படைப்பாளிகளும் பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்கவேண்டும்.

. 
மெல்பனில்  நடந்த   முருகபூபதியின்  சொல்ல மறந்த கதைகள்   நூல்  வெளியீட்டு   அரங்கு

 படைப்பிலக்கியவாதியும்  பத்திரிகையாளருமான  திரு. லெட்சுமணன் முருகபூபதியின்   20  ஆவது   நூல்   சொல்ல  மறந்த  கதைகளின் வெளியீட்டு   அரங்கு   கடந்த  சனிக்கிழமை 23  ஆம்  திகதி மெல்பனில்  Dandenong Central Senior Citizens Centre மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை  கம்பன்  கழகத்தின்  ஸ்தாபக   உறுப்பினரும்   இலக்கிய ஆர்வலருமான    திரு. கந்தையா   குமாரதாசன்  இந்நிகழ்வுக்கு தலைமைதாங்கினார்.
 அண்ணாவியர்  இளையபத்மநாதன்  -   எழுத்தாளர்கள்  திருமதி புவனா இராஜரட்ணம் -   டொக்டர்   நடேசன்  -   திரு. ஜெயராம சர்மா -சமூகப்பணியாளர்கள்   திருவாளர்கள்    இராஜரட்ணம்  சிவநாதன் - நவரத்தினம்    இளங்கோ  -  டொக்டர்    சந்திரானந்த்  -   ஜனாப்   ரஃபீக்  முருகபூபதியுடன்    வீரகேசரி   நிறுவனத்தில்    முன்னர்    பணியாற்றிய திரு. சுப்பிரமணியம்    தில்லைநாதன்   ஆகியோர்     மங்கல விளக்கேற்றினர்.     திருமதி    மாலதி   முருகபூபதியின் வரவேற்புரையுடன்    நிகழ்ச்சி   ஆரம்பமானது.
எழுத்தாளர்கள்   பத்திரிகையாளர்கள்    எப்பொழுதும்    மக்களின் வாழ்வுப்பிரச்சினைகள்    குறித்தே    தமது   எழுத்துக்களில்   பதிவுசெய்து    வருபவர்கள்.     தேசங்களின்   தகவல்கள்   -  இனங்களின் அடையாளம்    என்பன   பற்றிய    பதிவுகளே    முதலில் செய்திகளாகவும்    பின்னர்    வரலாறுகளாகவும்    உருவாகின்றன. இவற்றை    எழுதுபவர்கள்   சமூகப்பொறுப்புணர்ச்சியுடன்   தமது படைப்புகளை    -  செய்திகளை    எழுதினால்தான்   அவை    காலம் கடந்தும்    பேசப்படும்.




ஒரு    பத்திரிகையாளர்  இலக்கிய  படைப்பாளியாகவும்    இருக்கும்    பட்சத்தில்   அவரது   எழுத்துக்களில்   இலக்கிய நயம்  இழையோடிக்கொண்டே  இருக்கும்.    அவ்வாறு   எழுதப்பட்ட வித்தியாசமான    தொகுப்புதான்    முருகபூபதி   எழுதியிருக்கும் சொல்ல    மறந்த   கதைகள்   நூல்.    இதில்   இருப்பவை    கதைகளா? கட்டுரைகளா?    அல்லது   சுயசரிதையா ?   என்பதை   வாசகர்களின் தீர்மானத்துக்கே    அவர்    விட்டுவிடுகிறார்.
எனக்கும்   முருகபூபதிக்கும்  இடையில்   நீடிக்கும்   நட்புறவுக்கு வயது   கால்   நூற்றாண்டையும்   கடந்துவிட்டது.   1986   இல்  அவர் தமது   இலக்கிய   நண்பர்களுடன்   யாழ்ப்பாணம்   வருகைதந்த காலத்தில்   நாம்    அங்கே    கம்பன்   கழகத்தை    தொடங்கியிருந்தோம்.   அன்று  முதல்   அவருடனான   இலக்கிய நட்பு   சகோதர    வாஞ்சையுடனேயே    தொடருகிறது.   என்று தலைமையுரை    நிகழ்த்திய     திரு.கந்தையா   குமாரதாசன் தெரிவித்தார்.
சொல்ல   மறந்த   கதைகளில்   இடம்பெற்ற    படைப்புகளை திருவாளர்கள்   இளங்கோ    நவரத்தினம்  -   ஆவூரான்    சந்திரன், ஜெயராம சர்மா   -   டொக்டர்   நடேசன்   ஆகியோர்   விமர்சித்தனர்.
கணக்காளர்  திரு. ஏ.வி. முருகையா  -   திருவாளர்கள்    சிவநாதன் - தில்லைநாதன்  -   ஜனாப்  ரஃபீக்   -   டொக்டர்   சந்திரானந்த்  -  மற்றும் மெல்பன்   சங்கநாதம்    வானொலி    இயக்குநர்களில்    ஒருவரான  திரு. விக்கிரமசிங்கம்   ஆகியோர்   நூலின்   சிறப்பு பிரதிகளைப்பெற்றுக்கொண்டனர்.
முருகபூபதியின்   மகள்   திருமதி  பிரியாதேவி   முகுந்தன்   பிரதிகளை வழங்கினார்.
இறுதியில்    நூலாசிரியர்   முருகபூபதி  ஏற்புரை வழங்கினார். அதனைத்தொடர்ந்து  தேநீர்   விருந்து   இடம்பெற்றது.


முருகபூபதியின்  ஏற்புரை:
அனைவருக்கும்  எனது  மனமார்ந்த  நன்றியும்  அன்பார்ந்த வணக்கமும்.
எனது   ஏற்புரை    சம்பிரதாயமானதுதான்.   இதிலே   ஏதும்   விசேடங்கள்    இல்லை.   ஆனால்    என்னைப்பொறுத்தவரையில்   இந்த    ஏற்புரை    மிகவும்    முக்கியமானது.
இந்நிகழ்வுக்கு    தலைமைதாங்குவதற்கு   முன்வந்த   எனது அருமைச்சகோதரன்   திரு.கந்தையா   குமாரதாசன் அ  வர்களுக்கு எனது    நன்றியை    தெரிவித்துக்கொள்வது    மிகவும்    முக்கியமானது எனக்கருதுகின்றேன்.
அவரது    தலைமையில்   எனது   நூல்    வெளியீட்டு   அரங்கு நடக்கவிருக்கிறது   என    அறிந்ததும்    அவரைத்தெரிந்த   உலகின்   பல பாகங்களிலுமிருக்கும்   எனதும்    அவரதும்   நண்பர்களும்    தங்கள் வாழ்த்துக்களையும்    மகிழ்ச்சியையும்    தெரிவித்தார்கள்.   ஒரு நண்பர்   -  அவர்    இந்தச்சபையிலும்    இருக்கிறார்.
திரு. குமாரதாசனை    நீங்கள்  தலைமையுரையாற்றுவதற்கு தெரிவு  செய்திருப்பது    உங்கள்   தெரிவு    மாத்திரம்   அல்ல  -   இது  காலத்தின் தெரிவு   என்றும்   எனக்கு   மின்னஞ்சல்   அனுப்பியிருந்தார்.
இந்நிகழ்வில்   சிறப்பு   பிரதி   பெற்றுக்கொள்ள  வருகை  தந்த இராஜரட்ணம்   சிவநாதன்    அவர்களுடன்    எனக்கு   நாற்பது  ஆண்டு கால    நட்புறவு   நீடிக்கிறது.    இந்த    மண்ணுக்கு  நான் பிரவேசித்தவுடன்   மெல்பனில்    எனக்கு  அடைக்கலம் தந்த குடும்பம்   அவருடையது.    அவரது    தந்தையார்    அமரர்  இராஜரட்ணம்   அவர்களும்   இந்நூலில்  ஒரு  அத்தியாயத்தில் (ஏரிக்கரைச்சிறைச்சாலை)  இடம்பெறுகிறார்.


எனது   நீர்கொழும்பூரின்   உடன்பிறவாச்  சகோதரன்  திரு. சுப்பிரமணியம்    தில்லைநாதன்   எனது    முதலாவது  கதைத்தொகுதி சுமையின்    பங்காளிகள்   நூலை    தனது    அண்ணன்   நடத்திய நீர்கொழும்பு  சாந்தி  அச்சகத்தில்   அச்சுக்கோர்த்தவர்.   அந்த நூலுக்கு இலங்கையில்  1976  இல்  தேசிய   சாகித்திய  விருதும்   கிடைத்தது. அவரது   கரங்கள்    அச்சுக்கோர்த்த  நூல்.    கைராசிக்காரர்தான். இந்நூலிலிருக்கும்   லிபரேஷன்    ஒப்பரேஷன்  ஒத்திகை  என்ற அத்தியாயத்தின்  நேரடி   சாட்சி    அவர்.    தில்லைநாதன்   என்னுடன் வீரகேசரியில்    பணியாற்றியவர்.   1986   ஆம்   ஆண்டு    இறுதியில் செய்தி   வேட்டைக்காக   நான்    யாழ்ப்பாணம்    புறப்பட்டபொழுது என்னை    நீர்கொழும்பில்  இரவு    நேர  பஸ்ஸில்  ஏற்றிவிட்டவர்.   நான்    தெய்வாதீனமாக   திரும்பி    வந்தேன்.    அதிலும்   அவர்   எனக்கு ராசியானவர்தான்.    முதலில்   நான்     இங்கே    ஓடி வந்தேன். என்னைப்பின்தொடர்ந்து     அவரும்   ஓடிவந்தார்.

நண்பர்   மருத்துவக்கலாநிதி  சந்திரானந்த்   எனது  அருமை  நண்பர் அவரைப்போன்ற   நல்ல    உள்ளங்கள்   எம்முடன் இணைந்திருப்பதனால்தான்   நான்   சம்பந்தப்பட்ட   இலங்கை மாணவர்  கல்வி    நிதியம்  25  ஆண்டுகளையும்  கடந்து இயங்கிக்கொண்டிருக்கிறது
 ஜனாப்   ரஃபீக்    அவர்கள்  எனது  இனிய  நண்பர்.   நான்  மிகவும் நேசித்த    இலங்கையின்   மூத்த   கவிஞர்  அமரர்   மருதூர்க்கனி. அவரது    புதல்வி   மருத்துவகலாநிதி    வஜ்னாவை    மணந்தவர். இலங்கை   துறைமுக   அதிகார  சபையின்    முன்னாள்   தலைவர். எனது   இனிய    நண்பரும்   அகில    இலங்கை   முஸ்லிம் காங்கிரஸை    உருவாக்கியவருமான   அமரர்   அஷ்ரஃபின்   மிகுந்த நம்பிக்கைக்குரிய    தொண்டன்.

கணக்காளர்    திரு. முருகையா   எனது  குடும்பத்தில்    ஒருவர்.  நான் சம்பந்தப்பட்ட   பொதுப்பணிகளில்   அவரும்   அவரது குடும்பத்தினரும்    இணைந்திருப்பவர்கள்.
ஏன்  இவ்வாறு   குறிப்பிடுகின்றேன்    என்றால்    எனது   தனிப்பட்ட வாழ்வும்   கலை  -   இலக்கிய    ஊடகத்துறை    வாழ்வும்    எனது   குடும்ப   வாழ்வும்   ஒன்றாகவே  பின்னிப்பிணைந்திருப்பவை. இவற்றில்    எதிலிருந்தும்   என்னை    என்னாலோ   அல்லது    வேறு எவராலுமோ     பிரித்துவிட   முடியாது.

எப்படி    மருத்துவத்துறையும்    ஆசிரியத்தொழிலும்    இன்ன   பிற துறைகளும்    தனிப்பட்ட   விருப்பு    வெறுப்புகளுக்கு    அப்பாற்பட்டதோ    அவ்வாறே   படைப்பு    இலக்கியத்துறையும் ஊடகத்துறையும்   இருக்கும்.     இருக்கவேண்டும்.
பத்திரிகையில்    பணியாற்றிய   காலத்தில்    எனக்கு   செய்திதான் முக்கியமானதாகப்பட்டது.
அந்தச்செய்தியை  நான்   அரசியல்    தலைவர்களிடமிருந்தும் பெற்றேன்.     பாதிக்கப்பட்ட   மக்களிடமிருந்தும்   பெற்றேன்.    சமூக விரோதிகளிடமிருந்தும்    பெற்றேன்.    பலதரப்பட்ட மனிதர்களிடமிருந்தும்    பெற்றேன்.

ஒரு    தென்னிந்திய   சினிமா    நடிகரை    சந்தித்து     பேட்டி   எடுக்குமாறு     எனது  பிரதம  ஆசிரியர்     சொன்னபொழுது    நான்   மறுத்தேன்.    ஒரு    நடிகனை சந்தித்து    நான்   எதனை    உருப்படியாக    எழுதுவது?    என்று   அவரிடம்    கேட்டேன்.   அதற்கு    அவர்   உனது தேர்ந்த    இலக்கிய    ரசனையை    ஒரு  புறம்    மூட்டை கட்டி வைத்துவிட்டு -   அந்த    நடிகரையும்     அவரது   காதல்   மனைவி நடிகையையும்    சந்தித்து   பேட்டி    எடுத்துவருமாறு   என்னை கொழும்பில்     பிரபலமான   கலதாரி    மெரிடின்    ஹோட்டலுக்கு அனுப்பிவைத்தார்.    மேலிடத்தின்    கட்டளைப்பிரகாரம்   சென்று சந்தித்து    பத்திரிகையில்   எழுதினேன்.   செய்தி   ஆசிரியர் அந்தச்செய்திக்கட்டுரைக்கு   By line   இல்   எனது   பெயரை போட்டிருக்கிறார்.    நான்    மாலை   வீட்டுக்குப்புறப்பட்டுவிட்டேன். மறுநாள்    காலை    மீண்டும்    வேலைக்குப்பறப்படும்பொழுது    எங்கள் வீட்டு    வாசலில்   எங்கள்   ஊரில்     எனக்குத்தெரிந்த   சில    தமிழ் யுவதிகள்    நிற்கிறார்கள்.
என்ன    என்று?   கேட்டேன்.
நீங்கள்    சந்தித்து   எழுதிய    அந்த   நடிகரையும்   நடிகையையும் நாங்களும்    சந்திக்கவேண்டும்.    தயவுசெய்து    அதற்கு   ஏற்பாடு செய்து  தாருங்கள்     என்றார்கள்.    நான்   எழுதிய   செய்தியை பத்திரிகையில்   நான்   பார்ப்பதற்கு   முன்பே    அதனைப்படித்துவிட்டு    எந்தவொரு   வேலையும்    இன்றி என்னைத்தேடி    ஓடி   வந்த   அந்த   இளம்  யுவதிகளிடத்தில்  எனக்கு கோபம்    வரவில்லை.    அவர்களிடத்தில்   மட்டுமல்ல   என்னிடத்திலும்   எனக்கு   அனுதாபம்தான்  தோன்றியது.
அதற்கு   முன்னர்   எத்தனையோ   எழுத்தாளர்களை கலைஞர்களையெல்லாம்   நான்    சந்தித்து   எழுதியிருக்கின்றேன். ஆனால் - எவருமே    அவர்களைச் சந்திக்க   ஏற்பாடு    செய்து தாருங்கள்  என்று    என்னிடத்தில்   கேட்டதில்லை.
சரி   போகட்டும்.
எங்கள்    அம்மா    பற்றியும்   இங்கே    சொல்லிவிட வேண்டும். சென்னையில்   1990   ஆம்  ஆண்டு   ஏப்ரில்   மாதம்    எதிர்பாராத விதமாக    நடிகர்    திலகம்  சிவாஜிகணேசனை  கவிஞர் கண்ணதாசனின்    துணைவியார்    பார்வதி    அம்மாவின் மரணச்சடங்கில்    சந்தித்து    உரையாடியதை     நான்    தங்கியிருந்த கோடம்பாக்கம்   உமா  லொட்ஜில்   என்னைப்பார்க்க இலங்கையிலிருந்து   வந்து    தங்கியிருந்த   எனது   அம்மாவிடம் சொன்னேன்.


உடனே   அம்மா ---  அடடா   இப்படித்தெரிந்திருந்தால்   நானும் வந்திருப்பேனே....   என்னையும்   அவரைப்பார்க்க அழைத்துச்செல்கிறாயா?    எனக்கேட்டார்கள்    பாருங்கள்.
அந்தப்பயணத்தில்    தமிழகத்தின்   மூத்த   எழுத்தாளர்கள் ஜெயகாந்தன்  -   அசோகமித்திரன்  -    கவிஞர்  மேத்தா    உட்பட பலரையும்    சந்தித்தேன்.    அவர்களையெல்லாம்    பார்க்கும்   ஆவல் எனது     அம்மாவிடம்    இல்லை.
சரிதான்    போகட்டும்.
மதுரைக்கு   வந்தேன்.    அப்பாவின்   உறவினர்களுடன் உரையாடும்பொழுதும்   இதுபற்றி   அங்கிருந்தவர்களிடம் சொன்னேன்.    ஒரு    மூதாட்டி   உடனே    குறுக்கிட்டு    தம்பி  எங்கட மக்கள்   திலகம்     வாத்தியாரைப்பார்த்தீர்களா?    என்றார்கள்.
அவருடைய     சமாதியைத்தான்    சென்னை    மெரீனா  பீச்சில் பார்த்தேன்   என்றேன்.
என்ன    தம்பி   சொல்கிறாய்....?  அவர்   எப்பொழுது   செத்துப்போனார்? நீ.... சும்மா    பொய்   சொல்கிறாய்  -    என்றார்    அந்த   மூதாட்டி.

எம்.ஜி.ஆர்.  இறந்ததது  1987  இறுதியில்.    மூன்று   வருடங்களாகியும் அந்த    வாத்தியார்   இன்னமும்  உயிரோடு    இருக்கிறார்    என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்    அந்த   மூதாட்டி.
ஏன்....தெரியுமா...? வாத்தியாரின்   படங்கள்    ஓடிக்கொண்டிருக்கிறது அல்லவா?
 இங்குதான்   ஒவ்வொருவரின்   இயல்புகளைப்புரிந்துகொண்டு அவர்களை    நேசிக்க   கற்றுக்கொள்ளவேண்டும்   என்ற    பாடத்தையும் கற்றுக்கொண்டேன்.
அழகு  என்பது   என்ன?     ஒவ்வொருவரின்    இயல்புகளே    அவரவர் அடிப்படை   அழகு.
ஒரு    படைப்பாளி -   பத்திரிகையாளன் -   ஊடகவியலாளனுக்கு இருக்கவேண்டிய   அடிப்படை   அழகும்   அதுதான்    என்பதையும் எனது    வாழ்வும்   நான்   நேசித்த  -   எனக்கு    சோறு   போட்ட தொழிலும்   தந்திருக்கிறது.
அதனால்தான்  கடல் கடந்து   இந்த  நாட்டுக்குள்    பிரவேசித்த பின்னரும்   அதிலிருந்து   விடுபட முடியாமல்   எனது   பணி தொடருகின்றேன்.    அதற்கு    உங்கள்    அனைவருடையதும்   ஆதரவு கிடைத்திருப்பதுதான்    எனக்குக் கிடைத்த   பெரிய   கொடை .  எனக்கு கிடைத்த  பெரிய விருது.


எனது   சொல்ல  மறந்த  கதைகளை    படித்துவிட்டு   இங்கு   வந்து தமது   விமர்சனங்களை    முன்வைத்த    நண்பர்கள்    நவரத்தினம் இளங்கோ  -   நடேசன்  -   ஜெயராம சர்மா  -   ஆவூரான்   சந்திரன்    மற்றும்    தலைமையுரையுடன்    விமர்சன    உரையும்   நிகழ்த்திய நண்பர்    குமாரதாசன்    அவர்களுக்கும்    எனது  மனமார்ந்த   நன்றி.
இந்தக்கதைகளை    தனி    நூலாகத்தொகுத்து    வெளியிடுங்கள்  என்று எனது    பிரியத்துக்குரிய   நண்பர்கள்    பலர்    சொன்னர்கள்.    குறிப்பாக இங்கிருக்கும்    கிருஷ்ணமூர்த்தி  -   கிளிநொச்சியிலிருக்கும்  கருணாகரன் -   மற்றும்    தமிழ்நாடு   மலைகள்   பதிப்பகம் சிபிச்செல்வன்    ஆகியோரும்    வழங்கிய   ஊக்கமூட்டும் வார்த்தைகளினால்  இந்த  நூல்   இன்று   உங்கள்    கரங்களில்.


சுண்டைக்காய்   கால்    பணம்   -  சுமைகூலி   முக்கால்   பணம் என்பார்கள்.    இதுதான்  என்னைப்போன்ற    எழுத்தாளர்கள்  காலம் காலமாக  சுமக்கும்   வலிகள்.    இந்த   வலிகளை  போக்கி   ஆதரவு நல்கி    வருபவர்கள்தான்    உங்களைப்போன்ற    வாசகர்கள்.   எனவே உங்களுக்கு  நன்றி    தெரிவிப்பது    எனது   தலையாய    கடமை.
எனது   படைப்புகளை  பதிவுசெய்த  -   இந்த நிகழ்ச்சி   பற்றிய  தகவலை வெளியிட்ட   எனது   அன்புக்குரிய   நண்பர்களின்   வலைப்பூக்கள் -  அவுஸ்திரேலியா   தமிழ்  முரசு  -   அக்கினிக்குஞ்சு  -   தமிழ் அவுஸ்திரேலியன்  -   குளோபல்   நியூஸ்  இணையத்தளங்கள்  -   கனடா பதிவுகள்  -   தமிழ்நாடு   திண்ணை  -  ஜேர்மனி   தேனீ   -   கனடா   தமிழ் ஓதர்ஸ்   -   இலங்கையில்    வெளியாகும்    தினக்குரல்   -   வீரகேசரி தினகரன்  -   யாழ்ப்பாணம்    வலம்புரி  யாழ். தினக்குரல்  -   மற்றும் அவுஸ்திரேலியா   வானொலிகளான   SBS   -  ATBC  மெல்பன் சங்கநாதம் - வானமுதம் - தமிழருவி  -  வானிசை -
 3 CR  தமிழ்க்குரல், 3 ZZZ தமிழோசை  வானொலி   ஊடகங்களுக்கும் எனது    நெஞ்சம்  நிறைந்த  நன்றிகள்.

என்றென்றும்   எனது    இலக்கிய  ஊடக    எழுத்துப்பணிகளிலும் பொதுப்பணிகளிலும்   எனக்கு    பக்கபலமாக    இருக்கும்    மனைவி  மற்றும்    எனது    அருமைப் பிள்ளைகள்    அன்பு   மருமக்கள் பிரியத்துக்குரிய    எனது    பேரக்குழந்தைகள்  அனைவருக்கும்   எனது மனமார்ந்த நன்றி.
என்னடா    பூபதியின்    சிறிய    பேரக்குழந்தைகளும்   பூபதிக்கு உதவுகின்றார்களா?    என்று     நீங்கள்    யோசிக்கக்கூடும்.    ஆமாம் அவர்களும்     உதவுகின்றார்கள்.    அவர்களைப்பற்றியும்   நான் எழுதியிருக்கின்றேன்.    எனக்கு   மன   அழுத்தம்   ஏற்படும் வேளைகளில்    எனது    பேரக்குழந்தைகளின்    புன்சிரிப்புத்தான்    எனக்கு மருந்து.    அவர்களின்    உலகத்தில்தான்     நான்   தற்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்.
எனது   நூல்   பற்றிய   விமர்சனங்களுக்குரிய    பதில்கள்   எனது நூலிலேயே   இருக்கிறது.    அதனைப்படிப்பவர்கள்   அந்தப்பதில்களை அதிலிருந்து    தேடிக்கொள்ள   முடியும்.
ஒரு   வாசகரை   அவர்   படிக்கும்    படைப்பிலிருந்தே தேடச்செய்வதுதான்   ஒரு   படைப்பாளியின்  வெற்றி.   நிச்சயம் தேடுங்கள்   கிடைக்கும்.
நாம்    குழந்தைகளின்    உரையாடலையும்    கேட்க   வேண்டும். அங்குதான்    உண்மை   இருக்கிறது.    அங்கு    மாத்திரமே   இருக்கிறது.
குழந்தைகளின்    குரலை   செவிமடுத்திருந்தால்    இந்த   உலகம் மட்டுமல்ல -   எங்கள்    தாயகமும்    பேரழிவுகளை சந்தித்திருக்கமாட்டாது.
இரண்டு    குழந்தைகளை    இந்த   நூலில் பதச்சோறாகக்காண்பித்திருக்கின்றேன்.     படித்துப்பாருங்கள்.
ஒரு    குழந்தை    வியட்நாம்   தேவதை   கிம்புக்.
மற்றக்குழந்தை  எங்கள்  தேசத்தில்    மடிந்துபோன   உயிர்களில் ஒன்றான     செல்வன்   பாலச்சந்திரன்  பிரபாகரன்.  படித்துப்பாருங்கள்.    அவர்களின்   குரலே   நான்    வழங்கும்    பதில். நான்    வழங்கும்   ஏற்புரை.
இந்தியாவின்   முன்னாள்   அமைச்சர்  நட்வர்சிங்   எழுதிய   அவரது சுயசரிதை   On Life is not enough   என்ற  சமீபத்திய  நூல் ஊடகங்களில்   சர்ச்சையைக்கிளப்பியிருக்கிறது.
இலங்கைக்கு  1987   இல்  வந்த   இந்திய   அமைதிப்படை  தளபதி திபீந்தர் சிங்   எழுதிய   இலங்கையில்    அமைதிப்படை   என்ற   நூல் பற்றி   அறிவீர்கள்.
ராஜிவ்  காந்தியின்   உதவியாளர்    ஆர். டி. பிரதான்   எழுதிய My Years With Rajiv & Sonia  என்ற   நூல்  பற்றியும்  அறிந்திருப்பீர்கள். இவ்வாறு   இலங்கை   இன்னாள்  -  முன்னாள்   அதிபர்கள் பற்றியெல்லாம்   நூல்கள்    வெளியாகிவிட்டன.
அங்கே    அரசியல்   பார்வைகள்    இருந்தன.    இராணுவப்பார்வைகள்  இருந்தன.    அப்படித்தான்    இருக்கும்.   ஏனென்றால்    அந்த   நூல்களை எழுதியவர்களின்    இயல்பு.    அத்தகைய    நூல்களின்    இயல்பும் அப்படியேதான்    இருக்கும்.
ஃபிரான்ஸிஸ்    ஹரிசனின்   ஈழம்   சாட்சியமற்ற  போரின் சாட்சியங்கள்   -    கோர்டன்   வைஸின்   The Cage -   கூண்டு    என்பனவும்  எழுதியவர்களின்    மனித   உரிமைப்பார்வை   ஊடகச் செயற்பாட்டுப்பார்வைகளை    பதிவு செய்தன. 
அவ்வாறே    இலக்கியப்படைப்பாளியாகவும்   பத்திரிகையாளனாகவும் பயணிக்கும்    எனக்கும்    இயல்புகள்    இருக்கின்றன.   அந்த இயல்புகளே   இந்த   சொல்ல   மறந்த   கதைகளை   எழுதுவதற்கு எனக்குத்தூண்டுகோலாக   இருந்தன.
இந்திய    அமைதிப்படையின்   பிரசன்னம்   பற்றி    அக்காலப்பகுதியில் நான்   எழுதிய   ஆண்மை  என்ற  சிறுகதையை    இலங்கை  -  தமிழக இதழ்கள்  பிரசுரிக்கவில்லை.   ஆனால் -   அக்கதை    அவுஸ்திரேலியா வானொலிகளிலும்    மலேசியா   இதழ்களிலும்    வெளியாகியது.
தமிழகத்தின்   இடது    கம்யூனிஸ்ட்டுகளின்   தீக்கதிர்   இதழ்  எனது அச்சிறுகதைக்கு  பலத்த    கண்டனம்   தெரிவித்திருந்தது.   எனினும் அச்சிறுகதை   எனது   இரண்டாவது    தொகுதி   சமாந்தரங்களில் வெளியானது.
இலங்கை - இந்திய   அரசியலில்   இலங்கையின்   போர்க்காலத்தில் கோடி    கோடியாக    பணம்   கைமாறியிருக்கிறது.
 எதற்கு?
கல்விக்காகவா?     பாடசாலைப்பக்கமே    செல்லாத - அவ்வாறு   ஏதும் இருக்கிறதா?   என்றும்   தெரியாமல்   இந்தியா    உட்பட    பல   உலக நாடுகளில்    மக்கள்    பின்தங்கியிருக்கிறார்கள்.
ஆனால் -   பரிமாறப்பட்ட   அந்தக்கோடிகள்    யாவும் குழந்தைகளுக்காக    அல்ல.    வேறு    எதற்கு    என்பதற்கான    பதிலும் உங்கள்    அனைவருக்கும்   தெரியும்.
இலங்கையில்    கொக்கட்டிச்சோலை  -   அரந்தலாவ   -    குமுதின  படகு - முல்லத்தீவு   ஓதிய மலை  -   பொலிகண்டி    நூலகம்    பற்றியெல்லாம் செய்திகளில்     எழுதியிருக்கின்றேன்.    அதனைத்தொடர்ந்து எத்தனையோ   கோரங்கள்   நடந்துவிட்டன.
நவாலி  -   வள்ளிபுனம்  -    கந்தன் கருணை   -   முள்ளிவாய்க்கால்   என்று பல    தொடர்கதைகள்    தொடர்ந்தன.     நான்    எழுதியதுடன் நின்றுவிடாமல்    போர்   முடிவுக்கு   வந்ததும்    இங்கெல்லாம்   சென்று  வந்து   பயணியின்   பார்வையில்   தொடர்   26 அத்தியாயம் எழுதினேன்.
1987   இல்   இங்கு   வந்து  எழுதிக்கொண்டே   இலங்கை மாணவர் கல்வி   நிதியத்தையும்    தோற்றுவித்தேன்.    அதன்    வெள்ளிவிழா எதிர்வரும்  6  ஆம்   திகதி  மெல்பனில்   நடக்கவிருக்கிறது. உங்களைப்போன்ற   இரக்கமுள்ள   அன்பர்களின்    அதரவு   அதற்கும் தேவை.
பாதிக்கப்பட்ட    மக்கள்    பக்கம்    நிற்பதுதான்    ஒரு எழுத்தாளனின் பத்திரிகையாளனின்    கடமை.    அதனைத்தான்    செய்தேன்.    செய்து வருகின்றேன்.    இதில்   ஆச்சரியப்படுவதற்கு    ஒன்றும்     இல்லை. மருத்துவர்கள்  -  ஆசிரியர்கள்    தமது   கடமையைச்செய்வது போன்றதே    இந்தத்   தொழிலும்.    அவ்வளவுதான்.    எனினும் கேள்விகள்    அவர்களுக்கும்    தொடருகின்றன.
முன்னர்    காச நோய்   என்றார்கள்.    பிறகு   புற்று நோய்.   பிறகு எய்ட்ஸ்  -   தற்காலத்தில்   டெங்கு   -   பன்றிக்காய்ச்சல்   - கோழிக்காய்ச்சல் .  சமீபத்தில்    எபோலா.... இப்படி    மருத்துவர்களை கேள்விகள்    தொடருவது  போன்று    எங்களிடமும்    கேள்விகள் தொடருகின்றன.
 இவ்வாறு    எங்களை    நாம்    தேடிக்கொள்வதற்கும்  கிடைக்காத பதில்களுக்காக    கேள்விகள்   கேட்டுக்கொண்டிருப்பதற்குமே என்னைப்போன்ற   படைப்பாளிகள்  -   பத்திரிகையாளர்கள் அனைவரும்    தொடர்ந்து    எழுதிக்கொண்டே   இருக்கிறார்கள்.
கதை    என்பது   ஒரு   ரகசியமான   புதிர்    விளையாட்டு.   நாம்   அந்த   விளையாட்டில்   பாதியில்    கலந்துகொள்கின்றோம்.   பாதியில் விலகியும்    விடுகின்றோம்.    அதற்குள்   என்ன    நடக்கிறது ?
என்று  கேட்கிறார்   தமிழகத்தின்  முன்னணி    எழுத்தாளர்  எஸ். இராமகிருஷ்ணன்.    ஆம்.    உண்மைதான்.    என்ன   நடக்கிறது என்பதை   நீங்களும்   நானும்    தேடுவதுதான்   வாசிப்பு   அனுபவம்.
உங்கள்    அனைவரிடமும்   சொல்ல   மறந்த   கதைகள் -சொல்லத்தயங்கிய   கதைகள்   -   சொல்லப்பயந்த  கதைகள்   -  சொல்ல மறுத்த    கதைகள் -   வெளியே   சொல்லவே  முடியாத   கதைகள் பல   இருக்கலாம்.   நேரம்     இருந்தால்   எழுதிப்பாருங்கள்.   அதற்குள் உங்களையும்     நீங்கள்    தேடுவீர்கள்.
நான்    தற்பொழுது    யாழ்ப்பாணத்திலிருந்து   வெளியாகும்    ஜீவநதி மாத   இதழில்   சொல்லவேண்டிய   கதைகள்  என்ற   தொடரை  கடந்த    ஒன்றைரை    வருடங்களுக்கும்   மேலாக   எழுதிவருகின்றேன்.    இம்மாதம்   அதன்  17  ஆவது  அத்தியாயம் வெளியாகியிருக்கிறது.
எனவே  இந்த  சொல்ல.... என்ற  சொற்பதம்   என்னை  விட்டும் உங்களை   விட்டும்   அகன்றுவிடாது.
இந்த    நூலின்   பதிப்புரிமைக்குரிய    எனது    மனைவி   மாலதி   தமிழ் இலக்கண -   இலக்கிய   ஆசிரியை.   அதனால்   எனக்கு    நன்மையும் உண்டு.    சங்கடங்களும்   உண்டு.    பத்திரிகைத்தமிழ் -   படைப்பு இலக்கியத்தமிழ்  -  வானொலி    ஊடகத்தமிழ்    என்றெல்லாம்    பலதும் பத்தும்    இருக்கின்றன.
 மாலதியிடம்    தமிழ்    ஆசிரியர்களின்    தமிழ்தான்    இருக்கிறது. மாலதியின்   தமிழும்   எனது    தமிழும்     அடிக்கடி    சண்டை   போடும்.    ஆயுதம்   ஏந்தாத   வாய்ச்சண்டை.    இலக்கணம்    மீறிய தமிழ் - இலக்கணம்  மீறாத   தமிழ்    என்று   சொல்வார்கள்.    நான் என்ன   தமிழிலில்    பேசுகின்றேன்?  என்ன   தமிழில்   எழுதுகின்றேன் என்பது    மற்றவர்களுக்கே   வெளிச்சம்.
எனினும் -   நாம்  அனைவரும்    தமிழால்    இணைந்திருக்கின்றோம்.  ஏனைய   இனங்களுடனும்    இணைந்து   சிந்திக்க  -  இணைந்து செயற்படுவதற்கும்   எமது   தமிழ்   எமக்கு   என்றென்றும்   பக்க பலமாக    இருக்கும்.
ஏனென்றால்  நாம்  மூத்த  குடிகள்    அல்லவா?    மூத்த குடி  மக்கள் மற்றவர்களுக்கு   முன்மாதிரியாகவும்    இருக்கவேண்டும்    அல்லவா? மீண்டும்    உங்கள்   அனைவருக்கும்    எனது   மனமார்ந்த   நன்றி.  
------0----


No comments: