.
நாடக உலகிலிருந்து திரையுலகம் வந்து 65 ஆண்டுகளுக்குமேல்
நிலைத்து
நின்ற
கின்னஸ் சாதனையாளர்.
நடிப்பு, ஆடல், பாடல், பேச்சாற்றல் யாவற்றிலும் தனது முத்திரைகளை பதித்தவர் நிரந்தரமாக மௌனமானர்
திரையுலகில் நடிக்கும்பொழுது தான் இணைந்து நடிக்கப்பயந்த மூன்று கலைஞர்களைப்பற்றி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஒரு சந்தர்ப்பத்தில்
கூறியிருந்தார்.
அம்மூவரும்: நடிகையர் திலகம் சாவித்திரி, நடிகவேள் எம்.ஆர். ராதா, சகலகலா ஆச்சி மனோரமா. இன்று இவர்கள் அனைவரும் திரையுலகை விட்டு விடைபெற்றுவிட்டனர்.
இறுதியாக கடந்த 10 ஆம் திகதி சென்றவர் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனைகள் பல நிகழ்த்திய மனோரமா.
தமிழ்சினிமா மிகைநடிப்பாற்றலுக்கு பெயர் பெற்றது. நாடக
மேடைகளிலிருந்து அந்தக்காலத்தில் வந்த நடிகர், நடிகைகளும் அவர்களுக்கு உணர்ச்சியூட்டும் வசனம் எழுதிக்கொடுத்தவர்களும் சினிமா என்றால் இப்படித்தான் இருக்கும் - இருக்கவேண்டும் என்ற கற்பிதம் தந்தவர்கள்.
அதனால் யதார்த்தப்பண்புவாத தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை தமிழ் சினிமாவில் குறைந்தது.
இந்தக்கருத்தை இலங்கைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களும் கனடா மூர்த்தி சிவாஜி கணேசன் மறைந்தபொழுது தாயாரித்த சிவாஜிகணேசன் ஒரு பண்பாட்டுக்குறிப்பு என்ற ஆவணப்படத்தில் நரேற்றராகத்தோன்றி தெரிவித்துள்ளார்.
மனோரமா 1937 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் மன்னார்க்குடியில் பிறந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் கற்றது ஆறாம் தரம் வரையில்தான். வறுமையில் வாடிய இவருடைய குடும்பம் காரைக்குடிக்கு அருகில் பள்ளத்தூர் என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்தது.
கோபி சாந்தா என்ற இயற்பெயர்கொண்டிருந்தவருக்கு கற்றலில் ஆற்றல் இருந்தபோதிலும், மேலும் கற்பதற்கு குடும்பத்தின் பொருளாதார நிலைமை இடம்கொடுக்கவில்லை.
சிறுமியாக இருக்கும்பொழுதே
துடிப்போடு பேசும் ஆற்றல் இவருக்கிருந்தமையினால் அவருடை 12 வயதில் நாடக சபாக்களின் நிகழ்ச்சிகளில் தோன்றினார்.
பள்ளத்தூரிலிருந்து நாடக சபா மேடைகளுக்கு இவர் வந்தமையால் அந்த வட்டத்தில் இவர் பள்ளத்தூர் பாப்பா என்றே முதலில் அழைக்கப்பட்டார்.
பின்னர் இவருக்கு - இவர் ஆரம்ப
காலங்களில் நடித்த நாடக இயக்குநர் ஒருவர் மனோரமா என்ற புதிய பெயரைச்சூட்டினார்.
இவர்போன்று தமது இயற்பெயர்களை தமிழ் சினிமாவில் மாற்றிக்கொண்ட நடிக,
நடிகையர் ஏராளம்.
தொடக்கத்தில் வைரம் நாடக சபாவில் நடித்துவந்த மனோரமா, எஸ்.எஸ். ராஜேந்திரனின் நாடகங்களிலும் நடித்து அவருடைய நாடக மன்றத்தின் நிரந்தர நாயகியானார். கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணாத்துரை ஆகியோரும் இவருடன் பல நாடகங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இவருடைய நடிப்பாற்றலை தொடர்ந்து கவனித்து வந்த எஸ்.எஸ். ராஜேந்திரன் 1950 இற்குப்பின்னர் இவரை சென்னைக்கு அழைத்து வந்து திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
ராஜேந்திரனும் தேவிகாவும் இணைந்து நடித்த ஒரு படத்தில் மனோரமாவுக்கும் வேடம் கிடைத்தது. ஆனால், அந்தத் திரைப்படம் தயாரிப்பில் பாதியில் நின்று வெளிவரவில்லை. சிவாஜி, எம்.ஜீ.ஆர் நடித்த சில படங்களும் முன்னர் வெளிவராமல் தயாரிப்பில் வந்த சிக்கல்களினால் இடையில் நின்றுள்ளன.
மனோரமா நடித்து முதலில் வெளியான படம் கண்ணதாசன் தயாரித்து கதை, வசனம் எழுதிய மாலையிட்ட மங்கை. இதனை ஜீ.ஆர். நாதன் இயக்கியிருந்தார். டி.ஆர். மகாலிங்கத்துடன் இணைந்து அந்தப்படத்தில் நடித்த மனோரமா, பலமொழிகளிலும் பேசி நடிக்கும் ஆற்றலும் மிக்கவர்.
பல
தமிழ்த்திரைப்படங்களில்
மெட்ராஸ் தமிழும் - அக்ரஹாரத்தமிழும் பேசி அசத்தியிருக்கிறார்.
நாடகங்களில் கருணாநிதி, அண்ணாத்துரை ஆகியோருடன் நடித்துள்ள
மனோரமா, தமிழக முதல்வர்களாக அவர்களுக்குப்பின்னர் பதவிக்கு வந்த எம்.ஜீ.ஆர்,
ஜானகி, ஜெயலலிதா ஆகியோருடனும் - ஆந்திராவின் முதல்வராக இருந்த என்.ரி.ராமராவ்
நடிகராக இருந்தபொழுது அவருடனும் சிவாஜி, ஜெமினி, ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா,
நாகேஷ், சோ, பாலையா
, முத்துராமன், சிவகுமார், ரவிச்சந்திரன், கமல்ஹாசன், ரஜினி காந்த்
மற்றும் பல முன்னணி நடிகைகளுடனும் இன்றைய இளம் தலைமுறையினருடனும் நடித்து தமது திரையுலக வாழ்வில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த சாதனையாளர்.
மனோரமா நகைச்சுவை நடிப்பில் மட்டுமன்றி குணச்சித்திர நடிப்பிலும் தனது திறமையை காட்டியிருப்பவர்.
சில படங்களில் வில்லியாகவும் தோன்றினார். மகளாக - காதலியாக,
தாயாக , பாட்டியாக நடித்த படங்கள் அனைத்திலும் அவர் பங்கு சோடை போனதில்லை. அதனால்தான் இவருடன் நடிக்கும்பொழுது தான் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாக சிவாஜி கணேசன் சொல்லியிருக்கிறார்.
சிவாஜி தாம் நடிக்கும் படங்களில் தமது மிகை நடிப்பினால் தனித்துத்தெரிவார். ஆனால், அவருடைய அந்தத்தனித்துவங்களையும் சாதுரியமாகக்கடந்து, குறிப்பிட்ட காட்சிகளில் மனோரமா அசத்திவிடுவார்.
தமிழ்த்திரையுலகம் என்னதான் நட்சத்திரங்கள் மின்னும் கனவுத்தொழிற்சாலையாக இருந்தாலும் அங்கும் சிக்கல்கள் ஏராளம் நீடிக்கிறது.
சில படங்களில் தம்மை விட உயர்வாக ஒரு நடிகர் நடித்துவிட்டால் இயக்குநரிடமும் எடிட்டரிடமும் தமது செல்வாக்கை பிரயோகித்து, தனியாகச்சொல்லி அந்தக்காட்சியை கத்திரியினால் வெட்டவைத்த முன்னணி நடிகர், நடிகைகளும் இருந்திருக்கின்றனர்.
சில நடனக்காட்சிகளில் கூட்டமாக வந்து ஆடும் துணை நடிகைகளில் யாராவது தன்னைவிட அழகாக இருந்தால் கெமராவை அந்த நடிகைகள் பக்கம் அதிகம் திருப்பாமல் கச்சிதமாக
நடந்துகொள்ளவேண்டும் என்று கெமராமேன்களுக்கு உத்தரவிடும் நடிகைகளும் இருக்கிறார்கள்.
காரணம் அந்தத் துணை நடிகைகளின் அழகுத்தோற்றம் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்களை கவர்ந்துவிட்டால் அவர்கள் தமது அடுத்த படத்தில் தம்மை நீக்கிவிட்டு அழகிய புதுமுகங்களுக்கு
இடம்கொடுத்துவிடுவார்கள் என்ற பயம்தான்.
சகநடிகர்களின் திறமையை மதிக்காமல் அந்தரங்கமாக கத்தரிக்கோலை பாவிக்கச்செய்யும் சில முன்னணி நடிகர்கள் பற்றி ஒருசமயம்
ஜெயலலிதாவே சிவாஜி கணேசனின் 150 ஆவது படம் சவாலே சமாளி படத்தின் நூறாவது நாள் விழாவில் சிவாஜிகணேசனுக்கு முன்னாலேயே சொல்லியவர். ஆனால், சிவாஜிகணேசன் அப்படியல்ல. தன்னுடன் இணைந்து நடித்தவர்கள் சிறிய பாத்திரம் ஏற்றாலும் அவர்களை ஊக்குவிக்கும் நல்ல பண்புள்ளவர் என்றும் பாராட்டியிருக்கிறார்.
ஜெயலலிதாவுக்கும் எம்.ஜீ.ஆருக்கும் அவ்வேளையில் சுமுகமான உறவு இருக்கவில்லை. அதனால் அந்தக்கருத்து எம்.ஜீ.ஆருக்கு உவப்பானதில்லை என்றே அன்றைய சினிமா இதழ்கள் பதிவு செய்திருந்தன.
மனோரமா
பாத்திரத்தை உணர்ந்து முயற்சித்து நடிப்பவர். நவரசங்களும்
அவரிடம் காட்சிக்கு ஏற்றவாறு பிரதிபலிக்கும்.
தமிழ் உச்சரிப்பிலும் தேர்ந்தவர். அத்துடன் பிறமொழிப்பிரயோகங்களையும் லாவகமாக வெளிப்படுத்தக்கூடியவர். பேச்சில் மட்டுமல்ல தான் பாடிய பாடல்களிலும் அதனைக்கையாண்டுள்ளார்.
சூரியகாந்தி படத்தில் வரும் தெரியாதோ நோக்கு தெரியாதோ ..... வில் அக்ரஹாரத்தமிழும், பொம்மலாட்டம் படத்தில் வா ...வா.... வாத்தியாரே... வராங்காட்டி நான் விடமாட்டேன்... ஜாம்பஜார் ஜாக்கு நான் சைதாப்பேட்டை கொக்கு என்றும், பாட்டி சொல்லைத்தட்டாதே படத்தில் டில்லிக்கு ராஜாவானாலும் என்ற பாட்டில்
நல்ல தமிழிலும் அவர் பாடியிருக்கிறார்.
திரைலகில் அனைவருக்கும் தனிப்பட்ட முறையிலும் தாயாகவும் சகோதரியாகவும் ஆச்சியாகவும் வாழ்ந்து அனைவராலும் நேசிக்கப்பட்டவர்.
2002 இல் இவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததும்
சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் அனைத்து தலைமுறை நடிகர் நடிகைகளும் திரண்டு வந்து கௌரவித்தனர்.
பிலிம்பெஃயார் விருது தமிழக அரசின் விருது உட்பட பல விருதுகளும் பரிசுகளும் பெற்றுள்ள மனோரமா, உலக நாடுகள் பலவற்றில்
ஏராளமான கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். அனைவருடனும் பந்தா இல்லாமல் சகஜமாக பழகும் இயல்புள்ளவர். இறுதிக்காலத்தில் அவர் சில நோய் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்தார். சூரியா நடித்த சிங்கம் (Part - 1) முதலாவது படத்தில் அவர் பாட்டியாக நடித்திருப்பார். ஆனால், அதன் வசூல் வெற்றியைத்
தொடர்ந்து வெளியான சிங்கம் (Part-02) இரண்டாவது படத்தில், முதல் படத்தின் தொடர்ச்சிக்காக மனோரமாவை இணைத்திருந்தாலும் மிகமிகக்குறைந்த வசனங்களை மாத்திரம்பேசி ஒரு சில காட்சிகளில் மாத்திரமே தோன்றினார். அப்பொழுதே அவருக்கு நோயின் தாக்கம் தொடங்கிவிட்டது என்பதற்கு சிங்கம் - 02 அறிகுறியாக அமைந்தது.
சென்னையில் தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்காரியாலயத்திற்கு அருகில் சிவாஜி கணேசனின் அன்னை இல்லாம் வீடு அமைந்துள்ளது. அதற்கு முன்பாக மனோரமாவின் மகன் பூபதியின் பெயரில் பூபதி இல்லம் அமைந்துள்ளது.
இவர் தனது மகனையும் திரையுலகிற்கு கொண்டுவந்தார். ஆனால் மகன் பூபதியால் சோபிக்க முடியவில்லை. தனிப்பட்ட வாழ்வில் ஒரு நடிகை எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் மனோரமாவும் சந்தித்துள்ளார். அவருடைய காதல் திருமணமும் பூபதியின் பிறப்பின் பின்னர் முறிந்தது. தமது குடும்ப உறவினர்களுக்கெல்லாம் உழைத்துப்போட்ட பெரிய குடும்பத்தலைவி மனோரமா. ஆனால், குடும்ப உறவுகளும் சில சொத்து தகராறுகளில் அவரை நீதிமன்றம் வரையில் இழுத்திருக்கின்றன.
இவரும் ஒரு சமயம் தேர்தல் மேடைகளில் ஜெயலலிதாவுக்கு ஆதரவளிக்கச்சென்று ரஜினி காந்துக்கு எதிராகப்பேசி விமர்சனங்களுக்கும் ஆளாகியவர். எப்படி வடிவேலு விஜய்காந்துக்கு எதிராகப்பேசி தொல்லைகளுக்கு ஆளானாரோ அவ்வாறே மனோரமாவும் ரஜினியின் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளானார். எனினும், ரஜினி காந்த் மிகவும் பெருந்தன்மையுடன் அவருடைய கருத்துச்சொல்லும் உரிமையை மதித்தார்.
நடிகர் நாகேஷின் மனைவி ரெஜினாவின் தம்பி ஒருவரின் மர்ம மரணத்தையடுத்து அந்தக்குடும்பம் விசாரணைகளுக்கு உள்ளானபோது நாகேஷ_டன் அவ்வேளையில் அதிக படங்களில் நடித்துக்கொண்டிருந்த மனோரமாவும் விசாரிக்கப்பட்டார்.
ஏழ்மையில் பிறந்து, உரிய கல்வி வாய்ப்பு பெறமுடியாமல் குடும்பத்தை தமது நடிப்பினால் காப்பாற்றுவதற்கு தமது 12 வயதிலேயே நடிக்கச்சென்ற மனோரமா திரையுலகிலும் ரசிகப்பெருமக்களிடமும் ஒரு மதிப்பிற்குரிய ஆச்சியாகவே விடைபெற்றுக்கொண்டு மறைந்துள்ளார்.
மனோரமா தமிழ்த்திரையுலகில் ஒரு சகாப்தம். அவர் குறித்த ஆவணப்படங்கள் எதிர்காலத்தில் தயாராக
வேண்டும்.
letchumananm@gmail.com
No comments:
Post a Comment