உலகச் செய்திகள்


சவூதியில் தீவிரவாதத்துடன் தொடர்புபட்டிருந்த குற்றச்சாட்டில் 26 வெளிநாட்டவர்கள் உட்பட 135 பேர் கைது

மலாலாவின் இரத்தக்கறை படிந்த ஆடை முதல் தடவையாக காட்சிக்கு வைப்பு

சவூதியில் தீவிரவாதத்துடன் தொடர்புபட்டிருந்த குற்றச்சாட்டில் 26 வெளிநாட்டவர்கள் உட்பட 135 பேர் கைது




09/12/2014 சவூதி அரேபியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருந்த குற்றச்சாட்டில் 26 வெளிநாட்டவர்கள் உட்பட 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 16 பேர் சிரிய நாட்டவர்கள் என சவூதி அரேபிய உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஜெனரல் மன்சூர் அல் - துர்கி தெரிவித்தார்.
ஏனைய கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் யேமன், எகிப்து, லெபனான், ஆப்கான்,  எதியோப்பியா, பஹ்ரெயின், ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் நாடற்ற நபரொருவரும் உள்ளடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 40 பேர் மோதல்கள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று தீவிரவாதிகளுடன் இணைந்து ஆயுதங்களை கையாளுவதற்கு பயிற்சி பெற்ற பின் தாய் நாட்டின் ஸ்திரத் தன்மையை குலைக்கும் முயற்சியில் திரும்பியவர்கள் என மன்சூர் அல்துர்கி தெரிவித்தார்.


மேலும் அவர்களில் 17 பேர் அவமியாவில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களாவர்.
சிரியாவிலுள்ள ஐ.எஸ். போராளிகளுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான வான் தாக்குதல்களில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்தான்,  பஹ்ரெயின் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ள நிலையிலேயே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன. நன்றி வீரகேசரி

மலாலாவின் இரத்தக்கறை படிந்த ஆடை முதல் தடவையாக காட்சிக்கு வைப்பு


10/12/2014 பாகிஸ்தானைச் சேர்ந்த  மலாலா யூசுப்சாய் தனக்குரிய சமதானத்துக்கான நோபல் பரிசை பெறுவதையொட்டி அவர் தலிபான்களால் சுடப்பட்டபோது அணிந்திருந்த இரத்தக்கறை படிந்த ஆடை முதல் தடவையாக பொது மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பாடசாலை பஸ்ஸொன்றில் அமர்ந்திருந்த வேளை முகமூடி அணிந்து வந்த தலிபான் போராளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மலாலாபடுகாயமடைந்தார்.
அவரது தலையை துளைத்துச் சென்ற துப்பாக்கி ரவையானது கழுத்தினூடாக அவர் தோள் எலும்புக்கு மேலுள்ள தசை வரை ஊடுருவியிருந்தது.
இதனையடுத்து அவரது உயிரைக் காப்பாற்ற பிரித்தானியாவில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது மலாலா அணிந்திருந்த ஆடை நோர்வேயிலுள்ள நோபல் சமாதான நிலையத்தில் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 

No comments: