கோத்தபாயவிற்கு வெளிநாடு செல்லத் தடை
ஜெனரல் சரத் பொன்சேகா நிரபராதி: நீதிமன்றம்
ஜெயக்குமாரி நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை
மோடியின் யாழ் விஜயம்: உண்ணாவிரதப் போரட்டம் ஆரம்பம்
சரண குணவர்தன கைது
குவைத்தில் உயிரிழந்த இலங்கை பெண்: சடலத்தை கொண்டுவர நடவடிக்கை
மடு - தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார் மோடி
நள்ளிரவில் நாடு திரும்பினார் மோடி
பகீரதி பிணையில் விடுதலை
கோத்தபாயவிற்கு வெளிநாடு செல்லத் தடை
09/03/2015 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கு காலி நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
எவண்ட் கார்ட் விவகாரம் தொடர்பிலேயே கோத்தபாயவிற்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி ஜெனரல் சரத் பொன்சேகா நிரபராதி: நீதிமன்றம்
09/03/2015
முன்னாள்
இராணுவத் தளபதி ஜெனரால் சரத் பொன்சேகா மற்றும் அவரது செயலாளராக இருந்த
முன்னாள் கப்டன் சேனக்க ஹரிப்பிரிய டி சில்வா ஆகியோருக்கு எதிராக
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் பிரசார
பணிகளுக்கு இராணுவத்தினரை பயன்படுத்தியதாக இவர்கள் இருவர் மீதும் குற்றம்
சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஜெயக்குமாரி நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை
10/03/2015 பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த
ஜெயக்குமாரி நிபந்தனைகளுடன் ஆட்பிணையில் செல்ல கொழும்பு மேலதிக நீதிவான்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஒரு வருட காலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவரது கடவுச் சீட்டும் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு
மாதத்துக்கு ஒரு தடவை அருகில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில்
கையொப்பமிடவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரை எதிர்வரும் ஆடி மாதம் 7 ஆம்திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
மோடியின் யாழ் விஜயம்: உண்ணாவிரதப் போரட்டம் ஆரம்பம்
12/03/2015 யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு அடிப்படை மற்றும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அக்கறை செலுத்தக்கோரி போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தினால் உண்ணாவிரத போராட்டமொன்று இன்று யாழ். பொது நூலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இப்போராட்டம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள் கலாசாரத்திலும், பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் கொண்டுள்ள பற்றுறுதியை பிரதிபலிக்கும் வைகயில் ஈழத்தின் சிரசென விளங்கும் உலக தமிழர்களின் கலாசார வாழ்விடமான யாழ்ப்பாணத்தில் இம் மாதம் 14ம் திகதிக இந்திய அரசால் 900 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள கலாசார மையத்துக்கான விழாவில் தாங்கள் கலந்துகொள்ளவுள்ளமை எமக்குதாங்கள் அளிக்கும் கௌரவத்தின் அடையாளமாக ஏற்றுக்கொள்கிறோம்.
இத்துடன் நில்லாது நீண்டகாலமாக நீடித்துவரும் எல்லை தாண்டும் மீனவர் பிரச்சினைக்கு உறுதியான முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். தமிழர் பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது பிரதமர் என்றவகையில் தங்களை இரு கரம் கூப்பிவரவேற்க கடமைப்பட்டுள்ளோம். வரவேற்பும் உபசரிப்பும் எம் தமிழ் இனத்துக்கே உரிய தலையாய பண்புகளாகும்.
மேற்படி விடயங்களுக்கு அப்பால் தாங்கள் இலங்கையில் தங்கி இருக்கும் வேளையில்...
1. அரசியல் கைதிகள், கடத்தப்பட்டோர் காணாமல்போனோர் விடுதலை.
2. எல்லைதாண்டும் மீனவர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணுதல்
3. யுத்தத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பீடுகள் வழங்குதல்
4. விதவைகள், அனாதைகள், காயமடைந்தோருக்கான உதவிகள்.
5. வடக்குகிழக்கு பிள்ளைகளின் கல்விக்கு, வேலைவாய்ப்புக்கு உதவுதல்
6. இடம் பெயர்ந்த, புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு தமது சொந்தக் காணிகளை கிடைக்கச்செய்தல்.
7. உள்ளூரில், சர்வதேசத்தில், தமிழகத்தில் அகதிகளாகவுள்ள எம்மக்களின் மீள் குடியேற்றம், தொழில், வீட்டுவசதிகள்.
8. போரில் இறந்தவர்களை நினைவுகூர நினைவுச்சின்னம் ஒன்றையும், நினைவுநாள் ஒன்றையும் பிரகடனப்படுத்தல்.
9. ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானத்தில் ஈழத்தமிழ் மக்ளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தல்.
10. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்கான ஏற்பாடு.
ஆகிய விடயங்களில் தங்களது இதயபூர்வமான பற்றுதியையும் தலையீட்டினையும் வேண்டி போரால் பாதிக்கப்பட்ட வடக்குகிழக்கு தமிழ்மக்கள் சார்பாக கோரிக்கையினை முன்வைத்து இன்று 12.03.2015 எமது உணர்வினை அகிம்சை ரீதியாக வெ ளிப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு உண்ணாவிரத்தினை ஆரம்பிக்கின்றோம்.
எனவே நாம் உங்களிடம் இரக்கத்துடனும், வேதனையுடனும், இயலாமையுடனும் கேட்கிறோம். உண்மையின் பெயரால், சத்தியத்தின் பெயரால், நீதியின் பெயரால் கேட்கிறோம் இழப்புக்கள் மத்தியில், அழிவுகள் மத்தியில் தாங்கொணாத் துயரத்தோடும், கண்ணீரோடும் கேட்கிறோம்.
இலங்கை தமிழ் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள தாய்தமிழக உறவிகளின் தூதுவராக உங்களை நினைத்துக் கேட்கிறோம். யுத்ததின் அடையாளமாகிப்போன எமது சுமைகளை இறக்கி ஆறுதல் பெறுவதற்கு ஒரு திட்டத்தை அறிவிக்குமாறு கேட்கிறோம் என்றார். நன்றி வீரகேசரி
சரண குணவர்தன கைது
12/03/2015 விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சரண குணவர்தன 96 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தமை தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று அத்தனகல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
குவைத்தில் உயிரிழந்த இலங்கை பெண்: சடலத்தை கொண்டுவர நடவடிக்கை
12/03/2015 குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த யுவதியின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) எனும் யுவதியே குவைத் நாட்டில் உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யுவதி கடந்த நான்கு மாதத்திற்கு முதல் குவைத் நாட்டிற்கு சென்றிருந்தார்.
இந்த யுவதியை காத்தான்குடியைச் சேர்ந்த உப முகவர் ஒருவரின் ஊடாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் குவைத்துக்கு அனுப்பியிருந்தார்.
இந்த யுவதி கடந்த 01.03.2015 அன்று வேலை செய்த வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இவரைப் பற்றி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தகவல் எதுவுமில்லாததால் இந்த யுவதியின் குடும்ப உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த யுவதியின் குடும்ப உறவினர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேiலை வாய்ப்பு பணியகத்தினால் அதன் அலுவலகத்திற்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
குறித்;த யுவதிக்கு நான்கு வயதுடைய குழந்தை உண்டு எனவும் இவரது கனவர் மரணித்து விட்டதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
மடு - தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார் மோடி
14/03/2015 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மடு - தலைமன்னாருக்கிடையிலான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் இன்று காலை வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
அதற்கமைய தலைமன்னாருக்கு உலங்குவானூர்தி மூலம் சென்றடைந்த மோடி தலைமன்னார் ரயில் நிலையத்தை திறந்து வைத்ததுடன் மடு - தலைமன்னாருக்கான ரயில் சேவையினையும் ஆரம்பித்து வைத்தார்.
கடந்த 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மடு- தலைமன்னாருக்கான ரயில் சேவை ஆரம்பத்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
நள்ளிரவில் நாடு திரும்பினார் மோடி
15/03/2015 இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு 9.45 மணியளவில் நாடு திரும்பினார். இந்திய இராணுவ விமான சேவைக்கு சொந்மான விசேட விமானத்திலேயே அவர் பயணமானார்.
5 நாள் அரசு முறை பயணமாக இந்திய பெருங்கடல் நாடுகளான சீசெல்ஸ், மொரீஷியஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி நேற்று நள்ளிரவில் தலைநகர் டெல்லிக்கு திரும்பினார்.
முதலில் சீசெல்ஸ் சென்ற மோடி அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலிக்ஸ் மைக்கேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி 4 முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அந்நாட்டில் இந்திய-சீசெல்ஸ் கூட்டணியில் உருவான ரேடாரையும் பிரதமர் மோடி இயக்கிவைத்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மொரீஷியஸ் சென்ற அவர், அந்நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
அதன்பின் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கை வந்தடைந்த அவருக்கு கொழும்பு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை விரைந்து செயல்படுத்தவேண்டும் என்றார்.
அதனைத்தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் நிலையில் மீனவர் பிரச்சினையில் நீண்ட கால தீர்வை உருவாக்கவேண்டும் என்றும் அதற்கு சில காலங்களாகும் என்று தெரிவித்தார்.
பின்னர் யாழ்ப்பாணத்திற்கு சென்று, தமிழ் மக்களுக்காக இந்திய அரசு கட்டிக்கொடுத்த வீடுகளை ஒப்படைத்தார்.
தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு புறப்பட்ட பிரதமர் மோடி, நள்ளிரவு மீண்டும் தலைநகர் டெல்லி திரும்பினார். நன்றி வீரகேசரி
பகீரதி பிணையில் விடுதலை
13/03/2015 தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெயகணேஸ் பகீரதியை இன்று காலை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கடந்த 2 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பகீரதி கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இவருடைய 8 வயது குழந்தை தொடர்பாக ஆழமான கவனத்தை கருத்தில் கொண்டு நீதிவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதிபதி அருணி ஆட்டிகல பிணையில் செல்வதற்கான அனுமதியை அளித்தார்.
பிரதிவாதி தரப்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராஜா ஆஜராகியிருந்தார்.
( Pix by : JoyJeykumar )
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment