விழுதல் என்பது எழுகையே" - பகுதி 41 காசி.வி. நாகலிங்கம் யேர்மனி.
தொடர்ச்சி 
சீலனின் புதிய பயணம் ஆரம்பமாகியது.
„என்னிடம் பாஸ்போட் வீசா ஒன்றும் இல்லை. போடர் பொலிஸ் கேட்டால் என்ன செய்யிறது?“
தன் மனதுக்குள் இடித்துக் குத்திக் கொண்டிருந்த பயத்தை வெளியிட்டான்.
„பயப்படாதையும். அப்படி ஒரு பிரச்சனையும் வராது!
முப்பத்தைந்து வருடத்துக்கு முன் நான் இந்த போடரைக் கடந்த போது, மறித்து, பாஸ்போட்டில் ஜேர்மன் நாட்டுக்கு வருவது நிராகரிக்கப்பட்டு. அதாவது றிஜெக்ற் என்று சீல் அடித்து, திரும்பிப் போ! என்று விரட்டிவிட்டார்கள்.                                  
என்றாலும் எப்படியோ அங்கையிங்கை நுழைந்து ஜேர்மனிக்குள் அடிபதித்து, இன்றைக்கு எப்படி இருக்கிறம் பார்!
எல்லாம் முயற்சி! பயத்தை வென்று, சோம்பலை விரட்டி, அயராது முயன்றால் வாழ்க்கையில் நினைத்ததைச் சாதிக்கமுடியும்“ என்று விவேக் அங்கிள் சீலனுக்கு துணிவூட்டினார்.
மகன் சுந்தரன் காரை ஓட்ட, பக்கத்தில் மகள் சிந்துஜா, பின் சீற்றில் சீலன் நடுவில், இருபக்கமும் விவேக், வவா இருவரும் இருக்கக் கார் வேகமாக விரைந்தது.
கார்றேடியோ ஜேர்மன் பாடல்கள் இசைக்க, அண்ணனும் தங்கையும் ஜேர்மன் மொழியும் தமிழும் கலந்து ஏதோ கதைக்க, பின்னால் இருந்த மூவரும் இனி மேற்கொண்டு என்ன செய்யலாம் என்றது பற்றிய ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தனர்.


என்ன இருந்தாலும் போடர் பயம் சீலனின் உணர்வுகளைக் குழப்பிக் கொண்டே இருந்தது. போலீஸ் என்றாலே ஊரில் அவன் வாங்கிய அடியும் உதையும் பூசாக் காம்பில் அனுபவித்த சித்திரவதைகளும் அவன் கண்முன்னே வந்து மிரட்டிக் குடல் நடுங்கச் செய்யும். இது போதாது என்று தலையிடியும் கிண்கிண் என்று மண்டைக்குள் குதிரை ஓட்டியது. இதனால் சீலன் ஒருசில வார்த்தைகளுக்கு மேல் பேசாது அமைதியுடன் இருந்தான்.
அவன் நிலையைப் புரிந்துகொண்ட விவேக், தானும் சோம்பலில் இருப்பது போன்று கண்ணை மூடுவதும் முழிப்பதுமாக இருந்தார். வவா இடையிடையே, „ காரின் வேகத்தைக் கொஞ்சம் குறை! மழை தூறிக்கொண்டிருக்கு, றோட்டு வழுக்கினாலும் வழுக்கலாம். கவனம்!“ என்று எச்சரிப்பதும், தூங்குவதுமாக இருந்தார்.
மாரிக்குளிர் இன்னமும் ஐரோப்பா மண்ணை விட்டுப் போவதாக இல்லை என்பதைக் காலநிலை வெளிக்காட்டிக் கொண்டே இருந்தது. மகனுக்கு நித்திரைத்தூக்கம் வந்துவிடக்கூடாது என்று தகப்பன் இடையிடையே கதைகொடுத்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள், சீலன்கூட கண்ணயர்ந்து தூங்கிவிட்டனர்.
கார்ப்பயணங்களில் நித்திரை தானாக வந்து தொத்திக்கொள்ளும். அலுப்புப் பஞ்சிபாராமல் வண்டி ஓட்டுவோரின் கவலையீனங்களினால் தினந்தினம் எண்ணற்ற வீதிவிபத்துக்கள், மரணங்கள் ஏற்படுவதை மனதிற் கொண்டு விவேக் காரில் பயணம் செல்லும்போது தூக்கத்துக்கு இடங்கொடுப்பதில்லை. இன்றும் அப்படியே மகனோடு ஏதேதோ மனதிற்பட்டதைக் கதைத்துக் கொண்டிருந்தார்.
டென்மார்க் ஜேர்மன் எல்லையில் போலீஸ் வாடையே இருக்கவில்லை. ஐரோப்பா என்று கூட்டு ஒப்பந்தங்கள் வந்த பின் போடர்கள் திறந்திருப்பது எவளவு நன்மையாகிவிட்டது என்று மனதில் நினைத்துக் கொண்டார் விவேக். மெதுவாகச் செல்லவேண்டிய இடங்களில் மெதுவாகச் சென்று, மீண்டும் வழக்கமான வேகத்தில் காரைச் செலுத்தினான் சுந்தரன். பிரயாணம் தொடர்ந்தது.
ஜேர்மன் நாட்டுக்குள் வந்து ஓரளவு தூரம் ஓடியபின் விரைவு நெடுஞ்சாலையில் இருந்த எல்லா வசதிகளுடனும் கூடிய, அதாவது இருக்கலாம், கழுவலாம், குளிக்கலாம், குடிக்கலாம், சாப்பிடலாம் என்று பலதும் உள்ள பெற்றோல் நிலையத்தில் கார் வந்து நின்றது.
“குட்டி! டீசல் அடிக்க வேணுமா?” என்று சோம்பல் முறித்துக்கொண்டே அம்மா மகனைச் செல்லம் பொழியக் கேட்டா,
“தேவையில்லை அம்மா. முன் கண்ணாடி ஊத்தையாக் கிடக்கு கழுவப்போறன். புறொஸ் சுற்ஸ்(தண்ணீரை உறையவிடமற் தடுக்கும் திரவம்) கலந்து தண்ணி விடவேணும் வாங்கிக்கொண்டு வாறன், பாத்றும், கன்ரீன் போறவை போட்டு வாங்கோ.!“
„நீ வரேல்லையோ? சூடாக் கோப்பியும் குடிச்சு ஏதாவது கடிப்பம்“
„நீங்க போங்கோ! நான் இந்த வேலைகளை முடிச்சுக்கொண்டு வாறன்“ என்று கூறி, சுந்தரன் பெற்றோல்செற் கடைக்குச் சென்றான்.
பாத்றூம் அந்த நேரத்திலும் சுத்தம் குன்றாது பளபளவென்று நல் வாசனைகள் வீசிக்கொண்டிருந்தது. காசு போடத்தான் வேணும். சும்மா போய் இருக்கேலாது. என்றாலும் இப்படி ஒன்று இடையிடையே இல்லாட்டி எவளவு கஸ்ரம்? வெள்ளைக்காரன் எல்லாப் பக்கத்திலும் சிந்திக்கப் பழகியிருக்கிறான். நாங்கள் திருக்குறளைப் படிச்சிட்டு பக்குவமா மூடிவைத்திடுவோம். இவன் திருவள்ளுவரிடம் றெயினிங் எடுத்துவிட்டு, அதை வாழ்க்கையிலும் பயன்படுத்தத் தெரிந்து கொண்டான் போலக் கிடக்கு. வீட்டை வீடாக, றோட்டை றோட்டாக, காட்டைக் காடாக பேணிப் பாதுகாக்கும் விந்தை ஜேர்மன் நாட்டில் உள்ளங்கை நெல்லிக்கனி போல் பளிச்சென்று தெரிய, இவற்றை எங்கள் நாட்டிலும் நடைமுறைப்படுத்தினால் வாழ்க்கை எவளவு இலகுவாயும் மகிழ்ச்சி ஊட்டுவதாயும் அமையும் என்று நினைத்துக் கொண்டான் சீலன்.  
பாத்றூம் அலுவல்கள் முடித்து, கோப்பிக்கடைக்குச் சென்று, நாவறட்சியைப் போக்கிக் கொண்டு, வாய்க்கும் கொறிக்க அதை இதை வாங்கிச் சுவைத்துக் கொண்டிருக்க, சுந்தரம் கார் அலுவல்களை முடித்துக் கொண்டு உள்ளே வந்தான். அவனும் தனக்குப்பிடித்ததை வாங்கிக் கொண்டான்.
சீலனுக்கு எல்லாம் புதுமையாக இருந்தது. போடர் தாண்டும் போது தான் நித்திரையாக இருந்ததை அவனால் நம்பவே முடியவில்லை. இருந்த தலையிடியும் காணாமற் போய் விட, ‘எப்படி என்னால் அமைதியாகத் தூங்க முடிந்தது?‘  அவனுக்கே அது பெரும் அதிசயமாக இருந்தது.
அந்தச் சாப்பாட்டுக்கடைக்குள் இருந்தபடி அவன் கண்கள் விவேக் குடும்பத்தை சுற்றி வந்தன. ‘இவர்கள் யார்? கடவுள் வடிவில் என்னை இந்த ஜேர்மன் நாட்டில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்!‘ என்று நெஞ்சமெல்லாம் நன்றி மழை பெருக்கெடுத்து ஓட, உணர்ச்சிகளை அடக்கமுடியாது ஆனந்தக்கண்ணீர் பொங்க நின்றான்.
மீண்டும் பயணம் தொடர்ந்தது.
„அலுப்பாக இருக்கு படுக்கப் போகிறேன், நீ ஓடுறியா?“ என்று தங்கை சிந்துஜாவை சுந்தரன் கேட்க, அவள் சம்மதித்து காரை இயக்கினாள். விவேக் முன்னால் ஏறிக்கொண்டார். சுந்தரன் படுக்க வசதியாகப் பின் சீற்றிற்கு மாறி உட்கார்ந்தான்.
கார் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
அப்பா முன்போலவே ஏதோ கதைத்துக் கொண்டிருக்கவேணும் என்பதற்காக ‘ஆனந்தம்‘ என்ற திரைப்படத்தில் அவர் இரசித்து அனுபவித்த சகோதர பாசத்தின் உருக்கமான காட்சிகளைப்பற்றி விபரித்துக் கொண்டிருந்தார். ஜேர்மனில் பிள்கைகள் இருவரும் பிறந்து வளர்ந்தாலும் தாய்மொழி தமிழை ஒழுங்காகப் படித்திருக்கிறார்கள் என்பது சீலனுக்குப் புரிந்தது. சுந்தரனும் சிந்துஜாவும் எந்தத் தடங்கலும் இல்லாது தமிழ் மொழியில் உரையாடுவது கண்டு அவன் நெஞ்சம் குளிர்ந்தது.
அகண்ட நீண்ட அந்தப் பெருந்தெருவில் கார் நிதானமாக ஓடிக் கொண்டிருந்தது. எத்தனை விதமான கார்கள், லாறிகள் இந்த நேரத்தில் கூட எங்கெங்கோ விரைந்தோடிக்கொண்டிருந்தன. வீதிகள் அமைக்கப்பட்டமுறை ஒன்றை வைத்துக்கொண்டே ஜேர்மன் நாட்டைப்பற்றி தான் படித்தது, கேள்விப்பட்டது எல்லாமே வியந்து பாராட்த்தக்க உண்மைகளாக அவன் மனதுக்குப்பட்டன.
வவா அன்ரி, சீலனுக்கு அவன் முன்னேற்றத்துக்குரிய வழிகளையும் ஜேர்மன் நாட்டு நடப்புகளையும் சொல்லிக்கொண்டிருந்தா.
தடங்கல் ஏதும் ஏற்படாததால் டென்மார்க்கிலிருந்து புறப்பட்டுச் சுமார் ஏழு மணி நேரங்களில் வீட்டு வாசலில் வந்து கார் நின்றது.
இரவு இரண்டுமணி.
அவர்கள் வீட்டை நோக்கி வர, தானியங்கி விளக்குகள் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சின. அழகிய புதிய வீடு. படிகளில் ஏறிக் கதவைத்திறக்க, உள் விறாந்தையின் கூரை விளக்குகள் நட்சத்திரங்கள் போல் ஒளி உமிழ்ந்தன.
இலங்கைத் தமிழர்களான இவர்கள், ஜேர்மனில் இப்படி ஒரு அழகு மாளிகையில் வாழ்வது, சீலனுக்கு அந்தப் பொழுதில் எண்ணிப்பார்க்க முடியாத அதிசயமாக இருந்தது.
அது ஒன்றும் அதிசயமில்லை, மிகக் கஸ்ரப்பட்டு உழைத்த பணத்திலும் மிகுதி வங்கியில் கடனெடுத்தும் கட்டப்பட்டிருக்கிறது என்பதைப் போகப்போக சீலனும் புரிந்து கொள்வான். வீடு என்றால் எல்லாருக்கும் ஆசையாகத்தான் இருக்கும். ஜேர்மனில் பல கிராமங்களில் பழைய பெரிய வீடுகள் மலிவாக வாங்கக்கூடியதாகவும் இருக்கின்றது. அவரவர் வசதியைப் பொறுத்து புதுவீடோ பழைய வீடோ வாங்கி வசதியாக இருப்பதற்கு வங்கிகள் கடன்கொடுத்து உதவவும் முன்வருகின்றன. பிறகென்ன! ஆனால் ஒழுங்கான வேலை ஒன்று இருக்க வேண்டும். இதெல்லம் சீலனுக்கு நாங்கள் சொல்லத் தேவையில்லை. சில நாட்கள் கழிய எல்லாவற்றையும் அவனே அறிந்து கொள்வான். ஆனாலும் அவனுக்கு இப்ப வேண்டியது வீடல்ல, முதலில் இந்தநாட்டு விசா, தங்க ஒரு இடம், கடன்அடைக்க ஒரு வேலை. வேறொரு எண்ணமும் இப்போ சீலனின் மனதில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வீட்டுக்கு வந்து முக்கிய வேலைகளை மட்டும் முடித்துவிட்டு பிரயாண அசதி தலைதூக்க, எல்லாரும் படுக்கைக்குச் செல்லத் தயாரானார்கள்.
விவேக்கும் வவாவும் சீலன் தங்குவதற்கு விருந்தினர் அறையைத் தயாராக்கி வசதிகள் செய்து கொடுத்தனர்.
„வெட்கப்படாமல் என்ன வேணும் என்றாலும் கேளும். நாளைக்கு விசாவுக்குரிய அலுவல்களைப் பார்ப்பம். ஓண்டுக்கும் யோசிக்காதையும் நல்லாப் படுத்துத் தூங்கும்.“ என்று மனம் நிறைந்த வார்த்தைகளால் அவனை அன்போடு உபசரித்துவிட்டு, அவர்கள் தங்கள் அறைக்குச் சென்றார்கள்.
சிறிது நேரத்தில் வீட்டில் அமைதி குடிகொண்டது. சீலனுக்கு பஞ்சிஅலுப்பு இருந்த போதும் நித்திரை வராமல் வெகுநேரம் உழன்றுகொண்டிருந்தான். அவன் நெஞ்சில் நினைவு ஈட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து குத்திச்சென்றன.
சுவிஸில் செய்வதறியாது நின்ற தனக்கு, ஆறுதல் வார்த்தைகள் கூறி வஞ்சகமின்றப் பழகிய, மக்டோனல்ஸ் பானுவையும் தன்னையும் இணைத்து தவறான தொடர்பு இருக்கென்று பத்மகலா ரெலிபோனில் கூறிய விசம்கலந்த வார்த்தைகள் முதலில் அவன் மனதைத் தாக்கிக் குத்திச் சென்றன.
தொடர்ந்து அவனுக்குத் தாயின் நினைவு வந்தது. ‘அம்மா என்னை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கின்றா. கொழும்பில் தங்கி நிற்கும் அவர்களுக்கு வீட்டு வாடகைக்கும் செலவுக்கும் பணம் அனுப்புவதாச் சொன்னனான், இரண்டு மாதங்களாகிவிட்டன, இன்னும் ஒருகாசும் அனுப்பவில்i, என்ன கஸ்ரப்படுகிறாவோ தெரியவில்லை‘ என்ற எண்ணம் வந்து அவனைப் பெரும் சங்கடத்துக்குள்ளாக்கியது.
தொடர்ந்து தங்கையின் முறிந்தகால் இப்ப எப்படி இருக்கோ? என்ற யோசனை எழுந்தது. அவனைச் சமாதானப்படுத்த சிரித்துச் சிரித்து அவள் ரெலிபோனில் சுகமாக இருக்கிறன் என்றவள்… உண்மையாக எப்படி இருக்கோ? பாவம் தங்கச்சி!‘ என்ற எண்ணமும் வந்து நெஞசில் பாசத்தின் வலியை ஏற்படுத்தியது.
அடுத்து வந்த நினைவு, அவன் நித்திரையையே சின்னாபின்னமாகச் சிதற வைத்து விட்டது. சுவீஸ் பேத்டேப்பாட்டியில் நடந்த கத்திக்குத்து…… ‘அவன் செத்திருப்பானா?..... செத்தால் குத்திய சிவம் பிடிபட்டிருப்பானா? ….இல்லாட்டி என்னையும் அதற்குள் சேர்த்து கொலை வழக்கில் தேடுவார்களா?‘ என்று அடுத்தடுத்து இடி மாதிரி நெஞ்சுக்குள் எழுந்த கேள்விகள் அவனைப் படுக்கவிடாமல் எழுந்திருந்து மண்டையைச் சொறிய வைத்தன. இனி எப்படியெல்லாம் பிரச்சனைகள் வளரப்போகின்றனவோ என்ற குழப்பத்துடன் கட்டிலில் சாய்ந்தபடி கண்ணை மூடி, கடவுளே இது என்ன சோதனை? என்று மனம் தவிக்க, யோசித்துக் கொண்டிருந்தவன், தன்னைச்சுத்திச் சூனியமாக விரிந்து கிடக்கும் இருளைப் போக்க சிறு கைவிளக்குக் கிடைக்காதா? என்று ஏங்கினான்.
எப்போ துங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. அவன் யோசனைகளை இடித்து வீழ்த்திவிட்டு, அவனைத் தன் சிறைக்குள் மூடிக்கொண்டது தூக்கம்...............

தொடரும் பகுதி 42   எழுதுபவர்  காசி வி.நாகலிங்கம்   யேர்மனி

No comments: