உலகச் செய்திகள்


எபோலோ வைரஸால் பலியானவர்கள் தொகை 1,229 ஆக உயர்வு: ஏனைய நாடுகளுக்கும் வேகமாக பரவும் அபாயம்!

காணாமல்போன அமெரிக்க ஊடகவியலாளர் போராளிகளால் தலையை வெட்டி படுகொலை - அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி வெளியீடு

ஜப்பானில் பாரிய மண் சரிவு : 32 பேர் பலி, 9 பேரைக் காணவில்ல

எபோலோ வைரஸால் பலியானவர்கள் தொகை 1,229 ஆக உயர்வு: ஏனைய நாடுகளுக்கும் வேகமாக பரவும் அபாயம்!

19/08/2014
எபோலோ வைரஸால் கடந்த 3 நாட்களில் 84 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதன் காரணமாக அந்த வைரஸால் உலகளாவிய ரீதியில் மரணமடைந்தவர்கள் தொகை 1229 ஆக உயர்ந்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
அத்துடன் கடந்த 3 நாட்களில் இந்நோயால் புதிதாக 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் மேற்படி  வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  தொகை 2240 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில் கினியாவில் பரவ ஆரம்பித்த நோய் லைபீரியா சியாரா லியோன் நைஜீரியா ஆகிய ஆபிரிக்க நாடுகளுக்கு பரவியுள்ளது.
மேற்படி நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லைபீரியாவில் 466 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த எபோலோ வைரஸால் சியாரா லியோனில் 365 பேரும் இனியாவில் 394 பேரும் நைஜீரியாவில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.  நன்றி வீரகேசரி 





காணாமல்போன அமெரிக்க ஊடகவியலாளர் போராளிகளால் தலையை வெட்டி படுகொலை - அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி வெளியீடு

20/08/2014   2012ஆம் ஆண்டு சிரியாவில் காணாமல் போன அமெரிக்க ஊடகவியலாளரான ஜேம்ஸ் போலி போராளியொருவரால் தலையை வெட்டு படுகொலை செய்யப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்றை 'ஐ.எஸ்' போராளிகள் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஈராக்கில் அமெரிக்க வான் தாக்குதல்களால் தமது போராளிகள் உயிரிழந்துள்ளமைக்கு பழிதீர்க்கும் முகமாகவே இந்த படுகொலையை மேற்கொண்டுள்ளதாக 'ஐ.எஸ்.' போராளிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவுக்கான செய்தி என்ற மேற்படி வீடியோ காட்சியில் பாலைவனம் போன்ற இடத்தில் கறுப்பு ஆடை அணிந்த ஆயுததாரியொருவரின் அருகில் ஜேம்ஸ் போலி மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார்.
இதன்போது ஈராக்கிலான அமெரிக்க குண்டுத் தாக்குதல்களுக்கே தான் கொல்லப்படவுள்ளதாக ஜேம்ஸ் போலி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவரருகே முகமூடி அணிந்து காணப்பட்ட 'ஐ.எஸ்.' போராளி குழு உறுப்பினர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர், தனது கையிலிருந்த கத்தியால் தன்னருகே மண்டியிட்டிருந்த ஜேம்ஸ் போலி எனும் நபரின் கழுத்தை வெட்டுவதை அந்த வீடியோ காட்சி வெளிப்படுத்துகிறது.
அந்த வீடியோ காட்சியின் இறுதியில் போராளிகளால் பிடிக்கப்பட்டுள்ள பிறிதொரு அமெரிக்க ஊடகவியலாளரான ஸ்டீவன் ஸொட்லொப்பின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டு அவரது தலைவிதி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அடுத்த நடவடிக்கையிலேயே தங்கியுள்ளது என எச்சரிக்கை காட்சிப்படுத்தப்பட்டது.
ஸ்டீவன் ஸொட்லொப் ஒரு வருடத்திற்கு முன் வட சிரியாவில் வைத்து கடத்தப்பட்டார்.
இந்நிலையில் மேற்படி வீடியோ காட்சிக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜேம்ஸ் போலியின் மரணம் தொடர்பில் அவரது தாயார் டியனி பேஸ்புக் இணையத்தளத்தில் வெளியிட்ட செய்தியில் சிரிய மக்களின் துன்பத்தை உலகறியச் செய்வதற்காக தனது மகன் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளதையிட்டு பெருமையடைவதாகக் கூறினார்.
ஜேம்ஸ் போலி அமெரிக்க குளோபல் போஸ்ட் ஏ.எப்.பி. உள்ளடங்களாக ஊடகங்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 










ஜப்பானில் பாரிய மண் சரிவு : 32 பேர் பலி, 9 பேரைக் காணவில்லை

20/08/2014   ஜப்பானின் ஹிரோஷிமா பிராந்தியத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிக்கி குறைந்தது 32 பேர் பலியானதுடன் 9 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஹிரோஷிமா நகருக்கு வெளியிலுள்ள மலைப் பிராந்தியமொன்றுக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பிரதேசத்தில் அடை மழை காரணமாக இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது.
பலியானவர்களில் 2 வயது பாலகன் ஒருவன் உள்ளடங்குகிறான். மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 53 வயது மீட்புப் பணியாளர் ஒருவர் இரண்டாவதாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இன்று புதன்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கடும் மழை வீழ்ச்சியே இந்த மண் சரிவுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
நன்றி வீரகேசரி














No comments: