வார்த்தைச் சித்தர் -அ.முத்துலிங்கம்

.

ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நான் ஒரு சிறுகதை எழுதினேன். அது கல்கிப் பத்திரிகையில் வெளியாகி பரிசும் பெற்றது. கொழும்பிலே எழுத்தாளர்கள் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்திற்கு நண்பர் சமீனின் வற்புறுத்தலில் புறப்பட்டேன். ‘நீதான் எழுத்தாளராகிவிட்டாயே, வா’ என்றார். நானும் போனேன். கூட்டத்தில் கைலாசபதி, சிவத்தம்பி என்று பலர் பேசினார்கள். கடைசியாக பேசவந்த எஸ்.பொ என்று அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை என்னுடைய சிறுகதையை எடுத்து வசனம் வசனமாக அலசி, பின்னர் கிழித்தார். அந்தக் கதை ‘விளக்கு அணைந்தது’ என்று முடியும். அதைப் பிடித்துக்கொண்டார். கதையில் இனிப் பிய்த்து எறிவதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையில் பேச்சை முடித்துவிட்டு அமர்ந்தார். நான் வெலவெலத்துப் போனேன். நான் செய்த குற்றம் எல்லாம் ஒரு சிறுகதை எழுதியதுதான். அந்தச் சம்பவத்திற்கு பின்னர் நான் எழுத்தாளர் கூட்டத்திற்கு போகவில்லை. அதுவே முதலும் கடைசியும் என்று நினைக்கிறேன்.

25 வருடங்கள் கழிந்தன. நான் அப்போது பாகிஸ்தானில் வேலை பார்த்தேன். எஸ்.பொ புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா போய்விட்டார். அங்கேயிருந்து தொலைபேசியில் என்னை அழைத்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவருக்கு கடிதம் எழுதியிருந்தேன் ஆனால் பேசியது கிடையாது. என்னுடைய சிறுகதை சம்பவத்தை சொன்னேன். அவர் ’அப்படியா?’ என்றார். 25 வருடமாக நான் மனதிலே காவிய ஒரு சம்பவத்தை அவர் முற்றிலும் மறந்துவிட்டார். அதுதான் எஸ்.பொ.


என்னுடைய வம்ச விருத்தி சிறுகதை தொகுப்பை பிரசுரித்தது அவருடைய மித்ர பதிப்பகம்தான். அதற்கு நீண்ட  முன்னுரை எழுதினார். அதில் பிரசுரமான கதைகள் பற்றி அவர் பாராட்டினார். எஸ்.பொ முகத்துக்காக ஒன்றும் செய்வதில்லை. உள்ளதை உள்ளபடி சொல்வார். அதுதான் அவரில் உள்ள அதிசிறப்பான அம்சம். சிலகதைகளை சிலாகித்தவர் தொகுப்பிலே வேறு கதைகளை சேர்ப்பதற்கு முன்னர் திருத்தச் சொன்னார். அப்படிக் கறாராக அந்த நூலை அமைத்தார். ஒருவருட காலமாக அவருடன் கடிதப் போக்குவரத்தும் தொலைபேசி உரையாடல்களும் நடந்தன. என் வாழ்க்கையில் மறக்க முடியாத வருடம் அது.

நான் சென்னைக்கு முதன்முதலாக அவரைச் சந்திப்பதற்கு சென்றேன். அவர் பஸ்ஸிலே வந்து என்னை ஹொட்டலில் சந்திப்பதாகச் சொன்னார். நான் ஒரு வாரத்துக்கு வாடகைக் கார் ஒன்றை அமர்த்தியிருந்தேன். நானே வருவதாகச் சொன்னேன். பதிப்பகத்தை கண்டுபிடித்ததும் நான் இறங்கி உள்ளே போனேன். அந்தக் காட்சி எனக்கு நினைவில் இருக்கிறது. வெள்ளை வேட்டி, வெள்ளை மேலுடையில் ஓர் அரசன் அமர்வதுபோல கைகளை அகல விரித்து உட்கார்ந்திருந்தார். 25 வருடத்துக்கு முன் நான் பார்த்த அதே உருவம். அதே கம்பீரம். அதே உரத்த குரல். அவருக்கு பின்னே அச்சான வம்ச விருத்தி புத்தகங்கள் நிரையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சாமரம் வீச சேடிகள் இல்லாததால் அவர் ஒரு புத்தகத்தை எடுத்து தானே  விசுக்கிக்கொண்டிருந்தார். என்ன அழகான காட்சி அது. என்னுடைய புத்தகத்தின் அதி உச்சமான பயன்பாடு அதுதான் என்று நான் நினைத்துக்கொண்டேன்.

புத்தகம் எனக்கு பிடித்துக்கொண்டது. அதன் அட்டை, தாள், அச்சு, எழுத்துரு எல்லாமே நான் விரும்பிய  மாதிரி அமைந்திருந்தது. புத்தகத்தின்  ஒற்றைகளை திருப்பி திருப்பி ஆராய்ந்து பார்த்து நன்றி என்று சொன்னேன். இருவரும் அந்த நாளை கொண்டாடுவதற்காக வெளியே உணவருந்தச் சென்றோம்.  எஸ்..பொ ஏறியதும் கார் நின்றுவிட்டது. இருவரும் இறங்கித் தள்ளினோம். அது சிறிது தூரம் ஓடிவிட்டு மறுபடியும் நின்றது. மீண்டும் தள்ளினோம். மீண்டும் நின்றது. இப்படியாக தள்ளுவதும் காரில் ஏறி அமர்வதும் மறுபடியும் தள்ளுவதுமாக ஒருவாறு உணவகத்துக்கு வந்து சேர்ந்தோம். இருவருக்குமே களைப்பு. இருவருக்குமே பசி. அன்று எங்கள் சம்பாசணை முழுக்க கார்களைப் பற்றியும் சாரதிகளைப் பற்றியுமே இருந்தது. அன்று இலக்கியம் பேசவில்லை. அது தப்பிவிட்டது.

எஸ்.பொ ’புத்தக வெளியீடு செய்யலாம்’ என்று சொன்னார். நான் மறுத்துவிட்டேன். யாராவது புத்தகம் வேண்டுமென்று நினைத்தால் அவர்கள் வாங்குவார்கள் என்பது என் கருத்து. ’சரி, அறிமுக விழா’ என்று சொன்னார். நான் சம்மதித்தேன். விழாவிலே பலர் பேசினார்கள். அவர்கள் பெயர் மறந்துவிட்டது. நினைவில் இருப்பது சுப்ரபாரதிமணியன் அத்துடன் லேனா தமிழ்வாணன். அந்தக் கூட்டத்திலேதான் எஸ்.பொவின் உலகப் புகழ்பெற்ற பிரகடனம் நடந்தது. ‘அடுத்து வரும் காலங்களில் தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லப்போவது புலம்பெயர்ந்த தமிழர்கள்தான்.’ அதைத் தொடர்ந்து காத்திரமான வாதப் பிரதி வாதங்கள் எழுந்தது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.

அதன் பிறகு நான் பாகிஸ்தானை விட்டுவிட்டு கென்யாவுக்கு போய்விட்டேன்.  வம்சவிருத்தி நூலுக்கு தமிழ்நாடு அரசு பரிசு கிடைத்தது. அதைத் தொடர்ந்து ஸ்டேட் வங்கி முதல் பரிசும் கிடைத்தது. என்னிலும் அதிகம் மகிழ்ந்தவர் எஸ்.பொ தான். பின்னர் தொடர்பு விட்டுப்போய்விட்டது. மேலும் 25 வருடங்கள் நகர்ந்தன. கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அவருக்கு வாழ்நாள் தமிழ் சேவைக்காக இயல் விருது வழங்கியது. அதைப் பெறுவதற்காக அவர் ரொறொன்ரோ வந்திருந்தார். அவரைச் சந்தித்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். அதே உடல்வாகு. அதே கம்பீரம். அதே அதட்டும் குரல். அவர் மாறவே இல்லை.

நீண்ட நேரம் அவருடன் இலக்கியம் பற்றி உரையாடினேன். ஏறக்குறைய அவர் எழுதிய எல்லா நூல்களையும் படித்திருந்தேன். எனக்கு அதிகம் பிடித்தது நனவிடை தோய்தல்தான். அதை அவரிடம் சொன்னேன். வழக்கம்போல ஒரு வெடிச்சிரிப்பு சிரித்தார். ’உங்கள் சரித்திரத்தையும் ஒரு கிராமத்தின் சரித்திரத்தையும் ஒரு நாட்டின் சரித்திரத்தையும் இந்தப் புத்தகம் சொல்கிறது. தமிழில் இப்படி ஒரு புத்தகம் முன்னர் வந்தது கிடையாது. ஈழத்து மக்களை தலை நிமிர்ந்து நிற்க வைக்கும் படைப்பு இது. உங்களைத்தாண்டி இந்தப் படைப்பு நீண்ட காலம் வாழும்’ என்று உணர்ச்சியுடன் கூறினேன். அவர் நம்ப முடியாமல் என்னைப் பார்த்தார். வெடிப்பதுபோல ஒரு திடீர்ச் சிரிப்பு சிரித்தார்.

வியாபாரிக்கு முக்கியம் முதல். அதை வைத்துதான் அவன் வியாபாரத்தை பெருக்குகிறான். எழுத்தாளருக்கு முதல் வார்த்தைகள். அதை வைத்துத்தான் அவர் தன் எழுத்து தொழிலைச் செய்கிறார்; விருத்தியாக்குகிறார். எஸ்.பொ வார்த்தைகளை வைத்து ஜாலம் செய்தவர். ஓர் அரசன் கோயில் கட்டுவதுபோல, குளம் வெட்டுவதுபோல, சோலை அமைப்பதுபோல என்றென்றும் அவர் ஞாபகமாக எஸ்.பொ விட்டுப்போவது அவர் எழுத்துக்களைத்தான். எங்கே எந்த வார்த்தையை பயன்படுத்துவது என்பது அவருக்கு கைவந்தது. ஒரு சரியான வார்த்தைக்காக அவர் ஒரு மணி நேரமும் தவம் இருப்பார். படைப்பிலே கட்டுமானம் என ஒன்றிருக்கும். எந்த வார்த்தைகளை எப்படி அடுக்கி வசனம் உண்டாக்குவது. எந்த வசனம் முதலில் வரும்; எது தொடரும். எப்படி ஒன்றை தொடங்குவது, எப்படி அதை முடிப்பது. இவற்றில் எல்லாம் அதி கவனம் செலுத்தியவர் அவர். வார்த்தைகள் மாத்திரமல்ல, வார்த்தைகளுக்கு இடையில் வரும் இடைவெளிகளும் அவருக்கு முக்கியம்.

அவர் வார்த்தைச் சித்தர். அவரைப்போல தமிழ் வார்த்தைகளை வைத்து விளையாடியது வேறு ஒருவரும் இல்லை என்றே நினைக்கத் தோன்றும். ‘சரியான வார்த்தையை பயன் படுத்துவது முக்கியம். ஆனால் சரியான இடத்தில் மௌனமாக இருப்பது அதைவிட முக்கியமானது.’ இதைச் சொன்னவர் அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெய்ன். எஸ்.பொவின் படைப்புகளை படிப்பவர்களுக்கு இந்த உண்மையை அவர் மிக நுணுக்கமாக உணர்ந்திருப்பது தெரியவரும். ஒரு விளக்கை அணைத்த பின் அந்த ஒளி எங்கே போகிறது? எங்கேயும் போவதில்லை. மின்காந்த அலைகளாக அங்கேதான் சுற்றிக்கொண்டிருக்கும். விளக்கு அணைந்தது.

http://amuttu.net/

No comments: