.
மித்ர பதிப்பகமும் பூவரசி மீடியாவும்
இணைந்து வழங்கிய அவுஸ்திரேலிய ஈழத்து கவிஞர், எழுத்தாளர்
ஆணியின் அங்கஹாரம் நாவல் மற்றும் அம்மா பாடல் இறுவெட்டு
வெளியீட்டு விழா பெப்ருவரி 28 ஆம் திகதி
சென்னை புக்பாயின்ட் அரங்கத்தில் இனிதே நிறைவேறியது. புதிய தலைமுறை ஆசிரியர் மாலன்
தலைமையில் நடைபெற்ற விழா அமரர் எஸ்போ நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன்
ஆரம்பமானது. பூவரசி பத்திரிகை ஆசிரியர் ஈழவாணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
பேராசிரியர்கள் ரவிக்குமார், பார்வதி வாசுதேவ் ஆகியோரின் ஆசியுரைகள்
இடம்பெற்றன. பேராசிரியர் வாசுதேவ் ஆணியின் முன்னைய நாவலான எந்தையும் நானே என்ற
நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவராவார்.
எழுத்தாளர், இயக்குனர் கௌதம சித்தார்த்தன் அங்கஹாரம் நாவலை வெளியிட்டு வைக்க ஈழத்து
பேராசிரியர் பார்வதி நாகசுந்தரம் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர், இயக்குனர் விஜயபத்மா அம்மா இறுவெட்டை வெளியிட பாவையர் மலர் ஆசிரியர்
வான்மதி பெற்றுக்கொண்டார். கல்கி ஆசிரியர் அ வெங்கடேஷ் அங்கஹாரம் நாவல் பற்றிய விமர்சன உரை
நிகழ்த்தினார்.
பதினைந்தாம் நூற்றாண்டு கம்போடியாவைப்
பின்புலமாகக் கொண்ட இந்த சரித்திர நாவல் தமிழ் இலக்கிய உலகத்தில் முன்னர் ஒருவரும்
தொடாத விடயங்களைத் தொடுகின்றது. நானூறு பக்கங்கள் கொண்ட இந்த நாவல் தமிழ் இலக்கிய உலகிலே
முக்கியமான ஒரு படைப்பாகும். அறுநூறு
ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டு வந்த கைமர் சாம்ராச்சியத்தின் அந்திம காலத்தை
மையமாகக் கொண்ட இந்த நாவல் அழிவை எதிர்நோக்கும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்
கொள்ளச் செய்து கொள்ளும் பிரயத்தனங்களைச் சித்தரிக்கிறது. கைமர் ராச்சியத்தின் வீழ்ச்சிக்குக் காலநிலை
மாற்றமும் ஒரு காரணியாய் இருந்திருக்கலாம் என்ற நவீன ஆராய்ச்சி முடிவுகளையும்
இந்தக் கதாசிரியர் கருத்திற்கொண்டதைப் பாராட்டிப் பேசப்பட்டது. பல இடங்களில்
விறுவிறுப்பாகச் செல்லும் கதை சில இடங்களில் கொஞ்சம் கட்டுரைத் தன்மையுடன் செல்வது
விமர்சிக்கப்பட்டது. மகேந்திரவர்மனும் போலோமாவும் உறைந்து போன அகழிக்கு அடியில்
நீந்தித் தப்பும் காட்சி அற்புதமாக இருந்தது எனக் கூறிய திரு வெங்கடேஷ்
காமத்துக்கு தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆரம்பத்தில் கல்கியின் பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் வீர நாராயண
ஏரிக்கரையில் குதிரையில் செல்லும் காட்சியை நினைவு படுத்தும் வகையில் கதை
அமைந்திருந்தது என்றார்.
அம்மா இசை இறுவெட்டு
ஆணியின் கவிதை நூலான விந்தையாய் விரியுதடியில் இடம்பெற்ற ஏழு ஆன்மீகப் பாடல்களை
இசை வடிவில் தருகிறது. ஈழத்து இசை அமைப்பாளர் சாய்தர்ஷன் அழகாக இசை அமைக்க அருணா சாயிராம் உட்படப் பல பாடகர்கள் பாடியிருந்தார்கள். இசை அமைப்பாளர் சாயிதர்ஷன் பேசும் போது
ஈழத்து உணர்வுகளை வைத்து பணம் பண்ணும் திரையுலகம் ஈழத்துக் கலைஞருக்கு
வாய்ப்பளிக்க மட்டும் தயங்குவது ஏனோ என்று வினவினார். தனக்குச் சந்தர்ப்பம்
அளித்ததற்கு நன்றி கூறினார், பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று அமையாமல் எண்சீர் விருத்தங்களாக அடுக்கடுக்கான
வார்த்தைகளுடன் கூடிய கவிதைகளுக்கு இசை அமைப்பது எவ்வளவு கடினம் என்று
விளக்கினார். அம்மாதான் பிள்ளையைப் பெறுவது வழமை. இங்கு பிள்ளையே கஷ்டப்பட்டு
அம்மாவைப் பெற்றிருக்கிறது என்றார்.
பேராசிரியர் யாழினி முனுசாமி பாடல்களை
விமர்சித்தார். அவர் அம்மா என்ற பாடலையும் வானகத்தைக் கார்மூடி என்ற பாடலையும்
சிலாகித்து அலசினார். ஆன்மீகத்தில்
ஈடுபாடில்லாத தன்னைக்கூட பாடல்களில் உள்ள சமூக சீர்திருத்தக் கருத்துக்கள்
கவர்ந்தன என்றார்.
ஆணியின் உரையின் போது விழாவிற்கு வருகை தந்த
அறிஞர்களுக்கும் அன்பர்களுக்கும் நன்றி கூறினார். சிறு வயதிலேயே படித்து சுகித்த
கல்கியின் தாக்கம் தனது எழுத்தில் இருந்திருக்கக் கூடும் என்பதை ஏற்றுக்கொண்ட அவர்
பதினைந்தாம் நூற்றாண்டு கம்போடியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் வனையப்பட்ட இந்த
நூலிலே அந்தக் காலத்து அந்தந்த நாடுகளின் சமூக அமைப்பு, அரசியல், கலாச்சாரம்
போன்றவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதற்கு அவற்றை வர்ணிப்பது தவிர்க்க
முடியாதது என்றார். காமம் இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர் தமது பெண் பாத்திரங்கள்
கல்கி சாண்டில்யன் போன்றவர்களின் பெண்கள் போல அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
போன்ற குணங்களைக் கொண்டிருக்கப் போவதில்லை என்றும் மாறாக பாரதியின் புதுமைப் பெண்
போலவே இருப்பார்கள் என்றும் கூறினார். சுய நம்பிக்கையும் ஆளுமையும் கொண்ட பெண்கள்
தங்கள் உணர்ச்சிகளை ஒளித்துப் பாசாங்கு செய்யாமல் நேராகத் தங்கள் எண்ணங்களை
வெளிக்கொணர்வார்கள் என்றும் கூறினார். இதுவே இன்றைய வாசகர்களின் எதிர்பார்ப்பும்
என்றார்.
ஒரு இனம் அழிவை எதிர்நோக்கும் போது
என்னவெல்லாம் செய்ய முயல்வார்கள் என்று கற்பனை செய்ததில்விழைந்ததே இந்த நாவல்.
அண்மையில் நாம் முள்ளிவாய்க்காலில் கண்ட காட்சிகளை நினைவு கூற வேண்டும் என்றார் ஆணி. அம்மா என்ற பாடலைப் பற்றிக் கூறும் போது
சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்ட தனக்கு மூன்று தாய்கள் என்றும் அவர்களில்
இப்போது உயிரை இருப்பவர் பேராசிரியர் பார்வதி நாகசுந்தரம்
மட்டுமே என்றார். ஆணியின் ஏற்புரையுடன்
பாடல் ஒலிபரப்போடு நிகழ்ச்சி நிறைவுற்றது.
No comments:
Post a Comment