முற்றுப்புள்ளி - என் கடைசிக் கவிதை

.

கனவுகள் கருகிப்போன
மயிலிறகொன்று
மை சுமந்து திரிந்தது...
கருகிப்போன கனவுகளை
ஓவியம் வடிக்க
இடம் தேடி...

கண்ணாடிக் குடுவையை
முட்டி முட்டி
உடைத்து விட்ட
தங்க மீனொன்று
துள்ளித் துள்ளிக் குதித்தது...
இனி
விடுதலையென்றெண்ணி...



கடல் அலைகளோடு
விழுந்து கலந்து விட
வானம் கடந்து
வந்த மழைத்துளியது...
தெறித்துச் சிதறிப்போனது
தண்டவாள முட்களில் பட்டு...

பேரமைதிக்குள்
புகுந்துகொள்ளத் துடித்தன ,
அலைந்து கொண்டிருந்த
கூச்சல்கள்...
பேரமைதிக்குள்
அலைந்து கொண்டிருப்பது
பெருங்கூச்சல்கள்
என்றறியாமல்...

முடிவில் விழுந்துவிட்ட
ஒரு புள்ளியைக்
கடந்து போய் விட ,
வழுக்கிக் கொண்டேயிருந்தது
ஒற்றைச் சுழி எழுத்தொன்று...
முடிவில் விழுந்து விட்ட
அந்தவொரு புள்ளி
முற்றுப்புள்ளி என்பதையறியாமல்............ 

No comments: