திரும்பிப்பார்க்கின்றேன் -- முருகபூபதி


கிழக்கிலங்கையின்   மண்வாசனையை    இலக்கியப்படைப்புகளில்  பரவச்செய்த    மருதூர்க்கொத்தன்
                                                     

பல   படைப்பாளிகள்   தமது   இலக்கியப்பிரதிகளை  எழுதும்பொழுது இயற்பெயரை  விடுத்து   புனைபெயர்களில்    அறிமுகமாவார்கள்.   பலர்   தமது   பிறந்த  ஊருக்குப்பெருமை   சேர்க்கும்   வகையில் தமக்குத்தாமே   ஊருடன்   இணைந்த  புனைபெயர்களை சூட்டிக்கொள்வார்கள்.
பின்னாளில்  அவர்களின்    இயற்பெயரை    பிறப்புச்சான்றிதழ் -பதிவுத்திருமண   சான்றிதழ் -  மரணச்சான்றிதழ்களில்தான் காணமுடியும்.    இலக்கிய   வட்டத்திலும்   குடும்ப  மட்டத்திலும் புனைபெயரே   நிலைத்துவிடும்.
கிழக்கு   மாகாணத்தில்   இஸ்மாயில்    என்ற   பெயரில்  ஒரு எழுத்தாளர்  இருந்தார்    எனச்சொன்னால்  எவருக்கும்  தெரியாது. மருதூர்க்கொத்தனையா  சொல்கிறீர்கள்   என்று   அவருக்கு  மிகவும் நெருக்கமான   சிலரே    குறிப்பிடுவார்கள்.
கிழக்கு   மாகாணத்தில்   கல்முனைக்கு   அருகாமையில்   பெரிய நகரமும்   அல்லாமல்   சிறிய   கிராமமாகவும்   காட்சியளிக்காத கடலோர   சிற்றூர்   மருதமுனை.
இந்த   ஊரில்  மருதூர் ஏ. மஜீத்  -   மருதூர்க்கனி   -   மருதூர் வாணன் என்ற   பெயர்களில்   எழுதியவர்களின்   வரிசையில்   முன்னோடியாக இருந்தவர்   மருதூர்க்கொத்தன்.
1935  ஜூன்  மாதம்  6  ஆம்  திகதி   அநுராதபுரத்தில்   பிறந்த   இஸ்மாயில்   என்ற    மருதூர்க்கொத்தன்    (இன்று  அவர்  உயிருடன் இருந்திருந்தால்  79   ஆவது   வயதை   குடும்பத்தினருடனும் இலக்கிய   நண்பர்களுடனும்    கொண்டாடியிருப்பார்.)  2004 ஆம் ஆண்டு  ஏப்ரில்  மாதம்  19  ஆம்   திகதி  மறைந்தார்.
  மருதமுனையில்தான்    வாழ்க்கைத்துணையை  பெற்றார்.
மருதமுனையில்   முன்னர்    அரசினர்  தமிழ்  ஆண்கள் பாடசாலையாக   விளங்கிய    இன்றைய    பிரபல்யமான  அல் - மனார் மத்திய   கல்லூரியில்   பயின்ற   காலத்தில்   புலவர்மணி  ஆ.மு. ஷரிப்புத்தீன்   மற்றும்   வைரமுத்து    ஆகியோரின் மாணக்கராகவிருந்து    அட்டாளைச்சேனை   மற்றும்   பலாலி ஆசிரியப்பயிற்சிக்கலாசாலைகளிருந்து   பயிற்றப்பட்ட   ஆசிரியராக கல்விப்பணிக்கு   வந்தார்.




மனிதர்களின்   வாழ்வை    பெற்றவர்களும்  ஆசிரியர்களும் நண்பர்களும்தான்   தீர்மானிக்கிறார்கள்  எனச்சொல்வார்கள்.   தான் பெண்ணெடுத்த   மருதமுனை   ஊரின்   பெயரையே   முதன்மைப்படுத்தி    கல்விப்பணியையும்   இலக்கியப்பணியையும் தொடர்ந்த    மருதூர்க்கொத்தன்   எனக்கு  அறிமுகமானது  1975  ஆம் ஆண்டிற்குப்பின்னர்தான்.
மருதூர்க்கொத்தனும்    அவரது   நெருங்கிய    உறவினரான மருதூர்க்கனியும்   ( ஹனிபா)    எமது    இலங்கை  முற்போக்கு எழுத்தாளர்    சங்கத்தின்   கிழக்கிலங்கையின்    தூண்களாக விளங்கியவர்கள்.
கிழக்கில்   கல்முனை  -  மருதமுனை  -   பாண்டிருப்பு   -   நீலாவணை முதலான    கடலை  அண்டிய   ஊர்கள்    ஈழத்து   இலக்கிய   உலகிற்கு ஆளுமையுள்ள     பல     படைப்பாளிகளைத்தந்திருக்கிறது.    அவர்களின் பெயர்    விபரம்   எழுதினால்    ஒரு   பட்டியலாகவே    விரியும்.
அந்தப்பிரதேசங்களில்    தடுக்கிவிழுந்தாலும்  ஒரு   கவிஞரின்  வீட்டு வாசலில்தான்   விழுவீர்கள்    என்று    வேடிக்கையாகச்சொல்வார்கள்.
மருதூர்க்கொத்தன்   கதைகள்   என்ற   தொகுதி  1985   ஆம்   ஆண்டு எனக்கு   கிடைத்தது.   அப்பொழுது   இலங்கை   வானொலியில் கலைக்கோலம்    நிகழ்ச்சியை   (சில மாதங்கள்) நடத்திக்கொண்டிருந்தேன்.    தொகுதி   கிடைத்தவுடனே   படித்துவிட்டு    நண்பர்   ராஜஸ்ரீகாந்தனிடம்    கொடுத்தேன்.  அவர் அதனைப்    படித்துவிட்டு    விமர்சனம்   எழுதிக்கொண்டு   இலங்கை வானொலி   கலையகத்திற்கு   வந்தார்.
அவரும்   சிறந்த   விமர்சன   உரையை   வானொலியில் பதிவுசெய்தார்.    அதனை   மருதமுனையிலிருந்து    செவிமடுத்த மருதூர்க்கொத்தன்    நன்றி   தெரிவித்து    கடிதமும்   எழுதினார்.
மருதூர்க்கொத்தனின்   பாத்திரங்கள்    சாதாரண   மனிதர்கள். அவர்கள்    கடின   உழைப்பாளிகளாக   சித்திரிக்கப்படுவார்கள். உழைக்கும்    வர்க்கத்தினருக்காகவே   அவர்   தொடர்ந்து   எழுதினார்.    யதார்த்த    இலக்கியப்படைப்புகளை    பிரதேச மொழிவழக்குடன்    பதிவுசெய்த   முக்கியமான    படைப்பாளி   அவர்.
ஈழத்து   ஆக்க   இலக்கியங்களில்    பிரதேச    மொழிவழக்குகள் தொடர்பாக    ஆராயப்புகும்    விமர்சகர்கள் -   பல்கலைக்கழக மாணவர்கள்    மருதூர்க்கொத்தனை    தவிர்த்து    எழுதமுடியாது.
1980   களில்  கிழக்கு  மாகாணத்தில்   அடிக்கடி    தமிழ்  -  முஸ்லிம் மக்களிடையே    முரண்பாடுகள்   வெடித்து    அமைதியின்மை ஏற்படுவது    வழக்கமாகியிருந்தது.   உணர்ச்சியின்   உந்துதலில் ஆட்கடத்தல்   -   கொலை -   தாக்குதல்  -   தீவைப்பு   என்று நிலைமைகள்    அடிக்கடி    மோசமாகிக்கொண்டிருந்தன.
அவ்வேளையில்    கொழும்பில்   பம்பலப்பிட்டி தொடர்மாடிக்குடியிருப்பில்    வசித்த   இலக்கிய    ஆர்வலரும்  கொழும்பு    விவேகானந்தா    கல்லூரியின்   முன்னாள்   அதிபருமான மாணிக்கவாசகரின்   இல்லத்தில்   முற்போக்கு   எழுத்தாளர் சங்கத்தின்    செயற்குழுக்கூட்டம்   நடந்தது.    அச்சமயம்   கொழும்புக்கு வந்திருந்த    மருதூர்க்கொத்தனும்    அன்றைய    கூட்டத்தில் கலந்துகொண்டார்.
 சங்கத்தின்    பணிகள்    தொடர்பாக   உரையாடுவதை தவிர்த்துக்கொண்டு    கிழக்கின்   நிலைமை    பற்றியே     அவரிடம் கேட்டுத்தெரிந்து   கொள்வதில்    அக்கறை     காண்பித்தோம்.  வதந்திகள்    பெருகி  -  யாரை    யார்    குற்றம்    சுமத்துவது எனத்தெரியாமல்    மனம்குழம்பியிருந்த    எமக்கு   மருதூர்க்கொத்தன் தெளிவைத்தந்தார்.
அவர்    ஒரு   முஸ்லிமாகவிருந்தபோதிலும் அந்தச்சமூகத்தினைச்சார்ந்து   பேசாமல்    நடுநிலைமையுடன்   பல உண்மைகளை     விளக்கினார்.     மனிதநேயமே   அவரது குரலாகத்தென்பட்டது.   மருதூர்க்கொத்தன்   மிகவும் மனம்கலங்கியிருந்த    காலப்பகுதி.
மருதூர்க்கொத்தனிடம்    குடியிருந்த    இன -  மத  நல்லிணக்க இயல்புகள்தான்    அவரை   தெளிவுடன்    பிரச்சினைகளை அணுகச்செய்திருக்கும்    என   நம்புகின்றேன்.
மருதமுனையின்    வரலாறு   என்ற  பதிவில்  அவரைப்பற்றி பின்வருமாறு    குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மருதமுனை    மண்ணை  -   எளியோரை  -  ஒடுக்கப்படடோரை ஜீவத்துடிப்புடன்    தன்   கதைகளில்    பிரதிபலித்த   கொத்தன்    இன நல்லுறவுச்செயற்பாடுகளிலும்    தன்னை    இணைத்துக்கொண்டார்.    தன்    கதைகளிலும்  சரி  -   தன்   பேச்சிலும்   சரி   தமிழ் - முஸ்லிம் இன   நல்லுறவைப்பேணியவர்   இவர்.    கல்முனை    சமாதான அமைப்பினருடன்    இணைந்து    இன  நல்லுறவைப்பேணும் செயற்பாடுகளில்    தன்னை    ஈடுபடுத்திக்கொண்டார்.   ஓர்   அறிஞன்   என்ற   வகையில்   இனப்பிரச்சினைக்காலங்களில்   சமய நல்லிணக்கச்    செயற்பாடுகளில்    ஈடுபட்டு    தமிழ் - முஸ்லிம்   இன உறவை    வலுப்படுத்தினார்.
மருதூர்க்கொத்தனின்   இந்த   இயல்புகளை     அவதானித்த   ஒரு தமிழ்   இன   விடுதலை   இயக்கம் -    பின்னாளில்   அவரையும் ஒரு    அரசியல்வாதியாக்கப்பார்த்தது   என்ற   தகவல்    எனக்கு தாமதமாகவே     கிடைத்தது.
கிழக்கு   மாகாணத்தில்   திருகோணமலை   -   மட்டக்களப்பு - அம்பாறை    முதலான    மாவட்டங்களில்    முன்னர்    ஆசிரியர்களாகவும்    இலக்கியவாதிகளாகவும் ஊடகவியலாளர்களாகவும்     சட்டத்தரணிகளாகவும்   பணியாற்றிய  சிலரை    அரசியல்   உள்ளிழுத்திருக்கிறது.
செ.இராசதுரை  -    செழியன்   பேரின்பநாயகம்  -   அஷ்ரப்   -மருதூர்க்கனி    முதலானோர்   இதுவிடயத்தில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
மருதூர்க்கொத்தனை    அரசியலுக்கு   இழுத்து   அவரை   ஒரு தேர்தலில்    நிற்கவைப்பதற்கு    அந்தத்  தமிழ்  இயக்கம் முனைந்தமைக்கு   அவரிடமிருந்த   நல்லிணக்க   இயல்புகள்தான் அடிப்படை.
ஆனால் -  மருதூர்க்கொத்தன்   அந்த    இயக்கத்தினரை   சாதுரியமாக சமாளித்து    இன்முகத்துடன்   அனுப்பிவைத்தார்.   ஆயுதம்   ஏந்திய சில   தாக்குதல்   சம்பவங்களுக்கு   காரணமாகவிருந்த அவ்வியக்கம்   முன்னாள்   ஜனாதிபதி   பிரேமதாசவின்   தேர்தல் சதுரங்க    ஆட்டத்தில்    கலந்துகொண்டு    பின்னர்    ஒதுங்கிவிட்டது.
மருதூர்க்கொத்தன்   தீர்க்கதரிசனமானவர்    என்பதற்கு    அவரது அன்றைய    அரசியல்    புறக்கணிப்பும்   சிறந்த    முன்னுதாரணம்.
1983  ஆம்  ஆண்டு  மார்ச்   மாதம்    எமது   முற்போக்கு   எழுத்தாளர் சங்கம்    இலங்கையில்   நாடளாவிய   ரீதியில்   நடத்திய    பாரதி நூற்றாண்டு   விழாவின்   கிழக்கு   மாகாணத்தின் அமைப்புக்குழுவில்    இயங்கியவர்களில்   மருதூர்க்கொத்தனும் மருதூர்க்கனியும்  அன்புமணியும்  மிகவும்   முக்கியமானவர்கள்.  சுறுசுறுப்பாக    செயற்பட்ட   இவர்கள்   மூவரும்  கல்முனை  பாத்திமா   கல்லூரி   -  மட்டக்களப்பு   மற்றும்   அட்டாளைச்சேனை ஆசிரியப்பயிற்சிக்கல்லூரிகள் -   மட்டக்களப்பு   நகரமண்டபம்  ஆகியனவற்றில்    பாரதி   நூற்றாண்டு    விழா   நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில்    உழைத்தார்கள்.    இந்நிகழ்வுகளில்   கவிஞர் சண்முகம்   சிவலிங்கம்    அச்சமயம்   அரசியலுக்குள்  பிரவேசிக்காத சட்டத்தரணி   அஷ்ரப் -   நீதியரசர்    பாலகிட்ணர்    -  அரசாங்க   அதிபர் அந்தோனி  முத்து   ஆகியோரும்    கலந்துகொண்டார்.
மட்டக்களப்பு    பொதுநூலகத்தில்    இலக்கிய   சந்திப்புக்கும்  ஒழுங்கு செய்தார்கள்.   இச்சந்திப்பில்   நான்   சந்தித்தவர்தான்    சிவராம்.   அவர் பின்னாளில்    இயக்க   அரசியலுக்குச்சென்று   தராக்கியாக அறிமுகமாகி    அரசியல்   ஆய்வு  ஊடகவியலாளரானார்.
தமிழ்நாட்டிலிருந்து   வருகை  தந்த   பாரதி   இயல்   ஆய்வாளர் தொ.மு.சி ரகுநாதன்    மூத்த  எழுத்தாளர்    இளங்கீரன்   ஆகியோருடன் கிழக்கிலங்கை    பாரதி    நூற்றாண்டு   விழா   நிகழ்ச்சிகளுக்காக உடன்    பயணித்தேன்.    அந்தப்பயணத்தை   மறக்கவே    முடியாது. கடந்துசென்ற   வசந்தகாலங்கள்   அவை.
 ரகுநாதன்  -   இளங்கீரன்   -   மருதூர்க்கொத்தன்   -  மருதூர்க்கனி   -அஷ்ரப் - பாலகிட்ணர்  -   தராக்கி   சிவராம்   -   சண்முகம்   சிவலிங்கம்   -அன்புமணி     அனைவரும்   விடைபெற்றுச்சென்றுவிட்டனர்.   அந்த நிகழ்ச்சிகளுக்கு    நேரடி    சாட்சியாக   என்னுடன்   இருக்கும் மற்றுமொருவர்    இங்கிலாந்திலிருக்கும்   எழுத்தாளர்   அரசியல் ஆய்வாளர்    பஷீர்.
மருதூர்க்கொத்தனின்   நாற்பது   சிறுகதைகளை    தேடி  எடுத்து மீண்டும்   ஒரு    மருதூர்க்கொத்தன்   கதைத்தொகுதியை   அவரது பிள்ளைகள்   2007  ஆம்  ஆண்டு   வெளியிட்டுள்ளனர்.   அதனை அவுஸ்திரேலியா   சிட்னியில்    வதியும்    கொத்தனின்    புதல்வர் ஆரீஃப்    எனக்குத்தந்தார்.
மருதூர்கொத்தனின்   மாணவரான    அட்டாளைச்சேனை   தேசிய கல்விக்கல்லூரி    விரிவுரையாளர்    அஷ்ஷெய்க்   அன்ஸார்   பழீல் மௌலானா    இந்நூலிற்கான    முன்னுரையை   வழங்கியிருக்கிறார்.
அந்த   நூலை   கையில்  எடுத்து   பிரித்துப்பார்த்தபொழுது பிள்ளைகளும்   மாணவரும்    அமைவதும்   வரம்தானோ  என்று யோசிக்கவைத்தது.

    ---00---



No comments: