விழுதல் என்பது எழுகையே" - பகுதி 42 காசி.வி. நாகலிங்கம் யேர்மனி.
மறுநாள் விடிந்தது. ஆனால் வெளியே சூரியனின் ஆதிக்கம் இருக்கவில்லை. நீலவானம் பளிச்சென்று இருக்க, வெண்முகில்கள் ஆங்காங்கே நீந்திக் கொண்டிருந்தன. பகலவன் வரப்போகின்றான் என்ற மழையற்ற காலநிலை தெரிந்தது.
காலநிலை என்பது ஒரு முக்கிய அம்சம் வகிக்கின்றது. செய்தி அறிக்கையுடன் காலநிலை பற்றியும் அறிவிக்கப்படும். இதனைப் பலரும் உன்னிப்பாகக் கவனித்துக் கொள்வார்கள். பனிகாலங்களில் சறுக்கும் அபாயங்கள். வீதி விபத்துக்களும் அதிகமாக இருக்கும். கார்க்கடைகளுக்கும் கறாஜ் வைத்து கார் திருத்துபவர்களுக்கும் வருமானம் பெருகும். நடக்கும்போதுகூட பாதையில் உறைந்திருக்கும் பனி, விழப்போகிறோம் என்று நாம் உணர முன்பே எம்மை, வழுக்கி வீழ்த்திவிடும். இதனால் எலும்பு முறிவுதறிவு டாக்டர்களிடம் கூட்டம்கூடும். இன்னமும் பனிகாலம் என்பதால், திடீர் வசதிவந்த மனிதர்கள் சிலர், திடீர்திடீர் என்று மனதை மாற்றிக்கொள்வது போல, ஐரோப்பாக்காலநிலை தலைகிழாக மாறலாம். சரி இது கிடக்கட்டும். நாங்கள் விவேக் வீட்டில் சீலன் படுத்தானா, விடிய எழுந்தானா? அங்கு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
இன்று விவேக்கும் வவாவும் சீலனுக்குரிய முக்கிய வேலைகளைக் கவனிப்பதற்காக நேரத்தை ஒதுக்கியிருந்தார்கள்.


காலைச்சாப்படு அந்த மாதிரி, புறோச்சின் என்ற ஜேர்மன் பேக்கரிகளில் காலைநேரத்தில் குவிந்து கிடக்கும் பணிஸ் உடன் பொரித்த முட்டையும் சாப்பிட்டு பால்ரீயும் குடித்த போது சீலனுக்கிருந்த மனக்கவலைகள் தற்காலிமாக மறைந்து போக, வயிறு மகிழ்ச்சியில் ஊஞ்சலாடியது. தலை மட்டும் கொஞ்சம் இடித்துக் கொண்டிருந்தது. இதனை வவா அன்ரியிடம் சொன்னான். நித்திரை குறைவு என்றாதாலை தலைஇடிக்குது போலை என்று வீட்டில் இருந்த தலையிடிக்குளிசை ஒன்றையும் விழுங்கத் தண்ணீரும் கொடுத்தா வவா.
டேவிட்க்கு விவேக் ரெலிபோன் எடுத்து, சீலனை ஜேர்மனிக்குக் கூட்டி வந்த விடயத்தை விபரித்துக் கொண்டே ரீயையும் குடித்தார். இவர்களுக்குள் எப்படி அறிமுகம் என்று நீங்கள் அறிந்திருப்பீர்களோ தெரியாது, பள்ளிக்கூடங்களில் ஒன்றாகப் படித்திருக்கலாம், ஓட்டப் போட்டிகளில் முதலாம் இடத்துக்கு வாறதுக்குப் போட்டி போட்டவர்களாக இருக்கலாம் அல்லது ஒரு இடத்திலை வேலை பார்த்திருக்கலாம். எப்பிடியோ சந்தித்து நல்ல நம்பிக்கையான நண்பர்களாக நீண்டகாலமாகத் தொடர்புகளை வைத்துக் கொண்டிருக்கிறர்கள் என்பது உண்மை.
நண்பர்கள் என்னும் போது அதுவும் வெளிநாடுகளில் சந்தர்ப்ப வசமாகப் பழகிய நட்புக்களில் எந்த அளவுக்கு அன்பு பாசம் இணைந்து இருக்கிறது என்பது சரியாகச் சொல்ல முடியாது. இருக்கிற மாதிரியும் இருக்கும் இல்லாத மாதிரியும் இருக்கும்.
ஒருவனுக்கு வாழ்க்கையில் நம்பிக்கைக்குரிய ஒரு நண்பனாவது (உயிர் கொடுக்க வேண்டாம்) கண்ணீர் துடைக்க இருந்தால் போதும், வாழ்க்கை வாழ்ந்ததாக இருக்கும்.
விவேக் ரெலிபோன் கதைத்து முடித்து அதைச் சீலனிடம் கொடுத்தார். அவன் மகிழ்ச்சியும் நன்றியும் பொங்க டேவிட்டுடன் கதைத்தான்.
„சீலன் நீ வந்திருப்பது இலங்கைத் தமிழர்களுக்கு அடைக்கலங்கொடுத்து, தாங்கி வைத்திருக்கும் சொர்க்கபூமி. சட்டமும் ஒழுங்கும் கட்டப்பாடும் நிறைந்த தேசம். எங்கள் பிள்ளைகள் படித்து முன்னேற, பாரபட்சமின்றிக் கைகொடுத்து உதவுகிறது. பரந்த மனம் படைத்த, வசதிகள் வாய்ப்புக்கள் கொண்ட நாடு. இனி உன் ஆட்டத்தை நீ ஆடு! கொடி கட்டிப் பறப்பாய் தர்மசீலா! உனக்கு மற்றவர்கள் விட்ட சவால்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று பறந்தோடும்!…….. சரியா? … விவேக் உனக்கு வேண்டிய உதவி எல்லாம் செய்து தருவார் ஒன்றுக்கும் யோசிக்காதே! பிறகு கதைப்போம்.“
ரெலிபோன் உரையாடலின் பின் சீலனின் உள்ளம் உற்சாகத்தால் நிறைந்தது.
முதலில் சீலனுக்கு வீட்டுப்பதிவு செய்ய வேண்டும்.
ஜேர்மன் நாட்டுக்கு யார் வந்தாலும் அவர் எங்கு தங்கி இருக்கின்றார் என்ற பதிவு (அன்மெல்டுங்) செய்ய வேண்டும்.
வவாவும் விவேக்கும் தங்களுக்கு நீண்டகாலப் பழக்கமான ஜேர்மனியர்கள் வீட்டின் மேல் மாடியில் சீலன் வாடைக்கு இருக்க ஒழுங்கு செய்து, அதற்கான பதிவுப்பத்திரஙகள் அரசஅலுவலகத்தில் எடுத்து வீட்டுப் பதிவு செய்தாகிவிட்டது.
அடுத்து மிக முக்கிய விடயம், அகதி விண்ணப்பம் வெளிநாட்டலுவலகத்தில் கொடுக்கவேண்டும். பெரிய புதிய கட்டிடத்தில் அந்த அலுவலகம் இருந்தது. அந்தக்காலத்தில் 1979 களில் அந்த அலுவலகத்தை நினைத்தாலே நடுநடுங்கும். தகுந்த வீசா இல்லாமல் இருந்தவர்களை, படுத்திருந்த உடுப்போடு அள்ளிக் கொண்டு சென்று… பிறகு தகுந்த உடுப்பு அணிவித்து… விமானத்தில் ஏற்றி அவரவர் சொந்தநாட்டுக்குத் திருப்பி அனுப்பிவிடும் அதிகாரம் அவர்களுக்கு இருந்தது. இப்படி நிகழ்ந்த சம்பவங்களைக் கண்கூடாகக் கண்டவர்களுக்குப் பயம் வரத்தானே செய்யும்!
இப்போ காலம் மாறி நம்மவர்களில் அதிகமானோர் பிரஜா உரிமை எடுத்துவிட்டார்கள். வெளிநாட்டலுவலகம் ஊரிலிருந்து உறவினர்களை ஸ்பொன்சரில் அழைப்பது போன்ற அலுவல்களுக்கு மட்டுமே என்ற அளவில் இருந்தது.
டொல்மேச்சர் நடா, விவேக்கின் நெருங்கிய நண்பர். அவரிடம் சீலனின் நிலைமையைக் கூறி, ஆலோசித்தபோது தான் வெளிநாட்டலுவலகத்துக்குச் சீலனை கூட்டிச் சென்று அகதி விண்ணப்பம் செய்ய முன்வந்தார்.  சீலனிடம் கைவசம் இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு வரும்படியும் சொன்னார். அவர் இத்தகைய விடயங்களை ஆரம்பத்திலே இருந்து செய்து வருவதால், நல்ல அனுபவசாலியாகவும் அத்துடன் உதவிசெய்யும் தாராள மனப்பான்மை கொண்டவராகவும் இருந்தார். அன்றே விவேக் வீட்டுக்கு வந்து சீலனைச் சந்தித்துப் பேசினார். டாக்டராக வரமுடியும் என்ற நம்பிக்கையுடன் பல்கலைக்கழகம் சென்றவன், விதியின் சதியால், நட்டாற்றில் கப்பல் கவிண்டு, ஆதரவற்று தவிப்பவன் போல்,  மருத்துவப்படிப்புக் குழம்பி, காதல்வாழ்க்கையும் கேள்விக்குறியாய் நிற்கும் சீலனின் கதையைக் கேட்க, டொல்மெச்சர் நடாவுக்கும் கண்கள் கலங்கியன. இப்படி எத்தனை இலட்சம் இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கித் துன்பச்சேற்றுக்குள் புதைத்துச் சென்றிருக்கின்றது போர் என்னும் பயங்கரச்சூறாவளி என்று வேதனைப்படுவதைத் தவிர, நாம் வேறு என்ன செய்யமுடியும்? அன்பையும் சமாதானத்தையும் சிறுவயதில் இருந்தே பிள்ளைகளுக்குப் போதிப்பதன் மூலம் போர்கள் உருவாவதை ஓரளவு குறைக்க முடியுமே தவிர, போர்களைத் தடுக்க முழுதான வழிகள் கிடைக்குமா?
வெளிநாட்டுஅலுவலகத்தில் சீலன் நடாவுடன் சென்று, அகதிக்குரிய விண்ணப்பம் செய்துவிட்டான். அவன் எதிர்பார்த்துப் பயந்தது போல் ஏதும் நடக்கவில்லை. தமிழ்மக்களுக்கு இலங்கையில் பிரச்சனை என்றது, பல்வேறு வடிவங்களில் அந்த அலுவலகத்தில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பதியப்பட்டிருக்கு. பிறகென்ன…. சீலனுக்குத் தற்காலிக வீசாக் கொடுத்து, ஜேர்மன் என்ற பெரிய தேசம் அவன் இம்மண்ணில் வாழ இடந்தந்தது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை கொழும்பில் தங்கியிருந்த அம்மாவுக்கும் தங்கை ரேணுகாவுக்கும் தெரிவித்துவிட்டான். டேவிட், டென்மார்க் ஆனந்தர், சுவீஸ் தவம், பானு ஆகியோருக்கும் சொல்லிவிட்டான். சீலனுக்கு விசா கிடைத்தது எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால் தவம் சொன்ன, பத்மகலா பற்றிய அந்தத் தகவல், அவனைக் கொஞ்சம் நோகடிக்கத்தான் செய்தது. என்ன செய்வது காதல் என்றால் இன்பம் பொங்கும் அழகான தாமரைக்குளம் என்று இளைஞர்கள் நினைக்கலாம். அதற்குள் இறங்கியவர்களுக்குத்தான் தெரியும் அது பலருக்கு, உயிர் கொல்லும் ஆழங்காண முடியாத ஆழியாகவும் மாறிவிடலாம் என்று. இனிமேல் இந்தச் சிந்தனை வேண்டாம் என்று ஏற்கனவே சீலன் பத்மகலாவின் காதலை இதயத்தின் ஒரு மூலைக்குள் தள்ளி மூடி வைத்துவிட்டான். இனி இதற்குக் காலமே பதில் சொல்லும் என்று தன் கடமைகளைச் செய்வதில் கவனத்தைத் திருப்பினான்.
சீலனின் மனம் ஓரளவு பயம் குறைந்து மீண்டும் தன் சுயநிலைக்குத் திரும்பியிருந்தது. மனத்துணிவும் அறிவும் சீலனிடம் இருந்தபோதும் அன்னிய நாட்டில் மொழிதெரியாமல் வீசா, தங்க வீடு ஏதும் இல்லாததால் அவன் மனம் பெரும் தவிப்பில் துடித்துக்கொண்டிருந்து. விசா கிடைத்ததும் அவன் வேலை தேடத்தொடங்கினான்.
பனிகாலம் விடைபெற்றுச் செல்ல கோடைகாலத்தின் ஆரம்பம் பூ மொட்டுக்களாக தலைகாட்டின.
வவா அன்ரி, தான் வேலை செய்யும் மனநோயளார் பராமரிப்பு இல்லத்தில் தோட்ட வேலைக்கு ஆள்தேவை என்று எழுதிப்போட்டிருக்கினம், என்று கூறி, சீலனை அந்த வேலைக்கு எழுதிப்போட வைத்தா. அணைவு இல்லாமல் வேலை எடுப்பது கடினம் என்பதை அவர்கள் அனுபவத்தில் கண்டிருக்கின்றார்கள். இதனால் இது பற்றி சீலனை அவன் தங்கியிருந்த வீட்டுக்காரருடன் கதைக்கும்படி விவேக்கும் வவாவும் அவனுக்கு ஆலோசனை கூறினர்.
சீலன் இதுபற்றி அவன் வாடைக்கிருந்த வீட்டுக்காரருக்கு எடுத்துரைத்தான். அவன் மீது இரக்கம் கொண்டிருந்த அவர்கள், அந்த இல்லத்தின் நிர்வாகத்துக்கு ரெலிபோன் எடுத்து, சீலனுக்கு அந்த வேலையைக் கொடுத்துதவும்படி கேட்டனர். அவர்களும்; அதற்குச் சம்மதித்தனர்.
தோட்ட வேலை என்பதால் பாசைக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் சீலனுக்கு அந்த வேலை எளிதில் கிடைத்துவிட்டது. அவனைப் போன்று இன்னும் பலர் அந்த வேலையை தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் செய்து கொண்டிருந்தனர். சீலன் வேறொரு அனுபவம் மிக்க வயதான ஒருவருடன் சேர்ந்து வேலைசெய்ய நியமிக்கப்பட்டிருந்தான்.
எட்டுமணித்தியாலங்கள் தோட்ட வேலை செய்வது என்றால் சாமனியமானதா? பழக்கமில்லாத வேலை என்பதால் ஆரம்பத்தில்  கை, கால், முதுகு எல்லாம் பெரும் உளைவைக் கொடுத்தது. உள்ளங்கை கண்டி, புண்ணாகி வேதனையாக இருந்தது. கடினமான வேலை சம்பளம் அதிகம் இல்லை என்றாலும் இப்போதைக்கு இந்த வேலை கிடைத்தது பெரும் நிம்மதியைக் கொடுத்தது. காலை நேர வேலை. என்றதால் பின்னேரம் அவனுக்கு நிறைய நேரம் இருந்தது. இனி மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சீலன் யோசிக்கத் தொடங்கினான்.
‘அம்மாவும் தங்கச்சியும் மீண்டும் ஊருக்குப் போய் சொந்த வீட்டில் இருக்கலாம் அல்லவா? கொழும்பில் தகுந்த துணையும் இல்லாமல் உதவிகளுக்கு அடுத்தவர்களிடம் எதிர்பார்த்துக் கடமைப்படுவதை விட, திரும்பிப் போனால் சொந்த வீட்டில் நிம்மதியாய் இருக்கலாம். அயலவர்கள், சொந்தக்காரர்கள், ஊரவர்கள் கோயில் குளம் என்று அம்மாவுக்கும் மனதுக்கு நிம்மதியாக இருக்கும். தங்ச்சியும் முதற் படித்த பள்ளிக்கூடத்தில் படிப்பைத் தொடரலாம், யாழ்ப்பாணத்தில் இல்லாத படிப்பா!‘ என்று நினைத்தவன், இதுபற்றிக் கதைக்க கொழும்புக்கு ரெலிபோன் எடுத்தான்.
தங்கச்சி ரெலிபோனை எடுத்து, „கலோ அண்ணை!“ என்றாள். ஆந்தக்  குரலின் உயிர்த்துடிப்பு சீலனின் நெஞ்சில் பாசமழையை அள்ளி இறைத்தது.
இந்தப் பாசம்…. வெளிநாட்டில், பணவசதி வந்ததனால்….. திருமணம் செய்து கொண்டதனால்…..உறவுகள் வெடித்து, இடைவெளி கண்டு, விம்மிக்கொண்டு இருக்கிறவர்களையும் நிறையவே காணக்கூடியதாக இருக்கின்றது.
சீலன், தங்கையிடம் சுகம் விசாரித்தபின், தன் மனக்கருத்தை வெளிப்படுத்த நினைத்தான். கொழும்பில் எல்லா வசதிகளுடனும் இருக்கும் அம்மாவையும் தங்கையையும் திரும்பி ஊருக்குப்போங்கோ என்று சொல்ல அவன் மனம் சங்கடப்பட்டது. அதற்குள் தங்கை ரேணுகா முந்திக்கொண்டாள்.
„அம்மா உன்னோடை கதைக்கவேணும் என்று சொன்னவ, ஊருக்குப் போனால் நல்லது என்று நினைக்கிறம் அண்ணை! இங்கை வசதிகள் இருந்தாலும் எங்களுக்கு சொந்தஊர் மாதிரி வருமா அண்ணை.“
„உன்ரை படிப்பு?“
„என்னண்ணை கேக்கிறாய்? நீ அங்கை படிச்சு மெடிசீன் என்ரர் பண்ணேல்லையே? அங்கையில்லாத படிப்பே அண்ணை. நான் அங்கை போய்ப் படிப்பன் நீ ஒண்டுக்கும் யோசிக்காதையண்ணை…. அதோடை அம்மா என்னைப் படிக்க விடாமல் கலியாணம் செய்துவைக்கத்தான் யோசிக்கிறா. எனக்குப் படிக்கத்தான் விருப்பம். இப்ப எனக்கு கல்யாணத்துக்கு ஒரு அவசரமும் இல்லையண்ணை….. அம்மாவுக்கு நீ சொல்லு.“ என்றாள் சீலனின் தங்கை ரேணுகா.
„உனக்குப் படிக்க விருப்பமில்லை என்றெல்லோடி நான் நினைச்சன்.“
„இல்லையண்ணை, அம்மாதான் படிக்கிறதெண்டால் காசுச் செலவாகும்…… நீயும் வெளிநாடுபோய்க் கஸ்ரப்படுகின்றாய்….. அதோடை மேலை மேலை படிச்சால், பிறகு படித்த மாப்பிள்ளை தேடவேண்டும். நிறையப் பணமும் தேவைப்படும். எங்களிட்டை எங்கையண்ணை கிடக்கு.“
„எடி தங்கச்சி! அண்ணை இருக்கிறனடி! நீ தாரளமாய்ப் படி! நான் ஜேர்மனில் இருக்க விசாவும் கிடைத்துவிட்டது. அதோடை எனக்கு வேலையும் கிடைத்து விட்டது.“
„காசெல்லாம் பெரிய விடயம் இல்லையண்ணை! நீ தங்க இடமில்லாமல் தகுந்த சாப்பாடில்லாமல் கஸ்ரப்படுறதுதான் எங்களுக்குக் கவலையாக இருக்கு!“
„நீ கவலைப்படதை! ஜேர்மனிக்கு வந்த பிறகு கடவுளருளாலை எல்லாம் கிடைச்சிருக்கு. எனக்கு இங்கை எந்தக் கஸ்ரமும் இல்லை.“ என்று தங்கைக்கு தன் முன்னேற்ற நிலையை எடுத்துரைத்தான். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த ரேணுகா, „இதை அம்மா கேட்டால் மிகவும் சந்தோசப்படுவா, குடுக்கிறன் கதையண்ணை!“ என்று தாயிடம் ரெலிபோனைக் கொடுத்தாள்.
„அப்பு என்ரை குஞ்சு எப்படியடி இருக்கின்றாய்?“ என்ற சீலனின் தாய், மகனின் குரல் கேட்ட சந்தோசமும், கண்காணாத தேசத்தில் அவன் பிரிந்திருக்க வேண்டிவந்துவிட்டதே என்ற சோகமும் ஒருங்கே அவள் நெஞ்சைத்தொட தொண்டை அடைத்துக்கொண்டது.
„அம்மா! ஏன் அழுகிறீங்க? நான் நல்லா இருக்கிறன். அழாமல் கதையுங்கோ! வேலையும் கிடைச்சிட்டுது. எனக்கு இங்கை எந்தக் கஸ்ரமும் இல்லை.“ என்று சீலன் பலமுறை உறுதியாகக் கூறிய பின்தான் தாயின் மனது சற்று சமாதானமடைந்து பேசும் நிலைக்கு மீண்டது.
„என்ரை பிள்ளை நீ நல்லா இருக்க வேணும் என்று நான் கும்பிடாத கடவுள் இல்லை. ஏதோ கூடாத காலம் எங்களைப்போட்டு உலைக்குது.“
„அது கிடக்கட்டும் அம்மா, யாழ்ப்பாணம் திரும்பிப்போக யோசிக்கிறீங்கள் என்று தங்கச்சி சொன்னாள் உண்மையோ?“
„ஓமடா குஞ்சு, அங்கை எல்லாம் நல்லத்தானே இருக்கு. சொந்த பந்தங்களோடை இருந்தா மனதுக்கு நிம்மதியாய் இருக்கும். அங்கை போய் உன்ரை தங்கச்சிக்கும் ஒரு கல்யாண ஒழுங்கையும் செய்ய வசதியாக இருக்கும்.“
„இல்லை அம்மா அவளைப் படிக்க விடுங்கோ! அவள் படிக்கட்டும்.“
„அவள் படிச்சு என்னத்தை சாதிக்கப் போறாள்? நேரகாலத்துக்கு கலியாணங் கட்டிக்கொடுத்தால் குடும்பம் பிள்ளைகுட்டி என்று சந்தோசமாக இருப்பாள் எண்டு நினைச்சன்.“
„அம்மா! படிப்பிலை ஆண்பிள்ளை பெண்பிள்ளை வேறுபாடு பார்க்கக் கூடாது. இந்தப் பெரிய ஜேர்மன் தேசத்தை அங்கேலா மார்க்கல் என்ற அம்மா தான் ஆள்கிறா. எவளவு திறமையாக இந்த வல்லரசு நாட்டை ஆளுகிறா. எத்தனை நாட்டு அரசியல் தலைவர்களுடன் சரிசமமாக இருந்து வாதிட்டு நாட்டுக்கும் உலகத்துக்கும் நன்மை ஏற்படுத்துவதுக்காகப் பாடுபடுகின்றா! அதுதான் தங்கச்சி விருப்பப்படி விடுங்கோ! படிக்கட்டும்.“
„அவள் பிள்ளை படிக்கிறதெண்டால் படிக்கட்டும் நான் தடுக்கேல்லை. ஊருக்குப் போனாலும் முன்பு படித்த பள்ளிலேயே படிக்கலாம் தானே!“
„ஓம் அம்மா, படிக்கலாம். என் படிப்பு இனி எப்படி என்று சொல்ல முடியாது. அதுவும் நான் டாக்டருக்கு படிக்கப்போறது இல்லை.“
„ஏன் குஞ்சு இப்பிடிச் சொல்லுறாய்! உன்னுடைய கனவு அது தானே?“
„இல்லை அம்மா. இப்போ இல்லை. டாக்டர் படிப்பு நல்லது தான் என்றாலும் அதுக்கும் ஈடான வேறு படிப்புகளும் இந்த நாட்டிலை இருக்கு என்று அறிகிறேன். காலம் வரும்போது நான் பார்த்துக் கொள்ளுகின்றேன். இப்ப தங்கச்சி படிக்கட்டும்! அவளை டாக்டராக்கி நான் காட்டுறன்.“;
„சரி! நீ சொல்லுறபடி செய்யிறன். நீ எங்களை நினைத்துக் கவலைப்படாதை! ரேணுகாவின் கால் காயமும் மாறிவிட்டது. அவள் முன் போல வடிவா நடக்கிறாள். நாங்கள் வாறகிழமை ஊருக்குப் போகலம் என்று இருக்கிறம்.“
„காசு எவளவு அனுப்பிறது? கடன் இன்னும் இருக்கோ?“
„நீ கடைசியா அனுப்பினதிலை கடன் எல்லாம் கொடுத்திட்டன். வசதிப்பட்டால் இருபதினாயிரம் அனுப்பு“
„உண்டியல்லை குடுத்து நாளைக்கே கிடைக்க ஒழுங்கு செய்யிறன்“ என்று சீலன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கைத்தொலைபேசி காசு முடியப்போகிறது என்று அறிவித்தது.
„அம்மா! போன் காசு முடியுது. நான் பிறகு கதைக்கிறன் என்று சொல்ல, தொடர்பும் தானாகவே நின்றது.
அம்மாவுடனும் தங்கையுடனும் கதைத்தது சீலனுக்குப் பெரும் பாரம் குறைந்தது போல இருந்தது. அவர்கள் ஊருக்குத் திரும்பிப்போவது, தங்கை படிக்கும் ஆவலுடன் இருப்பது என்ற செய்திகள் அவன் மனதுக்குச் சந்தோசத்தைக் கொடுத்தன.
மனநோயாளர் பராமரிப்பு இல்லத்தில் சீலன் வேலைசெய்த நேரங்களில் அவன் காணும் அந்தக் காட்சிகள் மனதை நெகிழ வைத்தன. கடவுளே! உன் படைப்பில் ஏன் இப்படி ஒரு அவலக்கோலம்? பாவம் இந்த மனிதர்கள்! என்று சீலன் கவலைப்பெருமுச்சு விட்டான். நரம்புக் கோளாறு காரணமாக அவர்கள் சுயபுத்தி இழந்து, தாங்கள் என்ன செய்கின்றோம் என்று தெரியாது, சின்னஞ்சிறுகுழந்தைகள் போல் சுத்துவதும் கத்துவதும் கூவுவதும் குளறுவதும் அடிப்பதும் உடைப்பதும் என்று செயற்பட்ட விதங்களைக் கண்டபோது, மனித வாழ்க்கையே ஓர் அற்பமாகத் தோன்றியது. இந்தப் பைத்தியக்கார நிலை, என் போன்ற சாதாரணமானவர்க்கு வர எவளவு நேரமாகும்? இதற்குள் காதல், கத்தரிக்காய், நீ பெரிது, நான் பெரிது என்று யாரிபிடித்து யுத்தம் புரியும் மமதை!  ஆணவம், அதிகாரம் என்று துள்ளிக் குதிக்கும் மனிதர்களைச் சிறைபிடித்துவந்து சில காலம் இவர்களுடன் அடைத்து வைத்தாற் போதும் அவர்கள் மனிதர்கள் ஆகிவிடுவார்கள் என்று நினைத்தான்.
புத்தருக்கு ஞானம் பிறந்தது போல் சீலனுக்கும் அவனையறியாமல் பீடித்திருந்த அறியாமை விலகியது. இனி தான் என்ன செய்ய வேண்டும் என்ற முடிக்கு அவன் வந்தான்.
‘உழைக்க வேணும்  படிக்க வேணும் உதவ வேணும். மனிதருக்கு உதவக்கூடிய ஒரு படிப்பு நான் படிக்க வேணும். இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் நான் படிப்பேன். படித்து உதவிபுரிந்து கொண்டே வாழ்வேன்! வாழ்ந்து கொண்டே சாவேன்! செத்த பிறகும் வாழ்வேன்!‘ என்று சீலன் தன் மனதுக்குள் ஓர் உறுதி எடுத்துக் கொண்டான்.
சீலன் அகதிவிண்ணப்பும் செய்து சில மாதங்களின்பின், அவனை நேரடி விசாரணைக்கு அழைத்திருந்தார்கள். அதற்குப் போய்வந்தபின், என்ன பதில் வருமோ என்று அவன் பயந்துகொண்டிருந்தான்.
சீலனின் நல்லகாலமோ, வணங்கிய கடவுளின் பேரருளோ அவனது அகதிவிண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிரந்தர விசா கிடைத்துவிட்டது.
சீலன் வேலையை மனம் வைத்துச் செய்தான். மண் வெட்டுவது, மரம் நடுவது, நீர் ஊற்றுவது, நிலம் கூட்டுவது என்று கடினமான வேலைகள் செய்யும் போது வியர்வையுடன் கண்ணீரும் சொட்டும். படிக்கும் போது அவன் எண்ணியும் பார்த்திராத வேலையை அவன் நாரி முறியச் செய்து கொண்டிருந்தான். அவனுடன் வேலை செய்த ஜோசேப் என்ற ஜேர்மன்காரரும் அவனும் எட்டு மணிநேரமும் என்ன மொழியில் கதைத்திருப்பார்கள்?..... ஊமைப் பாசையில் முதல் நாள் தொடங்கியது. நாட்கள் செல்ல ஜோசேப் அவன் நெருங்கிய நண்பர் ஆகிவிட்டார்.  வவா லட்டு செய்தால் இதில் நாலு சீலனுக்கு என்றால் இரண்டு ஜோசேப்புக்கு ஆகும். பயிற்றம் பணியாரம், உறைப்புக் குறைந்த றோல்ஸ் ……. போகப் போக புட்டும் கறியும் கூட சாப்பிடத் தொடங்கிவிட்டார் ஜோசேப் அண்ணை. அதோடை எங்கடை சீலன் தம்பி ஜேர்மன் கதைக்கத் தொடங்கிவிட்டார்.
மண்வெட்டிக்கு டொச்சில் என்ன என்று சொல்லிக் கொடுத்து, பிறகு மண்ணுக்கு, மரத்துக்கு என்று கண்ணில்பட்டவைக்கு  டொச்சில் எப்படி அழைப்பது என்று சொல்லிக் கொடுத்து, அவன், பொல்க் கோக்சூல (ஏழடமளாழஉhளஉhரடந) என்ற பள்ளியில் மாலைநேர வகுப்புகளுக்குச் செல்லவும் வழி காட்டிவிட்டார் ஜோசேப் அண்ணை. அவரைப் போன்று எத்தனையோ ஜேர்மன்காரர், மொழி தெரியாமல் வேலைக்குப் போன எங்கள் தமிழர்களுக்கு ஆரம்ப வழிகாட்டிகளாக வேலையும் சொல்லிக் கொடுத்து, ஜேர்மன்மொழியின் அரிச்சுவடியை ஆரம்பித்தும் வைத்திருந்திருக்கிறார்கள
...

No comments: