மெல்பேணில் கலைவளன் சிசு நாகேந்திரம் அவர்களின் அகராதி நூல் வெளியீடு.சு.ஸ்ரீகந்தராசா

.

அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய மாநிலத்தில் மிகவும் சிறப்பாகத் தமிழ்ப்பணி புரிந்துவரும் கேசீ தமிழ் மன்றத்தினால் வெளியிடப்பட்ட "பழகும் தமிழ்ச்சொற்களின் மொழிமாற்று அகராதி" என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த 3.10.2015 சனிக்கிழமை டண்டினோங்க் மூத்த பிரசைகள் மையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த அகராதியினை ஆக்கியவர் பழம்பெரும் நடிகரும், எழுத்தாளருமான சிசு நாகேந்திரம் அவர்கள். 95 வயதினைத் தாண்டிக்கொண்டிருக்கும் திரு.சிசு நாகேந்திரம் அவர்கள் தள்ளாத முதுமையிலும் தமிழ்ப்பணி ஆற்றுபவர். கேசீ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு ஆதவன் தலைமையில் நடைபெற்றநூல் வெளியீட்டு விழாவின் நிகழ்ச்சிகளைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு சிவசுதன் அழகாகத் தொகுத்து வழங்கினார். நூலாசிரியர் திரு சிசு நாகேந்திரம் அவர்கள், இலங்கையில் அந்த நாட்களில் பட்டி தொட்டியெங்கும் பிரபல்யமாகவிருந்து 1000 தடவைகளிக்கு மேல் மேடையேறிய "சக்கடத்தார்" நாடகத்தில் நடித்தவர்.தமிழ் நாடக உலகில் அளப்பரிய சாதனைகளைப் புரிந்தவர்களான சீசியஸ், குழந்தை சண்முகலிங்கம் ஆகியோருடன் இணைந்து நாடகப்பணியாற்றியவர். நிர்மலா, குத்து விளக்கு. ஆகிய இலங்கைத் தயாரிப்புத் திரைப்படங்களில் நடித்தவர். அந்தக்காலத்து யாழ்ப்பாணம், பிறந்த மண்ணும் புகலிடமும். ஆகிய நூல்களை எழுதியவர். நூல் ஆய்வுரையினை பிரபல எழுத்தாளர்களான சட்டத்தரணி, பாடும்மீன் திரு. சு.ஸ்ரீகந்தராசா அவர்களும், திரு லெ. முருகபூபதி அவர்களும் நிகழ்த்தினர். நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்தினார்.



இந்த விழாவில் செல்வி வைஷ்கர்ணி சாயீசன், செல்வன் கஜானனன் சயீசன் ஆகியோர் நடித்த " செய்வன திருந்தச் செய்" என்ற ஓரங்க நாடகமும், பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சைக்குத் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுக்கவிருக்கும் மாணவ மாணவிகள் பங்குகொண்ட பட்டிமன்ற நிகழ்ச்சியும் இடம்பெற்றன. "புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது அடையாளைத்தை பேணுவதற்குத் தமிழ்மொழ் அறிவு அவசியமா?" என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு கலாநிதி மணிவண்ணன் அவர்கள் நடுவராக நெறிப்படுத்தினார்.






No comments: