பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கொழும்பை மையப்படுத்தி ஆயுதக்களைவுக்கு சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள தீர்மானம்
நான்காவது சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கு ஆரம்பம்
கண்டி பெண் மரணம்: சந்தேகிக்கும் எபோலா மாதிரிகளை சிங்கப்பூருக்கு அனுப்ப நடவடிக்கை
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சர்வதேச செயற்பாடுகள் இன்றும் இடம்பெறுகின்றன யாழ். கட்டளைத் தளபதி உதய பெரேரா
மட்டக்களப்பில் எலும்புக்கூடுகள் மீட்பு
சற்றுமுன்னர் புதுடில்லிக்கு பயணமானது த.தே.கூ.
திகாம்பரம், பிரபா கணேசன் ஆகியோர் பிரதி அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்
=================================================================
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தைச் சேர்ந்த 44 மாணவர்களது வகுப்புத் தடைக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தே அவர்கள் இவ்வாறு பல்கலைக்கழக வளவில் எதி;ர்ப்பு ஆர்ப்பாட்த்தை மேற்கொண்டனர்.
மேற்படி வகுப்புத்தடை உடன் நீக்கப்பட வேண்டும் என்று அவர்கள்கோசமெழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதே வேளை இது தொடர்பாக பேராதனைப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்ன கருத்து தெரிவிக்கையில்,
இதில் எந்த வித அரசியல் நோக்கமும் இல்லை. பகிடி வதை காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையின் காரணமாகவே இரண்டு வார வகுப்புத் தடை விதிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
கொழும்பை மையப்படுத்தி ஆயுதக்களைவுக்கு சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள தீர்மானம்
19/08/2014 தலைநகர் கொழும்பை மையப்படுத்திமேல் மாகாணம் முழுவதும் சட்ட விரோதஆயுதங்களை களையும் நோக்குடன் விஷேட தேடுதல் நடவடிக்கை ஒன்றுக்கு பொலிஸ் தலைமையகம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்குள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற ஆயுதமோதல்கள் மற்றும் கொலைகளை கருத்
தில் கொண்டே கொழும்பு குற்றத்தடுப்புப்பொலிஸார் ஊடாக இந்த விஷேட நடவடிக்கையை முன்னெடுக்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொழும்பு, பொலிஸ் தலமையகத்தில் நேற்று நடை பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த விஷேட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பகட்டமாக தகவல் சேகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் அது தொடர்பில் 80 பிரத்தியேக புலனாய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜூன் மாதம் முதல் நேற்று வரை ஆயுத மோதல்கள், தாக்குதல்கள் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 7 பேர் தன்னியக்க ஆயுதங்களுக்கும் ஏனைய இருவரும் அது தொடர்பிலான வேறு தாக்குதல்களினாலும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் கிராண்ட்பாஸ் பகுதியில் இரண்டு பேரும் மட்டக்குளி பகுதியில் இருவரும், ஜூலை 22 ஆம் திகதி வெல்லம்பிட்டி சிங்ஹ புரவில் இருவரும் ஆகஸ்ட் முதலாம் திகதி பொரளை சிகையலங்கார நிலையம் ஒன்றில் ஒருவரும் நேற்று கல்கிஸ்ஸை பகுதியில் ஒருவரும் நவகமுவ பகுதியில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைகளில் பெரும்பான்மையானவை ரீ - 56 ரக துப்பாக்கியாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மரணங்களில் 7 மரணங்கள் போதைப் பொருள் தொடர்பிலான பிரச்சினையில் நிகழ்ந்தவையாகும் என்பது பொலிஸ் விசாரணைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தற்போது மேற்கொண்டுள்ள விஷேட சுற்றிவளைப்புக்களால் அச்சமடைந்துள்ள போதைப் பொருள் வர்த்தகர்கள் தமது தகவல்களை பொலிஸாருக்கு வழங்குகின்றனர் என சந்தேகிக்கும் போதைப் பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் தமக்குள் மோதிக்கொள்வதாலேயே இவை பதிவாகியுள்ளன. எனினும் எந்தவொரு குற்றச் செயலையும் நாம் அனுமதிக்க முடியாது.
நேற்று முன் தினம் கல்கிஸ்ஸையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ஒரு அப்பாவி. அதே போன்று வெல்லம்பிட்டியவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய 16 வயது மாணவனும் அப்பாவி. இந் நிலையிலேயே அதிகரித்துச் செல்லும் ஆயுத கலாசாரத்தை கட்டுப்படுத்த இன்று (நேற்று) பொலிஸ் தலமையகம் விஷேட தீர்மானம் ஒன்றுக்கு வந்தது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரை உட்படுத்தி சட்ட விரோத ஆயுதங்களை கலையும் செயற்பாடே அது. நாடளாவிய ரீதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ள போதும் முதலில் கொழும்பை மையப்படுத்தி மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் தற்போது 80 புலனாய்வு அதிகாரிகளை நாம் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம்.
இதனை சட்ட விரோத ஆயுதங்கள் தொடர்பில் தகவல் தெரிந்த பொதுமக்களும் அது தொடர்பில் எமக்கு தகவல் அளிக்க முடியும். சரியான தகவல்களை வழங்குவோருக்கு பெறுமதியான சன்மானம் வழங்கப்படவுள்ள நிலையில் அவர்கள் தொடர்பான ரகசிய தன்மையும் பாதுகாக்கப்படும். தகவல் தெரிந்தவர்கள் 0112685151 அல்லது 0112662311 ஆகிய குற்றத்தடுப்புப் பிரிவின் தொலைபேசி இலக்கங்களுக்கு வழங்க முடியும்.
இந்த சுற்றிவளைப்புக்களில் விஷேடமாக அனுமதி பத்திரம் வைத்துள்ள ஆயுத உரிமையாளர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். ரீ - 56 ரக துப்பாக்கி பாவனைக்கு இதுவரை அனுமதி பத்திரம் எந்தவொரு தனி நபருக்கும் வழங்கப்பட்டிராத நிலையில் ஏனைய தன்னியக்க துப்பாக்கிகளை வைத்துள்ளோர் தொடர்பில் மாவட்ட செயலகம் ஊடாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில் விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்வுள்ளன.
1916 ஆம் ஆண்டின் ஆயுத பாவனை தொடர்பிலான சட்ட திட்டம் 1996 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட நிலையில் குற்றம் நிரூபிக்கப்படும் ஒருவருக்கு சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போருக்கு எதிராக 20 வருட சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படவும் வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்கவும் சட்டதில் இடமுள்ளது. அத்துடன் குறித்த நபரை அடையாளம் காணப்பட்ட குற்றவாளியாகவும் பதியவும் முடியும். என குறிப்பிட்டார்.
நன்றி வீரகேசரி நான்காவது சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கு ஆரம்பம்
18/08/2014 இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நான்காவது சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கு இன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது.

' இலங்கை- எழுச்சி பெறும் தேசமொன்றுக்கான சவால்கள்" என்ற தொனிப் பொருளில் இன்று ஆரம்பமான இந்த சர்வதேச கருத்தரங்கில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.
இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
குறித்த பாதுகாப்பு கருத்தரங்கில் 66 நாடுகளைச் சேர்ந்த 197 வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட 350 பாதுகாப்பு மற்றும் துறைசார் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
இக் கருத்தரங்கில் இந்தியப் படைத்தளபதிகளும் சுப்பிரமணிய சுவாமி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சிக் குழுவினரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கண்டி பெண் மரணம்: சந்தேகிக்கும் எபோலா மாதிரிகளை சிங்கப்பூருக்கு அனுப்ப நடவடிக்கை
20/08/2014 மத்திய மாகாண ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் நோய் கண்டறியப்படாத நிலையில் மரணமடைந்த பெண்ணின் இரத்த மாதிரி மற்றும் சில உறுப்புகள்

சிங்கப்பூருக்கு அனுப்பி நோய் தொடர்பான விபரங்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார அமைச்சர் பந்துல யாலேகம தெரிவித்தார்.
மத்திய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம் சபைத் தலைவர் மகிந்த அபேகோன் தலைமையில் பள்ளேகல மாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்றது. இதன் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
வைத்தியசாலையின் அறிக்கையின் படி குறிப்பிட்ட பெண் காய்ச்சல் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரின் வாயிலும் மூக்கிலும் இரத்தம் கசிந்துள்ளது. அவர் மரணமடைந்த பின்னரும் வாயிலும் மூக்கிலும் தொடர்ந்து இரத்தம் வடிந்துள்ளது. இப்பெண்ணுக்கு எலி காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்றே வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர்.
இப்பெண் இந்தியாவிற்கு யாத்திரை சென்று திரும்பியவர் என்று தெரிய வந்துள்ளது.
இவருக்கு ஏற்பட்டிருந்த நோய் எபோலா என ஊர்ஜிதமாக கூற முடியாது. பெரும்பாலும் எலி காய்ச்சலாகவே இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
என்றாலும் இந்நோயின் உண்மை நிலையை கண்டறிய இறந்த பெண்ணின் இரத்தம் மற்றும் சில உறுப்பு பகுதிகள் இரசாயன பகுப்பாய்விற்காக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
நன்றி வீரகேசரி பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சர்வதேச செயற்பாடுகள் இன்றும் இடம்பெறுகின்றன யாழ். கட்டளைத் தளபதி உதய பெரேரா
20/08/2014 உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட போதிலும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சர்வதேச செயற்பாடுகள் இன்றும் இடம்பெறுகின்றன. இலங்கையில் உள்ள குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளுடன் நேரடித்தொடர்புகளை புலம்பெயர் அமைப்புக்கள் மேற்கொள்கின்றன என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.

தொடர்ச்சியாக நான்காவது தடவையாக இலங்கையில் இடம்பெறும் பாதுகாப்புச் செயலமர்வு கொழும்பில் இடம்பெறுகின்ற நிலையில் அதில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
இலங்கை கடந்த காலங்களில் பல சவால்களுக்கு முகம் கொடுத்தது. வடக்கு தீவிரவாதத்தின் போர்வையில் சூழ்ந்திருந்த நிலையில் போராட்டத்தின் மத்தியிலேயே வடக்கையும் சிறுபான்மை மக்களையும் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாத்துள்ளோம். இது தான் இலங்கையின் உண்மையான நிலைமை. இதற்கு மேல் விமர்சிக்கும் வகையில் இராணுவத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் அமையவில்லை.
இலங்கைக்குள் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்ட போதிலும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினை அழிக்கவில்லை. இன்னும் பயங்கரவாத செயற்பாடுகள் செயற்பட்டு வருவது நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் மத்திய கிழக்கு பயங்கரவாத அமைப்புக்களுடனும் ஏனைய சர்வதேச பயங்கரவாதத்துடனான நேரடித் தொடர்புகளை மேற்கொண்டனர். போதைப்பொருள் வியாபாரம், ஆட்கடத்தல் செயற்பாடுகளை இவர்கள் மேற்கொண்டனர். சர்வதேச அளவில் இயங்கிய புலம்பெயர் அமைப்புக்கள் இன்று அரசியலுடன் தொடர்புகளை வைத்துள்ளன. இவற்றினை ஆயுத போராட்டம் மூலம் ஒருபோதும் அழிக்க முடியாது.
எனவேஇ சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பும் உதவிகளும் எமக்கு அவசியம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் முரண்பாட்டுடன் செயற்படுவது சாத்தியமாகாது. மேலும், யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளில் வடக்கில் உள்ள தமிழர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டில் 109 தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவை பல சந்தர்ப்பங்களில் விமர்சிக்கப்பட்டது. எனினும் தமிழர்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் செயற்பாடு யுத்த முடிவின் பின்னர் இடம்பெறவில்லை. 1980 களில் இருந்தே வடக்கின் தமிழ் மக்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் அன்று விடுதலைப் புலிகள் அதனை விரும்பாத காரணத்தினாலும் சுயநல போராட்டங்களை ஆரம்பித்ததன் காரணத்தாலும் சாதாரண பொதுமக்களின் அபிலாஷைகள் முடக்கப்பட்டது. எனினும் இன்று அவர்களுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் இராணுவத்தினை நேசிக்க ஆரம்பித்துள்ளனர்.
இராணுவம் வெறுமனே ஆயுதம்ஏந்தி போராடுவதற்கு மட்டுமல்ல சிவில் செயற்பாடுகளுக்கும் இவர்கள் தேவைப்படுகின்றனர். பொதுமக்களுடன் வாழ்கின்றமை தவிர சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தின் எவ்வித தலையீடும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரிமட்டக்களப்பில் எலும்புக்கூடுகள் மீட்பு
21/08/2014 மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பகுதியில் எலும்புக் கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றிலேயே மேற்படி எலும்புக் கூடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனுடன் அடையாள அட்டை, புகைப்படம் மற்றும் உடைகள் என்பனவும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்தப் பகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட மண்டையோட்டின் பகுதிகளாகவே குறித்த எலும்புக் கூடுகள் இருக்ககூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்குச் சென்ற களுவாஞ்சிக்குடி நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நன்றி வீரகேசரிசற்றுமுன்னர் புதுடில்லிக்கு பயணமானது த.தே.கூ.
21/08/2014 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்திய தலைநகர் புதுடில்லிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று பிற்பகல் 2.30 மணியளவில்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யுஎல்195 விமானத்தின் மூலம் பயணமானது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராஜா மற்றும் சுபாஸ் சந்திரன் ஆகியோரடங்கிய அறுவர் கொண்ட உயர் மட்டக்குழுவே பயண மேற்கொண்டுள்ளது.
புதுடில்லி செல்லும் இவ்வுயர் மட்டக்குழுவானது நாளை வெள்ளிக்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மாசுவராஜை சந்திக்கவுள்ளது. மறுநாள் சனிக்கிழமையன்று இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடியுடன் கூட்டமைப்பு முதன்முதலாக விசேட சந்திப்பில் பங்கேற்கவுள்ளது. அத்துடன் குறித்த காலப்பகுதியில் புதிய இந்திய மத்திய அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளுடனும் விசேட பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொள்ளவுள்ளது.
நன்றி வீரகேசரிதிகாம்பரம், பிரபா கணேசன் ஆகியோர் பிரதி அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்
21/08/2014 பிரதி அமைச்சர்களாக பி. திகாம்பரமும் பிரபா கணேசனும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தேசிய மொழிகள் பிரதி அமைச்சராக பி. திகாம்பரமும் தொழில் தொடர்பு பிரதி அமைச்சராக பிரபா கணேசனும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.


No comments:
Post a Comment