முண்டாசுக் கவிஞன் பார-'தீ'

.
பாரதியார் பிறந்த நாள் 11.12 1882 தமிழ் முரசு நினைவு கூறகிறது 

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்."
-'மகாகவி' சுப்பிரமணிய பாரதி

பாரதி...
இவன் முரட்டுக்காளையாய் வலம் வந்த முண்டாசுக் கவிஞன்... முறுக்கிய மீசைக்குள் நறுக்கென சுதந்திரத் தீ வளர்த்த சுதேசிக் கவிஞன்... எமக்குத் தொழில் கவிதை என அனல் தெறிக்கும் கவிதைகளை வார்த்த கவிஞன்.

எட்டயபுரம் கொடுத்த கொடை அவன்... எட்டாத உயரத்திற்கு தமிழால் உயர்ந்தவன். கவிதையை காசாக்கும் வியாபாரியாக இருக்க நினைக்காமல் வேள்வித் தீயை பற்ற வைக்கும் கருவியாக நினைத்தவன். சிறுவயதில் தாயை இழந்தாலும் தாய்த் தமிழை இழக்காமல் கவி பாடி 'பாரதி' என்ற பட்டம் பெற்றவன்.

பெண்ணுரிமை போற்றிய பாரதிக்கு செல்லம்மா சிறுமியாக இருக்கும் போதே மனைவியானாள். பாரதியோ கட்டவிழ்ந்து ஓடும் காட்டாறு... செல்லம்மாவோ மெல்லிய தென்றல்... அவனின் போக்கோடு செல்லம்மாவால் இணைந்து செல்ல முடியவில்லை என்றாலும் இயைந்துதான் வாழ்ந்தாள்.

பாட்டுக்கோர் புலவன் பாரதிக்கோ செல்லம்மா இருக்க கற்பனையான கண்ணம்மா மீது காதல். செல்லம்மா இருக்க இந்தக் கிறுக்கன் கண்ணம்மா... கண்ணம்மான்னு உருகி உருகிப் பாடியிருக்கானே என்று நம்மில் பலர் நினைக்கலாம். செல்லம்மா கட்டுப்பெட்டியாக இல்லாமல் அவன் விரும்பிய வண்ணம் இருக்க வேண்டும் என்று நினைத்து அவன் மனதுக்குள் செல்லம்மாவைச் சமைத்து உருவாக்கிய கற்பனைப் பாத்திரமே கண்ணம்மாவாக இருக்கலாம் அல்லவா? அருகே இருக்கும் மனைவி செல்லம்மாவை காதலிக்கத் தெரியாத பாரதி கற்பனையில் அவளை ஆசை தீர காதலித்திருக்கலாம் அல்லவா?

மீசை வைத்தான்... குடுமி கலைந்தான்.... தெருவிற்குள் மனைவி தோளில் கை போட்டபடி நடை பழகினான்... அவன் பெண்ணடிமைத்தனத்தையும் உடைத்தான்... சாதீய நெறிகளையும் தகர்த்தான். நான் இப்படித்தான்... இதுதான் என் பாதை... இதில்தான் என் பயணம்... நான் வேங்கை... அதிலும் வெறி கொண்ட வேங்கை... சுதந்திர வெறியை காற்றுவெளி எங்கும் பரப்பும் சூறாவளி... சுடும் நெருப்பு... என்று எகத்தாளமாய் முழக்கமிட்டு அவன் வடித்த கவிதைகளில் எல்லாம் சுதந்திரம் என்னும் ஒற்றைச் சொல்லை அள்ளித் தெளித்தான். ஒவ்வொருவருக்குள்ளும் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்னும் உணர்வை ஊட்டி வளர்த்தவன் அவன்...

கவிஞனாய்... ஆசிரியனாய்... பத்திரிக்கையாளனாய்... சுதந்திர போராட்டக்காரனாய்... பன்முகங்கொண்ட  பாரதி தனது வறுமை நிலையிலும் காக்கை குருவி எங்கள் சாதி என வீட்டில் இருந்த அரிசியை அள்ளிப் போட்டு உயிரினத்தின் சந்தோஷம் கண்டு மகிழ்ந்தவன்... நல்ல குடும்பத் தலைவனாக இருந்தானா என்பதை பெரும்பாலும் வரலாறு பேசுவதில்லை... நாடு... மக்கள்... உயிரினங்கள் என தன் போக்கில் காசி வரை பயணித்தவனுக்கு குடும்ப வாழ்க்கை எப்படி சந்தோஷமாக இருந்திருக்கும்... கண்ணம்மாவான செல்லம்மாவோ 'இந்தக் கிறுக்கனைக் கட்டி வாழ்க்கை போச்சே' அப்படின்னு கண்டிப்பாக மனசுக்குள் நினைத்திருப்பாள். இருந்தாலும் கிறுக்கன் எனக்கானவன் மட்டுமல்ல மக்களுக்கானவன் என வாழப் பழகிக் கொண்டிருப்பாள்.

எது எப்படியோ... இன்று முண்டாசுக் கவிஞனை பெண்ணுரிமை போற்றியவன் என்றும் தீர்க்கதரிசி என்றும் தமிழின் தந்தை என்றும் மக்கள் கவி என்றும்  மகாகவி என்றும் நாம் தலையில் வைத்து ஆடுகிறோம்... கொண்டாடுகிறோம்... ஆனால் அன்று யானை சாய்த்த கவிதைக்காரனின் இறுதிச் சடங்கில் சொற்ப மனிதர்களே கலந்து கொண்டார்கள் என்று வாசிக்கும் போது இன்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழன் அன்று அவனைக் தூக்கக் கூட கூடவில்லையே என்ற வருத்தம் நெஞ்சுக்குள் தொக்கி நிற்கத்தான் செய்கிறது.

"ஆடுவோமே பள்ளு பாடுவோமே... ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென.." சுதந்திரம் பெற்று விடுவோம் என நெஞ்சில் உரத்துடன் சுதந்திரத்துக்கு முன்னே பாடியவன்... சுதந்திரம் அடைந்து நாம் ஆனந்தக் கூத்தாடியதைக் காணாமலே மறைந்தவன் பாரதி. அவன் விதைத்த வீரியமிக்க கவிதைகள் உலகம் இருக்கும் வரை அவன் புகழ் பரப்பிக் கொண்டே இருக்கும். நமது பார-'தீ' இறவாக் கவிஞன்தான் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அவனது கவிதைகள் இறவாக் கவிதைகள்... உலகத்தின் கடைசி உயிர் இருக்கும் வரை பாரதி உன் பெயர் நிலைத்திருக்கும்.

'தேடி சோறு நிதம் தின்று 
பல சின்னசிறு கதைகள் பேசி 
மனம் வாடி துன்பமிகு உழன்று 
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடுன்கூற்றுக்கு இரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரை போல
யானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?'

நம் தமிழ்க் கவிஞன் பாரதியின் பிறந்தநாளில் அவனை நினைவில் கொள்வோம்.... வாழ்க பாரதி.

nantri http://vayalaan.blogspot.com/

No comments: