காட்சியும்,மீட்சியும்...

.
சிறையிருந்தாள் ஏற்றம்- இது சுந்தர காண்டத்தின் மற்றொரு பெயர்.
சீதையின் துயரத்தின் இடையில் ஊடாடும் அவள் கற்பின் அழகே சுந்தர காண்டத்துக்கு அழகூட்டுவது.
சுந்தரன் எனப்படும் அனுமனின் செயல்திறனாலும் அழகு பெறுவது இக் காண்டம்.
ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற’ உருவினளாய் அசோகவனத்தில் சிறையிருந்த சீதையின் நிலையை அனுமனின் காட்சிக்கும் நம் பார்வைக்கும் வைக்கும் படலத்துக்குக்காட்சிப்படலம் என்றே பெயர் தருகிறான் கம்பன்.

பெண்களின் கண்கள் மழை(மேகம்)போன்ற கருநிறம் கொண்டிருப்பதால் அவற்றை மழைக்கண்கள் எனக் குறிப்பிடுவது உலகப் பொது வழக்கு.
இங்கு சீதையின் கண்கள் இடையறா மழையாகக் கண்ணீரைச் சொரிந்ததால் மழைக்கண் என்பது,இங்கே காரணப்பெயராகவே ஆகி விடுகிறது என்பதை 
‘’மழைக்கண் என்பது காரணக் குறியென வகுத்தாள்’’
என்கிறது கம்பநாடன் கவிதை.

சீதை அணிந்திருந்த மென்துகில்,அவள் விட்ட கண்ணீரால் (அப்பு) நனைந்து,அவள் விட்ட வெம்மையான பெருமூச்சால்
(வெப்பு )உலர்கிறது.
அது ஈர ஆடையா,புலர்ந்த ஆடையா என்றே கண்டறிய முடியாதபடி அப்பினால் நனைந்து வெப்பினால் புலர்ந்து ஒரு நிலையில் இல்லாமல் மாறிக் கொண்டே இருந்த தன்மையைக் கீழ்க்காண்ட முறையில் விவரிக்கிறது காப்பியம்.
(அப்பு,தேயு,வாயு என்ற வழக்கத்தின்படி அப்பு என்ற சொல்லை நீர் என்ற பொருளில் ஆள்கிறான் கம்பன்)
’’துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு
  ஒப்பினான்தனை நினைதொறும், நெடுங்கண்கள் உகுத்த
 அப்பினால் நனைந்து அரும் துயர் உயிர்ப்புடை யாக்கை 
 வெப்பினால் புலர்ந்து ஒரு நிலை உறாத மென் துகிலாள்’’


துப்பு-பவழம்;மஞ்சு-மேகம்.
பவழம் போன்ற கை,கால்களைப் பெற்றிருக்கும்(உள்ளங்கை,உள்ளங்கால்)மழைநீர் பொழியும் மேகம் போன்ற கருநிறம் கொண்ட இராமனை நினைக்குந்தோறும் கண்கள் உகுத்த கண்ணீரால் நனைந்து அவள் விடும் வெப்பப் பெருமூச்சால் புலர்கிறது அவள் ஆடை.’’கண்ணும் திருவடியும்,கையும்,திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே’’-எனத் திருமாலின் கண்,கால்,கைகளைச் சிவப்பாகவும்,மேனியைக் கறுப்பாகவும் சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையும் பாடுகிறது,.

இராமனை விட்டு விலகியிருக்க நேர்ந்த பிரிவின் ஏக்கம்,விரக தாபத்தின் கொதிப்பான வெம்மை,அரக்கனை எண்ணும்போது விளையும் அச்சம்,நடுக்கம்,மானசீகமாக இராமனை வேண்டி இரங்கும் கையற்ற நிலை - என , 
இருப்புக் கொள்ளாத தவிப்பின் வேறுபட்டஅத்தனை நிலைகளையும் தொழிற்பெயர்களாகத் தொகுத்து(’அல்’விகுதி பெற்ற வினைகள்)
‘’விழுதல், விம்முதல் , மெய் உற வெதும்புதல்(மேனி முழுவதும் ஏற்படும் கொதிப்பு,வெம்மை),வெருவல்(அச்சம்),

 எழுதல்,ஏங்குதல்,இரங்குதல்,இராமனை எண்ணித்
 தொழுதல், சோருதல், துளங்குதல்(நடுக்கம்), துயர் உழந்து உயிர்த்தல்
 அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்’’
என்ற ஒரு பாடலுக்குள் அடுக்கிச் சொல்லி விடுகிறான் கம்பன்.
மெலிதான ஆடை ஒன்றை உடுத்தியிருப்பதையும் ,அதை அவ்வப்போது சரி செய்து கொள்வதையும் (காரணம்-மேனியில் ஏற்படும் மெலிவுக்குத் தக்கபடி அதை மாற்றி இறுக உடுத்த வேண்டியிருக்கிறது)தவிர மென்மையான இறகுகள்-தூவிகள் கொண்ட அன்னங்கள் நீந்தும் நீர்நிலைகளில் நீராடும் செயலைக் கூட மேற்கொள்ளாமல்-அயலவன் மனையில் அந்த அடிப்படைச் செயலைக் கூடத் தவிர்த்தபடி இருக்கிறாள் சீதை.

  
 ’’ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்
     தூவி அன்னம் மென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்
     தேவு தெண்கடல் அமிழ்து கொண்டு அனங்கவேள் செய்து 
     ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள்’’
அதனால் பாற்கடலிலிருந்து அமிழ்தை எடுத்து மன்மதன் உருவாக்கிய ஓவியம் ஒன்று புகை படிந்து கிடப்பதைப் போல இருந்தது அவள் தோற்றம் என்கிறான் கம்பன்.

இவ்வாறு அயலவன் மனையில் உண்ணாமல்,உறங்காமல்,குளிக்காமல்,ஆடை அணி புனையாமல்,வேறு ஆடை கூட மாற்றாமல்...
ஓராடை தவிர வேறு ஏதுமற்ற பேதையாய் வெதும்பிக் கிடந்த சீதையைப் பார்த்துத்தான்..
மீட்சிப்படலத்தில் அவளை மீட்க வரும் இராமன் 
அக்கினிப் பிரவேச நிகழ்வுக்கு முன்பாக
‘’ஊண்திறம் உவந்தனை ; ஒழுக்கம் பாழ்பட
  மாண்டிலை;முறை திறம்பு அரக்கன் மாநகர் 
  ஆண்டு உறைந்து அடங்கினை..’’

‘’பெண்மையும்,பெருமையும்,பிறப்பும்,கற்பும்
  திண்மையும்,ஒழுக்கமும்,தெளிவும் ,சீர்மையும்
  உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால்
  வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால்’’
(’அரக்கனின் அரண்மனையில் நீ நன்றாக உண்டு,உடுத்தி,உல்லாச வாழ்வு வாழ்ந்திருக்கிறாய்..
உன் ஒழுக்கம் பாழ்பட்டபோதும் நீ இறக்கவில்லை.
பெண்மையின் சிறப்பும் சீர்மையும் -அனைத்தும் உன் ஒருத்தியால் சீர்கெட்டுப் போய்விட்டன’)
என்றெல்லாம் கடுஞ்சொல் பேசிப் பழிக்கிறான் .
சந்தேகத்தின் கொடுங்கரங்கள் தெய்விகத் தன்மை கொண்டோரையும் விட்டு வைப்பதில்லையா...?
அல்லது ஊருக்காகப் புனைந்த நாடகமா இது?
இதற்கு சீதையின் எதிர்வினையாக என் கற்பனையில் உருவான புனைவு
புதிய பிரவேசங்கள்
என்ற பெயரில் முன்பு கலை மகளில் வெளி வந்தது.

நன்றி masusila.com/

No comments: