ஈழத்தின் இசை உலகம் இழந்த இசை ஆளுமை உ. இராதாகிருஷ்ணன் - இணுவையூர். கார்த்தியாயினி கதிர்காமநாதன்:-

.
இசை ஆற்றுகையின் போதே உயிர் நீத்த இசைப்பேராசான், இசைஞானதிலகம் உ. இராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவாஞ்சலிக் கட்டுரை -
ஈழத்தின் இசை உலகம் இழந்த இசை ஆளுமை  உ. இராதாகிருஷ்ணன் - இணுவையூர். கார்த்தியாயினி கதிர்காமநாதன்:-

மலர்வு 27.06.1943 – உதிர்வு 06.09.2015


இணுவில் தவில் வித்துவான் திரு.விஸ்வலிங்கம் அவர்களின் இசைப் பாரம்பரியத்தில் முகிழ்த்தெழுந்தவர்களும், ஈழத்தின் இசை உலகம் இழந்த இசை ஆளுமை  திரு. உ. இராதாகிருஷ்ணன் அவர்களும்.

இணுவையூர்.  கார்த்தியாயினி கதிர்காமநாதன்.
(சிட்னி அவுஸ்ரேலியாவிலிருந்து)
இணுவில் என்றால்  அதிகாலையிற் துயிலெழுப்பும் ஆலயமணியின் ஓசை, ஒலிபெருக்கியினூடே காற்றோடு கலந்து வரும் இனிமையான நாதஸ்வர கானம், மார்கழி முழுவதும் வீட்டு வாசல்களிற் தோற்றம் அளிக்கும் மார்கழிப் பிள்ளையார், மார்கழி விடியலிற் கேட்கும் திருப்பள்ளி எழுச்சி திருவம்பாவைப் பாடல்கள், இணுவிற் கந்தசுவாமி ஆலய நாதஸ்வர, தவிற் கச்சேரி, காவடியாட்டம், சின்னமேளம், இவ்வாறு இயல், இசை, நாடகம், சைவநெறி என்று மூழ்கித் திளைத்தெழும் அற்புத வாழ்க்கை, இவற்றோடு கலைஞர்களின் இல்லங்களில் நாள்தோறும் நாதஸ்வரம், தவில்  ஆகியவற்றினைப் பயில்வோருக்கான பயிற்சிகள், நான் இசை பயின்ற காலங்கள் இவை எல்லாம் நினைவினிற்தோன்றும்.   

அன்று ஒரு இனிய மாலைப்பொழுது, அந்தி மயங்கும் வேளை, இணுவில் மருதனார் மடத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு அருகாமையிலே உள்ள பல்லப்ப வைரவர் ஆலயத்தில் வயலின்  இசைக்கச்சேரி ஒன்று நடைபெற்றது. எங்கள் வீட்டின் வடக்கு வாயிற் கதவினைத்  திறந்தால் அங்கிருந்தபடியே ஆலயத்தின் வெளிப்புறச் சூழலில் நடைபெறும் அத்தனை விடயங்களையும் நன்கு அவதானிக்க முடியும். மல்லாரியுடன் ஆரம்பமாகிய அன்றைய கச்சேரி மெல்லத் தவழ்ந்து வந்து செவிகளை நிறைத்து, மனதினை வருடிக்கொண்டிருந்தது. எனக்கு அப்போது பதினொரு வயது இராமநாதன் கல்லூரியிற் படித்துக்கொண்டிருந்தேன். இணுவிலிற் சிறந்த நாதஸ்வர வித்வானாக மட்டுமல்லாது வாய்ப்பாட்டு, வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம் ஆகிய கலைகளில் வல்லவரான திரு விஸ்வலிங்கம் உருத்திராபதி அவர்களிடம் வயலினையும், வாய்பாட்டினையும் முறைப்படி கற்பதற்கு ஆரம்பித்திருந்தேன். ஆகையால் அவர்கள் வாசித்த எல்லாவற்றையும் என்னால் இனம் காண இயலவில்லை. கச்சேரியின் இறுதியில் வாசித்த காம்போதி இராகமும் “குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டபின்பு” என்ற வெங்கட சுப்பையரின் உருப்படியையும், கவியரசு கண்ணதாசன் எழுதி, குன்னக்குடி வைத்தியநாதனால் இசையமைக்கப்பட்ட, தர்பாரி கானடாவில், மதுரை சோமு அவர்கள் பாடி, மிகப் பிரபலம் அடைந்திருந்த, மனதை நெகிழவைக்கும், “கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்தமலை” என்ற பாடலையும், நான் பிறக்கும் முன்னரே வெளிவந்திருந்த, கண்ணதாசன் அவர்கள் எழுதி, விஸ்வநாதன், இராமமூர்த்தியினால்  இசையமைக்கப்பட்டுப்  பி. சுசீலா அவர்களாற்  பாடப்பட்ட, ஜோன்புரி இராகத்தில் ஆரம்பிக்கும் ஹிந்துஸ்தான் பாணியில் அமைந்த, “சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே”  என்ற பாடலையும், இன்றைக்கு வரைக்கும் என்னால் மறக்கவே முடியவில்லை, அப்படி ஒரு வாசிப்பு அது. இதை எப்படி வாயினாற் பாடுவது போல வாசிக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டுப்போனேன். பின்னே இருக்காதா? அப்போது நான் ஸரளி வரிசை, ஜண்டை வரிசைகளை மூன்றாம் காலத்தில் வாசிப்பதற்கு வயலினோடு மல்யுத்தம் நடாத்திய வேளை. முதலிரு பாடல்களும்; எனக்கு மனப்பாடம் ஆகையால் அதனை இலகுவிற் கண்டு கொண்டேன். இறுதிப்பாடல் எனக்கு என்னவென்று தெரியாது. அது வாசிக்கப்பட விதம் அதில் இருந்த இனிமை, பாவம், இசையில் நெஞ்சைப் பிழியவைத்த சோகம் அந்த வயதிலேயே அந்தப்பாடல் என்ன? என்று என்னைத் தேடவைத்தது. சங்கீதத்திலும் என்னை ஆர்வம் கொள்ளத் தூண்டியது. இந்தக் கச்சேரியைச் செய்தவர்கள் வேறு யாருமல்ல. இணுவிலின் சிறந்த நாதஸ்வர வித்துவான் திரு. உருத்திராபதி அவர்களின் மூத்த புதல்வன் திரு இராதாகிருஷ்ணன் அவர்களும், இளைய புதல்வன் திரு சந்தானகிருஷ்ணன் அவர்களும் தான். இதுவே நான் கேட்ட இராதாகிருஷ்ணனின் முதலாவது கச்சேரி. மிக அமைதியான சூழலில், மிகவும் அழகான, இனிமையான பொழுதுகளில்,  மென்மையாக மனதைத் தொடும் சில அபூர்வமான நிகழ்வுகள் என்றைக்கும் மனதை விட்டு அகலாதவை.

வயலின் என்றால் அது இராதாகிருஷ்ணன் என்று சொல்லுமளவிற்கு அவரது இசை ஆளுமை ஈழமண்ணை நிறைத்திருந்தது. அத்தகையதொரு இசை ஆளுமையை இன்று ஈழத்து இசையுலகம் இழந்து விட்டது என்பது மனதை உலுக்குகின்ற ஓர் உண்மை. இராமநாதன் அக்கடமி – நூண்கலைப்பீடத்திற் பயின்றவர்கள், பாடசாலையிற் பயிலும் மாணவர்கள், கச்சேரி செய்பவர்கள் என அவரிடம் இருந்து கற்றவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். அவரிடம் உரையாடுவதன் மூலம் இசை நுணுக்கங்களைக் கற்றவர்களும் உள்ளனர். ஆனால் அவற்றை விசாலமான மனதுடன், மற்றவர்களும் பயன் அடையும் வகையில், அவற்றைக் கற்பிக்கவும், பகிர்ந்து கொள்ளவும், அவற்றைப் பேணவும் எத்தனை பேர் இருந்தனர்? எம்மிடம் இருந்த உன்னதமான, ஏராளமான, கலை, இலக்கியப் பொக்கிஷங்களை இன்று நாம் இழந்து நிற்பதற்கு உரிய காரணமும் இதுவாகத் தான் இருக்கும் என எண்ணுகின்றேன்.
“தமிழர்களுடைய இசைமரபில் இலங்கைத் தமிழருடைய இசை மரபு மிக முக்கியமானது.  அதிலும் குறிப்பாக இலங்கை நாதஸ்வர, தவில் இசை மரபு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. தமிழகத்திற் தவிற் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம், நாதஸ்வரச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த திருவாவடுதுறை இராஜரத்தினம்பிள்ளை போன்றோர் இலங்கையில் வாசித்துப் புகழ் பெற்ற கலைஞர்கள் ஆவார்கள்”;. என்று திரு. பாவை சந்திரன் அவர்கள் குறிப்பிடுகின்றார். (ஈழத்தமிழ் போராட்ட வரலாறு. தினமணி 21.7.2009) “திருமுல்லைவாயில் முத்துவேற்பிள்ளை, கும்பகோணம் தங்கவேற்பிள்ளை, வடபாதிமங்கலம் தெட்சணாமூர்த்தி ஆகிய தவில் வித்வான்கள் என்னுடைய சகோதரர் வலங்கைமான் சண்முகசுந்தரத்துடன் மூளாயிலுள்ள எனது தந்தையார் ஆறுமுகம் வீட்டிற் தங்கியிருந்து ஆலயங்களிற் கச்சேரி செய்துள்ளனர். அப்போது ஒரு நாள் மிகச் சிறுவனாயிருந்த இணுவில் தட்சணாமூர்த்திக்கும், வயதில் மிகப் பெரியவரான வடபாதி மங்கலம் தட்சணாமூர்த்திக்கும் இடையில் நடைபெற்ற தவில் தனி ஆவர்த்தனம், போட்டியாகவே மாறிவிட்டது. இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்ற அந்த லயவின்னியாசத்திற் சிறுவனாகிய தட்சணாமூர்த்தி இறுதிவரை சளைக்காமல் வாசித்த வாசிப்பை, “ஆகா அற்புதம்!  இதைப் போல ஒரு தவில் வாசிப்பை, கச்சேரியை நாம் வாழ்க்கையில் என்றைக்கும் பார்த்ததில்லை”, என்று அன்றைய தினம் அங்கு குழுமியிருந்த வித்துவான்கள் அனைவரும் கூறினார்கள்” என்று மிருதங்கம் ஏ. சந்தானகிருஷ்ணன் அவர்கள் மெய்சிலிர்க்க அந்த நிகழ்வை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

அதே போல இராமநாதன் கல்லூரியில் நிகழும் விசேட வைபவங்களுக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி, என்.எஸ். கிருஷ்ணன். டீ.கே. பட்டம்மாள், லலிதா பத்மினி, பந்தநல்லூர் ஜெயலக்சுமி, கமலா லக்சுமணன், ரி.கே.எஸ்.சகோதரர்கள், திரு.தனஞ்சயன், திருமதி.சாந்தா தனஞ்சயன், மணி கிருஷ்ணசாமி. சீர்காழி.எஸ்.கோவிந்தராஜன் ஆகியோர் வருகை தந்து இசை, நடன  நிகழ்ச்சிகளை அளித்துள்ளனர். இது தவிர கேரளாவைச் சேர்ந்த வி.இலக்சுமிநாராயண ஐயர் இராமநாதன் அக்கடமியில் வயலின் விரிவுரையாளராகக் கடமையாற்றியபோது இவரது மனைவி சீதாலட்சுமியுடனும் (வீணை,வாய்ப்பாட்டு) இவர்களுடைய மூன்று புதல்வர்கள் எல். வைத்தியநாதன், எல். சுப்ரமணியம், எல், சங்கர் ஆகியோருடன் யாழ்ப்பாணத்தில் வசித்துள்ளார். அந்தக் கால கட்டத்தில் அவர் பல கச்சேரிகளைத் தனது பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்திற் செய்துள்ளார். இது பற்றி அவரது மகன் எல்.சுப்ரமணியம் அவர்கள் தனது நினைவுகளைப் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். "Memories of Jaffna” calls forth Mani’s experiences of living in Ceylon as a child. "Although I was born in India,” he says, "I spent quite a number of years in Ceylon, particularly Jaffna where the Tamil-speaking people live. It’s a very beautiful, culturally-oriented place, and it’s where I began my musical career. My earliest memories are of the long evening concerts in the temples, playing with my father and brothers and sister.”  (concordmusicgroup.com website artists L.-Subramaniam)  

இந்த வகையில் யாழ்ப்பாணத் தமிழர்களின் இசைமரபை, இசை வரலாற்றை, அதன் பாரம்பரியத்தை, நாதஸ்வரம், தவில், வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் ஆகியவற்றின் பாரம்பரிய முறையிலான பயில்வினை, கையளிப்பினைப் பற்றி நாம் ஆராயமுற்பட்டால், அதில் நிட்சயமாக இணுவிலின் பங்கு மிகக்காத்திரமான ஒன்றாவே அமையும். இணுவில் இராமநாதன் அக்கடமியின் பங்களிப்பு, (தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பீடமாக இயங்குகின்றது). இயலிசை வாரிதி என். வீரமணி ஐயருடைய பங்களிப்பு, இணுவிற் கலைஞர்களான இணுவில் என்.ஆர் கோவிந்தசாமி (நாதஸ்வரம்) என் ஆர். சின்னராசா (தவில்) க. சண்முகம்பிள்ளை (மிருதங்கம்) போன்றோரின் பங்களிப்பு இணுவில் பிரபல தவில் வித்துவான் விஸ்வலிங்கம் குடும்பத்தினரின் பங்களிப்பு என்று தனித்தனியான தலைப்புகளிலேயே ஆய்வினைச் செய்ய முடியும். இங்கு விஸ்வலிங்கம் குடும்பம் என்று சொல்வதற்குரிய காரணம்,
இக் குடும்பத்தில், இசைப்பயில்விலும் அவற்றைக் கையளிப்புச் செய்வதிலும் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டதே ஆகும்.
மேற் காட்டிய அட்டவணை அந்த உண்மையைப் புலப்படுத்தும்.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தமட்டில் இசைப்பயில்வு (தவில், நாதஸ்வரம் தவிர்ந்த) என்பது பெரும்பாலும் பரீட்சைக்குரிய பாட அலகுகளைப் பூர்த்தி செய்வது, பரீட்சைக்குத் தோற்றுவது, தொழிலைப் பெற்றுக் கொள்வது என்ற அடிப்படையிலேயே நடைபெற்று வருகின்றது. அதாவது பாடசாலை, வட இலங்கைச் சங்கீதசபை, இராமநாதன் நுண்கலைப்பீடம் ஆகிய இந்த நிறுவனங்களின் பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே கற்பித்தல் நிகழ்கின்றது. நிறுவனங்களைக் கடந்து இசை கற்பிப்பவர்களும் மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார்ப்படுத்துதல் என்ற அடிப்படையிலேயே கற்பிக்கின்றனர். பாரம்பரியமான இசைப்பயில்வு என்பது இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்று. பாரம்பரியம் அல்லது குருகுல முறையிற் கற்றல் என்பதிற் தமக்குத் தெரிந்த விடயங்கள் அனைத்தையும் அடுத்த தலைமுறையினருக்குக் கையளித்தல், கச்சேரிகள், பிற அளிக்கைகள் மூலம் அந்தக்கலையை மக்களிடம் கொண்டு செல்லல்,  என்கிற பாரியதொரு நோக்கம் அதன் பின்னணியிற் காணப்படுகின்றது. இது தவிர நாம் அவ்வாறு சங்கீதத்தைக் கற்கும்போது வெறும் பாடாந்தரங்களை உருப்போட்டு மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒரு நிகழ்வாக அல்லாமல் அந்தச் சங்கீதத்தினூடு ஆன்மீகத்தை, எமது கலாசார, பண்பாட்டு அம்சங்களை, ஒழுக்கம் சார்ந்த விழுமியங்களை, நிறைந்த மன அமைதியினை, மன ஒருமைப்பாட்டினை, வாழ்கையின் ஒழுங்குகள் அர்த்தங்களை,  இவ்வாறு ஏராளமான அம்சங்களை அவர்கள் கூறும் கதைகள், உதாரணங்கள் மூலம் கற்றுக் கொள்ள முடிகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக ஞாபகசக்தியை அதிகரித்துக் கொள்ள முடிகின்றது. இசைக்கு மொழி அவசியம் இல்லை. அது இனம், மதம், மொழி நாடு கடந்த ஒன்று என்ற கருத்துப் பலரிடம் உண்டு. ஒரு இனத்தினையும் அந்த இனத்தின் உன்னத அம்சங்களினையும் அடையாளப்படுத்துவதில் மொழியும், கலையும் மிக முக்கியமானதொரு பங்கினை வகிக்கின்றது. இந்த வகையில் நாம் கற்றுக்கொள்ளும் இசையை நன்கு புரிந்து கொள்ளவும், அது சொல்லும் செய்தியை நாம் புரிந்து கொண்டு அதைப் பிறரும் உணர்ந்து கொள்ளும்படி ஆற்றுகை செய்வதற்கும், மொழி அறிவும், அதைப் பயன்படுத்தும் முறையும் எமக்குத் தெரிந்திருத்தல் மிக மிக அவசியமானதொன்று, என்பதனைப் பாரம்பரியமான இசை கற்றலினூடே அறிந்து கொண்டேன். நான் பாடசாலை உயர்தர வகுப்புச் சங்கீதப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகவும், வடஇலங்கைச் சங்கிதசபைப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகவும் வேறு ஆசிரியர்களிடமும் கற்றுக்கொண்டிருந்தேன். ஆகையால் இரு கற்பித்தல் முறைகளிலும் உள்ள வேறுபாட்டினை என்னாற் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது. திரு உருத்திராபதி அவர்களிடமும், திரு. இராதாகிருஷ்ணன் அவர்களிடமும் வாய்ப்பாட்டினையும், வயலினையும் கற்றபோது உணர்ந்த கற்பித்தற் திறனையும், அதன் மூலம் எனக்குக் கிடைத்த அனுபவங்களினாற் பெற்ற பயனைப் பல வருடங்களாக அனுபவித்து வருகின்றவள் என்கின்ற அடிப்படையிலும் இக்கட்டுரையினை அவர்களுக்குக் காணிக்கையாக்குகின்றேன். 

இணுவில் பல்லிசைக் கலைஞர் நாதஸ்வர வித்துவான் திரு விஸ்வலிங்கம் உருத்திராபதி அவர்கள், எனது தந்தை பண்டிதர் இணுவையூர் கா.செ.நடராசாவிற்குச் சங்கீதத்தைக் கற்றுக் கொடுத்தது மட்டுமன்றிச் சிறந்த நண்பராகவும் விளங்கியவர். ஆகையால் அவர் எங்களது வீட்டிற்கு வந்தே எனக்கு இசை கற்பித்துத் தரும் பாக்கியத்தினைப் பெற்றேன். வாரத்தின் இறுதி நாட்களிற் காலையில் துவிச்சக்கர வண்டியிற் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்து விடுவார். அவர் வரும் பொழுது நான் கற்பதற்குத் தயாராக இருப்பேன்.  குருவிடம் தனியாகக் கற்கும் போது எங்களுடைய சாரீரத்திற்கு ஏற்றவாறு சுருதியை அமைத்துக் கொண்டு பாடவும் பயிற்சி அளிக்கப்படுகின்றது. எமக்குரிய மிகச்சரியான சுருதியைத் தேர்ந்து எடுக்காவிடில், குரல் இனிமையாக இல்லாமற் பிசிறு தட்டவும், சுருதியிலிருந்து விலகவும் நேரிடும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். “சுருதி சேர்க்கும் போது, “ஸ.ப.ஸ” மூச்சை உள்ளே ஆழமாக இழுத்துப் பின் வெளியே நிதானமாக விட்டுப் பின் சுருதி சேர்க்க வேண்டும். பின் ஒவ்வொரு ஸ்வரத்திலும் எவ்வளவு நேரம் நிற்க முடியுமோ அவ்வளவு நேரம் நிற்க வேண்டும். சங்கீதத்திற்கு சுருதி மாதா, லயம் பிதா இவை இரண்டும் கச்சிதமாக இருந்தாற்தான் சங்கீதம் சோபிக்கும். கலைவாணியும் அங்கிருப்பாள். உனக்குத் தெரியுமோ? எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பூசை அறையிலே போய்ப் பாட இருந்தால் தம்புராவை மீட்டியபடி “ம்” கூட்டியபடியே மணித்தியாலக்கணக்கில் கண்களை மூடியபடி அந்த ஸ்ருதியோடு ஒன்றி இலயித்து விடுவாராம்” என்பார். ஓம், ஓம் உண்மைதான் நானும் ஒரு கட்டுரையிற் படித்த ஞாபகம். அதைத்தான் “நாத உபாசனை” என்று கூறுவார்கள். இசை வல்லோர் அதனை “நாதப்பிரம்மம்” என்றும் கூறுவர். நல்ல சங்கீத உபாசகர்கள் அந்த இசையுடனேயே இரண்டறக்கலந்து விடுகின்றார்கள். அதனாற் தான் அத்தகைய வித்துவான்களுடைய கச்சேரி எம்மை இன்னுமொரு தளத்;திற்கு இட்டுச் செல்கின்றது. என்று என் அப்பா ஒத்து ஊதுவார்.

ஆரம்ப அப்பியாச கானங்கள் அனைத்தும் வாய்ப்பாட்டிலும், வயலினிலும் மூன்று காலங்களிலும் சுத்தமாகப் பாடவும், வாசிக்கவும் வேண்டும். அதைச் சுருதி சுத்தமாகப் பாடியும், வாசித்தும் காட்டினாற் தான் அடுத்த உருப்படிக்குப் போகமுடியும். பிறகு வர்ணம், அடதாள வர்ணம், கீர்த்தனைகள் என்று கற்றுக்கொள்ள ஆரம்பித்த பின்னரும் கூட ஆரம்ப அப்பியாசகானங்;களை அகார சாதகம் பண்ணும்படி கூறுவார். கூறுவதோடு மட்டும் நிறுத்தி விடுவதில்லை அந்த அலங்காரத்தை அகாரத்திற் பாடிக்காட்டு, இந்த வர்ணத்தை அகாரமாகப் பாடிக்காட்டு என்று திடீர் திடீர் எனக் கேட்டுப் பிழிந்து எடுத்து விடுவார். இவ்வாறு பயிற்சி செய்தால் ராக, தாள, ஸ்வரஞானங்களைப் பெற்றுக்கொள்வதோடு, சங்கதிகளையும், ப்ருகாக்களையும் தெளிவாகவும், சுருதி சுத்தமாகவும், லய சுத்தமாகவும் பாடமுடியும் என்றும் கூறுவார்.

இங்கு இவ்வாறு பாடும் போதும் வாசிக்கும் போதும் தகுந்த பயிற்சி இல்லாவிடிற் கால அளவுகளில் மிகுந்த இடர்ப்பாடு ஏற்படும்.  தாளம் கடிகாரத்தின் முள்ளைப்போல அத்தனை சீராக இருக்கவேண்டும் என்பார். அத்தோடு தன் சகோதரரைப் பற்றி மிகப்பெருமையாகப் பேசுவார். “தட்சணாமூர்த்தி எப்போதும் கடிகாரத்தின் முன் இருந்து தான் தவில் வாசிப்பார். இப்படித்தான் ஓருநாள் அவர் சாதகம் செய்து கொண்டு இருக்கும் போது உலை கொதித்துக் கொண்டு (பானையிலே சோறு வேகுதல்) இருந்தது. அப்போது உலை மூடியும் ஆடிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்த ஒலி தட்சணாமூர்த்தியின்  தவிலில் இருந்து அற்புதமான லயக் கோர்வையாகக்  கேட்டுக்கொண்டிருந்தது.  ஒரு நல்ல கலைஞன் இயற்கையில் இருந்தே நிறையக் கற்றுக் கொள்கின்றான். அதற்கு நல்ல அவதானம் இருத்தல் அவசியம். அது தான் கற்பனைத்திறனை வளர்க்கும்” என்றார். உடனே என் அப்பா “ஆகா அந்தக் காரைக்காற் சிவன் கோவிற் கச்சேரியை எப்படி மறப்பது தவில் வாசித்துக் கொண்டிருந்தபோது புகைவண்டி ஒன்று சென்றது. அது சென்ற பின்னர் தட்சணாமூர்த்தியின் தவிலிலே, புகைவண்டி ஓடிக்கொண்டிருந்தது. அவர் ஒரு பிறவிக் கலைஞன்” என்றார். 

இவரைப் பற்றி லலிதாராம் என்ற எழுத்தாளர் “மறக்கப்பட்ட மாமேதைகள்” என்ற கட்டுரையிற் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.  “தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் சென்று பெரும் பெயர் ஈட்டியவர்கள் பலருண்டு. இலங்கையிற் பிறந்து தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் இவர் வந்து வாசிக்க மாட்டாரா? என்று ஏங்கவைத்தவரும் உண்டு. அவர்தான் தவில் மேதை யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி. மறைந்த நாதஸ்வரமேதை செம்பனார் கோவில் வைத்தியநாதன் “நாங்கள் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தபோது ஒரு சிறுவன் வாசிக்கிறான். என்று சொன்னார்கள். காவேரிக் கரையில் நாம் பார்க்காத கலைஞர்களா? என்று சற்று இளக்காரமாய்த்தான் நினைத்தோம். அந்தச் சிறுவன் வாசித்துக் கேட்டதும் ஸ்தம்பித்துப் போனோம்”. என்று கூறியுள்ளார். மேதைகளின் இசைக்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. பற்பல அடுக்குகளாய் அமைந்து, பாமரர்க்கும், பண்டிதர்க்கும் ரசிக்கவும், கற்கவும் ஏதோ ஒன்று பொதிந்திருக்கும் தன்மையே அது. தேர்ந்த கர்நாடக இசை இரசிகர்களே, லய நுணுக்கங்களைப் போதிய அளவு கவனம் செலுத்தி ரசிக்காத நிலையில், தமிழகத்தின் குக்கிராமங்களிற் கூட தட்சணாமூர்த்தியைப் பார்த்துவிட மாட்டோமா? அவர் வாசிப்பைக் கேட்டுவிட மாட்டோமா? என்று கூட்டம் நிரம்பி வழிந்தது ஆச்சரியம் தான். இல்லாவிட்டாற் கிருஷ்ண கான சபையில் இவர் வாசிப்பைக் கேட்ட பாலக்காடு மணி ஐயர், இவர் உலகின் “எட்டாவது அதிசயம்” என்று சொல்லியிருப்பாரா? ஒரு அட்சரத்தில் மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது மாத்திரைகள் வரும் நடை, வழக்கில் இருக்க, ஒரு அட்சரத்திற் பதினொன்று, பதின்மூன்று மாத்திரைகள் வரும் வகையில் முதன் முதலில் வாசித்தவர் தட்சணாமூர்த்திதான். எவ்வளவு நேரம், எவ்வளவு வேகமாக வாசித்தபோதும் ஒவ்வொரு சொல்லும் அதற்குரிய கனமுடன், தௌ;ளத் தெளிவாய் வாசிக்கும் திறன், அவரின் தனிச்சிறப்பு என்று, கேட்டவர்கள் இன்றும் அவரை நினைந்து உருகிப்போவதுண்டு. “இயற்கையிலேயே லயப் பிண்டமாகப் பிறந்துவிட்ட தட்சணாமூர்த்தி தஞ்சாவூரில் இருந்தபடி, நீடாமங்கலம் சண்முகசுந்தரம் பிள்ளையுடனும், நாச்சியார் கோவில் ராகவப்பிள்ளையுடனும், சேர்ந்து காரைக்குறுச்சி அருணாசலம் போன்ற நாதஸ்வர சிகரங்களுக்கு வாசித்த காலத்தைப் “பொற்காலம்” என்று தான் சொல்ல வேண்டும். அவரைப் போன்ற தவில் வித்துவான், அவருக்கு முன்னாலும் பிறந்ததில்லை, அவருக்குப் பிறகும் வரப்போவதில்லை என்கிறார் தட்சணாமூர்த்தியுடன் நெருங்கிப்பழகிய பி.எம் சுந்தரம் அவர்கள். யார்க்கும் எட்டாக் கற்பனையும், அதைச் செயற்படுத்திக் காட்டும் ஆற்றலும் கைவரப் பெற்ற அந்த மாமேதை, துரதிஷ்டவசமாய், தனது நாற்பத்தியிரண்டாவது வயதிலேயே மறைந்து விட்டார்”;. (“மறக்கப்பட்ட மாமேதைகள்”; தினமலர், பத்திரிகை 22.12.2014)

அந்த உலகத் தவில் மேதை, “லயஞானகுபேரபூபதி” திரு. தட்சணாமூர்த்தியின் கச்சேரிகளுக்குச் சிறிய வயதில் இருந்தே தாளம் போடும் வல்லமையைப் பெற்றிருந்த திரு. இராதாகிருஷ்ணன் அவர்கள், உருத்திராபதி தையலாம்பாள் தம்பதிகளின் மூத்த புதல்வனாக, 27.6.1943 ஆம் ஆண்டு பிறந்தவர். தன் தந்தையிடம் இருந்தே நாதஸ்வரத்தினையும், வாய்ப்பாட்டினையும், வயலினையும் கற்றுக் கொண்டவர், தனது பதினைந்தாவது வயதில் இருந்தே கச்சேரிகளைச் செய்யவும், பக்கவாத்தியம் வாசிக்கவும் ஆரம்பித்தவர். சிறந்த லயஞானத்தினைப் பிறவியிலேயே பெற்றுக் கொண்டவர். பல்லவிகளிலும், மல்லாரிகளிலும் அவருக்கு உள்ள ஈடுபாடு மிக மிக அதிகம். பெரும்பாலும் ஆலயங்களிற் திருவிழாக்காலங்களிற் பல இராகங்களிற், பல தாளங்களிற் சுவாமி புறப்பாட்டுக்குரிய மல்லாரி, தளிகை மல்லாரி, தீர்த்த மல்லாரி, தேர்மல்லாரி என்று சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வண்ணம்  மல்லாரிகளை வாசிப்பது பண்டைய மரபு. இந்த மல்லாரிகளின் முக்கிய அம்சம் சொற்கட்டுகளும் அவற்றின் தாள நடைகளுமேயாகும். வித்வான்களின் கற்பனைக்கு ஏற்றவாறு அதன் மெருகு ஏறும். ஆலயங்களில் நாதஸ்வரத்தில் வாசிக்கப்படுகின்ற, நடன அரங்குகளில் பயன்படுத்தப்படுகின்ற, இந்த மல்லாரி என்கின்ற உருப்படி வகையைத் தன்னுடைய வயலின் கச்சேரிகளில் ஒரு அம்சமாகப் புகுத்தியதும், ஆலயங்களில் நிகழ்த்தும் கச்சேரிகளைத் தான் உருவாக்கிய மல்லாரிகளுடன் ஆரம்பித்துத் தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டதும் இராதாகிருஷ்ணனுக்கே உரிய தனித்துவமான அம்சமாகும். அதே போல வித்வான்களுடைய சங்கீதஞானம், லயஞானம், ஸ்ருதிஞானம், மனோதர்மம்  ஆகியவற்றினை  வெளிப்படுத்தும் ஸாகித்தியமாகக் கச்சேரிகளிற் “பல்லவி” இடம் பெற்று வருகின்றது. பல்லவிகளை உருவாக்கி, அவற்றில் லய நுணுக்கங்கள் அதிகமாக மிளிரும்; வண்ணம் அவற்றை வாசித்துத் தன் கச்சேரிகளைச் சோபிக்கச் செய்வதில் இராதாகிருஷ்ணன்  வல்லவராகத் திகழ்ந்துள்ளார். 

இவருடைய வயலின் இசைக் கச்சேரிகள், இடத்திற்கும், மக்களின் இரசனையின் தரத்திற்கும் ஏற்றவாறே அமைந்திருந்தன. எந்த நாட்டிலாவது, எந்த மொழியிலாவது பண்டிதர் முதற் பாமரர் வரை ரசிக்கும்படியான இசை நிழ்வுகளை வழங்கக் கூடிய வித்வான்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றனர். அந்த அரிதான வித்வான்களில் இராதாகிருஷ்ணனும் ஒருவர். அதனால்  ஈழத்தைப் பொறுத்தமட்டில் இராதாகிருஷ்ணனின் வயலின் இசைக்கு அடிமையாகாத இசைப்பிரியர்கள் இருக்கமுடியாது என்றே சொல்லலாம். இவர் கச்சேரி செய்ய ஆரம்பித்த காலத்திலிருந்தே சிறந்த பக்கவாத்தியக் கலைஞராகவும் இனங்காணப்பட்டார். சிறிய வயதிலிருந்தே ஈழத்துக் கலைஞர்களுக்கும், தென்னிந்தியக் கலைஞர்கள் பலருக்கும் பக்கவாத்தியக் கலைஞராக இருந்துள்ளார். உள்ளார். கொக்குவில் மஞ்சவனப்பதியிற் கிருபானந்த வாரியாரின் இராமாயணம் பற்றிய கதாப்பிரசங்க நிகழ்வு தொடர்ச்சியாகப் பத்து நாட்கள் இடம்பெற்றது. (1977) அந்தப் பத்துத் தினங்களில் ஒரு நாள் செல்வி தனதேவி சுப்பையாவும் (இராமநாதன் அக்கடமி வயலின் விரிவுரையாளர்) மிகுதி ஒன்பது நாட்கள் இராதாகிருஷ்ணன் அவர்களும் வயலின் வாசித்தார்கள். கதாப்பிரசங்கத்தின் போது கிருபானந்தவாரியார் பாத்திரங்களுக்கேற்ப நடிகராக மாறிவிடுவார். நவரசங்களையும் வாரி இறைப்பார். இராதாகிருஷ்ணனோ அவற்றுக்கு எல்லாம் சளைக்காமல் ஈடுகொடுத்து, நிழல் போல அவரைத் தொடர்வது, நவரசபாவங்களை மெருகேற்றுவது, தகுந்த இடங்களிற் அவர் உண்டாக்கும் ஒலிகளுக்கு எற்பப் பின்னணி இசையை வழங்குவது என, ஒரு நல்ல நாடகம் பார்த்த உணர்வை எமக்கு அள்ளித்தந்து, வாரியாரின் உற்சாகத்தையும் அதிகப்படுத்தி, அவரிடம் இருந்து நிறையப்பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார்.

புன்னாலைக் கட்டுவன் சித்திவிநாயகர் ஆலயத்தில் (1978) நடந்த மதுரைச் சோமுவின் கச்சேரிக்கும் இராதாகிருஷ்ணன் அவர்களே வயலின் வாசித்தார். தொடர்ச்சியாக ஆறு, ஏழு மணித்தயாலங்கள் நடைபெற்ற கச்சேரி. நல்ல தூக்கத்தினால் இமைகள் மூடின. ஆயினும் அவர் புன்னாகவராளி இராகம் பாடியது, பின்னர் இராதாகிருஷ்ணன் வாசிக்கும் போது  ஆகா! ஆகா! எனச் சபாஷ் போட்டது. “என்ன கவி பாடினாலும்” “மருதமலை மாமணியே” “ராமநாமம்” போன்றவற்றைப் பாடும்போது முருகா! ராமா! என உருகி உருகி  அழைத்தது.  அந்த உணர்வுகளை, உயிர்ப்புகளை  எல்லாம் அப்படியே உள்வாங்கி இராதாகிருஷ்ணன் வாசித்தது, அங்கு தோன்றிய அந்தத் தெய்வீகச் சூழலிற் கண்கள் பனித்தது, மதுரைச் சோமுவோ பலே! பலே! என்று தலையை ஆட்டிப் புன்னகைத்தவாறே பாடியது எல்லாம் நேற்று நடந்தவை போல உள்ளது.

இணுவிற் பரராசசேகரப் பிள்ளையார் கோவிலிற் சூலமங்கலம் சகோதரிகளின் கச்சேரி. (1977). இங்கு நான் குறிப்பிடும் கச்சேரிகள் எல்லாமே திறந்தவெளி  அரங்குகளில் விடிய விடிய நடைபெற்றவை. இந்தக் கச்சேரிகளுக்குப்  பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். சன நெரிசலில் மக்கள் அலைமோதுவார்கள். அன்று குறிப்பிட்ட நேரத்திற்குச் சூலமங்கலம் சகோதரிகளின் கச்சேரி ஆரம்பமாகவில்லை.  விமானம் வரப்பிந்தி விட்டது என்றார்கள். எங்கே கச்சேரி? என மக்கள் கூச்சலிட ஆரம்பித்து விட்டனர். அந்த இக்கட்டான சூழலில் அந்தப் பெருந்திரளான மக்களைச் சூலமங்கலம் சகோதரிகள் வரும் வரை திரு என். வீரமணி ஐயர் அவர்களும், திரு இராதாகிருஷ்ணன் அவர்களும் தம் இசை ஆளுமையால் அமைதிப்படுத்தியதை அன்றைய கச்சேரிக்கு வந்தவர்கள் அனைவரும் அறிவர். அன்று இந்த நிகழ்வுகள் யாவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினரால் நேரடி ஒலிபரப்புச் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீர்காழி எஸ் கோவிந்தராஜன், சுந்தராம்பாள், டி.கே.பட்டம்மாள், ஓதுவார் இராஜசேகரம் ஆகியோருடைய கச்சேரிகளுக்கும் பிற்காலத்தில் நித்தியசிறி. மகாதேவனுக்கும் வயலின் வாசித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. இவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல அமைவது திரு கல்யாணராமன் (1982) அவருடைய கச்சேரிக்கு வயலின் வாசிக்கத் திரு இராதாகிருஷ்ணன் அழைக்கப்பட்டது.  பரூர் எம். எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள் “கல்யாணராமனின் கச்சேரிகளுக்கு விசேட பயிற்சி இருந்தாற்தான் வயலின் வாசிக்க முடியும். காரணம், தான் கண்டு பிடித்த புதுராகங்களையும், ஜோதிஸ்வரூபினி, நாசிகாபூஷணி போன்ற இராகங்களையும், விவாதி இராகங்களையும், கல்யாணி, சங்கராபரணம்போல அனாயாசமாகப் பாடுவார்”; என்று தன்னுடைய அனுபவத்தைக் கல்யாணராமன் பற்றிய விவரணப் படத்திற் பதிவு செய்துள்ளார். அப்படிப்பட்ட ஒரு கலைஞனுக்கும் இராதாகிருஷ்ணன் வயலின் வாசித்துள்ளார் என்றால் அவருடைய இசை ஆளுமை சாதாரணமான ஒன்றல்ல. தன்னடக்கமும், சீரிய பண்பும் கொண்ட ஓர் உன்னத கலைஞன் திரு. இராதாகிருஷ்ணன் அவர்கள் என்பது இங்கு நிரூபணமாகின்றது.     

இராதாகிருஷ்ணன் கச்சேரி செய்ய ஆரம்பித்த கால கட்டத்தில், இணுவில் இராமநாதன் கல்லூரியில் இசைத்துறையை ஆரம்பிக் வேண்டும் என, சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் மருகர் சு, நடேசன் அவர்கள் விரும்பினார். அவர் இக்காலகட்டத்தில் இலங்கைப் பாராளமன்றத்தில் அமைச்சராகப் (அஞ்சல், தந்தி, ஒலிபரப்புத்துறை) பணிபுரிந்ததால், அவரின் முயற்சியின் பயனாக இந்தியாவிற் கேரளாவில் இருந்து ஸ்வாதித்திருநாள் அக்கடமியில் இசை விரிவுரையாளராகவும், சென்னை கர்நாடக சங்கீதக் கல்லூரியிற் பேராசிரியராகவும் கடமை புரிந்த, வாய்ப்பாட்டு, வயலின் ஆகிய இரண்டிலும் விற்பன்னரான, திரு கல்யாண கிருஷ்ண பாகவதரை யாழ்ப்பாணம் அழைத்துக் கொண்டு வந்தார். சிவகாமசுந்தரியும் தானும் வசித்த இல்லத்தையே களமாகக் கொண்டு இராமநாதன் அக்கடமியை 1955 ஆம் ஆண்டு ஆரம்பித்து கல்யாண கிருஷ்ணபகவதரையே அதன் முதலாவது அதிபராக நியமித்தார். (த ஹிந்து பத்திரிகை, திருமதி எல். ரங்கநாதன் கட்டுரை) 

இது பற்றித் திரு.ஏ.சந்தானகிருஷ்ணன் (இவர் தவில்வித்துவான் திரு.வலங்கைமான் சண்முகசுந்தரத்தின் சகோதரர், திரு.உருத்திராபதியின் மருமகன்) அவர்களிடம் உரையாடியபோது அவர் கூறுகின்றார். “இராமநாதன் அக்கடமிக்கு அதிபராக வந்த கல்யாணகிருஷ்ண பாகவதர் வாய்பாட்டு, வீணை இரண்டிலும் வல்லவர். அவருடைய கச்சேரிக்கு மிருதங்கம் வாசிக்க நான் அழைக்கப்பட்டு இருந்தேன். இது மிகவும் எனக்குப் பெருமை அளித்தது. நான் முதன் முதல் மிருதங்கம் வாசித்த தென்னிந்திய வித்துவானுடைய சங்கீதக் கச்சேரி திரு.கல்யாண கிருஷ்ண பாகவதருடையது. அப்போது எனக்கு இருபது வயது. அவருடைய சாரீரம் கனத்த சாரீரம். பாடும்போது சங்கதிகள் மிகுந்த கம்பீரத்தோடு வரும். ஆனால் அவருடைய வீணையின் நாதமோ ஒரு பெண்ணின் குரல் போல மிக மென்மையாகவும், நளினமாகவும் இருக்கும். அவரின் விரல்களின் அசைவுகளில் ஏற்படும் கமகங்களின் இனிமை, பாவம் ஆகா! சொல்லுந் தரமன்று அவருடைய கச்சேரிக்கு மிருதங்கம் வாசித்தது ஒரு இனிய அனுபவம்.” என்கிறார்.

அவரைத் தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு இராமநாதன் அக்கடமிக்கு அதிபராக அழைக்கப்பட்டவர். திரு மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள். (ஐனெயைn நுஒpசநளள னயவநன துரநெ 25இ 1992 யனெ வுhந ர்iனெர னயவநன துரநெ 24இ 1992)  இவர் இங்கு கடைமையாற்றிய காலத்தில் இணுவில் திரு என். வீரமணி ஐயர் அவர்களின் கீர்த்தனைகள் பலவற்றை மாணவர்களுக்குப் பயிற்றுவித்ததோடு தனது கச்சேரிகளிலும் அவற்றைப் பாடிப் பிரசித்தம் அடையச்செய்தார். இவருடைய கச்சேரிகளுக்கு வயலின் வாசித்தவர் திரு இராதாகிருஷ்ணன். மிருதங்கம் திரு. ஏ. சந்தானகிருஷ்ணன் அவர்களாவார். 1964 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இராமநாதன் அக்கடமியின் அதிபராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராகவும் தண்டபாணி தேசிகருடன் இணைந்து பண் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டவரான ரி.கே. ரங்காச்சாரியார் அழைக்கப்பட்டிருந்தார். (வுhந ர்iனெர யசவiஉடநஇ வுhந யரவாழச ளை ய பசயனௌழn ழக வுமுசு)   இவரை அடுத்து 1967 ஆம் ஆண்டு இராமநாதன் அக்கடமியின் அதிபராக அழைக்கப்பட்டவர். பழம்பெரும் பாடகரும், சென்னை இசைக்கல்லூரியிற் பேராசிரியராகவும், அண்ணாமலைப்  பல்கலைக்கழகத்தில் இசைத்துறைத் தலைவராகவும் இருந்த சித்துர் சுப்ரமணியம்பிள்ளை.  இவர் 1971 ஆம் ஆண்டு வரை இங்கு அதிபராகக் கடைமை புரிந்து உள்ளார். (வநஅpடந ழக iனெயை iகெழ.றநடிளவைந)  இக்காலகட்டத்திற் சித்தூர் சுப்ரமணியம்பிள்ளை அவர்களின் கச்சேரிகளுக்கும் இராதாகிருஷ்ணன் அவர்கள் வயலின் வாசித்து உள்ளார். மிருதங்கம் வாசித்தவர் திரு. ஏ. சந்தானகிருஷ்ணன் அவர்கள்.   

திரு இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவில் தஞ்சாவூர் எம்.தியாகராஜன் அவர்களிடம் வாய்ப்பாட்டினையும், பரூர் திரு சுந்தரம் ஐயரின் மகன் திரு. அனந்தராமனிடம் அவரோடு கூட இருந்தே வயலினையும் கற்றுக்கொண்டவர். இக் காலகட்டத்தில் இந்தியாவிலும் பல இசைவிழாக்களிற் கலந்து கொண்டு தனது வயலின் இசையை வழங்கியுள்ளார். திரு அனந்தராமன் அவர்களுடைய பாணியைப் பரூர் பாணி என்று சொல்வார்கள். அதாவது வயலின் வாசிக்கும்போது திரு சுந்தரம் ஐயருக்கு ஏற்பட்ட தேடல்கள், கேள்விகள் காரணமாக அவரது ஆராய்சியின் பயனாக அவர் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். அந்தப் பாணியே பரூர் பாணியாயிற்று. அவரது புதல்வர்களாகிய திரு. எம். எஸ். அனந்தராமனும் திரு. எம். எஸ். கோபாலகிருஷ்ணனும் தந்தை உருவாக்கிய பாணியையே மேலும் மெருகேற்றித் தம் கச்சேரியையும், கற்பித்தல்களையும் தொடர்;ந்தது மட்டுமன்றிப் பரூர் பாணியைப்  பிரசித்தியடையச் செய்து விட்டனர். திரு இராதாகிருஷ்ணனும் தன் கச்சேரிகளிலும், கற்பித்தலிலும் அந்த முறையினையே பின்பற்றி வந்துள்ளார். இராதாகிருஷ்ணனின் கற்பித்தலிலும், அவர் தந்தையின் கற்பித்தலிலும் “போ” வை எவ்வாறு போடவேண்டும் என்பதற்கும் பயிற்சி இருந்தது. நீண்ட போக்களை எவ்வாறு போடுவது? பாடல்களின் தொடர்பு அறுந்து விடாமல் எப்படி வாசிப்பது? தந்திகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளாமல் ஓரே தந்தியில் எப்படி வாசிப்பது? கமகங்களை எப்படி பாவத்துடன் கொண்டு வருவது? விரல்களை இலாவகமாக நகர்த்துவது. என்று பல நுட்பமான, ஏராளமான விடயங்களை அவர்கள் கற்பித்தார்கள். அத்தோடு இந்த நுட்பங்களுடன் சிறப்பாக வாசிக்க வேண்டுமெனில் அப்பியாசகானங்களில் மிகுந்த பயிற்சி வேண்டும் என்றும் அவ்வாறு பயிற்சி செய்தாற்தான் கைவிரல்களில் வலிவும், தெளிவும் ஏற்படும் என்றும் கூறினார்கள். இவ்வாறான ஒரு தொடர்ச்சியான கற்றலையும், பயிற்சியையும் பாரம்பரியக் கற்றலினூடுதான் பெற்றுக்கொள்ள முடியும் என்பது எனது அசைக்க முடிhயாத நம்பிக்கை. உதாரணமாக மோகன வர்ணம், ஸரஸ{டா சாவேரி வர்ணம், பவனுத மோகனராகக் கீர்த்தனை, தேவி நீயே துணை கீரவாணி கீர்த்தனை, பைரவி விரிபோணி அடதாள வர்ணம் இப்படி அவர் கற்பித்தவற்றைக் கற்பித்த முறையிலே வாசித்துக் காட்டுவதற்கு  மாதக்கணக்காகப் பயிற்சி செய்ய வேண்டும். அதுவும் அந்தச் ஸரஸ{டா வர்ணம், மோகன இராகம் வாசித்து அதன்பின் வாசிக்கும் பவனுத இரண்டும் ஆகா அற்புதமாக இருக்கும். ஆனால் இராதாகிருஷ்ணன் அவர்கள் வாசித்தது போல என்னால் வாசிக்கவே முடியவில்லை என்பது ஒரு புறம் இருக்க, அவ்வாறு பயிற்சி செய்தாற் தான் நல்ல இராக ஞானத்தைப் பெறமுடியும், இராகங்களை ஆலாபனை செய்வதற்குரிய திறமையும் உண்டாகும் என்பார்கள். அவற்றைச் சரியாக வாசிக்கும் வரை மீண்டும், மீண்டும் வாசிக்கவும், பாடவும் வைப்பார்கள். இவ்வாறு வாசிக்கும் போதும், பாடும் போதும் சில வேளைகளில் மிகுந்த சலிப்பும் ஏற்படுவதுண்டு. ஆனாற் பரீட்சைக்குச் சென்று வாசித்தபின் இணுவில் அல்லவா? இராதாகிருஷ்ணனின் மாணவி அல்லவா? அது வாசிப்பிற் தெரிகிறது, என்று மெச்சும்போது வலிகள் எல்லாம் மறந்து அத்தனை சந்தோஷமாக இருக்கும். 

இன்னுமொரு முக்கியமான விடயத்தை இங்கு குறிப்பிடுதல் வேண்டும். பொதுவாக வயலின்  இசைக்கச்சேரிகளில் மிருதங்கம், கடம், கஞ்சிரா, முகர்சிங், தபேலா போன்ற மென்மையான வாத்தியங்களே பக்கவாத்தியங்களாக அமைவது மரபு. அதுதான் வழமையாக இருந்தும் வந்துள்ளது. இந்த மரபை மாற்றி  இந்தியாவில் முதன் முதலில்; வயலின் சோலோவிற்குத் (கணேஸ் குமரேஸ் ஆகியோரின் வயலின் சோலோ) தவில் வாசித்தவர் யாழ்ப்பாணம் தவில் வித்துவான் திரு. ஏ. வலங்கைமான் சண்முகசுந்தரம் ஆவார். (கணேஸ் குமரேஸ் பற்றிய சுயவிபரக் குறிப்பு) (தகவல் - திரு.ஏ.சந்தானகிருஷ்ணன்) ஈழத்தில் வயலின் சோலோ என்கின்ற நிகழ்வை ஆரம்பித்து வைத்து அதனைப் பிரபலமாக்கியவர் திரு இரதாகிருஷ்ணன் அவர்களேயாவார். அதே போல  அவருடைய வயலின் சோலோ நிகழ்விற்கு ஈழத்துத் தவில் மேதை, இணுவில் கே. ஆர். புண்ணியமூர்த்தி அவர்கள் தவில் வாசித்து உள்ளார். யாழ்ப்பாணத்தில் வயலினும், தவிலும் இணைந்த முதற் கச்சேரி இதுவேயாகும். அதன் பின் பல மேடைகளில் இராதாகிருஷ்ணனின் வயலின் சோலோ நிகழ்வு கே.ஆர் புண்ணியமூர்த்தியின் தவிலுடன் இணைந்து நடைபெற்றுள்ளது. 1976 ஆம் ஆண்டிற்கும் 1979ஆம் ஆண்டிற்கும் இடையிலேயே இரண்டு கச்சேரிகளும் இடம்பெற்றுள்ளன. ஆகையால் எது முதலில் நடைபெற்ற கச்சேரி என்பதைக் கணிப்பிட முடியவில்லை.

திரு. கே.ஆர்.சுந்தரமூர்த்தி அவர்கள் “நான் உருத்திராபதி மாமாவிடம் தான் நாதஸ்வரத்தைக் கற்றுக்கொண்டேன். என்னை விட மூன்று வயது இளையவரான என் மைத்துனன் ராதாவிடம்,  நான் கண்டுணர்ந்த சங்கீத ஞானத்தையும், அந்தச் சங்கீதத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்றினையும்,  அவர்மீது நான் வைத்திருந்த மதிப்பினையும,; நேசத்தினையும் விளக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. நேர்மையும், நல்லொழுக்கமும், சிறந்த பண்பும் கொண்ட ஒரு மகாமேதையை எங்கள் குடும்பம் இழந்து விட்டது என்பதை நினைக்க இதயம் வலிக்கின்றது. நிகழ்ச்சிக் கலைஞர்களாக, மேடைக்கலைஞர்களாக, வெற்றி பெற்று மக்களிடையே புகழ் பெற்றவர்களாக இருப்பவர்கள் எல்லோரும் சிறந்த ஆசிரியர்களாக இருந்துள்ளார்கள் என்று கூறுவதற்கு இயலாது. அதே போல சிறந்த ஆசிரியர்களாக இருந்தவர்கள் எல்லோருமே வெற்றி பெற்ற மேடைக்கலைஞர்களாகவும் திகழ்ந்திருக்கவில்லை. என் மைத்துனன் இராதாகிருஷ்ணனோ இவை இரண்டிலும் வெற்றி கண்டுள்ளார். என்னுடைய மகன் கோபி, ராதாவின் பிள்ளைகளான. சைந்தவி. திவாகரன் மூவருமே இராதாவினால் உருவாக்கப்பட்டவர்கள். அவர்கள் இன்று சிறந்த மேடைகலைஞர்களாகவும், கற்பித்தற் திறனுடைய கலைஞர்களாகவும் விளங்குகின்றார்கள்.  இசை பற்றிய  சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எந்த நேரத்திலும் விளக்கம் அளிக்கக் கூடிய ஒரு நடமாடும் கலைக் களஞ்சியத்தைக், கலைப்பொக்கிஷத்தை இன்று ஈழத்து இசையுலகம் இழந்து விட்டது” என்று தனது மனவலியினைக் கூறுகின்றார்.      

திரு. கே.ஆர்.புண்ணியமூர்த்தி அவர்கள் “நான் தவில் வாசிப்பதற்குரிய ஆரம்பப் பயிற்சிகளை உருத்திராபதி மாமாவிடமே பெற்றுக்கொண்டேன். ராதாவும், நானும் தட்சணாமூர்த்தி மாமா வாசிக்கும் போது பின்னால் இருந்து தாளம் போட்டுள்ளோம். அதன்பின் தட்சணாமூர்த்தி மாமாவுடனும் எனது ஆசான் என்.ஆர்.சின்னராசாவுடனும் தவில் வாசித்த காலங்கள் எனது வாழ்க்கையின் பொன்னான காலங்கள். அதற்குப் பின்னர் அதற்கு இணையான சந்தோஷத்தை  நான் அனுபவித்தது, எனது மைத்துனனும், இனிய நண்பனுமான இராதாகிருஷ்ணனுக்குத் தவில் வாசித்த நேரங்களிற் தான். மிக அற்புதமான காணுதற்கு அரிய கலைஞன். அவருடைய பல்லவிகளின், மல்லாரிகளின் அமைப்பு அவற்றை வாசிக்கும் போது அதில் மிளிரும் கற்பனைத்திறன் என்னை உற்சாகத்தின் எல்லைக்குக் கொண்டு செல்லும். இத்தகைய லயஞானம் உள்ளவர்களுடன் கச்சேரி செய்வது என்பது மிக மிக இனிமையான அனுபவம். அவருடைய இசை, லய நுணுக்கங்கள் பற்றிய கற்பனைகள் பலவற்றை என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இசை பற்றிய, இசை நுணுக்கங்கள் பற்றிய தன்னுடைய கருத்துக்களை   வித்துவான்களுடைய சபையிலும் கூறுவதற்கு அஞ்சாத ஆளுமை உடையவர். இருபத்தி நான்கு மணிநேரமும் வயலின் வாசிப்பது, இசைபற்றிச் சிந்திப்பது, பேசுவது, என்று வாழ்ந்த அற்புதமான, மிக உன்னதமான ஒரு கலைஞனை நானும், என் சமுகமும் இழந்துவிட்டோம். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாததொன்று. ஈழத்தில் அத்தகையதொரு கலைஞனைக் காண முடியாது. அவர் எவ்வளவு தூரம் இசையை நேசித்தார் என்பதற்கு அவருடைய இறுதிக்கணங்களே சாட்சி” என்று மனம் நெகிழ்ந்து தன் அனுபவத்தினைக் கூறுகின்றார். 

திரு.வி.கே.பஞ்சமூர்த்தி அவர்கள் “நான் இராதா அண்ணரிடம் சங்கீதத்தைக் கற்றுக்கொண்டவன்.  ஆயினும் ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாகவே பழகிவந்தோம். நான் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்த பின்னரே அவருக்குள் இருக்கும் மேதையை உணர ஆரம்பித்தேன். அதன் பின் மானசீகமாகக் குருவிற்கு உரிய மரியாதையைச் செலுத்த ஆரம்பித்தது மட்டுமன்றி எந்த ஓர் இடத்திலும் அவருக்குச் சமனாக நான் இருந்தது கிடையாது. ஆனால் அவரோ யாரிடம் இருந்தும் எதையும் எதிர்பார்க்காத அமைதியான அன்பான இசைக்கல்வியை மிகச் செம்மையாகக் கற்றுக்கொடுக்கும் சிறந்த ஆசான். இசை பற்றிய அவரது கருத்துக்கள், சிந்தனைகள் தெளிவானவை, மிக மிக ஆழமானவை. அவர் தன்னுடைய வாசிப்பிற் கையாளும் நுணுக்கங்கள் அவரது ஆய்வின், சிந்தனையின் வெளிப்பாடுகளாகும். 1970 ஆம் ஆண்டிற்கும் 1980 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற் பல வாத்தியக் கலைஞர்களை ஒன்றிணைத்துப் புல்லாங்குழல் அல்லது நாதஸ்வரத்தை வாசிப்பவராக நான் இருந்து கொண்டு அந்த வாத்திய நிகழ்வை (பல்லியம்) மேடையேற்றினேன். இராதாகிருஷ்ணன் இல்லாது அந்த நிகழ்வை நான் ஒருபோதும் மேடையேற்றியது கிடையாது. அந்நிகழ்வில் அவர் வயலின் இசைக்கலைஞராக விளங்கியதோடு, என்னை வழிநடத்துபவராகவும் விளங்கினார். அந்த நிகழ்வு எப்படி அமைய வேண்டும்? என்ன உருப்படிகள் இடம்பெற வேண்டும் என்று எல்லாக் கலைஞர்களுடனும் கலந்துரையாடி, ஆலோசனைகளை வழங்கிப் பல தடவைகள் ஒத்திகை பார்த்த பின்னரே மேடையேற்ற அனுமதிப்பார். அதுமட்டுமல்ல அவர் தன்னுடை ஒவ்வொரு கச்சேரியையும் உளப்பூர்வமாக, மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யவேண்டும் என்பதில் மிக உறுதியுள்ளவர் அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் சிரத்தை மிக அதிகம். அவருக்கு என்மீது அதிகமான பிரியம் உண்டு. இறுதி வரை ஒவ்வொரு வாரமும்  ஒரு தடவையாவது என்னைப்பார்க்காமல் இருந்ததில்லை. அவரைப் போன்ற ஒரு கலைஞனைக் காண்பது மிகவும் அரிது” என்று பெருமிதம் பொங்கக் கூறுகின்றார்.

திரு.கே.ஆர்.சுந்தரமூர்த்தி, திரு.கே.ஆர்.புண்ணியமூர்த்தி, திருவி.கே.பஞ்சமூர்த்தி ஆகிய மூவருமே கூறிய ஒரு முக்கியமான விடயம் “அவருக்கு இணையாக இசைஞானமும், சீரிய பண்பும், நல்லொழுக்கமும் நிரம்பப் பெற்ற ஒரு இசைக்கலைஞன் (நாதஸ்வரம், வாய்ப்பாட்டு, வயலின் புல்லாங்குழல் உட்டபட) ஈழத்தில் இருந்ததில்லை, இனியும் இருக்கப்போவது இல்லை” என்பதே.          

இத்தகை சிறப்புகளை எல்லாம் தனதாக்கிக் கொண்டு, ஈழத்தில் ஐம்பத்தேழு வருடங்களாக வயலின் இசையிற் கோலோச்சி, யாழ்ப்பாணத்தின் இசைப்பாரம்பரியத்துக்கு மெருகு சேர்த்து, யுத்த நெருக்கடிகளின் மத்தியிலும் புலம்பெயர்ந்து வாழ்க்கையை வளம்படுத்த எண்ணாது தான் பிறந்த மண்ணிலேயே தன் வாழ்நாள் முழுவதும் இசையைப் பயிற்றுவித்துத் தனது அரங்க நிகழ்வுகளால் மக்களைத் தன்வயப்படுத்தி இசையையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்த இசைஞான திலகம், இசைப்பேராசன் திரு இராதாகிருஷ்ணன் அவர்கள், தன் வாழ்க்கையின் இறுதிக் கணத்திலும், நல்லூரின் தெய்வீக இசை அரங்கிற் தன் இசையை மீட்டியபடியே, யாரும் எதிர்பார்த்திருக்காத 6.9.2015 அன்றைய மாலைப்பொழுதில் அந்த நாதப்பிரமத்துடன் இரண்டறக் கலந்து விட்டார்.

“குருர் ப்ரம்மா குரு விஷ்ணு குருர் தேவோ மஹேஸ்வரஹ  குருர் சாக்ஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமக.”

No comments: