கொப்புளக்காரன்! கிறிஸ்மஸ் சிறுகதை - நவீனன் ராசதுரை

.
என் அன்புத் தந்தை காவலுர் ராசதுரைக்கு சமர்ப்பணம்அந்த திருச்சபை நகர சபைக்குச் சொந்தமான நூல்நிலைய மண்டபம் ஒன்றில் ஞாயிறு தோறும் கூடியது.
சபையில் ஏறத்தாழ முன்னூறு பேர். தவிர ஒரு டசின் போதகர்.
நகர சபை மண்டபமானதால் வேறு நிகழ்வுகளும் இந்த மண்டபத்தில் நடைபெற்றன. இதனால்   ஞாயிறு தோறும் திருச்சபைகூட முன்னர் கதிரைகளை அடுக்கி ஒழுங்கு செய்யவேண்டும். இதற்காக மாறி மாறி குறிப்பிட்ட சிலரை ஒவ்வொரு ஞாயிறும் திருச்சபை நியமித்திருந்தது.
சபை கூடி பிரார்த்தனை ஆரம்பிக்கும் நேரம் காலை பத்து மணி. ஆனால் கதிரை அடுக்கிறவர்கள் காலை எட்டு மணிக்கே வந்துவிடவேண்டும் என்று நியமிக்கப்பட்டிருந்தது.அன்று என்னுடைய முறை. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு செல்ல தாமதமாகிவிட்டது!
நூல்நிலைய மண்டப வாசலை அடைந்தபோது எட்டே முக்கால்!
வாசலில் நின்ற போதகன் கிராம் என்னை நோக்கி நீ ஒரு கொப்புளக்காரன் என்றான்.
திடுக்கிட்டு அவனை நோக்கினேன்.
நீ ஒரு கொப்புளக்காரன் என்றான் மீண்டும் போதகன்.
அப்படி என்றால் என்று ஆவலுடன் கேட்டேன்.
உனக்கு கொப்புளக்காரன் என்றால் என்ன என்று தெரியாதா? என்று கேட்டான் கிராம்.
இல்லை என்றேன்.
அலுவல் நடக்கும் முன்னே கொப்புளம் வரும் பின்னே! அதைப்போலத்தான் நீயும்! கதிரை எல்லாம் அடுக்கி முடிந்தாகிவிட்டது. அதன்பிறகுதான் நீ வருகிறாய் என்றான் கிராம் நக்கல் தோரணையில்.
அருகிலிருந்த இன்னுமொரு போதகன் சிரித்தான். அவன் பெயர் டைல்.
எனக்குக் கவலையாக இருந்தது. பூசை முடிந்த பின்னரும் கதிரை அடுக்கும் வேலை இருந்தது. அதை முடித்துவிட்டு வீடு திரும்பினேன்.
சில நாட்கள் இதைப்பற்றியே யோசனையாக இருந்தது.
ஏன் போதகன் கிராம் இப்படி சொன்னான்? ஏன் இப்படி பரிகாசம் பண்ணினான்? எனக்கு விளங்கவில்லை.
சிலவேளை தேவாலயகூட்டங்களில் நான் சொல்லிய விடயங்கள் சில அவனுக்குப் பிடிக்கவில்லையோ?
தேவாயலத்தை சாப்பாட்டுக் கடையாக்கவேண்டாம். இது  பரிசுத்தமான இடம் என்று ஒரு முறை சொல்லிருந்தேன். தேவாலயக் கட்டட நிதியத்துக்காக சாப்பாடு சமைத்து விற்று தேவாலயத்தில் சாப்பிட்டுக்கொண்டிருப்போம். போதனைமூலம் வரும் பணம்தான் கட்டடத்துக்காகப் பாவிக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தேன். அல்லது கட்டட நிதியம் என்று ஆரம்பிக்க வேண்டும் பின்னர் காசு சேர்க்க வேண்டும் என்றேன். சில வேளை நான் சொன்னதில் ஏதாவது பிழை இருக்குமோ?
போதகர்களுக்கு மாத்திரம் அல்ல தேவாலயத்தில் வேலை செய்யும் மற்றவர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தேன்.  
இன்னுமொருதடவை என் நண்பன் ஒருவன் தேவாலய போதனையின்போது தூங்கிவிட்டான். இரவு வேலை செய்பவன் அவன். தூங்குபவர்களைக் கடவுளுக்குப்பிடிக்காது என்ற வசனம் போதகன் கிராம் வாயிலிருந்து வந்தது. அதுவும் எல்லோருக்கும் முன்பாக.
எல்லோருக்கும் முன்பாக சொல்லாமல் தனியே கூப்பிட்டு சொல்லிருக்கலாமே என்றும் சொல்லியிருந்தேன்.
இப்படி பல விடயங்கள்!
தேவாலயத்துக்கு வரும் தமிழ் போதகர் ஒருவருக்கு நடந்ததைச் சொன்னேன். பரவாயில்லை அவனை மன்னித்து விடும் என்றார்.
ஏன் தமிழிலும் இப்படியான சொற்கள் இல்லையா – சப்பை கறுவல் என்றெல்லொம் சொல்லுவோமே என்றார்.
அடுத்தமுறை தேவாயலத்தில் கதிரை அடுக்கும் முறை எனக்கு ஆறு மாதத்தின் பின்னர் வந்தது. வேளைக்கே போகலாம் என்றால் அன்று ரயில் தண்டவாளத் திருத்தவேலை. ஒருமாதிரி ஓடிக்கீடி எட்டு மணிக்கெல்லாம் போய்விட்டேன்.
அன்றோ போதகன் கிராம் இல்லை! எங்கேயாவது போயிருப்பானோ என்று எண்ணினேன். சுறுசுறுப்பாக கதிரை அடுக்கிக்கொண்டிருந்தேன்.
மணி எட்டே கால் இருக்கும். அவசர அவசரமாக போதகன் கிராம் தேவாலயத்துக்கும் நுழைந்தான்.
ஏன்னை நோக்கிப் பார்த்தான் போதகன் கிராம். நான் கைக்கடிகாரத்தைப்பார்த்தேன்.
போதகன் கிராம் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
சில நாட்கள் கழிந்தன. போதகன் கிராமுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தாமதமாகி வருகிறவர்களை கொப்புளக்காரன் என்று பரிகாசம் செய்வது பிழை என்றேன். பரிகாசக்காரர் பந்தியில் சேராதே என்று சங்கிதம் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே என்றேன்.
அப்படியா எப்போது சொன்னேன் என்று மறுதலித்தான் போதகன் கிராம்.
ஏன் பொய் சொல்லுகிறாய்? இப்போது நீ இரண்டு பிழை செய்துவிட்டாய் என்றேன் உரத்த தொனியில்.
ஒன்று பொய் சொன்னது மற்றது பரிகாசம் பண்ணியது என்றேன்.
அதுவா…என்று தடுமாற ஆரம்பித்தான் போதகன் கிராம்.
இனிமேல் அப்படி செய்யாதே என்றேன். கடவுளுக்குப் பிடிக்காது என்றேன்.
என்னை மன்னித்து விடு என்றான் போதகன் கிராம். நாங்களும் மனிதர்தானே! மனித குணங்கள் எங்களுக்கும் இருக்கும்தானே.
கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது.
இயேசு பாலகன் பிறந்தது எங்களை மன்னிக்கத்தானே என்கிற உணர்வு என்னை ஆட்கொண்டது!


No comments: