விழுதல் என்பது எழுகையே பகுதி 30 இளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன்-

.
இளைய அப்துல்லாஹ் (அனெஸ்)  இலண்டன் அவர்களின் அறிமுகம்
இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளர்

இளைய அப்துல்லாஹ் (1968)

1984 ம் ஆண்டில் இருந்து சிறுகதைகள்இ இலக்கியக்கட்டுரைகள் கவிதைகள் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர் இளைய அப்துல்லாஹ்.
இலங்கையில் இருந்து வெளிவரும் முன்னணி தமிழ் பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் எழுதி பிரபல எழுத்தாளரானார்.
1995 களில் இருந்து ‘புலம்பெயர்’ தமிழ் சஞ்சிகைகளுடன் தனது தொடர்பை ஏற்படுத்தி அதனை ஸ்திரப்படுத்திக் கொண்டார். சுமார் 28 புலம் பெயர் சஞ்சிகைகள் பத்திரிகைகளில் இவரின் கவிதைஇ சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. அத்தோடு புலம் பெயர் சஞ்சிகைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.
1996இ 97 களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் ‘விடியலை நோக்கி’ எனும் சமாதானத் தொனிப் பொருளில் சஞ்சிகை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
1998 இல் ஜேர்மனில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்டார்.
2000ம் ஆண்டு ஜுலை 19 ஆம் மாதம் லண்டன் தீபம் தொலைக்காட்சியில் இணைந்து செய்தி வாசிப்பாளர்இ அறிவிப்பாளர்இ நிகழ்ச்சி விவரணத் தயாரிப்பாளராகஇ ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்து ஐரோப்பியஇ பிரித்தானியஇ மத்திய கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பேரபிமானத்தை பெற்றார். 
சளைக்காது தொடர்ந்து விவரணக் கட்டுரைகளை மிகச் சுவைபட எழுதி வரும் இளைய அப்துல்லாஹ்வின் எழுத்துக்கள் பிரபல்யமானவை.
அவரது அனுபவங்கள் கூறும் உண்மைச் சம்பவங்களை பதிவதில் திறமையானவர்.
இளைய அப்துல்லாஹ் இப்பொழுதும் லண்டன் ‘தீபம்’ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும்இ விவரணத் தயாரிப்பாளராகவும் 13 வருடங்கள் பணிபுரிந்தார்.


இளைய அப்துல்லாஹ்வின் ஆறு தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. 

1‘துப்பாக்கிகளின் காலம்’ சிறுகதை
2‘பிணம் செய்யும் தேசம்’ ‘உயிர்மை’ வெளியீடாக வெளிவந்த ‘பிணம் செய்யும் தேசம்’ கவிதை நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது. 
3-அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்-கட்டுரை(உயிர்மை)இ
4-கடவுளின் நிலம்-கட்டுரை (விஸ்வ சேது இலக்கியபாலம்)
5-லண்டன் உங்களை வரவேற்பதில்லைகட்டுரை(காலச்சுவடு)இ 
6-நீரில் விளக்கெரியும் நந்திக்கடல்-கட்டுரை (காலச்சுவடு

தொடர்ந்து இந்தியா டுடே இதழில் நூல் விமர்சனங்கள் எழுதி வருகிறார். 

தகவல் தொகுப்பு  
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி 
திரு.ஏலையா முருகதாசன்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்.
---------------------------------------------
கதை தொடர்கிறது பகுதி 30

சீலன் எப்பொழுதும் கெட்டிக்காரன் என்று பேராசிரியர் மங்கையற்கரசி நினைத்துக்கொண்டார். அவருக்கு உதவி செய்யும் மனம்.
பொழுது போய் விட்டது. வெளியில் பனி லேசாக தூறிக்கொண்டிருந்தது. இறங்கி நடந்தான்.எப்படித்தான் இந்த வெள்ளைக்காரனுக்கு பனியில் பழக முடிந்ததோ. மனதுக்குள் சிரித்துக்கொண்டான். சில நேரங்களில் பனி வேண்டும் போல இருக்கும். சில நேரங்களில் வேண்டாம் போல இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். 
பேராசிரியர் சொன்னதை மனம் அசைபோட்டபடியே நடந்து கொண்டிருந்தான். எல்லாம் அவர் சொன்னபடி நடந்தால் நல்லாயிருக்கும். பஸ் தரிப்பிடத்திற்கு வந்து விட்டான். பஸ் தரிப்பிடத்தில்  காதல் சோடி ஒன்று கருத்தொருமித்து கட்டிப்பிடித்தபடி இருந்தது குளிருக்கு அது இதமாக இருந்தது. கலாவை நினைத்துக்கொண்டான் மனதில் பூ பூத்தது. அவள் இங்கை இருந்தால் எப்பிடி இருக்கும். கற்பனையில் கலாவின் உதட்டில் ஒரு முத்தம் வைத்தான். எல்லாம் தூரத்து நினைவுகள் மட்டும்தான். உதட்டோரம் லேசான புன்னகையும் முத்த சுவையும் வந்து போயின.
என்னதான் இருந்தாலும் தமழரின் அகதி வாழ்க்கை ஒரு அந்தரமான வாழ்க்கைதான். ஐரோப்பாவின் வாழ்க்கையை ஊரில் இருந்து பார்க்கும் போது பெரும் செல்வந்த வாழ்க்கையாகத்தான் தெரியும். ரஸ்யா நாட்டுக்குள்ளால் உக்ரெயின் எல்லையில் பனி ஆற்றில் எத்தனை தமிழர்கள் அடையாளம் தெரியாமல் செத்துப்போனார்கள். எத்தனை கனவுகளோடு வந்தவர்கள் அவர்கள். அவர்களை நினைத்தால் அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்துக்கொண்டு வரும்.
உயிரை கையில் பிடித்துக்கொண்டு இங்கு வந்ததன் பின்பும் எத்தனை பிரச்சனைகள் எத்தனை சிக்கல்கள்.
இலங்கையில் இருந்து தப்பி வந்து சீலனின் நண்பன் தியாகு  இந்தியாவில் இருக்கிறான். இந்தியாவில் இருந்து லண்டன் வருவதற்கு பல வழி முறைகளை முயற்சி செய்து பார்த்தான். முடியாமல் இருக்கிறது.
இதற்கிடையில் கனடாவில் இருந்த தியாகுவின் காதலி அடம் பிடித்து தமிழகம் போய் அவனை கலியாணம் செய்து கொண்டாள். சரி வாழ்க்கைதானே வாழ்ந்து பார்ப்போமே என்றுதான் நினைத்தான் தியாகு.
அவளும் கெட்டிக்காரி அவள் கனடாவில் அவன் தமிழகத்தில் புருசன் அந்தரத்தில் இருக்கிறான். ஆனால் எத்தனை காலத்துக்கென்று இப்படி வாழ்வது என்று முடிவெடுத்து விட்டாள். அவளின் முடிவு சரிதான்.
அவர்களுக்கு ஒரு பெடியன் பிறந்தான். அவன் அம்மாமாதிரி வெள்ளையாக இருந்தான். அவனுக்கு மூன்று வயதில் தமிழகம் போய் அப்பாவை அவன்  பார்த்தபோது ~~அப்பா நீ ஊத்தை|| என்று சொல்கிறான்.
தியாhகு நல்ல பகடிக்காரன். ~~நீ வெள்ளையாய் அம்மா மாதிரி பிறந்திட்டாய் அதுக்கு நான் என்னடா செய்யுறது.||
~~உனக்கு நெஞ்சிலை முடி இருக்கு நான் எப்பிடி உன்ரை மேலிலை படுக்கிறது|| என்று  சொன்ன மகன் ஓடிப்போய் துவாய் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து தகப்பனின் நெஞ்சில் போட்டுக்கொண்டு அவன் மீது ஏறிப்படுத்துக்கொண்டான்.
தியாகு ஒருநாள் தொலைபேசியில் கதைக்கும் போது இதனை சீலனிடம் சொன்னான். இது சொல்லிச்சிரித்தாலும் இதற்குள் எத்தனை வாழ்வுச்சிக்கல்கள் இருக்கின்றன,எத்தனை சமூக முரண்பாடுகள் இருக்கின்றன.
எமது தலைமுறையோடு எமது மண்ணின் மணம் இல்லாமல் போய் விடுமோ என்ற பயம் சீலனை பல முறை ஆட்கொள்ளும்.
யாழ்ப்பாணத்திற்கு வரும் வெளிநாட்டில் பிறந்த எமது தமிழ் பிள்ளைகள் படும் அந்தரத்தை பார்த்தால் தெரியும். நல்லூர் கோவில் திருவிழா நேரம் மட்டும் காஃப் சாறியை ஆசையாக கட்டுவார்கள் பெண் பிள்ளைகள். திருவிழா முடிந்த கையோடு வெளி நாட்டு உடுப்புக்கு மாறி விடுவார்கள்.
ஊரில் உள்ள பேரன் பேத்திகளின் வியர்வை மணம் இவர்களுக்கு பிடிக்காது. ~~வாம்மா அல்லது வா அய்யா|| என்று கொஞ்சக்கூப்பிட்டால் கிட்டவே போக மறுக்கிறார்கள். வயதான ஊரில் உள்ள பேரன் பேத்திக்கு இவர்களின் வெளிநாட்டு பேர்ஃபியூம் வாசனை ஒத்து வருகுது இல்லை. இவர்களுக்கு அவர்களின் வியர்வை வாசம் ஒத்து வருகுதில்லை. 
நாங்கள் அம்மம்மா சந்தைக்கு போய்விட்டு வந்தபோது அவவின் சீலை மடிக்குள் கட்டிவந்த இலந்தைப்பழத்தை பங்கு போட்டு சாப்பிட்டோம். அம்மம்மாவின் சீலை வாசம் இன்னும் மனதுக்குள் ஒட்டியே கிடக்கிறது. அது அன்பு...... சீலனுக்கு பெரு மூச்சு ஒன்று இரைந்து வெளியானது... 
பஸ்ஸில் சனம் இல்லை. ஆசனத்தில் சிக்காராக அமர்ந்து கொண்டான். ஊரில் வாழ்ந்த வாழ்க்கை எப்படி இருந்தது. மனம் சஞ்சலப்பட்டது. ஊரை நினைத்தால் அவனுக்கு எப்பொழுதும் மனதுக்குள் பல நினைவுகள் வாட்டும். 
தனது அம்மாவின் ஐயாவை நினைத்தான்.அம்மய்யா வாழ்வின் மறக்கமுடியாத ஒரு மனிதர்.பெரும் உழைப்பாளி.பேராசை இல்லாத மனிதர்.யாருடனும் எந்த வம்பு தும்புக்கும் போகாத மனிதர். அவர் இப்பொழுது உயிருடன் இருந்திருந்தால் அவரை தாங்கு தாங்கென்று தாங்கியிருப்பான். அம்மய்யா படிப்பறிவு இல்லாத மனிதர் தான் ஆனால் உலக அறிவு, அரசியல் அறிவு நிரம்ப்பப்பெற்றவர். தந்தை செல்வாவில் அன்பு அதிகம்.ஆனால் அவர் எந்தக்கட்சியையும் சார்ந்து இருந்தவரில்லை.
அவரால்தான் சீலனுக்கு இவ்வளவு தமிழ் அறிவு வந்தது. அரசியலில் நாட்டம் வந்தது. காலையில்  போய் கடையில் பேப்பர் வாங்கி வந்து வைத்திருப்பார். அவன் பாடசாலை விட்டு வந்து அந்த தினபதி பேப்பர் முழுவதுமாக அவருக்கு உரத்து வாசித்துக்காட்டவேண்டும். அதனால் தான் அவன் இலங்கையில் இருக்கும் பொழுது இலங்கை வானொலியில் மாணவர் நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளராக இருக்க முடிந்தது. அவனின் கனவே அதுதான் இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக வர வேண்டும் என்பது. ஆனால் எல்லாம் கனவாகவே போய் விட்டது. 
இங்கை வந்து நாங்கள் மூன்று வேளை சாப்பாட்டை பிரச்சனை இல்லாமல் சாப்பிடுகிறோம். ஆனால் எங்கடை சனம் யுத்தம் முடிந்து ஆறு வருடமாகியும் இன்னும் கால் வயிறு கஞ்சியோடுதான் கழிக்கிறார்கள் என்றால் அது பெருங்கொடுமை. மனதில் அலுத்துக்கொண்டான்.
எல்லாவற்றிலும் அரசியல் அரசியல் மனித வாழ்வை சிதைத்துப்போடுகிறது. அவன் அரசியல் பிரக்ஞை உள்ளவன். இங்கு பல அரசியல் சந்திப்பு மேடைகளுக்கு போயிருக்கிறான். ஆனால் ஆத்திரம் தான் மிஞ்சும். ஊரில் அந்த மனிதர்களின் வாழ்வை சிதைத்து விட்டு இங்கு அரசியல் பேசும் மனிதர்களை அவன் அறவே வெறுத்தான். 
தன் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பான். நீண்ட நாட்களாக அவன் தன் கிராம மக்களுக்கு செய்யும் திட்டம் ஒன்றை வைத்திருக்கிறான்.அது சரி வந்தால் அவன் கிராமம் இலங்கையிலேயே செழிப்பு மிக்கதாக ஆகி விடும். அது அவனது மக்களுக்கு செய்யும் நன்றிக்கடன். அவனது கிராம மக்கள் எல்லோருமே அவனோடு எவ்வளவு பாசம். யுத்தத்தில் செத்துப்போன தன் கிராம மக்களை நினைத்து இன்னும் மனம் வெதும்புவான்.
தான் சம்பாரிக்கும் தொகை தன் குடும்பத்துக்கே போதாமல் இருக்கிறது. அம்மா தங்கச்சி என்று அவன் தன் ரத்த சொந்தங்களோடு போராடிக்கொண்டிருக்கிறான். ஆனால் அது கூட அவனுக்கு சுகம்தான்.

தொடரும்  31
----------------------------------

No comments: