நினைவுகள் இனிமை: துயரங்கள் நிறைந்த கணங்களுடன் – 5 -திருநந்தகுமார்

.

இரண்டாவது தடவையாக நான் பொலிஸ் கடேற் முகாமுக்கு களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்ற போது யாழ். இந்து அணிக்கு பொறுப்பான சார்ஜண்டாக இருந்தேன். நீல நிற அரைக்கைச் சட்டையின் இரு கைகளிலும் ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று V அடுக்கிவைத்த பட்டியும், வெள்ளி நிறத்திலான பொலிஸ் விசிலும் தரப்பட்டிருந்தது.
பொலிஸ் பயிற்சி முகாமில் இம்முறை மேலும் இரு பாடசாலைகள் கலந்துகொண்டன. முன்னைய ஆண்டைப் போல அன்றி இம்முறை பாடசாலை அணிகள் என்பதை மாற்றி, இல்லங்களாக அமைத்திருந்தனர். ஒவ்வொரு இல்லத்திலும் எல்லாப் பாடசாலைகளைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். ஒவ்வொரு அணியிலும் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒரு சார்ஜண்ட், இரு கோப்ரல் என்ற பதவிநிலைகளில் வேறு வேறு பாடசாலைகளைச் சேர்ந்த கடேற் படையினர் இருந்தனர்.  
யாழ் இந்து கடேற் படையினருக்கு இந்த அமைப்பு சரியாக இருந்தது.  ஏனெனில் முடல் வருடம் எந்த விருதும் பெறமுடியாது போனதால், இந்த இல்ல அமைப்பு முறை அவர்களுக்குப் பிடித்துக்கொண்டது. எனக்கு அது சரிவரவில்லை. எனது ஆசிரியர்கள் வெவ்வேறு இல்லங்களில் இருந்தனர்.
நான் இருந்த இல்லத்தில் ஐந்து பேர் தமிழர்கள், ஐந்து பேர் முஸ்லீம்கள். ஏனையவர்கள் சிங்கள கடேற்படையினர். முதல் நாள் எல்லோரும் ஒன்று சேர்ந்த பின்னர் ஒவ்வொரு பாடசாலையிலும் இருந்து பதவி நிலையில் மூத்தவர்களை அழைத்திருந்தனர். அங்கு அறுவர் ஒன்று சேர்ந்தோம். அப்போது தான் தெரிந்தது எனது இல்லத்தில் நான் ஒருவன் மட்டுமே சார்ஜண்ட் தரத்தில் இருந்தேன். அதுவே கடேற் படையினரின் அதி கூடிய பதவி நிலையாகும். கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் பொறுப்பாசிரியர் எமது இல்லத்தின் இன்ஸ்பெக்டராக இருந்தார். நீ தான் இந்த அணிக்கு சார்ஜண்ட் என்று சிங்களத்தில் சொன்னார். எனக்கு அந்த சிங்களம் ஓரளவுக்குப் புரிந்தது. எனினும் பேசாது நின்றேன்.  ஆனந்தாக் கல்லூரி அணியின் சீனியர் கோப்ரல் தரத்தில் இருந்த நண்பர் தனது ஆசிரியருடன் ஏதோ சிங்களத்தில் பேசினார். எமது இல்லப் பொறுப்பாளர் பற்றிய பேச்சே அது எனப் புரிந்துகொண்டேன்.இருவரும் சிங்களத்தில் உரையாடிக்கொண்டிருந்த போது மற்றவர்கள்  என்னையும் அவர்கள் இருவரையும் மாறி மாறிப்  பார்த்துக் கொண்டிருந்தனர்.  இறுதியில் அடுத்த நாள் என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு பொறுப்பாசிரியர்  சென்று விட்டார். எனது நண்பனோ தனது பள்ளி அணியினருடன் மாறி மாறி சென்று பேசிக்கொண்டிருந்தார். அன்று இரவு சாகிராக் கல்லூரி படைவீரர் ஒருவர் வந்து என்ன நடந்தது என்று கூறினார். எனது நியமனத்தை ஆனந்தா நண்பர் ஆட்சேபித்து இல்லப்பொறுப்பாளர் பதவி தனக்கே வழங்கப்படவேண்டும் என வேண்டியதாகவும், எனக்கு சிங்களம் தெரியாமலும் புரியாமலும் இருப்பதால் என்னால் அந்த அணியை வழிநடத்த முடியாது என்றும் தனது ஆசிரியருடன் வாதிட்டுக்கொன்டிருந்தாராம். ஆயினும் அந்த அசிரியர் பதவி நிலைகு மரியாத கொடுக்காதுவிடின் தன்னால் உபாலி சகாபந்து மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பதில்சொல்ல முடியாது என்று கூறி மறுத்துவிட்டாராம்.
ஆனந்தா நண்பர் என்ன மந்திரம் ஓதினாரோ தெரியாது. சிங்கள மாணவர்களைக் கட்டுப்படுத்துவது கடினமாகவே இருந்தது. இரவில் மாணவர்கள் உரத்துக் கதைக்கும் போது சத்தம்போடாதீர்கள், தயவு செய்து அமைதியாக இருங்கள் என நான் ஆங்கிலத்தில் சத்தம் போட்டாலும் ஒரு கணம் பேசாது இருந்து விட்டு மீண்டும் கசமுச கசமுசவென கதைக்கத் தொடங்கிவிடுவார்கள். இந்த வேளையில் ஆனந்தா நண்பர் என்னால் முடியும் என்று காட்டுவதற்காக சிங்களத்தில் கத்துவார். அதற்கு எல்லோரும் அடங்கி்விடுவார்கள். ஒரு நாள் காலையில் இல்லப் பொருப்பாசிரியரிடம் அவர் இந்தப் பிரச்சனையைக் கிளப்பியிருகிறார். அவரும் விசாரித்திருக்கிறார். இரவு வேளையில் விடுதியில் அமைதியை பேணுவதில் அவரின் பங்களிப்பை நான் நிராகரிக்கவில்லை. அப்போது அது ஒன்றே தீர்வாக இருந்தது.
தனது புதிய பதவியால் மகிழ்வுற்ற நண்பர் அன்று இரவு புதிய பிரச்சனையைக் கிளப்பினார், கடைசி நாளில் இல்லக்கொடியை இறக்கி கழட்டி ஆறு பேராக அதனை காவிச் சென்று பின்னர் முறைப்படி மடித்து இறுதியில் அணித்தலைவர் அதனை பிரதம தளபதியிடம் கையளிக்க வேண்டும். அதனைத் தானே செய்ய வேண்டும் என அவர் வேண்டிக்கொண்டார். நானோ இல்லை அது எனது உரிமை, அதனை நான் தான் செய்யவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன். இறுதியில் ஆசிரியர் நானே செய்யவேண்டும் என்றும் அல்லாவிடில் அது முறையாக இருக்காது என்றும் கூறிவிட்டார். எனது உரிமைக்காக அன்று நிறையவே போராடவேண்டியிருந்தது. சிங்களத்தில் சிறிதளவு புரிதல், ஆங்கிலத்திலும் அதிக சரளம் இல்லை. இந்த இலட்சணத்தில் பெரும்பாலும் சிங்கள மாணவர்களைக் கொண்ட ஒர் அணியை தலைமை தாங்கி நடத்துவது கடினமாகவே இருந்தது. எனினும் கடும் முயற்சிக்குப் பின் என் உரிமையை நான் நிலைநாட்டியதில் எனக்குப் பூரண திருப்தி. நெருக்கடிகளுக்கு விட்டுக்கொடுக்காமல் அன்று நான் முயற்சி செய்ததை எனது ஆசிரியர் சுந்தரதாஸ் பாராட்டினார்.  மற்ற மாணவர்களால் நான் அவமானப்படுவதை சகிக்க முடியாத எனது நண்பர்கள் பேசாமல் இதை விட்டுக்குடு மச்சான் என்று ஆலோசனை கூறியிருந்தனர். இன்னும் சிலர் ”எங்களை என்ன பாடுபடுத்தினான். இப்போது சிங்களவனிடம் வாங்கிக் கட்டுகிறான்” என்று மகிழ்ச்சியடைந்தனர்.
எனினும் முகாமின் நிறைவுக் காலத்தில் எனது பிழையான உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தை கோபத்துடன் வேகமாகப் பேசியும், தவறுபவர்கள் தண்டனை அடைவார்கள் என்று அச்சுறுத்தியும் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டேன். ஏனைய பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் மாணவர்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள். அது தொடக்கமாக ஏனைய வேலையிலும் கட்டுப்பாட்டைப் பேண முடிந்தது.
தொடர்ந்து அடுத்தவருடமும் பொலிஸ் கடேற் முகாமுக்கு சென்றபோது, யாழ்.இந்து அணிக்குத் தலைமை தாங்கி நானே சென்றேன். அப்போது பொல்ஹொல்லையில் அந்த முகாம் நடைபெற்றது. கண்டியில் அப்போது உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக இருந்தவர் சண்முகம் என்ற தமிழர். ஏ.எஸ்.பி சண்முகம் கண்டியில் பொலிஸ் வட்டத்தில் மிகுந்த செல்வாக்குள்ளவராக விளங்கினார். துணைத்தளபதி சினீயர் எஸ்.பி வாமதேவனும் ஏ.எஸ்.பி சண்முகமும் எனக்கு மிகப்பெரிய முன்னோடிகளாகத் தெரிந்தனர்.
இணுவிலில் கவிதை அரங்கேறிய நேரம்
இணுவிலில் 1975 மாசி மாதம் சிவராத்திரி தினத்தன்று இரவு கலை இலக்கிய விழா ஒன்று நடைபெற்றது. மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இவ்விழாவின் முக்கிய அம்சங்கள் இண்டு தான். ஒன்று கவிஞர் ச.வே பஞ்சாட்சரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இளைஞர் கவியரங்கம். மற்றயது ஊரவர்கள் உழைப்பில் உருவான கர்ணன் நாடகம். இதனை விட கவிஞர் ச.வே அவர்கள் எழுதிய இயக்கிய இன்னொரு சமூக நாடாகத்தில் இளைஞர்கள் பங்கேற்றிருந்தனர்.
கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம்
எழுபத்தினான்கின் முற்பகுதியில் இருந்து கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்களின் கவிதை வரிகளினாலும், சோர்ந்திருப்போரை துடிப்போடு எழ வைக்கும் தூண்டல் உரையினாலும் நான் கவரப்பட்டிருந்தேன். அவர் சில காலத்திற்கு முன்னர் தான் மலைநாட்டின் புசல்லாவ நகரில் ஒரு பள்ளியில் இருந்து தனது சொந்த ஊர்ப் பள்ளிக்கு மாற்றலாகி வந்திருந்தார்.

முன்னர் அடிக்கடி பார்த்திராத முகம். கலகலப்பாக எல்லோருடனும் பேசும் பாங்கு, இளைஞர்களை அவர்களின் முகச்சாயலை வைத்து பெற்றோரின் பெயர் சொல்லி உரிமை பாராட்டும் தன்மை, பெரியோர்களை உறவு பாராட்டி அழைக்கும் பணிவு என்பவற்றால் அவர் எமது ஊரில் எல்லோராலும் பார்க்கப்படும் ஒருவராக விளங்கினார்.  தனது இருபத்தினாலாவது வயதில் எழினி என்ற கவிதை நூலுக்கு இலங்கை அரசின் சாகித்தய மண்டலப் பரிசு பெற்றிருந்த கவிஞர் ஏற்கனவே சிற்பி சிவசரவணபவன் அவர்கள் நடாத்திய கலைச்செல்வி இதழில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இணுவிலில் காங்கேசன் வீதியில் சந்தைக் கட்டிடத்திற்கு முன்னால் இருந்த இருமாடிக் கட்டிடத்திற்குப் பின்னே இருந்தது எனது வீடு. எனது மைத்துனர் சண்முகபாஸ்கரனின் நண்பர் மாடிக்கட்டிடத்தின் கீழே அமைந்த ஒரு கடையில் அச்சகம் வைத்திருந்தார். சுரபி அச்சகம் என்ற பெயரில் இயங்கிய அதன் முகாமையாளர் இன்பராசா நவாலியைச் சேர்ந்தவர். சிறந்த நாடகக் கலைஞர். சின்னமணி வில்லுப்பாட்டுக் குழுவில் சிலகாலம் கலைஞர் சின்னமணியின் உதவியாளராகவும் இருந்த இன்பராசா கலகலப்பான ஒரு நல்ல நண்பர்.   கலகலப்பு நகைச்சுவை இதழின் ஆரம்ப நாட்களில் தீசனோடு இணைந்திருந்த பாஸ்கரன் அண்ணை இணுவையூர் பாஸ்கர் என்ற பெயரில் சுரபி உரிமையாளருடன் இணைந்து குயில் எனும் மாத சஞ்சிகையை நடாத்திக்கொண்டிருந்தார். சுரபி அச்சகத்திலே குயில் தயாராகும் போது அச்சுக்கோர்ப்பதில் இருந்து, அச்சுப்பிரதியில் பிழை திருத்தம் செய்வது, மூலப்பிரதியோடு ஒப்பிடுவது, இறுதிப்பிரதி அச்சடிப்பு, சஞ்சிகையாக பைண்டிங் செய்வது வரை அவ்வப்போது அச்சகத்தில் நின்றிருக்கிறேன். இன்பராசாவுடனும், பாஸ்கரனுடனும் கழிந்த பொழுதுகள் பசுமையானவை. 
அவ்வேளையில் பாஸ்கரன் அண்ணை அருகிலுள்ள கடையில் வளரும்பயிர் எனும் பெயரில் விவசாய சேவை நிலையம் ஒன்றை நடாத்தத் தொடங்கியிருந்தார்.  கொழுத்தும் வெயிலில் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த உரம் நீர்க்கசிவோடு இருக்கும். அமோனியா, சல்பர் கலந்த வாசனை அவ்வழியால் போவோர் வருவோரை முகம்சுழிக்க வைக்கும். எனினும் ஊரவர்களும் அயலூரவர்களும் விவசாயப் பொருட்களை வாங்குவதற்கு அங்கு வந்தவண்ணமிருப்பர்.  வளரும்பயிர் வாடிக்கையாளர்களில் ஒருவர் கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்கள். மருந்து மணத்தின் அருகில் இலக்கிய மணம் என்று சொல்லிகொண்டு ஒரு முறை வரும்போதுதான் நான் அவரை நேரில் சந்தித்தேன்.  இரண்டு மூன்று தடவைகள் அவரைச் சந்தித்த பின்னர், எனக்குக் கவிதையின் மீது உள்ள என் ஆசையைத் தெரிவித்தேன். அதுக்கென்ன, தாராளமாகப் படிக்கலாமே என்று கூறியிருந்தார். அதன் பின்னர் பஞ்சாட்சரம் வாத்தியாரை நான் மாலை வேளைகளிலும், வார இறுதித் தினங்களிலும் சந்திக்கத் தொடங்கினேன். அவரின் வீட்டிலும் தோட்டத்திலும் அவரோடு சென்று உரையாடுவேன். நான் எழுதிய ஒரு கவிதை ஒன்றைத் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு உனக்கு ஓசை வரவில்லை. சில கவிதைகளை தொடர்ந்து படி. கவிதைக்குள் ஒழிந்திருக்கும் ஓசை உனக்குப் புரியும். ஓசை வந்துவிட்டால் உன் கற்பனைக்குக் கவிதை தானே வரும் என்று சொன்னார். தனது இரு கவிதைத் தொகுதிகளைத் தந்து படிக்கச் சொன்னார். அடுத்த இரு வாரங்களும் அவரின் கவிதைத் தொகுதிகளை மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன்.
ச.வேயின் கவிதைத் தொகுப்பில் உள்ள ஒன்று கவிதையில் என்ன இருக்கும் என்பதைப் பற்றியது. கவிதை இலக்கணத்தில் முக்கியமான மோனை, எதுகை என்பவற்றை விளக்கும் கவிதை. மோனையுடன் சேர்த்து கிராமங்களில் வழக்கிலிருந்த பிள்ளைகளை அழைக்கும் சொல்லான மேனையை அழகுற இணைத்திருந்தார் கவிஞர். அது முழுமையாக நினைவில் இல்லை. எனினும் சில வரிகள் அடிக்கடி நினைவில் வரும். மனைவி கேட்கிறாள்,
“அத்தான் அத்தான் அத்தான், முத்தாய்க் கவிதை பாட முடியவில்லை எனோ?”
அதற்கு கணவன் சொல்வான்:
”மோனை வேண்டும் மேனை, தேனைப் பாட்டில் வார்க்க தேவை இந்த மோனை”
இன்னோர் வரி: கணவன் சொல்கிறான்.
”எது கை? நீட்டு இங்கு. இணைய வேண்டும் இது போல்”

கவிஞர் ச.வே தனது வீட்டின் முன்னால் உள்ள கொட்டிலில் அயலிலுள்ள மாணவர்களுக்கு இலவசமாக தமிழ், ஆங்கிலம், எண்கணிதம் ஆகிய பாடங்களைச் சொல்லிக்கொடுக்கத் தொடங்கியிருந்தார். பெற்றோல் மக்ஸ் விளக்கில் அக்கொட்டில் முழுக்க மாணவர் கூட்டம். இடையே கவிதைப் பித்து மிக்க இளைஞர்கள் கூட்டம். 74ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து அடுத்த சிவராத்திரியில் கவியரங்கு ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு தயாராக வேண்டும் என்றும் ஆசிரியர் கூறியிருந்தார்.  இன்னொரு புறத்தில் நாடகம் பழகவென அங்கு வரும் கூட்டமும் இருந்தது.
தினமும் மாலை வேளைகளில் கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் வீட்டில் இளைஞர்கள் கூடத்தொடங்குவர். நாடகப் பயிற்சி ஒருபுறம், கவிதை எழுதுபவர்கள் இன்னொரு புறம் என்று 75 ஆரம்பத்தில் அந்த ஒழுங்கை மிகுந்த ஆரவாரமாக இருந்தது.
25க்கும் மேற்பட்ட இளம் கவிஞர்கள் கவிதை எழுதினோம். கவிஞரின் முன்வீட்டில் இருந்த துரை, கிழக்கு இணுவிலில் இருந்து பரமநாதன், நண்பர்கள் மகேஸ்வரன், சண்முகப்பிரபு, ஆனந்தவரதன், கலாதரன் ஆகியோருடன் நானும் கவிதைக் குழுவில் இருந்தோம். பாஸ்கரன் அண்ணை, சோதி அண்ணை ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
எமது கவிதை அரங்கு முதல் நிகழ்ச்சியாக நடைபெற்றது. இணுவையூர் பாஸ்கர் முதலில் கவிதை வாசித்தார். அடுத்த வாசித்தது நான். என்னை அறிமுக செய்யும் போது,
“முந்தி இருந்து வந்து முறையாய் யாப்பறிந்து
இந்துக் கல்லூரியிலே எடுத்த கவியரங்குகளில்
முந்துபுகழ் பெற்று முன்னணியில் நிற்பவனே
நந்தகுமாரா வா”  என அவர் என்னை அழைத்தமை இன்றும் ஞாபகத்தில் உண்டு.

கர்ணன் நாடகம்
அன்று அங்கு மேடையேறிய நாடகம் இணுவிலில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரபலம் பெற்று இருந்தது. இணுவிலில் உள்ள அத்தனை கலைஞர்களும் ஒன்று கூடி அரங்கேற்றிய நாடகம் அது. நாடகக் குழுவுக்கு செகராசசேகரன் நாடக மன்றம் என்று பெயரிட்டனர். இணுவில் உள்ள டொக்டர் பாலா அண்ணையின் தந்தையார் கந்தையா அம்மானின் சுருட்டுக்கொட்டிலில் நாடகப் பயிற்சி மாதக்கணக்கில் நடந்தது.
இவராலும் முடியுமா என நான் நினைத்திருந்த ஊரவர் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தனர். பாத்திரத்திற்கு ஏற்ற உடல் வாகு கொண்டவர்களை பொருத்தமாக தேர்ந்தெடுத்திருந்தனர். அன்று குந்தியாகப் பாத்திரமேற்ற நண்பர் சிதம்பரேஸ்வரன் அதன் பின்னர் குந்தி என்ற பெயராலே அழைக்கப்பட்டார்.
கர்ணன் என்ற பிரதான பாத்திரம் ஏற்று நடித்தவர் பொலிஸ் அண்ணை என்று நாம் அழைத்த சண்முகநாதன். ஊர்ப் பெரியவர்கள் அவரைப் பொலிசர் என அழைத்தனர். திடகாத்திரமான உடல். நல்ல சிவந்த நிறம். குறுக வெட்டி மேவி இழுத்த தலைமயிர். கம்பீரமான நடை. முகத்தில் எப்போதும் மலர்ச்சி. பேசுகையில் பணிவு.  இவர் தான் பொலிஸ் அண்ணை.

கர்ணன் நாடகத்தில் ஒவ்வொரு பாத்திரத்தையும் பலர் பகிர்ந்துகொண்டார்கள். பெரிய பாத்திரங்களுக்கு ஒவ்வொரு பருவத்திற்கும் ஒருவராக பாத்திரங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். பாத்திரங்களுக்குரிய உரையாடலை மனனம் செய்வதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடு. நடித்தவர்கள் பெரும்பாலும் விவாசாயிகள். பகலில் தோட்டவேலை. சிலர் அரச அலுவலர்கள். சிலர் கடைகளில் வேலை செய்பவர்கள். சிலருக்கு சுருட்டு சுற்றும் வேலை. இன்னும் சிலர் வருதப்படாத வாலிபர்கள். ஒரு சில வேலயில்லாப் பட்டதாரிகள். இப்படி பல்திறப்பட்டவர்களையும் ஒன்றாக இணைத்தல் எப்படிச் சாத்தியமாயிற்று என்று நான் இன்னமும் பிரமிப்பதுண்டு. எல்லோரரின் வேலைப்பளுவையும் குறைப்பதற்கு ஒரே பாத்திரத்தைப் பங்கிடும் முறை இருந்தது. இப்போது சிட்னியில் ஹோம்புஸ் தமிழ்ப் பள்ளியின் கலைவிழா நாடகங்களில் அந்த முறையைப் பார்த்து நான் வியந்திருக்கின்றேன். கால தேசங்களுக்கு ஏற்று முகிழ்த்த மாற்றங்கள் அவை.
பொலிஸ் அண்ணை ”கண்ணன்தூதில்” இருந்து கர்ணன் பாத்திரமேற்றதாக  நினைவுண்டு. யுத்தம் நடைபெறும் போது மேடையின் குறுக்காகக் கட்டப்பட்ட கம்பிவழியே பொறிபறக்கும் அம்புகள் விரைந்து செல்வதாக காட்சியமைத்திருந்தார்கள். அப்போது அதிகாலை மூன்று மணிக்கு மேலாகியிருந்தது.
நாடகம் முடியும் போது கர்ணனின் இறுதிக் காட்சி.  கர்ணனின் அந்த பருத்த தேகம் அம்பு பட்டு கீழே விழும் காட்சி சபையிலிருந்த ஆயிரக்ணகான மக்கள் முகத்தில் சோகம். கண்ணபிரான் கர்ணனைத் தேடி வருகிறான். சபையிலிருந்து கண்ணனைக் கேலி செய்கிறது கூக்குரல்.
இறுதிக் காட்சியில் கர்ணன் கீழே வீழ்ந்து கிடக்கிறான். எல்லோரும் அழுகின்றனர். நடித்து முடித்து வேசம் கலைத்தவர்கள் உட்பட அனைவரும் மேடையைச் சூழ வந்துவிட்டனர். கந்தையா அம்மானின் கண்களிலும் நீர் உருண்டு ஓடுகிறது. சபையை சோகமாக்கியது கர்ணன் பாத்திரம் மட்டுமல்ல. கர்ணன் பாத்திரம் ஏற்று நடித்த பொலிஸ் அண்ணன் சண்முகநாதனும் தான்.
பொலிஸ் அண்ணையுடன் எனக்கு உறவை ஏற்படுத்தியவன் என் பள்ளித் தோழனும் என் உறவினனும் என்னோடு கவிரயரங்கில் ஏறியவனுமான  ஆனந்தவரதன். என்னோடு  கடேற்படையில் இருந்தவன். நான் படையில் சேர்ந்த 1973ஆம் ஆண்டுக்காலத்தில் பொலிஸ் அண்ணையின் வீட்டில் பயிற்சி பெற்றிருக்கிறேன். நண்பர் ஆனந்தவரதனும் நானும் சென்று சிங்களத்தில் கட்டளைகளைச் சொல்வது, செய்வது என்பவற்றுடன் கறுத்தச் சப்பாத்தை முகம்பார்க்கும் வண்ணம் பளபளப்பாக பொலிஷ் செய்வது வரை அவரிடம் பயின்றிருக்கிறோம். அவர் வீட்டில் பெரும்பாலும் இரவு வேளைகளில் சென்று பயிற்சி பெறுவோம். அந்தப் பயிற்சி தான் யாழ். இந்து பொலிஸ் கடேற்படைக்கு என்னைத் தகுதியாக்கியதோடு தலைமைப் பொறுப்பையும் பெற்றுத்தந்தது.  
அதற்குச் சில காலத்தின் பின் பொலிஸ் அண்ணை பதவியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தார். இணுவிலில் அவர்கள் தோட்டத்தில் மரக்கறிப் பயிர்ச்செய்கையில் அவர் ஈடுபட்டதை நான் பார்த்து வியந்துள்ளேன். அவரும் மனவியும் காய்கற்கள் பறித்து சந்தைக்கு அனுப்புவதில் ஈடுபட்டிருந்தனர்.
எனது பெரியப்பா வீட்டுச் சுருட்டுக்கொட்டிலில் அரசியல், இலக்கியம், சமயம் எல்லாம் விலாவாரியாக அலசுவார்கள். அப்போது ஒரு நாள் பொலிஸ் அண்ணன் கதையும் வந்தது. யாரோ ஒரு கைதிக்குக் காவலாக துப்பாகியுடன் இருந்திருகிறார்.  ஒரு நாள் சாமத்தில் இவர் தூங்கி இருந்த வேளை கைதி தப்பியோடிவிட்டதாகவும், அதனால் விசாரணை முடியும் வரை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்ட்டதாகவும் பேசிக்கொண்டார்கள்.
சன்முகநாதன் அண்ணை நல்ல நடனக் கலைஞனும் கூட. வேலையில்லாத காலத்தில் சிவ நடனம் பழகியிருதார். அது பழகி நடனம் முடியும் வரை அவர் கடும் விரதமிருந்திருக்கிறார். என்னேரமும் நெற்றியில் வெண்ணீறு அணிந்திருந்தார். காலை வேளையில் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வார். 
பின்னர் தூர இடங்களுக்கு வியாபாரம் செய்யச் செல்வார். சில காலங்களில் அவரை தலையில் தலைப்பா, நெற்றியில் வெண்ணீறு, சந்தனம், குங்குமம் அணிந்து காட்சி தந்தார். அதன் பின்னர் அவர் மீண்டும் பொலிஸ் சேவையில் சேர்க்கப்பட்டதாகக் கேள்விப்பட்டோம்.
வல்வெட்டித்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரியும் எனது உயர் அதிகாரியுமான உபாலி சகாபந்து அவர்களை பின்னர்  ஒரு முறை சந்தித்தபோது அவர் ”என்னிடம் ஒருவர் வந்திருக்கிரார். சிவன் நடனம் ஆடுவதற்கு விரதமிருந்தவர் என்று கேள்விப்பட்டேன். நல்ல மனிதன். உங்கல் ஊரவராம் என்றார். அவரிடம் எனகுள்ள உறவைத் தெரிவித்தேன்.
எழுபத்தாறாம் ஆண்டில் ஒருநாள் என நினைக்கிறேன். அப்போது நான் கொழும்பில் நின்று விட்டு இணுவிலுக்கு வந்தபோது அந்த அதிர்ச்சிச் செய்தி கேள்விப்பட்டேன். பொலிஸ் அண்ணனை இணுவில் நாலாம் கட்டையடிக்குச் சமீபமாக உள்ள கடைக்கு அண்மையில் இருவர் சுட்டுக் கொன்றதாகவும், புலி என்ற அமைப்பு உரிமை கோரியுள்ளதாகவும் கேள்விப்பட்டு மிகுந்த கவலையடைந்தேன். பொலிஸ் அண்ணன் சண்முகநாதனுடன் அதே பெயருடைய இன்னொரு பொலிஸ் அலுவலர் சண்முகநாதனும் கொல்லப்பட்டதாக அறிந்தேன்.
இணுவில் கிராமமே சோகத்தில் மூழ்கியிருந்தது. இணுவில் கந்தசுவாமி கோவில் முன்றலில் கம்பீரமாகக் காட்சியளித்த கர்ணன், சிவ தாண்டவம் ஆடிய சண்முகநாதன் அண்ணை இப்போது இல்லை. அவரின் புதல்வர்களைக் காணுந்தோறும் அவர் தோற்றத்தை அவர்கள் அப்படியே பிரதிபலித்தனர். அண்ணன் சண்முகநாதனின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இணுவிலில் வேறு யாரும் இருக்கவில்லை.
தமது எச்சரிக்கைகளையும் மீறி பொலிஸ் சி.ஐ.டி வேலை பார்த்தமைக்காகவே இந்தத் தண்டனை என உரிமை கோரும் துண்டில் அவர்கள் தெரிவித்திருந்தனராம்.
பிற்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பார்க்கையில் பொலிஸ் அண்ணனின் இழப்பு எத்தகைய துன்பியல் நிகழ்வு என்பது புரிந்திருக்கும். இன்னமும் என்னெந்ஞ்சில் நீங்காது நிற்பவர்களில் ஒருவர் பொலிசர் சண்முகநாதன்.
1 comment:

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT TO REMEMBER THE OLD DAYS OF INUVIL AND UNFORGETTABLE EVENTS & EXPERIENCES! WELL DONE THIRU! PLEASE CONTINUE! I ENJOYED!