத்துயர்தான்.
தமிழர்தம்  தொன்மையான  கலைகள்,   வரலாறு,  இலக்கியம், ஓவியம்,  சிற்பம்,   கைவினை,   உணவு  நாகரீகம்  உட்பட  பல்வேறு விடயங்களையும்  வண்ணப்படங்களுடன்   ஆவணங்களாக   தொகுத்து   கடந்த  ஆறு  ஆண்டுகளுக்கும்  மேலாக  தங்கு தடையின்றி  வெளிவருகிறது  கலைக்கேசரி.
பல்கலைக்கழகங்கள்,   ஆசிரிய பயிற்சிக்கலாசாலைகள், பொதுநூலகங்கள்,   பாடசாலைகளில்  மாத்திரமின்றி  ஒவ்வொரு தமிழ்    இல்லங்களிலும்  இடம்பெறவேண்டிய  அரியதொரு  மாத இதழ்   கலைக்கேசரி.
எமது   தமிழ்  மக்களின்  பண்பாட்டுக்கோலங்களை  ஆவணப்படுத்திப் பாதுகாக்கவும்   எதிர்காலச் சந்ததிக்கு  தரவுகளைத் தரக்கூடிய உசாத்துணை   இதழாகவும்  சீராக  வந்துகொண்டிருக்கிறது அன்னலட்சுமி  அவர்கள்  பொறுப்பாசிரியராக  பணியிலிருக்கும் கலைக்கேசரி.    இவ்விதழில்  வெளியாகும்  ஒவ்வொரு  படைப்பும் கருத்தைக் கவருகின்றன.   அதற்கான  ஆதாரமாக  பதிவாகும் வண்ணப்படங்கள்   கண்களை  கவருகின்றன.
வீரகேசரி  நிறுவனம் ,  இப்படி  கனதியான  உள்ளடக்கம்  நிரம்பிய அரியதொரு   சிறப்பிதழை   வெளியிட  முன்வந்ததற்கு தற்போதைய வீரகேசரி  நிறுவனத்தின்  தலைவர்  திரு. குமார்  நடேசன்  அவர்களை  எப்படிப் பாராட்டினாலும்  தகும்  என்றும்  கருதுகின்றேன்.
ஆங்கிலப்புலமையும்  மிக்க  அன்னலட்சுமி  இராஜதுரை  பல வெளிநாட்டு    சிறுகதைகளை   ஆங்கிலம்  மூலம்  படித்து  தமிழுக்கு தந்துள்ளார்.    பிலிப்பைன்ஸ்,   சீனா  முதலான  நாடுகளில்  நடந்த சர்வதேச  மகளிர்  மாநாடுகளிலும்  கலந்துகொண்டவர்.
கவிதை,   சிறுகதை,   நாவல்,  இதழியல்  என்று  தொடர்ந்த  இவருடைய   எழுத்தூழியம்,  பயண  இலக்கியம்  படைப்பதற்கு குறிப்பிட்ட  வெளிநாட்டுப்பயணங்கள்  உதவியிருக்கிறது. செய்திப்பத்திரிகையில்   ஒரு  துணை ஆசிரியரின்  பணி பலபொறுப்புகளைக்கொண்டது.   பிரதேச  நிருபர்கள்  அனுப்பும் செய்திகளை  செம்மைப்படுத்துவது,  பொருத்தமான  தலைப்பிடுவது. நேர்காணல்களை  எழுதுவது,   சமகால  எரியும்  பிரச்சினைகளை மக்களிடமும்    அரச பீடத்திற்கும்  தமது  எழுத்தின்  ஊடாக  கொண்டு செல்வது,    அதன்மூலம்  தீர்வுகளை   பாதிக்கப்பட்ட  மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது    முதலான  பத்திரிகா  தர்மத்தை   பேணும் அம்சங்களே   அந்த  பொறுப்புணர்வு  மிக்க  பணியின்  தார்ப்பரியம்.
அன்னலட்சுமி   இராஜதுரை  அந்தப்பொறுப்புகளை   திறம்பட கையாண்டவர்.   அந்த  ஆற்றலும்  அவரை  இந்தத்துறையில் நிலைத்திருக்கச்செய்திருக்கிறது.  ஆனால்  - அவரும்  ஒரு படைப்பிலக்கியவாதிக்கு   நேரும்  கசப்பான  அனுபவங்களையும் எதிர்கொண்டார்.
தொடர்ச்சியாக   செய்திகளை  எழுதியும்  செம்மைப்படுத்தியும் மொழிபெயர்ப்புகளில்   கவனம்  செலுத்தியும்  தனது  பணிதொடரும் எந்தவொரு    படைப்பிலக்கியவாதியும்  சந்திக்கும்  சவால்களே  அந்த கசப்பான  அனுபவங்கள்.
ஒரு   செய்தி  ஊடகவியலாளர்  சிறுகதை,   கவிதை ,  நாவல் எழுதப்புகும்பொழுது  படைப்பு  மொழியில்  சில சிக்கல்கள் தோன்றிவிடுவது  இயல்பு.   படைப்பு  இலக்கியத்திற்கும் செய்திக்கட்டுரைக்கும்   இடையே   வேறுபாடு  இருக்கிறது.  அதனால் சிறுகதை,  கவிதை,  நாவல்  எழுதவரும்  ஒரு  செய்தி ஊடகவியலாளர் , படைப்பு  இலக்கிய  மொழி  ஆளுமையையும் பேணிக்கொள்ளவேண்டிய  நிர்ப்பந்தம்  உருவாகிறது.
நீண்ட  காலம்  செய்திப்பத்திரிகை  ஊடகத்துறையில்  நீடித்திருக்கும் அன்னலட்சுமி   இராஜதுரை,  முன்னர்    எழுதியதுபோன்ற சிறுகதைகளையோ   குறுநாவல்களையோ   நீண்ட  காலம் எழுதவில்லை.   அவரது  வாழ்வு  வீரகேசரியுடன் அர்ப்பணிக்கப்பட்டதாகவே  கழிந்துவிட்டது.
இவருடைய  மற்றும்  ஒரு  இலக்கியத் தோழியான  மூத்த படைப்பாளி   திருமதி  பத்மாசோமகாந்தன்  ஈழத்தில் பல்துறைகளிலும்  சாதனைகள்  நிகழ்த்திய  23  பெண்ணிய ஆளுமைகள்  பற்றி  2003   இல்  எழுதிய  ஈழத்து  மாண்புறு  மகளிர் நூலிலும்  அன்னலட்சுமி  இராஜதுரை  அவர்களுக்கு  ஒரு  அத்தியம் பதிவாகியிருக்கிறது.
படைப்பு   இலக்கியத்தில்  அவருக்கு  தனிப்பட்ட  முறையில்  நேர்ந்த இழப்பு    மற்றவர்களுக்கும்  ஒரு  படிப்பினைதான்.   ஆயினும்,  அவர் உற்சாகமாக   இலக்கியக்கூட்டங்களில்  கலந்துகொள்கிறார். உரையாற்றுகிறார்.   நான்  இலங்கை  செல்லும்  சந்தர்ப்பங்களில் இவரை    சந்திக்காமல்  திரும்புவதில்லை.   நான்  சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில்    கலந்துகொண்டு  உரையாற்றினார்.
எனது  நண்பரும்  படைப்பிலக்கியவாதியும்  தினகரன்  நாளிதழின் ஆசிரியருமாக  இருந்த  ராஜஸ்ரீகாந்தன்  மறைந்த  பின்னர்,  நான்  அவர்   நினைவுகளை   பகிரும்  பதிவாக  எழுதிய  நூல் வெளியீட்டிலும்,    கடந்த  பெப்ரவரியில்  நடந்த  எமது நீர்கொழும்பூரின்    வாழ்வும்   வளமும் பற்றிய  நெய்தல் இலக்கியத்தொகுப்பு   நூலின்  வெளியீட்டு  அரங்கிலும்  கலந்துகொண்டு   உரையாற்றினார்.   2011  ஆம்  ஆண்டு  நாம்  நடத்திய  சர்வதேச  தமிழ்  எழுத்தாளர்  மாநாட்டுச் செலவீனங்களுக்கு வீரகேசரி   நிறுவனத்தின்  தலைவருடன்  உரையாடி,  எமது நோக்கத்தை    எடுத்துச்சொல்லி  கணிசமான  நிதியுதவியும் பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை  சென்ற  சந்தர்ப்பங்களில்  என்னுடன்  உரையாடி நேர்காணல்கள்  எழுதி  வெளியிட்டார்.   கடந்த  ஜூலை  மாதம் வெளியான    கலைக்கேசரி  இதழுக்கு  என்னிடமிருந்து  நீர்கொழும்பு பற்றிய  விரிவான  ஆவணப்பதிவை  பெற்று  பல வண்ணப்படங்களுடன்   வெளியிட்டார்.
அந்தவகையில்   அவர்  எங்கள்  ஊருக்கும்  தமிழ்  வாசகர்  மத்தியில் மகிமையை    ஏற்படுத்திக்கொடுத்தவர்.   இவ்வளவும்  எனக்காக செய்திருக்கும்  திருமதி  அன்னலட்சுமி  இராஜதுரை  பற்றிய இந்தப்பதிவை  -  அவரை  முதல்  முதலில்  சந்தித்து  சுமார்  43 வருடங்களின்   பின்னர்  எழுதும்  நிலையில்  மிகவும்  அமைதியாக அவரைப்பின்தொடர்ந்து   வந்துள்ள   மனிதனாக  அவர்  முன்னால் நிற்கின்றேன்.
அந்த  நிதானமும்  அமைதியும்   அவருடைய  நீண்ட கால பத்திரிகைத்துறை  வாழ்வில்  நிலைத்திருக்கும்  நிதானத்திற்கும் அமைதிக்கும்    ஒப்பானது.
அவர்  பல்லாண்டு  வாழ்ந்து  படைப்பு  இலக்கியங்களும் படைக்கவேண்டும்   என்ற  வேண்டுகோளுடன்  தற்போதைக்கு  அவர் பற்றிய   இந்த  ஆக்கத்தை  நிறைவுசெய்கின்றேன்.
letchumananm@gmail.com




No comments: