சுதாராஜ் சிறுகதைகள் - எம். ஏ. நுஃமான்

.

1970களில் எழுதத் தொடங்கிய சுதாராஜ், இலங்கையின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். கடந்த சுமார் நாற்பது ஆண்டுகால ஈழத்து வாழ்வின் அசைவியக்கத்தை, அதன் வரலாற்றுத் திருப்பங்களை, தனிமனித வாழ்வில், மன உணர்வுகளில் அவை ஏற்படுத்திய தாக்கங்களைத் தன் கதைகளில் அவர் பதிவுசெய்திருக்கிறார். இந்தப் பதிவுகள் உணர்வு சார்ந்த, அனுபவம் சார்ந்த பதிவுகளாக அமைகின்றன. அவற்றில் பொதிந்திருக்கும் அரசியலும் அழகியலும் அவரை சமூகப் பொறுப்புடைய ஒரு கலைஞராக இனங்காட்டுகின்றன.
தனது “சிறுகதைகளின் அடிநாதமாக அமைவது நேசிப்பு” என சுதாராஜ் ‘காற்றோடு போதல்’ என்ற தன் சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். “நேயம் என்பது மனிதர்கள்பால் மட்டுமன்றி சகல உயிரினங்கள் மீதும் இரங்குதல் ஆகும். எங்களைச் சூழ உள்ள இயற்கை ஓர் அற்புதமான விஷயம். மரம், செடி, பூக்கள் ஆகியவற்றின் வனப்புகள் பிரமிப்பையும் இதமான சுகானுபவங்களையும் தருகின்றன. வானத்தில் பறவைகள் பறக்காத ஒரு நாளைக் கற்பனைசெய்து பாருங்கள். எவ்வளவு சோகமாயிருக்கிறது. அந்தப் பறவைகளும் அவற்றின் வனப்பும் எங்கள் மனங்களை இதமாக வருடிக்கொண்டிருப்பதற்காகவே படைப்பெடுத்துள்ளனபோல் எண்ணத் தோன்றுகின்றது. இவற்றையெல்லாம் என் கதைகளில் பதியவைத்திருக்கிறேன்.” என்று எழுதுகிறார் அவர். மனிதர்கள் மீதும் இயற்கையின் மீதும் கொண்ட இந்த நேயம் ஒரு நல்ல கலைஞனுக்குரிய முக்கியமான குணாம்சம் என்று சொல்லவேண்டும்.

நேயம் என்ற தலைப்பில் சுதாராஜ் ஒரு கதை எழுதியிருக்கிறார். இது 2001ல் மல்லிகையில் வெளிவந்தது. இன முரண்பாடும் யுத்தமும் மேலோங்கிய சூழலில் அவற்றை மீறிய மனித உறவின், மனித நேயத்தின் முகிழ்ப்பைச் சித்திரிக்கும் ஒரு நல்ல கதையாக நான் அதைக் கருதுகிறேன். நானும் ஆஸிலி ஹல்பே, ரஞ்சினி ஒபயசேகர ஆகியோரும் தொகுத்து ‘லங்கன் மொஸைய்க்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிட்ட ஈழத்துத் தமிழ், சிங்கள சிறுகதைக் தொகுப்பில் அந்தக் கதையையும் சேர்த்துக்கொண்டோம். பின்னர் ‘அசல்வெசி அப்பி’ (நாம் அயலவர்) என்ற தலைப்பில் நானும் காமன் விக்கரம கமகேயும் தொகுத்து வெளியிட்ட ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்புத் தொகுதியிலும் அக்கதையைச் சேர்த்துக்கொண்டோம்.
இன வெறுப்பின் மத்தியில் இன நல்லுறவின் மலர்ச்சியை அக்கதை இயல்பாக வெளிப்படுத்துகின்றது. வேவ்வேறு வகையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நால்வரைப்பற்றிய கதை அது. யுத்த சூழலில் மனைவியையும் பிள்ளைகளையும் யாழ்ப்பாணத்தில் விட்டுவிட்டு தொழிலுக்காக கொழும்பிலிருந்து கிறீஸ் செல்லும் வழியில் கராச்சி விமான நிலையத்தில் அடுத்த விமானத்துக்காகக் காத்திருக்கும் தமிழ் இளைஞன் கதையின் மையப் பாத்திரம். தன் குடும்பத்தைப் பற்றிய கவலையும் பரிதவிப்பும் அவனுக்கு. அதே விமானத்தில் வந்த மூன்று சிங்களவர்கள் - இரண்டு இளைஞர்களும் ஒரு யுவதியும் - அவனுடன் உறவு கொள்ள முயல்கின்றனர். இளைஞர்கள் இருவரும் ராணுவத்திலிருந்து தப்பிவந்தவர்கள். ஒரு முகவருக்கு நிறையப் பணம் கொடுத்து கிறீஸிற்கு வேலை தேடிச் செல்கின்றனர். அந்தப் பெண்ணின் கணவன் ஒரு ராணுவ வீரன். வடக்கில் யுத்தமுனையில் இருக்கிறான். அவனை மீண்டும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை. தன் குழந்தையைத் தாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு வீட்டுப் பணிப்பெண்ணாக கிறீஸ{க்குச் செல்கிறாள். அவர்கள் மூவரும் இவனுக்கு உதவவும், இவனுடன் உறவு கொள்ளவும், இவனது தனிமையைப் போக்கவும் முயல்கின்றனர். இவன் அவர்களைத் தவிர்த்து தனிமையையே விரும்புகிறான். அவர்கள் மீது எரிச்சலும் வெறுப்பும் கூட ஏற்படுகின்றது. எனினும் அவர்களது விடா முயற்சியால் இறுதியில் அவர்களுக்கிடையே நட்பு மலர்கிறது. ‘ஒரு மத்தாப்பு வெடித்ததுபோல் அவனிடத்திலும் சிரிப்பு மலர்ந்தது’ என்று கதை முடிகின்றது.
சுதாராஜின் அனுபவ வலயமும்  சமூக அரசியல் பார்வையும் விசாலமானவை. அல்ஜீரியா, இத்தாலி, இந்தோனேசியா, ஈராக், எகிப்து, ஏமன், குவைத், பாகிஸ்தான் முதலிய பல நாடுகளில் இவர் பணிபுரிந்திருக்கிறார். தன் வெளிநாட்டு வாழ்க்கை அனுபவங்கள் பலவற்றை இவர் தமிழ்ச் சிறுகதைக்குள் கொண்டுவந்து தமிழ்ச் சிறுகதையின் அனுபவ வலயத்தையும் சற்று அகலப்படுத்தியிருக்கிறார். அவ்வகையில் அ. முத்துலிங்கத்துடன் ஒப்புநோக்கத்தக்கவர் இவர். ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள், பாலைவனத்திலும் புல் முளைக்கும், ஏகபத்தினி விரதம், இளமையின் ரகசியம் போன்றவை சுதாராஜின் வெளிநாட்டு அனுபவங்களின் வெளிப்பாடுகள்.
சுதாராஜ் எழுதத் தொடங்கிய எழுபதுகளில் இலங்கை அரசியலில் இடதுசாரிச் சிந்தனையும், இலக்கியத்தில் முற்போக்குவாதமும் முன்னணியில் இருந்தன. சுதாராஜின் ஆரம்பகாலக் கதைகளில் இவற்றின் தாக்கத்தைக் காணமுடிகிறது. இத்தொகுப்பில் முதலாவதாக இடம்பெறும் நாணயக் கயிறு (1979) இவ்வகையில் குறிப்பிடத்தகுந்த ஒரு கதை. கொழும்பில் வாழும் யாழ்ப்பாணத்து நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் நலனுக்காக வறுமைப்பட்ட மலையகச் சிறுவர்களைத் தொழிலுக்கமர்த்தி கொடுமைப்படுத்துவதைப் பற்றியது கதை. இக்கதையில் வீட்டு எஜமானியால் கொடுமைப்படுத்தப்படும் சிறுவன் கொடுமையின் உச்சத்தில் எதிர்புணர்வுடன் அவர்களைவிட்டும் திமிறிச் செல்கிறான். வறுமை, இனத்துவ மேலாண்மை, வர்க்க ஆதிக்கம் என்பனவற்றுக்கு எதிரான ஆசிரியரின் உணர்வு இக்கதையில் இழையோடுகின்றது. இத்தகைய இடதுசாரி முற்போக்குவாதக் கருத்துநிலை அவரது பிற்காலக் கதைகள் பலவற்றிலும் உட்புதைந்திருப்பதை நாம் காணமுடியும்.
1980க்குப் பின்னர் சுதாராஜ் எழுதிய பெரும்பாலான கதைகள் இனமுரண்பாடு, யுத்தம், குடும்பங்களையும் தனிமனிதர்களையும் அவை பாதித்த விதம் என்பவற்றைப் பதிவுசெய்கின்றன. இனமுரண்பாட்டுச் சூழலிலும் இன வெறுப்புக்குப் பதிலாக மனித உறவுகளையும் மனிதத்துவத்தையும் குவிமையப்படுத்துகின்ற  நல்ல கதைகளை சுதாராஜ் எழுதியிருப்பது மன நிறைவைத் தருகிறது. நான் முதலில் குறிப்பிட்ட நேயம் அத்தகைய ஒரு கதைதான். ‘மனிதர்கள் இருக்கும் இடம்’ இது தொடர்பாகக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய இன்னும் ஒரு முக்கியமான கதை. சிங்களவரான சோமையா மனதில் நிற்கும் பாத்திரமாக இக்கதையில் உருவாகியிருக்கிறார்.
சோபாசக்தி, சக்கரவர்த்தி ஆகிய புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள்போல் யுத்த சூழலில் விடுதலை இயக்கங்களின் வன்முறை, மனித உரிமை மீறல் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்ட கதைகளை எழுதியவர்களை ஈழத்தில் மிக அரிதாகவே காணமுடியும். அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்கவில்லை. கோவிந்தன் என்ற புனைபெயரில் இயக்கங்களின் வன்முறையை அம்பலப்படுத்தி புதியதோர் உலகம் நாவலை எழுதிய நோபேட் விடுதலை இயக்கங்களால் பின்னர் கொல்லப்பட்டார். செல்வி அவ்வாறு கொல்லப்பட்ட ஒரு பெண் கவிஞர். இப்பின்னணியில் சுதாராஜ் போன்றவர்களின் மௌனத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். யுத்தத்துக்குப் பிந்திய சூழலில் இந்த மௌனத்துக்கு விடுதலை கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
சுதாராஜ் வடிவ பரிசோதனையில் அதிக அக்கறை காட்டுபவரல்ல. பாரம்பரியமான சிறுகதை வடிவத்தில் வாழ்க்கையின் பல கோணங்களை, மனிதர்களின் பல முகங்களை ஆழ்ந்த சமூக அக்கறையுடனும் மனித நேயத்துடனும் பதிவு செய்வதிலேயே அவர் அக்கறை காட்டியிருக்கிறார். புனைவு தரும் போதைக்கு அவரது இலக்கியக் கொள்கையில் இடம் இல்லை எனலாம். இலக்கியத்தின் சமூகக் கடப்பாட்டுக்கு முதன்மை கொடுப்பவர்களுள் சுதாராஜுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. சுதாராஜின் சில கதைகளைப் படிக்கும்போது அவர் இன்னும் சற்றுச் சொற் சிக்கனத்தைக் கடைப்பிடித்திருக்கலாமே என்று எனக்குத் தோன்றுவதுண்டு. எனினும் அது அவரது கதைசொல்லும் பாணியின் ஒரு அம்சம் என்று நாம் அமைதிகாணலாம்.
கடந்த நாற்பது ஆண்டுகளில் சுதாராஜ் சுமார் நூறு கதைகளாவது எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். அவற்றுள் அறுபது கதைகளை ஒன்றாகப் படிக்கும் வாய்ப்பை இத்தொகுப்பு நமக்குத் தருகிறது. கதைகள் கால வரிசையில் தொகுக்கப்பட்டிருப்பதால் ஆசிரியரின் எழுத்தாளுமை வளர்ச்சியையும் இலங்கையின் சமூக வரலாற்றையும் ஒன்றிணைத்துப் பார்க்கும் வாய்ப்பும் நமக்கும் கிடைக்கின்றது. நாணயக் கயிறு என்ற முதல் கதையில் தொடங்கி, உயிர்க்கசிவு என்ற கடைசிக் கதைவரை படித்துமுடிக்கும் போது, வாழ்க்கை – மனிதர்கள் பற்றிய சுதாராஜின் பார்வையின் அடிச்சரடாக ஒரு மனிதாபிமான நோக்கு தொடர்ச்சியாக இழையோடியிருப்பதைக் காணமுடிகின்றது. இது அவரது படைப்பாளுமையின் வெற்றி எனக் கூறலாம்.


No comments: