திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி


மல்லிகை ஜீவா  வருணித்த  அச்செழு  பண்ணையார்
தம்பையா   அண்ணன்.
   உரும்பராய் மண்ணில்   உழைப்பின்  உபாசகர்
                                         

 தி.ஜானகிராமன்  எழுதிய  கதையொன்றிலே  ஒரு  வசனம்  இப்படி வந்ததாக   ஞாபகம்.
தரையில்  வரைந்த   கோலம்   எழுந்து  நின்றதுபோல்--- சௌந்தர்ய உபாசகரான  அவர்  -  ஒரு  பெண்ணை   அவ்வாறு   வர்ணிப்பார்.
 எங்கள்  அச்செழு  பண்ணையார்  -   என   நண்பர்  மல்லிகை  ஜீவா வர்ணிக்கும்  தம்பையா   அண்ணர்   தமது   நினைவின்  அலைகள் சுயசரிதை   நூலை  இவ்வாறு   ஆரம்பிக்கின்றார்.
  உரும்பராய்ச்சந்தி  –  சிலுவையை   நிலத்தில் கிடத்திவைத்தாற்போன்றதொரு  சந்தி.
 ஜானகிராமன்   கோலத்தை  நிமிர்த்துகிறார்.   தம்பையா   சந்தியை கிடத்துகிறார்.   படைப்பாளிகளுக்கு   இப்படி    அபூர்வமாகவே   கற்பனை தோன்றும். 
 லா.ச.ரா.  எழுதுவார் -   அவள்    இடுப்பின்   வளைவில்    குடத்தின் வளைவு    ஏறியது  -  என்று.
 அபூர்வமாக   வந்து விழும்  சித்திரங்களை  எம்மால்   எப்படி மறக்கமுடியாதோ   அப்படித்தான்  தம்பையா  அண்ணர்  என்ற   அபூர்வ மனிதரையும்   மறக்கமுடியாது.
 மேலும்   ஐந்துவருடங்கள்   வாழ்ந்திருப்பாராகில்   நாம்   அவருக்கு பவளவிழா    கொண்டாடியிருப்போம்.
  நான்  போகிறேன்  நண்பர்களே  –  நீங்கள்   கொண்டாடுங்கள் -  என்று அவர்  தனக்குள்   நினைத்துக்கொண்டு ஆழந்ததுயில்  கொண்டிருக்கவேண்டும்.   அது    மீளாத்துயில்.
 ஒருவரது  மரணத்தை  கொண்டாட முடியுமா?   முடியும்.    நிச்சயமாக முடியும்.
 எப்படி?
 மறைந்தவரை   நினைத்து   எமது  எண்ண  அலைகளை  எழுப்பி  அந்த அலைகளுக்குள்   எம்மை   நாமே   சுயவிமர்சனமும்    செய்துகொண்டு கொண்டாடலாம்.   அவ்வாறு   என்றென்றும்    எம்மால் கொண்டாடப்படக்கூடியவர்   மந்திரப்புன்னகைக்குச் சொந்தக்காரரான தம்பையா   அண்ணர்.



  1983  இனச்சங்கார  அவலங்கள்   முடிந்து   மாதங்கள்   கழிந்து -  1984 ஆம்   ஆண்டு   பிறக்கிறது.   மார்ச்   மாதம்   முதல் வாரம்  வேலை முடிந்து  மாலை நேரம்  -   கொழும்பு  வந்துள்ள  ஜீவாவை  சந்திக்க ஸ்ரீகதிரேசன்   வீதிக்குச்செல்கிறேன்.    அங்கே   நண்பர்கள்    செல்வமும் மணியும்   இணைந்து   நடத்திய   நிறுவனத்தில்    ஜீவாவையும் தம்பையா    அண்ணரையும்    சந்திக்கின்றேன்.
  வேலையால்   களைத்து    வாரீர்.     வாரும்   ரீ    குடிக்கப்போவோம்.  மலர்ந்த  முகத்துடன்   என்னையும்  ஜீவாவையும் அழைத்துக்கொண்டு  ஐந்துலாம்புச்சந்தியில்   ஒரு   ஹோட்டலுக்கு அழைத்துச்செல்கிறார்.
 அங்கே    எதிர்பாராதவிதமாக  எனக்கு   ஒரு   அழைப்பு   விடுக்கிறார்.
 தம்பி--- இந்த  மாதம்  18  ஆம் திகதி   (18-3-1984)  ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம்   வீரசிங்கம்  மண்டபத்தின்   முன் ஹோலில்  எனது கடலில்  கலந்தது  கண்ணீர்    கதைத்தொகுப்பு    வெளியீட்டு   விழா. நீரும்வந்து   பேசுகிறீர்..... சரிதானே.....?
 நான்   திகைப்புடன் -   என்ன   அண்ணா    இப்படி   திடீரென்று--- இழுக்கின்றேன்.
 நீர்  வாரீர்---- அவ்வளவுதான்.  -   சுற்று   உரத்துச்சொன்னவர்  -   எழுந்து எனது    சேர்ட்    பொக்கட்டுக்குள்   ஒரு  நூறு   ரூபா தாளை   செருகினார். இதனை   உமது   பஸ்   செலவுக்கு   வைத்துக்கொள்ளும்.


 எனது  வாழ்வில்  இது  மறக்கமுடியாத  அனுபவம்.   தம்பையா அண்ணர்    சொன்ன    பிரகாரம்    அந்த    நிகழ்வு  18-03-1984   காலை  9 மணிக்கு    நடந்தது.    யாழ். சமூக  முன்னேற்றக்கழக சமாசம்   அதனை ஒழுங்கு    செய்திருந்தது.   ஆர். எம். நாகலிங்கம்    தலைமை தாங்கினார். நானும்   டானியலும்    செல்வமும்  தெணியானும்  உரையாற்றினோம்.    கே. கணேஷ்  வருவதாக   இருந்தது.   அவரால்   ஏனோ  வரமுடியாது போனது.
தெணியான்   இக்கதைத்தொகுப்பினை    அச்சுக்குப்போகுமுன்னர் செம்மைப்படுத்தினார்.    நண்பன்   காவலூர்   ஜெகநாதன் மூலப்பிரதியை   தமிழகம்   எடுத்துச்சென்று    பதிப்பித்தார்.   தம்பையா அண்ணர்   தொழில்    நிமித்தம்    மலேசியாவில்   வாழ்ந்த காலப்பகுதியில்  அவர்  எழுதி   அங்கு   வெளியான   இதழ்களில் பதிவான    சிறுகதைகளின்  தொகுப்பு     கடலில்  கலந்தது  கண்ணீர்.
அக்காலப்பகுதியில்   தம்பையா  அண்ணர்   என்னையும்   கவிஞர் மேமன் கவி   உட்பட  பல   இளம்   படைப்பாளிகளையும்  சகோதர பாசத்துடன்    நேசித்தார்.    மல்லிகையில்   அறிமுகமான   பல எழுத்தாளர்களிடம்    நட்பு   பாராட்டினார்.    ஊக்குவித்தார். மற்றவர்களை   ஊக்குவிப்பதும்   அவரது   சிறப்பியல்பு.
 சவரக்கத்தியை  பிடித்துக்கொண்டே  பேனாவும்  பிடித்தவர்   எங்கள் மல்லிகை  ஜீவா    மாத்திரம்தான்   என  நினைத்திருந்தேன்.   தம்பையா அண்ணரும்    தனது   தொழிலைத்துறந்து   முழுநேர எழுத்தாளராகியிருந்தால் -   இவரும்    ஜீவாவைப்போன்று பாஷாணத்தில்  புழுத்த  புழு  -   என்று  முழங்கியிருக்கக்கூடும்.   நல்ல காலம்   ஜீவாவின்   தனித்துவம்   அவரால்   காப்பற்றப்பட்டது.


 தம்பையா   அண்ணர்    தனது  தொழிலில்  தீவிர   கவனம் செலுத்தினார்.   உரும்பராயின்   அந்த   செம்பாட்டு   மண்ணில் கடுமையாக    உழைத்தார்.   அச்செழுவில்  அவரது  வீட்டிற்கு  நானும் மேமன்கவியும்   சென்று   தங்கியிருக்கின்றோம்.
அந்த  வீடு  பசும்  சோலையில்   அமைந்திருந்தது.   மா -  பலா -  வாழை -  தென்னை  -   பனை  -   கொய்யா  -  வேம்பு  -  என  பயன்தரு  மரங்களும் மரக்கறித்தோட்டமும்  செழிப்புடன்   அந்தச்சோலைக்கு உயிருட்டியவை.   அவற்றை    தம்பையா   அண்ணரின்  அருமைப்பிள்ளைகள்    எனவும்  சொல்லமுடியும்.   வற்றாத கிணற்றிலிருந்து    அவற்றுக்கு    தினமும்   தண்ணீர்   இறைப்பார்.
நாம்   சென்றிருந்தபொழுது   ஒரு  காலை   வேளையில்   அவர்   அசல் தோட்டக்காரனாகவே   காட்சியளித்தார்.   அவர்   உற்சாகமாக நிலத்தை  கிண்டியும்   பசளையிட்டும்   நீர்  இறைத்தவாறும் எம்முடன்   தொடர்ந்தும்    உரையாடியவாறு   சற்றும்   களைப்பே இல்லாமல்   வேலை   செய்தார்.   
 அந்த   மண்ணை  அவர்   எப்படி உளமாற    நேசித்தார்   என்பதை   அன்று  நேரடியாகவே   அறிந்துகொண்டேன்.
இலங்கையின்   வடக்கிலே    தற்பொழுது   கடும்  வரட்சி   என்று அறிகின்றேன்.    தம்பையா  அண்ணர்   நேசித்த   அந்தப்  பயிர் பச்சைகள்    தங்களை   விட்டுச்சென்ற   அவரைப்பற்றி   ஆழ்ந்து யோசிக்கலாம்.   அவை    கண்ணீர்   விடுவதற்கும்    நிலத்தில்   வேர் உறிஞ்சுவதற்கு   ஈரலிப்பில்லை.    அவர்   அந்தத்தாவரங்களுடன்  முன்னர்    பேசியவர்.    எப்படி  என்பது  எமக்குத்தெரியாது. இயற்கையையும்   தாவரங்களையும்   உளமாற நேசிப்பவர்களுக்குத்தான்   அந்த   உரையாடலின்   சூக்குமம்  தெரியும்.
இதுபற்றி    பாலுமகேந்திராவும்   தனது    இறுதிப்படமான தலைமுறைகள்    எடுத்தபொழுது   சொல்லியிருக்கிறார்.
வாடிய   பயிரைக்கண்டு   வள்ளலார்    கண்ணீர்    உகுத்தார். முல்லைக்குத்தேர்    ஈந்தான்    பாரி   வள்ளல்.   எங்கள்   தம்பையா அண்ணர்   மேல்    உலகம்   சென்றுவிட்டார்.     வருணபகவானிடம் முறையிடுவார்.    மழை  பெய்யும்    என   நம்புவோமாக.
அவருக்கு   கொழும்பில்   நல்ல  வருமானம்   தரும்   தொழில் நிலையம்   இருந்தது.   அவர்   அச்செழு   காணியில்   அவ்வாறு சிரமப்பட்டிருக்கத்தேவையில்லை.   ஆனால்  -  அவரது   நேசிப்பு மண்ணில்   மட்டுமல்ல  அவரது  கடின   உழைப்பிலும்   இருந்தது எமக்கு   முன்னுதாரணமானது.
இலக்கிய   உலகிற்கு    அவரது இரண்டு   நூல்கள்   மாத்திரமே    வரவாகின.   கடலில்  கலந்தது  கண்ணீர்    (சிறுகதை)    நினைவின் அலைகள்   (சுயசரிதை)
 1950  ஆம்  ஆண்டளவில்   மலேசியாவுக்குச்சென்றவர்  -   பத்து ஆண்டுகள்   கழித்து   தாயகம்   திரும்புகிறார்.   சுமார் 23 வருடங்களுக்குப்பின்னர்   தான்  எழுதிய கதைகளைத்தேடிப்பெறுகிறார்.  1984  இல்    கதைத்தொகுப்பை வெளியிடுகிறார்.  1977  இல்   அவரது  சுயசரிதை    வெளியாகிறது.
 அவர்   எழுத்துலகில்   சஞ்சரித்த   காலம்    சொற்பம்தான்.  ஆனால் - இலக்கியவாதிகளின்   நெஞ்சங்களில்   பலகாலம்   சஞ்சரித்தவர் என்பதற்கு    ஆதாரமாகத்திகழ்வது   அவரது    மறைவுக்குப்பின்பு வெளியான   மலர்.   பலர்  தம்பையா   அண்ணரின்   உன்னதமான குணங்களை   இம்மலரில்    சிலாகித்து   கொண்டாடியிருக்கின்றனர்.
 புறக்கோட்டையில்   அவரது  ஓரியண்டல்   சலூன்   இலக்கிய வட்டாரத்தில்   நல்ல    பிரபலம்   பெற்றிருக்கிறது.   நான் எழுதத்தொடங்கிய    காலத்தில்   ஜீவாவை    கொழும்பில் பெரும்பாலும்   இங்குதான்    சந்திப்பேன்.   ஜீவா   கொழும்பு   வராத நாட்களிலும்    நேரம்  கிடைக்கும்போது    அந்தப்பக்கம்   நான் செல்வேன்.    என்னை    அருகேயுள்ள    கோல்டன்    கபேக்கு அழைத்துச்சென்று   உபசரிப்பார்.
 எனது   முதலாவது   கதை  கனவுகள்  ஆயிரம்   மல்லிகையில் வெளியான   காலம்.   அதுபற்றிய   முதல்    விமர்சனத்தையும்   தம்பையா   அண்ணரின்    ஓரியண்டல்   சலூனில்    வானொலியில்தான்    கேட்டேன்.    விமர்சித்தவர்    ரத்தினசபாபதி  ஐயர். எனக்காக   அவரது   குரலை   டேப்பில்    பதிவுசெய்துவைத்து    நான் வந்ததும்   அதனை   செவிமடுக்கச்செய்தவர்.    இப்படியாக   எனது வாழ்வில்    மறக்கவேமுடியாத   சில   சம்பவங்களின்   சூத்திரதாரி தம்பையா   அண்ணர்.
 கவிச்சக்கரவர்த்தி   கம்பனுக்கு   ஒரே   ஒரு    சடையப்ப வள்ளல்தான் நண்பராகக்கிடைத்தார்.   மல்லிகை   ஜீவா   கம்பனைவிட பாக்கியசாலி.    ஜீவாவுக்கு   கிடைத்த    பல  சடையப்ப  வள்ளல்களில் தம்பையா    அண்ணரும்   ஒருவர்.    ஏனையோரை    விரல் விட்டு எண்ணலாம்.
 தம்பையா   ஜீவாவுக்கு    மாத்திரம்    அல்ல   மேலும்    பலருக்கும் - தான்    சார்ந்திருந்த    சமூகத்திற்கும்   முன்னுதாரணமான  சடையப்ப வள்ளல்.    இதனை   அவரது   மறைவுக்குப்பின்பே தெரிந்துகொண்டேன்.
தம்பையா   அண்ணருக்கும்   ஜீவாவுக்கும்    இடையில்   நடந்த முக்கியமான    நிகழ்வு    சுவாரஸ்யமானது.   தம்பையா   அண்ணருக்கு புகையிலை  சப்பும்  பழக்கம்   நீண்ட   காலம்    இருந்தது.    அதேபோன்று ஜீவாவுக்கு   வெற்றிலை   குதப்பும்    பழக்கம்.
இருவரும்     இந்த   பழக்கங்களையும்   நீண்ட   நாட்கள் கைவிடவில்லை.   இரண்டுமே    வாய்க்கு    கெடுதி எனத்தெரிந்துகொண்டே   அவற்றை    தினமும்   சுவைத்தனர்.
திடீரென்று   ஒருநாள்   தம்பையா   அண்ணர்    புகையிலை   சப்பும் பழக்கத்தை    நிறுத்திவிட்டார்.    அப்பொழுது   அவர்   குருமகராஜின் தீவிர   பக்தராக  மாறியிருந்தார்.   ஒரு சமயம்  குருமகராஜ்   கொழும்பு வந்தபொழுது    அவரைத்தரிசித்தார்.    குருமகராஜ்   தம்பையா அண்ணரின்    புகையிலை   குதப்பும்   பழக்கத்தை   உடனடியாக நிறுத்துமாறு   ஆன்மீகக்கட்டளையை    விடுத்தவுடனேயே   இவரும் அந்த   நீண்ட கால  பழக்கத்தை   திடீரென்று   நிறுத்திவிட்டார்.
ஆனால்  -  ஜீவா  இவரைப்போன்று   எந்தவொரு ஆன்மீகத்தலைவரினதும்   பக்தன்   அல்ல.   கார்ல் மார்க்ஸ_ம் லெனினும்தான்    ஜீவாவின்   வழிகாட்டிகள்.    மகாகவி  பாரதி அவருக்கு  ஞானகுரு.    கார்த்திகேயன்   மாஸ்டர்    உட்பட   பல இடதுசாரிகள்    ஜீவாவின்    ஆசான்கள்.    இவர்கள்    எச்சந்தர்ப்பத்திலும் ஜீவாவிடம்   வெற்றிலையை   நிறுத்தச்சொல்லியிருக்க மாட்டார்கள்.
தம்பையா   அண்ணர்  ஜீவாவையும்   குருமகராஜிடம் அழைத்துச்சென்று    வெற்றிலை   போடும்  பழக்கத்தை   நிறுத்துவதற்கு முயன்றார்.    ஆனால் -   ஜீவாவுக்கு   அதில்  சம்மதம்   இல்லை. மறுத்துவிட்டார்.   அவர்  மறுத்ததுடன்   நின்றிருக்காமல்   தம்பையா அண்ணருடன்    பந்தயம்   கட்டினார்.
எப்படி?
எந்த      ஆன்மீகவாதிகளையும்   தரிசிக்காமலேயே  இதோ  இப்பொழுதே   எனது    நீண்ட   கால   வெற்றிலை    குதப்பும் பழக்கத்தை    நிறுத்துகின்றேன்.    ஆனால்   நீர்  இன்னும்  சில நாட்களில்    மீண்டும்    புகையிலை    சப்புவீர்.    இருந்து   பாரும். என்றார்.
இறுதியில்   ஜீவா    சொன்னதுதான்   நடந்தது.
தம்பையா    அண்ணர்   மீண்டும்   புகையிலை   குதப்பினார்.   ஆனால் ஜீவா    அன்று   முதல்    வெற்றிலையை    முற்றாகவே   நிறுத்திவிட்டார்.
மனவலிமை    இருந்தால்   எந்தவொரு   பழக்கத்தையும் நிறுத்தமுடியும்   என்று    ஜீவா    நிரூபித்தார்.
மதுபானம்    மற்றும்   புகைப்பிரியர்களுக்கும்    தீய   பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கும்    இந்தச்சம்பவத்தின்    ஊடாக    ஜீவா   ஒரு நல்ல   செய்தியை   சொன்னார்.
கவியரசு   கண்ணதாசனிடமும்   பெத்தடின்   ஊசி   மருந்து   ஏற்றும் பழக்கம்    நீண்ட   நாட்கள்   இருந்தது.    திருமுருக  கிருபானந்த வாரியார்   -   சின்னப்பாதேவர்    உட்பட   பலரும்   புத்திமதி   சொல்லியும் அவர்    அந்தப்பழக்கத்தை    கைவிடவில்லை.    ஆனால் -   திடீரென்று எவரும்    எதிர்பார்க்காமலேயே   அதனை   முற்றாக நிறுத்திக்கொண்டார்.
ஜீவா  -  தம்பையா  அண்ணர்   ஆகியோரிடம்    எம்மை அடிமைப்படுத்தும்    பழக்கங்கள்   பற்றியும்   உரையாடியிருக்கின்றேன்.
 அவுஸ்திரேலியாவுக்கு  நான்   புலம்பெயர்ந்து   சுமார்   பதினொரு ஆண்டுகளின்   பின்னர்   இலங்கை   வந்திருந்தேன்.    அச்சமயம்   நண்பர்   ராஜஸ்ரீகாந்தனுக்கு    தினகரனில்  பிரதம  ஆசிரியர்   பதவி கிடைத்திருந்தது.    அவரைப்பாராட்டுவதற்காகவும்   என்னை வரவேற்பதற்காகவும்    -  அக்காலப்பகுதியில்   கொழும்பில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  கருத்தரங்கு   தொடர்பான ஆலோசனைக்கூட்டத்திற்காகவும்    முற்போக்கு   எழுத்தாளர்  சங்கம் ஒரு   சந்திப்பை   துரை.விசுவநாதன்    அவர்களின்  வியாபாரத்தலத்தின்    மேல்மாடியில்   நடத்தியது.
 நான்   மகனுடன்   இச்சந்திப்புக்குச்சென்றிருந்தேன்.    கூட்டம் தொடங்கி    சற்று    தாமதமாக   ஒரு    நீண்ட    குடையுடன்  வந்தார் எங்கள்    தம்பையா    அண்ணர்.    என்னைக்கண்டதும்   குடையை தரையிலே    போட்டுவிட்டு   என்னை    வாரி  அணைத்து கன்னங்களில்    முத்தமிட்டார்.   வியப்புடன்   பார்த்துக்கொண்டிருந்த மகனைத்தழுவிக்கொண்டார்.
 அவரது   குடை   தரையில்   விழுந்து   எழுப்பிய   ஓசையும்   அவரது பரவசமான    அரவணைப்பும்   அந்தச் சபையிலிருந்தவர்களை ஒருகணம்    சிலிர்க்கவைத்துவிட்டது.    அது   பலரும்   கூடியிருந்த சபையென்றும்    அவர்    பார்க்கவில்லை.    மற்றவர்கள்   எல்லோரும் நீண்ட   இடைவெளிக்குப்பின்னர்    என்னைப்பார்த்து   கைகுலுக்கி வாழ்த்தி    வரவேற்றபோது  -   அந்நிகழ்வுக்கு     சற்று   தாமதமாக   வந்த தம்பையா   அண்ணர்   அவ்வாறு   கட்டி  அணைத்தபோது   ஒரு தந்தையின்    பாசத்தை   உணர்ந்தேன்.
 அந்தக்கணங்களையும்   என்னால்   மறக்கமுடியாது.   கொழும்பில் நின்ற    நாட்களில்   சுகதுக்கங்களை   பரஸ்பரம்    பகிர்ந்துகொண்டோம்.
 அண்ணை---- நான்    அவுஸ்திரேலியாவுக்குப்போகும்போது  நீங்கள் ஜீவாவின்    நண்பராக    இருந்தீர்கள்.    இப்போது   திரும்பி வந்திருக்கிறேன்.    ஜீவாவின்   சம்பந்தியாக  உங்களைப்பார்க்கின்றேன்.   என்றேன்.
( நான்  இலங்கை  செல்வதற்கு  சில   மாதங்களுக்கு   முன்னர்தான் ஜீவாவின்  ஏக  புதல்வன்   திலீபன்   தம்பையா   அண்ணரின்  மகளை மணம்   முடித்திருந்தார்.)
ஓமோம்--- இதனைக்கொண்டாட வேண்டும்.    வீட்டுக்கு  வாரும்.  -   என்று    அழைத்துச்சென்று   உபசரித்தார்.
இவ்வளவுகாலமும்   உம்மை   ஓரியண்டலுக்குப்பக்கத்தில்   கோல்டன் கபேயில்தான்   உபசரித்தேன்.    இன்று    முதல்   இனி   எங்கள் கொழும்பு   மட்டக்குளிய   வீட்டில்தான்   உமக்கு  உபசரிப்பு -   என்றார்.
 அவரது    முன்னைய   கொழும்பு    வாழ்வு – கலியாணம்   பண்ணியும் பிரம்மச்சாரியாகத்தான்    கழிந்தது.    குடும்பம்   அப்பொழுது உரும்பராயில்    இருந்தது.    அவர்   மாத்திரம்   கொழும்பிலிருந்து தொழிலை    கவனித்தார்.     பல வருடங்களுக்கு    முன்னர்   தம்பையா அண்ணருடனும்    நண்பர்   செல்வத்துடனும்    மேமன்   கவியை அழைத்துக்கொண்டு    சைக்கிள்   சவாரியாக    குரும்பசிட்டிக்கு   பயணம் மேற்கொண்ட    தகவலை   ஏற்கனவே   கனக. செந்திநாதன் நினைவுக்கட்டுரையில்    பதிவுசெய்துள்ளேன்.   அந்தநாள் நினைவுகளையும்    மீட்டுக்கொண்டோம்.
 அவர்   மறைந்த   செய்தி   அறிந்து    எனது    கவலையை   ஆழ்ந்த அனுதாபமாக   தொலைபேசி   ஊடாக   பகிர்ந்துகொண்டேன்.   2002 ஆம்   ஆண்டு   மனைவி  மாலதியையும்   அழைத்துக்கொண்டு மட்டக்குளியாவுக்கு   துக்கம்    விசாரிப்பதற்காகச்சென்றிருந்தேன்.
 அந்த   வீட்டில்  தம்பையா    அண்ணர்    பெரிய    உருவப்படமாக  காட்சி அளிக்கிறார்.
 வாடாப்பா---- வந்து   கோப்பி   குடித்து   எனது   மனைவி  மக்கள் பேரப்பிள்ளைகளுடன்    உரையாடு  -   என்று   அவர்   முகம்  மலர்ந்து அழைப்பது  போலிருந்தது.
 ---0---

letchumananm@gmail.com

No comments: