இலங்கைச் செய்திகள்


அச்சுறுத்தலுக்குள்ளான யாழ். ஊடகவிலாளர்களிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

இதுவரை 45 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவு: பெப்ரல்

இலங்கை வந்தது சுகன்யா

அம்பாறையில் வெள்ளம்: 6105 பேர் பாதிப்பு

மைத்திரிக்கு 59% மஹிந்தவுக்கு 41%: பத்திரிகையின் ஆசிரியர் புலனாய்வு பிரிவினரால் விசாரணை

அச்சுறுத்தலுக்குள்ளான யாழ். ஊடகவிலாளர்களிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை


09/12/2014 வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவரப்பட்ட மக்களின் வீடுகள் இடித்தழிகக்ப்படுவது தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற  ஊடகவியலாளர்கள் ஐந்து பேருக்கு இராணுவத்தினரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வழக்கு இன்று முற்பகல் கொழும்பில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுதொடர்பாக விசாரணைக்கு யாழ்.ஊடகவியலாளர்கள் சமுகமளித்திருந்தபோது முறைப்பாட்டில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இராணுவத்தினர் சார்பாக எவரும் சமுகமளித்திருக்கவில்லை.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,


கடந்த 1990 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் காணிகள் மற்றும் வீடுகள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் தற்பொழுதும் வைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இவ்வாறு பல பகுதிகள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நிலையில் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரால் சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கர் தனியாருக்கு சொந்தமான காணிகள் கபளீகரம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயம் என்று அடையாளமிடப்பட்டு முற்கம்பி வேலி போடப்பட்டுள்ள பகுதிக்குள்ளடங்கும் கட்டுவன் பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 28 ஆம் திகதி இராணுவத்தினரால் கனரக வாகனங்களின் துணையுடன் இராணுவ மனித வலுவைப்பயன்படுத்தி மக்களின் வீடுகள் இடித்து அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது பிற்பகல் ஒருமணியளவில் சம்பவ இடத்திற்கு யாழ். ஊடகவியலாளர்கள் ஐந்து பேர் சென்றிருந்தனர்.
இதேவேளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் ஆளும்கட்சியான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களான தர்மலிங்கம் சிர்த்தார்த்தன்,எம்.கே.சிவாஜிலிங்கம்,வடக்கு மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன்,வலி.தெற்கு பிரதேசசபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் உள்ளிட்டவர்கள் சமுகமளித்திருந்தனர்.
இந்தச்சந்தர்பத்தில் மக்களின் வீடுகளை புல்டோசர் வாகனங்களைக்கொண்டு இராணுவத்தினர் இடித்து அழித்துக்கொண்டிருந்தனர்.இதனை செய்தியாக அறிக்கையிடும்பணியில் ஈடுபட்டிருந்த யாழ்.உதயன் பத்திரிகையின் புகைப்படச் செய்தியாளர் எஸ்.தர்சன்இதினக்குரல் பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் எஸ்.நிதர்சன், வலம்புரி பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் எஸ்.ராஜேஸ்கரன் மற்றும் சக்தி டிவியின் யாழ்.பிராந்திய செய்தியாளர் வி.கஜீபன் மற்றும் இணையத்தள செய்தியாளர் ஒருவர் உட்பட ஐந்து ஊடகவியலாளர்கள் இராணுவத்திரால் முற்றுகையிடப்பட்டனர்.
இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படக்கருவிகள் இராணுவப்பாணியில் சோதனையிடப்பட்ட அதேவேளை புகைப்படக்கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டு நீண்ட நேரம் இராணுவத்திரால் கொடுக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தது.
இது மட்டுமின்றி அங்கு பிரசன்னமாகியிருந்த 25 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் முற்றுகைக்குள் வைத்து 515 ஆவது படைப்பிரிவைச்சேர்ந்த உயர் இராணுவ அதிகாரியினால் ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தலும் விடப்பட்டிருந்தது.
மக்களின் வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பான புகைப்படங்களோ அல்லது செய்திகளோ நீங்கள் பணிபுரியும் ஊடகங்களில் நாளை அதாவது மறுநாள் பிரசுரமானால் நான் இப்போது மனிதத்தன்மையுடன் பேசிக்கொண்டிருக்க மாட்டேன். எனது இராணுவப்பலத்தை பிரயோகிக்க வேண்டிவரும் என்று ஊடகவியலாளர்களுக்கு கடும்தொணியில் எச்சரிக்கைவிடுத்தார்.
இந்நிலையில் மறுநாள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் அச்செய்தி மிகவும் முக்கியத்துவம் படுத்தபட்பட்டு வெளியிடப்பட்டது.இதனால் இராணுவத்தினரால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனக்கருதி 2013.10.28 அன்று குறித்த ஐந்து ஊடகவியலாளர்களும் இணைந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்தனர்.
இந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு முதன் முறையாக இன்று கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தின் புலன்விசாரணை அதிகாரி என்.எல்.ஏ.கலாம் முன்னிலையில் முற்பகல் 11 மணியிலிருந்து ஒரு மணிவரையிலான சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்றன.
இதன்போது மேற்படி முறைப்பாடு தொடர்பான விசாரணை தாமதமானதற்கான காரணத்தை புலன்விசாரணை அதிகாரி முதலில் ஊடகவியலாளர்களுக்கு விளங்கப்படுத்தியிருந்தார்.
குறிப்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆளணிப்பற்றாக்குறை நிலவுவதாகவும்இ சிரேஸ்ட அதாவது புலன் விசாரணை அதிகாரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகக்காணப்படுவதாகவும் தெரிவித்தார்.அதுமட்டுமின்றி தமிழ் பேசும் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகவும் சொற்றபளவிலேயே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் 2014 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 24 ஆம் திகதியே தன்னிடம் மேற்படி முறைப்பாடு தொடர்பாக விசாரணை ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி ஊடகவியலாளர்களினால் இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தபட்ட குற்றச்சாட்டு தொடர்பாக ஆணைக்குழுவினால் கடந்த 2013 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 7 ஆம் திகதி எழுத்துமூலம் இராணுவத்தளபதியிடம் விளக்கம் கோரப்பட்டதாகவும் அதற்கு இராணுவத்தளபதியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடந்த 2013 ஆம் திகதி 12 ஆம் மாதம் 23 ஆம் திகதி பதில் கடிதம் அனுப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இராணுவத்தளபதியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பட்ட பதில் கடிதத்தில் இ ஊடகவியலாளர்களினால் இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட்டுள்ள அதேவேளை ஊடகவியலாளர்கள் அத்துமீறி இராணுவ முகாமிற்குள் நுழைய முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் ஊடகவியலாளர்களினால் குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தரப்பு சார்பில் எவரும் விசாரணைக்கு சமுகமளித்திராத நிலையில் ஊடகவியலாளர்களிடம் கேள்வி பதில் முறையில் விசாரணைகளை அதிகாரி மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 

இதுவரை 45 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவு: பெப்ரல்


09/12/2014 தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை 25  வன்முறைச் சம்பவங்கள் உட்பட 45 தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் றோகண ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.
இதனால் ஜனாதிபதி தொடர்பான சட்டவிரோத பிரசார நடவடிக்கைகளை தடுப்பதற்கு பொலிஸார் ஆக்கபூர்வமான பங்களிப்புக்களை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட பின்பு பதாதைகள் சுவரொட்டிகள் கட்அவுட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர் சட்டவிரோத பிரசார அலுவலகங்களை நடத்திச் செல்ல முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனேகமான பகுதிகளில் பாரிய அளவில் பதாதைகள் சுவரொட்டிகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதனை அகற்ற பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
இதேவேளை தேர்தல் சட்ட திட்டங்களை மீறுவோர்களை கைது செய்ய நாடளாவிய ரீதியில் விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இருப்பினும் இதுவரை 45 தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளபோதிலும் இது தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 

இலங்கை வந்தது சுகன்யா

10/12/2014 இந்திய கடற்படைக் கப்பலான சுகன்யா நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

101.1 மீற்றர் நீளத்தையும் 1890 தொன் எடையையும் கொண்ட சுகன்யா, 165 வீரர்கள் உள்ளடக்கியுள்ளது.இந்தக் கப்பல் இம் மாதம் 12 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்.
சுகன்யாவை இலங்கை கடற்படை வரவேற்றதுடன் அதன் கட்டளை தளபதியாக துரைபாபு செயற்படுகிறார். இந்தநிலையில் அவர் இலங்கையின் கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 


அம்பாறையில் வெள்ளம்: 6105 பேர் பாதிப்பு

10/12/2014 அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 6105 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா  தெரிவித்தார்.
நேற்று முன்தினம் முதல் பெய்த அடை மழை காரணமாக அட்டாளைச்சேனை பாலமுனை  ஒலுவில் திராய்கேணி ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டிருந்ததோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்தது.
தற்போது மழை ஓய்ந்துள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதோடு பாலமுனை பிரதேசத்தில் 120 குடும்பங்களைச் சேர்ந்த 355 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து  நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டதாகவும் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா கூறினார். நன்றி வீரகேசரி 
மைத்திரிக்கு 59% மஹிந்தவுக்கு 41%: பத்திரிகையின் ஆசிரியர் புலனாய்வு பிரிவினரால் விசாரணைராவய சிங்களப் பத்திரிகையின் ஆசிரியர் டப்ளியு. ஜனரஞ்சன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த பத்திரிகையில் வெளியான செய்தியொன்று தொடர்பிலேயே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டதாகவும் அவரிடம் நீண்ட வாக்கு மூலம் ஒன்று புலனாய்வுப் பிரிவினரால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கேசரியிடம் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள புலனாய்வுப் பிரிவினரின் தலைமையகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ள ராவய பத்திரிகையின் ஆசிரியர் அங்கு சுமார் இரு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன் போது அந்த பத்திரிகையில் வெளியான மைத்திரிக்கு 59% மஹிந்தவுக்கு 41% என்ற தலைப்பில் வெளியான செய்தி குறித்தே குறித்த இரு மணி நேரமும் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வெளியான குறித்த பத்திரிகையில் புலனாய்வுப் பிரிவின்  பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திர வாகிஷ்ட ஜனாதிபதி தேர்தல் குறித்து புலன் ஆய்வு அறிக்கை ஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் கையளித்ததாகவும் அதில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிக்கு 59 வீதமான வாக்குகளும் மஹிந்தவுக்கு 41 வீதமான வாக்குகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் முன்பக்க செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் அந்த அறிக்கையை பார்த்த ஜனாதிபதி மஹிந்த  கோபத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாகிஷ்டவை புலனாய்வுப் பிரதானி பதவியிலிருந்து நீக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே ராவய பத்திரிகை ஆசிரியர் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தமது செய்தி சரியானதே என்ற நிலைப்பாட்டில் குறித்த பத்திரிகையின் ஆசிரியர் உள்ளார். அப்பத்திரிகையின் ஆசிரியர் ஜனரஞ்சன பீ.பீ.சி. சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள தகவலில் தமக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் குறித்த அறிக்கையின் உண்மை  தன்மையில் எந்தவொரு சவாலும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி 

No comments: